நிபந்தனையின்றி விடுதலை வேண்டும்
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் நிமிர்வுக்கு தெரிவித்த கருத்துக்கள்:
29.09.2018 அன்று 16 ஆவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழ் அரசியல்க் கைதிகள் தொடர்ந்து வருகின்றனர். மருத்துவ உதவிகளையும் புறக்கணித்துள்ளனர். இவ்வளவு நாளும் நாளொன்றுக்கு 2 சேலைன் போத்தல்கள் ஏற்றப்பட்டுள்ளன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு உடல்நிலை காரணமாக 18 போத்தல் சேலைன் ஏற்றப்பட்டிருக்கின்றது. தற்போது அவர்களின் நிலைமை மேலும் மோசமாக சென்று கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்யப் போகின்றது என்பது தான் எங்கள் கேள்வி. ஏனென்றால் அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல்க் கைதிகள் விடுதலை பற்றி குறிப்பிட்டிருந்தார்கள். தேர்தலில் அவர்கள் தெரிவு செய்யப்பட்டு 3 1ஃ2வருடங்கள் முடிந்து விட்டன. கடந்த ஆடி மாதம் நாடாளுமன்றில் நாங்கள் சென்று சம்பந்தனை சந்தித்த போது தானும், ஜனாதிபதியும், பிரதமரும் இந்த விடயம் சம்பந்தமாக அவசர சந்திப்பு மேற்கொள்ளப் போவதாக கூறினார். இப்போது புரட்டாதி மாதமும் முடியப் போகின்றது. இன்னமும் அந்த அவசர சந்திப்புக்கு நாள் குறிக்கப்படவில்லை. அதன்பிறகு அரசியல்க் கைதிகள் உண்ணவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த பிறகு தான் சம்பந்தன், சுமந்திரன், ரணில், சட்டமா அதிபரும் சந்திக்கின்றார்கள். இவர்கள் இந்த விடயத்தை நினைச்ச நேரத்தில் கையாள்வதற்கும்இ நினைச்ச நேரத்தில் விடுவதற்கும் இது சம்பந்தன் சுமந்திரனின் பிரச்சினையா? அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சினையா? அல்லது தமிழ் மக்களின் பிரச்சினையா? கூட்டமைப்பின் தலைமை தமிழ் மக்களுடன் இல்லை என்கிற விடயம் இதன் மூலம் தெளிவாகின்றது.
இந்த 107 அரசியல்க் கைதிகளின் பிரச்சினை என்பது அவர்களின் சொந்த பிரச்சினை இல்லை. ஒட்டு மொத்த தமிழ் மக்களின் அரசியல்ப் பிரச்சினை. இவர்களின் விடுதலை என்பது தமிழ் மக்களின் அரசியலோடு தொடர்புடையது. தமிழ் அரசியல்க் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துவது நல்லிணக்கத்தின் ஒரு அடையாளம் ஆகும். நல்லிணக்கத்தின் அடையாளமாக இவர்கள் அத்தனை பேரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. தமிழ்மக்களுக்கும் இவர்களுக்கும் எதிர்காலம் என்ற ஒன்று இருக்கின்றது. அதனை துரிதப்படுத்த வேண்டும் என்பது தான் எங்களின் கோரிக்கை.
அரசாங்கம் இவர்களுக்கு தண்டனை கொடுக்கவே முயல்கின்றது. இவர்களுக்கு தண்டனை கொடுப்பதன் மூலம் தமிழ் அரசியலுக்கு தண்டனை கொடுக்கப் பார்க்கின்றார்கள். இந்தியாவும் இதற்குப் பின்னால் நிற்கின்றது. அங்கேயும் எழுவர் விடுதலை தீவிரமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இங்கே அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோருவது போல் அங்கேயும் அவர்களை விடுவிக்க வேண்டும் எனக் கோருகிறோம். கூட்டமைப்பினர் இந்திய அரசியலுக்குப் பின்னால் நின்று செயற்படுகின்றார்கள். இவர்களுக்கு தமிழ் மக்களின் அரசியல் தேவையில்லை.
மஹிந்த ஆட்சிக் காலத்தில் முன்னாள் போராளிகள் என்று கைதான 15000 க்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் மைத்திரியின் ஆட்சிக் காலத்தில் சட்ட நடைமுறைகளின் ஊடாகவே சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் அதிகாரத்தை பாவித்து யாரும் விடுதலை செய்யப்படவில்லை.
இராணுவத்துக்கும் பொது மன்னிப்பு கொடுக்க வேண்டும் என சம்பிக்க ரணவக்க சொல்கிறார். அப்படியாயின் இராணுவம் போர்க் குற்றம் செய்ததனை ஏற்றுக் கொள்கின்றதா? அதனை மறுக்கின்றார்கள். நடந்த யுத்தக் குற்ற விடயங்கள் தொடர்பாக இதுவரை எந்தவொரு இராணுவமும் கைதாகவில்லை. நீதிமன்றிலும் நிறுத்தப்படவில்லை. சிறைகளிலும் அடைக்கப்படவில்லை. அரசியல்க் கைதிகளையும் மனித குலத்துக்கே எதிரான போர்க்குற்றம் புரிந்தவர்களையும் சமப்படுத்த முடியாது. ஒட்டு மொத்த சிங்கள இராணுவத்தின் யுத்தக் குற்றங்களை மறைப்பதற்காக இந்த 107 அரசியல்க் கைதிகளையும் சிங்கள அரசாங்கம் பயன்படுத்தப் பார்க்கின்றது.
சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தையே தமிழ் அரசியல்க் கைதிகள் தற்போது முன்னெடுத்து வருகின்றனர். தண்ணீர் குடிப்பதையும் அடுத்த கட்டமாக நிறுத்தப் போவதாக சொல்கிறார்கள். இவர்களுக்கு பொதுமன்னிப்பு கொடுக்க வேண்டுமென சம்பந்தர் சொல்கிறார். குற்றம் செய்தவர்களுக்கு தான் பொதுமன்னிப்பு, அவர்களுக்கு தான் புனர்வாழ்வு. இவர்கள் யாரும் குற்றம் செய்யவில்லை என்று நாங்கள் சொல்கின்றோம். குற்றம் செய்தது முழுக்க சிங்கள அரசாங்கம். தமிழ்மக்களின் அரசியலை விட்டு விலகியிருக்கின்ற சம்பந்தனுக்கு சுமந்திரனுக்குமே பொதுமன்னிப்பும் புனர்வாழ்வும் தேவை.
அரசியல்க் கைதிகளுக்கு நிபந்தனையற்ற விடுதலையே வேண்டும்.
நிமிர்வு செப்டம்பர் 2018 இதழ்
Post a Comment