இயற்கை வழி இயக்க பயணம்
வேளாண்மை முதற்கொண்டு வாழ்வியலின் சகல அம்சங்களிலும் இயற்கைவழிக்குத் திரும்புவதை நோக்கமாகக் கொண்டவர்களாலும், நஞ்சற்ற உணவு எங்கள் எதிர்காலச் சந்ததிக்கு கிடைக்கவேண்டும் என்பதை இலக்காக கொண்ட சமூக ஆர்வலர்களாலும் உருவாக்கப்பட்டதே இயற்கைவழி இயக்கம். இயக்கத்தின் உறுப்பினர்கள் சிலர் தென்னிந்தியாவிற்கு அண்மையில் சென்ற பயணம் தொடர்பான அனுபவப் பகிர்வினைப் முன்னொரு இதழிற் பார்த்தோம். அப்பயணத்தின் இறுதி மூன்று நாட்களில் நடந்தவை பற்றிய குழுவினரின் பகிர்வை இனி பார்ப்போம்.
தொடர் பயணத்தின் இடையில் விவேகானந்த கேந்திராவில் ஒரு நாளை முழுமையாக கழித்தோம். விவேகானந்தா கேந்திராவில் பிரதான அலுவலகம் எங்கே இருக்கிறது என கேட்டால், தண்ணீர் தாங்கியை காட்டினார்கள். அங்கே போய் பார்த்தால் தண்ணீர் தாங்கியின் கீழ் இரண்டு மாடிகள் கொண்டதாக அலுவலகத்தை அமைத்து இருந்தார்கள். அதற்கு பொறுப்பாக இருந்தவர்களிடம் விபரமாகப் பேசினோம். இயற்கை வளங்களை வாழ்வியலில் கொண்டு வரும் திட்டங்களுக்காக பொதுமக்களிடத்தில் இறங்கி வேலை செய்யும் போது தான் பசுமை இராமேஸ்வரம் (Green Rameswaram) திட்டத்துக்கான அடிப்படை எண்ணக்கரு உருவானதாக கூறினர். தற்போது அது பல நிறுவனங்கள் பங்கேற்கும் ஒரு பெரிய திட்டமாகச் செயற்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடுகின்றார்கள். குறித்த திட்டம் அணுவிஞ்ஞானி அப்துல்கலாம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இந்திய மத்திய அரசின் முழுமையான ஆதரவோடு செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
வழமையான திட்டங்கள் எல்லாம் அரசிலிருந்து மக்களை நோக்கி வருகின்றன. ஆனால் விவேகானந்தா கேந்திரா மக்களிடம் அவர்கள் பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்தாலோசித்து அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க உருவாக்கிய திட்டமே பசுமை இராமேஸ்வரம் திட்டமாகும். பசுமை இராமேஸ்வரம் திட்டம் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது.
எங்களுடைய பிரதேசங்களில் மத்திய அரசிடம் இருந்து கிடைக்கின்ற நிதிக்கு ஏற்றவாறு தான் திட்டங்களைப் போடுவார்கள். அங்கே சரியான மக்கள் நலநோக்குத் திட்டத்தைத் தயாரித்துவிட்டு அதற்கு பின் நிதியை திரட்டும் செயன்முறை இடம்பெறுகிறது. மற்ற முக்கியமான விடயம், திட்டமிடலின் ஒவ்வொரு படியிலும் உள்ளூர் மக்களும் உள்வாங்கப்படுகிறார்கள். அதன் பின்னரே அது இறுதி வடிவம் பெறுகின்றது. சூழலுக்கேற்ற சரியான தொழிநுட்பமும் மக்கள் நலன் சார்ந்த சந்திப்புக்களும் தான் இவ்வாறான திட்டங்கள் வெற்றிகரமாக இயங்க காரணமாகிறது.
மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டக் கூடிய துண்டுப் பிரசுரங்களும் சிறிய விளக்க நூல்களையும் விவேகானந்தா கேந்திரா வெளியிடுகிறது. இத்தகைய மேம்பாடான அம்சங்கள் குறித்த மாற்றங்களுக்குள் மக்கள் இயல்பாக பங்கேற்கும் நிலையை உருவாக்குகின்றன. மக்களுக்குப் பெரிதும் நன்மை பயக்கக்கூடிய திட்டங்களை எமது பிரதேசங்களில் அறிமுகம் செய்யும்போது கூட, மக்கள் திட்டங்களைச் சந்தேகக்கண்ணுடன் நோக்குகின்றனர். அதற்கு பிரதான காரணம் திட்ட உருவாக்கம் முதலே மக்களுடன் சரியான தொடர்பாடலை பேணாமையும், திட்டமிடற் குழுவில் மக்கள் பங்களிப்பு உள்வாங்கப்படாமையுமே ஆகும். இங்குள்ள அரச அதிகாரிகள் ஒரு மன்னராட்சியில் மக்களை ஆளுகை செய்ய நியமிக்கப்பட்டவர்களைப் போல் நடந்துகொள்வதும் திட்ட அமுலாக்கத்திற்கு தடங்கலாக அமைந்துவிடுகிறது.
நாங்கள் இவ்வாறான செயற்திட்டங்களை இலங்கையின் வடக்கில் செய்து கொள்ள விருப்பப்படுகிறோம் என சொன்ன போது விவேகானந்த கேந்திரா அமைப்பினர் அத்தனை தொழிநுட்ப உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக உடனடியாக ஒப்புக் கொண்டார்கள். திட்டங்களை கையில் வைத்துக் கொண்டு எங்களை அணுகினால் அதற்கு தாங்களும் சேர்ந்து செயல்வடிவம் கொடுக்க தயார் என அவர்கள் கூறினர். தங்களால் நேரடியாக வந்து பயிற்சிகளை வழங்க கூடியதாக இருக்கும். அல்லாவிடின் ஒரு குழுவை வடக்கிலிருந்து அழைத்து விவேகானந்தா கேந்திராவில் பயிற்சியளிக்க தயார் என அவர்கள் கூறினர். அவர்கள் இப்படியான கூட்டு வேலைத்திட்டங்களுக்கு தாங்களாகவே ஆர்வம் காட்டினர் என்பது மகிழ்ச்சி தருவதாக அமைந்தது. மேலும் தமிழர்களுடைய பாரம்பரியம் சார்ந்த அறிவியல் ரீதியான விடயங்களை பகிர்ந்து கொள்வதற்கான நிரந்தர கண்காட்சியை விவேகானந்தா கேந்திராவில் பார்க்கக் கூடியதாக இருந்தது. முன்னைய காலங்களில் வேளாண்மை எப்படி இருந்தது, அதிலும் தமிழர்களின் பாரம்பரிய விவசாயம் மருத்துவம் மற்றும் வாழ்வியல் எவ்வாறு இருந்தது போன்ற பல அரிய தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது.
எமது பயணத்தின் இறுதிநாட்களை திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இயற்கைவழி வேளாண் பண்ணைகளைப் பார்வையிட பயன்படுத்தினோம். குறிப்பாக வசந்தம் இயற்கைவழிப் பண்ணையத்தில் பெற்ற அனுபவம் சிறப்பாக இருந்தது. பாலைவனத்தில் ஓர் பசுஞ்சோலை என்று வர்ணிக்கக்கூடிய அளவில் வரட்சியாக கோடையின் வெய்யிற் தாக்கம் சற்றும் புலப்படாவண்ணம் குளிர்மையாக இருந்தது. அங்கு பத்து ஏக்கர் நிலப்பரப்பிற் பரந்திருந்த நெல்லித்தோட்டம் எம் அனைவருடைய கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. “இரசாயனம் பயன்படுத்தும் விவசாயிகளை விட விளைச்சல் அதிகம்; செலவும் அரைவாசியே” என இறுமாப்புடன் தெரிவித்தார் அந்தத் தோட்டத்தின் உரிமையாளர். அதியமானுக்கு ஒளவை ஈந்த நெல்லிக் கனிகளே என வியக்கும் அளவிற்கு அதிசுவை பொருந்தியதாக இருந்தன. உள்ளூர்ச் சந்தையிற் விற்கப்படுபவை போக மீதி நெல்லிப் பான உற்பத்தியாளர்களால் அள்ளிச் செல்லப்படுகின்றன. மருத்துவக் குணங்கள் நிரம்பிய நெல்லி, பானமாக மட்டும் அன்றி பல்வேறு உணவு மற்றும் அழகுப் பொருட்களிளும் உள்ளீடாகப் பயன்படுகிறது.
அதிரசம் மிக்க நெல்லிக் கனிகளை சுவைத்த மகிழ்வுடன் அடுத்து முருங்கைத் தோட்டத்தினைப் பார்வையிட சென்றோம். அங்கு நாங்கள் கண்ட காட்சி எம்மை முற்றிலும் வியப்பில் ஆழ்த்தியது. மீ-அடர் நடவு முறை (Ultra high density cultivation) எனப்படும் சிறப்பு முறையில் முருங்கைக் கன்றுகள் ஒவ்வொரு 10cm இடைவெளிக்கு ஒன்று என்ற ரீதியில் ஏக்கருக்கு நான்கு இலட்சம் முருங்கைக் கன்றுகள் நாட்டப்பட்டிருந்தன. பெரியகுளம் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து பெறப்பட்ட வித்துக்களை நேரில் நிலத்தில் விதைத்தே இவ்வாறான மீ-அடர் முருங்கைத் தோட்டம் உருவாக்கப்பட்டது. முளைத்து அறுபதே நாட்களில் முதலாவது அறுவடை இடம்பெறுகிறது. பின்னர் ஒவ்வொரு 35 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை நடைபெறுகிறது. இவ்வாறாக வருடம் முழுவதிலும் முருங்கையிலைகள் எட்டுத் தடவைகள் அறுவடைசெய்ய முடியும். வருடாந்தம் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் இருந்து இருநூற்றைம்பதாயிரம் கிலோ பச்சையிலைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை அறிந்து மலைத்து நின்றோம்.
இதே போல எமது பிரதேசத்திலும் முருங்கையிலைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தால் மாதாந்தம் ஏக்கர் ஒன்றில் இருந்து ஷரூபா ஐந்து லட்சம் வரை சம்பாதிக்க முடியும். ஒரு கிலோ பச்சை முருங்கையிலை ஒன்றின் விலை ஷரூபா 25 எனவும் கழிவுகள் விலக்கப்பட்ட பின்னர் மொத்த அறுவடை இருபதாயிரம் கிலோவெனவும் கொள்ளப்பட்டு இக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட இயற்கைவழி விவசாயிகளின் வெற்றியைக் கண்கூடாகக் கண்ட களிப்புடன் முருங்கைத் தோட்ட உரிமையாளரின் மகிழுந்திலேயே நாம் தங்கியிருந்த இருப்பிடத்தினை வந்தடைந்தோம்.
மறுநாள் காலை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு கொழும்பினை வந்தடைந்தோம். இயற்கை எழில் கொஞ்சும் கேரளத்தின் வனப்பும், பாலைவனமாய் தகிக்கும் நிலத்தினை பசும் சோலைகளாக மாற்றிக் காட்டியுள்ள திருநெல்வேலி இயற்கைவழி விவசாயிகளின் ஆற்றலும் எம் மனதை விட்டு என்றும் அகலா. என்றோ ஒருநாள் எங்கள் நிலத்திலும் இயற்கைவழிப் புரட்சி நடக்கும்; எம் எதிர்காலச் சந்ததியாகினும் நஞ்சற்ற உணவை உண்ணும் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையை ஆழமாக மனத்தில் விதைத்தது இப்பயணம்.
இயற்கைவழிக்குத் திரும்புவோம்!
இயல்பாய் வாழ்வோம்!
-யாழ் விறலி-
நிமிர்வு செப்டம்பர் 2018 இதழ்
நிமிர்வு இதழ் மகிழ்வு தருகிறது, தொடருங்கள். தமிழைக் கொஞ்சம் எளிமையாக்கினால் நல்லது என நம்புகிறேன். உங்கள் செயற்பாடுகளும் ஆரோக்கியமானவை மண் பயனுறவேண்டும்!! வாழ்த்துக்கள்!
ReplyDelete