ஆசிரியர் பார்வை




அரசியலகைதிகளின் விடுதலை: தமிழ் சமூகத்தின் கூட்டிணைவே முதல் தேவை

அனுராதபுரம், மகசின் சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல்கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். உண்ணாவிரதமிருக்கும் எங்கள் உறவுகளை சாவதற்குள் மீட்டுத்தாருங்கள் என உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். இந்த தலையங்கம் எழுதப்படுகிற பொழுது அவர்களில் நால்வர் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அநுராதபுர சிறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

107 தமிழ் அரசியல் கைதிகளே சிறைகளில் உள்ளதாக அருட்தந்தை சக்திவேல் கூறுகிறார். அந்த 107 அரசியல்கைதிகள் தொடர்பிலான முழுமையான விபரங்கள் ஏதாவது தமிழ் அமைப்புக்கள், கட்சிகளிடம் இருக்கின்றதா? அரசியல் கைதியின் பெயர், இடம், இப்போது அவர்களின் குடும்பத்தின் நிலை என்ன?    பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள அந்த குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கலை எப்படி செய்வது?   அரசியல் கைதிமேல்  என்ன என்ன வழக்குகள் பதியப்பட்டுள்ளன? வழக்கு தவணைகளின் போது தவறாது வழக்கறிஞர் ஆஜராகின்றாரா? குறித்த அரசியல் கைதி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைதி அறிந்திருக்கின்றாரா? குறைந்தபட்சம் முதல் கட்டமாக இந்த விடயங்களையாவது நாம் கவனத்தில் கொண்டு ஒரு தகவல் திரட்டையும் செயற்பாட்டு வட்டத்தையும் ஏற்படுத்தாமல் அடுத்த நகர்வு பற்றி சிந்திக்க முடியாது. 

சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை எத்தனை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேரில் சென்று பார்த்துள்ளார்கள்? அரசியல் கைதிகளின் குடும்பங்கள் உட்பட்ட தம்மை தெரிவு செய்த மக்களின் குறைபாடுகளை நீக்குவது இவர்களின் கடமையல்லவா? நீண்டகாலமாக சிறைகளில் உள்ள அரசியல் கைதிகள் மேல் அக்கறையுடன் இருந்தால் தான் அவர்களும் உளவுறுதியுடன் இருப்பார்கள். அல்லது சிறைகளில்  சோர்வடைந்து விடுவார்கள்.

அன்று கூட்டாக போரை எதிர்கொண்ட சமூகம் இன்று தனித்திருக்கின்றது. எங்களுக்காக வாழ்ந்து தங்கள் வாழ்வையே இன்று சிறைக்கம்பிகளுக்குள் கழித்து வரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் தமிழ்த் தேசிய அரசியலின் அடுத்த கட்டம் பற்றி எப்படி சிந்திக்க முடியும்?

காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து எவ்வித சாதகமான பதிலும் தெரிவிக்காத அரசு, இன்று கண்ணுக்கு முன் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் கூட தயக்கம் காட்டுகிறது. 

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான பொறிமுறையொன்றை சட்ட நிபுணர்களுடன் ஆராய்ந்து தமிழ்த் தரப்பு வகுக்க வேண்டும். அரசியல் கைதிகளின் விடுதலையில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று இருக்காமல் ஒவ்வொரு தமிழ்மகனும் இதயசுத்தியுடன் ஒன்றிணைந்து அவர்களின் போராட்டத்துக்கு வலுச் சேர்க்க வேண்டும்.

செ.கிரிசாந்-
நிமிர்வு செப்டம்பர் 2018 இதழ்



No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.