“மகாவலி திட்டம் வேண்டாம் ‘மகாவலி வேண்டாம்’ - உரிமைகளுக்கான மக்கள் போராட்டம்”
பிரச்சினைகளாக்கம்
ஒன்றன் பின் ஒன்றாக பிரச்சினைகள் ஏற்படுத்தப்படுகின்றன. தீர்வு காண வேண்டிய அடிப்படையான விடயமான இனப்பிரச்சினையை பற்றி யோசிக்க, விவாதிக்க, கருத்துப்பகிர முடியாதநிலை உறுதிப்படுத்தப்பட்டு பேணப்படுகின்றது. நடமாடும் குள்ளர்கள், வாள் வெட்டு, போதைப்பொருள், பாலியல் வன்முறை, சிறுவர் துஸ்பிரயோகம்’ போன்றவை பிரச்சினையாக்கப்பட்டு பேசுபொருளாக்கப்படுகின்றன. இனப்பிரச்சினைக்கான தீர்வு முக்கியத்துவப்படுத்தப்படாத நிலை ஏற்பட்டுவிட்டுவிட்டது. காலத்துக்கு காலம் திட்டமிட்டு நடத்தப்படும் தேர்தல்களும் இந்த சதியில் ஓர் அம்சமே.
போருக்குப்பிற்பட்ட காலமா? நெருக்கடிக்குப் பிற்பட்ட காலமா?
இன்று, இலங்கையில் முக்கியமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் அடையாளம், அபிலாசைகள் மற்றும் எதிர்காலம் பற்றி எண்ணங்கள் கருச்சிதைவு செய்யப்படுகின்றன. போரின்மையை ஒரு பெரிய அடைவாக நோக்கப்படுகிறது. உண்மையிலேயே போருக்கு பிற்பட்ட இக்காலத்தை (Post War) நெருக்கடிநிலைக்கு பிற்பட்ட காலம் (Post Conflict) போல நோக்கும் மாயை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அது உறுதிப்படுத்தப்பட்டும் வருகின்றது. போரை சந்தித்த இம்மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றி அதிகம் யோசிக்காமல் நல்லிணக்கம், நினைவுகளை குணமாக்கல் மற்றும் அபிவிருத்தி போன்றவை ஒப்பீட்டடிப்படையில் முன்னுரிமைப்படுத்தப்படுகின்றன.
போர்க்காலத்தை விட போருக்குப் பிந்திய காலம் மிகவும் ஆபத்தானது, கொடூரமானது, வேதனை மிக்கது. மக்கள் பிணங்களாவது போரின்மையால் உறுதி செய்யப்பட்டாலும் அவர்கள் நடைப்பிணங்களாகி விட்டமை மிகமிக தெளிவாகி வருகின்றது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு?
2009 இல் இராணுவரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு அவர்களால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டதிலிருந்து இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயம் முக்கியத்துவப்படுத்தப்படுவதில்லை. நடைபெற்ற உள்நாட்டுப் போரின் அடிப்படையான இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்கான முயற்சிகள் பற்றி ஆழமாக நோக்கப்படவில்லை. மாறாக நிலைமாறுகால நீதி, சட்டவரைவு யோசனைகள் போன்றவை பற்றி கட்சி அரசியலை முன்னிறுத்தி ஆட்சியிலிருப்போரும் ஆட்சியை எதிர்ப்போரும் தம்மை தக்க வைக்கும் முக்கியத்தவ நகர்வுகளுடன் செயற்டுகின்றனர். போர் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு 9 வருடங்களை கடந்து 10வது வருடத்துக்குள் செல்லும் நிலையேற்பட்ட போதும் இனப்பிரச்சினைக்கான தீர்வு கேள்விக்குறியாகவே உள்ளது.
உரிமைப் போராட்டங்கள்
இராணுவமயமாக்கல் உட்பட பல்வேறு திட்டங்கள் வடக்கு கிழக்கு தமிழரை பிரித்து, சுயநலவாதிகளாக்கி, நம்பிக்கை இழந்து, ஒருவரையொருவர் புறக்கணிக்க மற்றும் அவமானப்படத்தி உதாசீனம் செய்ய பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், அடிப்படை உரிமைகளுக்கான உழைப்போர்களின் பேராட்டங்கள் தொடர்ந்தவண்ணமேயே உள்ளன.
வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள்
போரினாலே பாதிக்கப்பட்ட அனைவரும் இழப்புகளை அடிப்படையாகக்கொண்டு போராடத்தொடங்கினர் என்பது வரலாறு. வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் எங்கே? எமது உறவுகள் எமக்கு வேண்டும். இராணுவத்தின் கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது?... என உண்மை, பொறுப்புக்கூறல் என்பவற்றை முன்னுரிமைப்படுத்தி போராட்டங்கள் 500வது நாளையும் கடந்து தொடர்கின்றன. காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் வகிபாகம் இங்கு முக்கியமானது. பல்வேறுபட்ட சவால்கள் மத்தியிலும் அவர்களது போராட்டங்கள் தொடர்கின்றன.
அரசியற்கைதிகள்
அரசியற்கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டங்களும் தொடர்கின்றன. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக எந்த விசாணைகளுமின்றி சிறைகளில் வாடும் பலரின் விடுதலைக்காக பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அரசியற்கைதிகள் என யாரும் இல்லை என இனவாதகுரல்கள் வந்தாலும் அரசியற்கைதிகளை எந்த நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும் என்பது நன்கு வலியுறுத்தப்பட்டுவருகின்றது.
நிலமீட்பு
‘எமது நிலம் எமக்கு வேண்டும்’ என இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலங்களை விடுவிக்க போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மக்களுடைய நிலங்களை அவர்களிடம் வழங்குவது மிகவம் மெதுவாக நடைபெற்று வருகின்றது.
மகாவலி அபிவிருத்தி திட்டமும் சிங்கள குடியேற்றமும்
புள்ளிவிபரங்களின்படி கிழக்கு மாகாணத்தில் தமிழர் இருப்பு; குறைக்கப்பட்டு வருகின்றது. தற்போது வடக்கிலும் அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் சிங்கள குடியேற்றங்களுக்கு எதிராக போராடுவது அவசியமாக்கப்பட்டு விட்டது. தேவைகளின் பொருட்டு இயல்பாக ஒரு இடத்தில் குடியேறுவது தவிர்க்க முடியாதது. அது உரிமை சார்ந்தது. திட்டமிட்டபடி ஒரு இடத்தின் பெயரையும் மாற்றி அங்கு மக்களை குடியேற்ற முனைவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறுக்கு வெலிஓயா என பெயரிட்டமை, கென் பாம், டொலர் பாம் போன்ற குடியேற்றங்கள் அனைத்தையும் இந்தப்போக்கிலேயே நோக்க வேண்டும்.
தொன்று தொட்டு வந்த மரபின்படி வடக்கு கிழக்கு தமிழர்கள் வாழ்ந்த இடம், தமிழர் தாயகம். இங்கு அதிக தமிழர்கள் வாழ்ந்து வந்ததால் அரசியல் ரீதியாகவும் தமிழர் அடையாளம் முக்கியத்துவப்படுத்தப்பட்டு வந்தது. தொடர்ந்தும் அதனை பேணுவது தமிழரின் கடமை. இதனால் தமிழர் தாயக மண்ணில் மேற்கொள்ளப்படும் திட்டமிடப்பட்ட குடியேற்றங்களை நிராகரிப்பது வரலாற்றுக்கடமை.
வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்பது சிங்களவர்களால் முக்கியமாக ஆட்சியாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. ‘மூதாதையர் வாழ்ந்ததால் இந்த மண் எங்களின் சொந்த மண் என தமிழ் மக்களே கூறுகின்றனர். இதனை ஏற்க முடியாது இலங்கை மண்ணில் யார் எங்கு வேண்டுமென்றாலும் வாழலாம்’ என ஒரு எண்ணப்போக்கை சிலர் பரப்புரை செய்ய முனைகின்றனர். வரலாற்றை நோக்கும் போது 1983 இனக்கலவரத்தின் போது தமிழ் மக்கள் அனைவரும் வடக்குக்கும் கிழக்குக்கும் அனுப்பப்பட்டார்களேயொழிய வேறு எங்கும் அனுப்பப்படவில்லை. தமிழர்களுக்கு பாதுகாப்பான இடம் அவர்களுடைய மண்ணே என்பதை ஏற்று அங்கீகரித்த வரலாற்றுப்பதிவுகளை யாரும் நிராகரிக்க முடியாது.
இலங்கையில் தமிழர்களின் மக்கள் தொகையை அதிகரிக்கச் செய்வதும் இன்றைய யதார்த்தத்தில் ஒரு வரலாற்றுக்கடமை. போரினால் பலர் கொல்லப்பட்டுவிட்டனர். இனவழிப்பு பாரிய மக்கள் தொகை குறைப்பை மேற்கொண்டுவிட்டது. போரினால் ஏற்பட்ட இடப்பெயர்வுகளும் மக்கள்தொகை குறைவுக்கு இன்னொரு காரணம்.
1960 இல் 9.9 மில்லியனாக காணப்பட்ட இலங்கையின் சனத்தொகை 2017 இல் 21.4 மில்லியனை அடைந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண புள்ளிவிபரங்களின் படி தமிழர்களின் இருப்பில் ஏற்பட்ட குறைப்பையும் சிங்களவர்களின் இருப்பில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பையும் காணக்கூடியதாக உள்ளது.
கல்லோயா திட்டம் பாவிக்கப்பட்டு கிழக்கிலே தமிழர்கள் சிறுபான்மையாக்கப்பட்டு அரசியல் அநாதைகளாக்கப்பட்டு விட்டனர். கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த தமிழர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் அரசியல் ரீதியாக அவர்களுடைய அடையாளம், அபிலாசைகள், எதிர்காலம் அனைத்தும் கேள்விக்குறியாகிவிட்டன.
கல்லோயா திட்டம் போலவே தற்போது மகாவலி திட்டம் வடக்குவாழ் தமிழர்கள் மத்தியில் சிங்கள குடியேற்றங்களை அதிகரிக்க முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதனை எதிர்த்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 28.08.2018 அன்று ‘மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமைப் பேரவையினால்’ முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் மிகவும் முக்கியமானது.
முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கருநாட்டுக்கேணி என்ற தமிழ் கிராமத்தில் கடற்கரை ஒதுக்குப் பிரதேசத்தில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மீனவர்களுக்கு 06.08.2018 இல் மகாவலி அதிகார சபையினால் காணி உத்தரவுப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிரதி இப்போராட்டத்தின் போது பகிரப்பட்டது. இந்த ஆவணம் சிங்கள குடியேற்றத்தை தெளிவாக வெளிப்படத்துகின்றது. அத்துடன் எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதிக்குள் தமிழ் கிராமங்களுக்குள் ஆயிரம் காணித்துண்டுகள் சிங்கள மக்களுக்கு மகாவலி அதிகார சபையினால் வழங்கப்பட்டு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வீடமைப்பு திட்டமும் வழங்கப்படவுள்ளது என்பதும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு கடற்கரையும் இன்னும் வளமான தமிழ் கிராமங்கள் பலவும் மகாவலி அதிகார சபையினால் கையகப்படுத்தப்படவுள்ளது என்பதும் பகிரப்பட்ட இந்த ஆவணப்பிரதியில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. மகாவலி அதிகார சபை முல்லைத்தீவில் தமிழர்களின் மரபுரிமை நிலங்களை அபகரிக்கும் ஒரு கட்டமைப்பு என்பது மிகவும் தெளிவு.
மகாவலி அதிகாரசபையின் நிலஅபகரிப்பிற்கு எதிரான போராட்டத்தின் பின்னணி தொடர்பான தமிழ் சிவில் சமூக அமையத்தின் விளக்க அறிக்கையிலிருந்து அதன்; பின்னணியை புரிந்துகொள்ளலாம்:
கடந்த தை, மாசி 2017இல் கொக்கிளாய், கருநாட்டுக்கேணி கரையோரப் பகுதியில் அரச காணியில் அடாத்தாக குடியிருந்தனர் எனக் கூறி இரண்டு சிங்கள மீனவர்களுக்கு எதிராக கரைத்துரைப்பற்று பிரதேச செயலகத்தினால் அரச காணி (ஆட்சி மீளப்பெறுதல்) சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் மேற்படி இரண்டு சிங்கள மீனவர்களையும் காணிகளை விட்டு வெளியேறுமாறு தை 2018இல் கட்டளை வழங்கியது. அதன் பின்னர் காணிகளில் அடாத்தாக குடியிருந்த இருவரும் உயர் நீதிமன்றிற்கு அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்தனர். மாசி 2018இல் வழக்கை எடுத்துக் கொள்ள (leave to proceed) மறுத்து உயர் நீதிமன்றம் கட்டளையிட்டது. இது இவ்வாறிருக்க 06.08.2018 அன்று மாகாவலி அதிகார சபை மேற்படி இரண்டு சிங்கள மீனவர்களுக்கும் காணி அனுமதிப் பாத்திரத்தை வழங்கி அவர்களின் சட்டப்பூரவமற்ற காணி அபகரிப்பை சட்டப்பூரவமாக்கியுள்ளது. மேற்படி நடவடிக்கையானது மத்திய அரசாங்கத்தின் சட்டமான அரச காணி (ஆட்சி மீளப்பெறுதல்) சட்டத்தின் கீழ் உரிய தமிழ் அரச அதிகாரிகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் நீதிமன்றத் தீர்ப்புக்களையும் கேலிக்குரியதாக்கியுள்ளது.
‘மகாவலி அதிகார சபை மாத்திரமல்லாது தொல்லியல் திணைக்களம் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களத்திடமிருந்து வரும் நில அபகரிப்பு அபாயங்களையும் எதிர்கொள்ள வேண்டியவர்களாக நாம் உள்ளோம். ’ என மேலும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் பங்கெடுத்த இந்தப் போராட்டத்தில் சிங்களவர்களும் கலந்து அவர்களுடைய தோழமையை வெளிப்படுத்தினர். அருட்பணி ஜீவன்ந்த அவர்கள் ஆற்றிய உரையில் ‘வடக்கு கிழக்கு மக்களின் வாழ்விடங்களை சிங்கள குடியேற்றங்களிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பில் தென்பகுதி சிங்களவர்களும் தமிழர்களுடன் உள்ளனர்’ என்பதை உறுதி செய்தார். தமிழர்கள் தமது காணிகளை பாதுகாக்க போராடும் போது சிங்களவர்களும் அதனை புரிந்து போராடுவது மகத்தானது. இக்குருவுடன் வேறு சிங்களவர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி அவர்களுக்கு இப்போராட்டம் தொடர்பான ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. மகாவலி ‘எல்’ வலயத்தில் தமிழர்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டமை, நிலப்பறிப்பை எதிர்ப்பதற்கான காரணங்கள் என்பவைகளை தெளிவாக வெளிப்படுத்தும் இக்கடிதம் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர்; அவர்களிடம் கையளிக்கப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் பின்வருமாறு:
01. மகாவலி திட்டத்தால் ஏற்படும் தீமைகளை எதிர்ப்பது வரலாற்றுக்கடமை.
02. மணலாறு பிரதேச செயலாளர் பிரிவை மையப்படுத்தி வடமத்திய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எல்லைகளை உள்ளடக்கிய வகையிலே மகாவலி எல் வலயத்திட்டத்தின் கீழ் பாரிய உட்கட்டுமான வேலைகள் நடைபெற்றன. 2009இல் போர் முடிய 6000 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. மூவாயிரம் மில்லியன் ரூபாவுக்கு அதிக நிதி இங்கு பாவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.
03. சிங்கள குடியேற்றங்களை மணலாறில் மேற்கொண்டு வடக்கு கிழக்கு எல்லை துண்டாடப்படுகின்றது.
04. மகாவலி அதிகார சபையானது, கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய், மற்றும் கொடுக்கிளாய் பகுதிகளில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு சிங்கள மீன்வர்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள வழங்கி கரைதுறைப்பற்று பிரதேச செயலக எல்லைக்குள் தனது அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது.
05. மகாவலி எல் மற்றும் கே, ஜே வலயங்களில் சிங்கள குடியேற்றங்கள்
06. தொல்லியல் திணைக்களம் தமிழர்களின் கலாசார சமய இடங்களை பௌத்தமயமாக்குகின்றது (உதாரணம்: செம்மலை நீராவிப்பிள்ளையார் ஆலயம் பழமைவாய்ந்த பௌத்த விகாரையாக்கப்பட்டுவிட்டமை)
07. மீனவர்களின் வாழ்வாதார இடங்கள் (நந்திக்கடல், நாயாறு களப்புகள்) இயற்கை பாதுகாப்பு வலயங்களாக்கப்பட்டுள்ளன.
08. அரசின் புதிய கட்டுப்பாடுகள், சட்டதிட்டங்கள் முல்லைத்தீவு மக்களை துன்புறச்செய்கின்றன.
09. உங்களுடைய தலைமைத்துவத்தின் கீழ் நாட்டின் குடிமக்களாக அடிப்படை உரிமைகளை வெளிப்படுத்த எமக்கு அருகதை உண்டு
மகாவலி செயற்பாடுகளை வடக்கில் உடனடியாக நிறுத்தல், கொக்குளாய், கொக்குத்தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கேணி கடற்கரையில் தங்கியிருக்கும் சிங்களமீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணி அனுமதிப்பத்திரத்தை உடனடியான மீளப்பெறல், 1984 இல் வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்யப்பட்ட தமிழ் மக்களின் 2000 ஏக்கர் காணிகளை (சிங்களவர்களுக்கு நீதிக்குப்புறம்பாக கொடுக்கப்பட்டது) மீள தமிழர்களுக்கு வழங்கல் என்பவை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தொல்லியல் திணைக்களம், மாவட்ட அரச அதிகாரிகள் மற்றும் கிராமிய அமைப்புகளுடன் கலந்துரையாடாமல் தமிழர்களின் மரபுரிமையை திட்டமிட்டு சீரழிக்கக் கூடாது. வடக்குகிழக்கை நிரந்தரமாக பிரிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இல்லாவிட்டால் இது இனநல்லிணக்கத்தை பாதிக்கும். நந்திக்கடல் நாயாறு போன்ற இடங்கள் மீண்டும் மீன்பிடிப்புக்கு விடுவிக்கப்படவேண்டும் எனும் கோரிக்கைகளும் இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன.
உரிமைக்கான மக்கள் போராட்டங்கள்
அடிப்படை உரிமைகளை உறுதி செய்ய மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அவை இனம், மதம், மொழி, பால் என முத்திரையிடப்பட்டு சிலருடைய தனிப்பட்ட நன்மைகளுக்கானதாக்கப்பட்டு விடக்கூடாது. கட்சி அரசியல்களுக்குள்ளும் மிதவாதப் போக்குக்குள்ளும் உரிமைப்போராட்டங்கள் அகப்பட்டுவிடக்கூடாது. சோக்கிரட்டீஸ் எனும் தத்துவயியலாளரின் சிந்தனைப்படி ‘வலிமைமிகு மனம் கொண்டோர் கருத்தியல்களையும், சராசரி மனம் கொண்டோர் நிகழ்வுகளையும், பலவீனமான மனம் கொண்டோர் நபர்களையும் பற்றி கலந்துரையாடுகின்றனர் (Strong minds discuss ideas average minds discuss events, weak minds discuss people - Socrates) என்றார். குறிப்பிட்ட நபர்களைப் பற்றியோ (பலவீனர்கள்) அல்லது குறிப்பிட்ட சம்பவங்கள் நிகழ்வுகளைப் பற்றியோ (மிதவாதிகள்) கதைத்துக்கதைத்து அழியாமல் ஆரோக்கியமான வலுவானவர்களாக வாழ சிறந்த கருத்துருவாக்க தொடர்நிலையில் திறந்த மனதுடன் ஈடுபடவேண்டும். இது பவுலோ பிரேரி குறிப்பிடும் ‘செயற்பாடு – சிந்தனை’ (Action - Reflection) தொடர்நிலையாகவோ அல்லது மாசேதுசின் ‘பயிற்சி – அறிவு’ (Practice – Knowledge ) தொடர்நலையாகவோ அமைவது இன்றைய காலத்தின் தேவை.
சிவில் அமைப்புகள் உரிமை மீறல்களை உரிய முறையில் அவதானித்து, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்கள் போராட்டங்கள் உரிய முறையில் நடைபெற பொருத்தமான வசதிப்படுத்தல்களை செய்ய வேண்டும். சமயங்களும் கூட மக்களின் நன்மைக்காக பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டும். மக்கள் உரிமைகளுக்காக போராட வேண்டும். ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் துன்பமாக அழிவாக நோக்காமல் மாற்றங்களுக்காக உழைக்கும் சந்தர்ப்பங்களாக நோக்கவேண்டும். அப்போது தான் வரலாற்றுக் கடமைகளை கூட்டாக இணைந்து முன்னெடுக்கலாம்.
அருட்பணிS.D.P. செல்வன்
நிமிர்வு செப்டம்பர் 2018 இதழ்
Post a Comment