வடமராட்சி கிழக்கு அபிவிருத்தியடைவதற்கு வளங்கள் பாதுகாக்கப்படுமா?




வடமராட்சி கிழக்குப் பிரதேசம் பல முறை யுத்தத்தாலும், 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாகவும் இடப்பெயர்வுகளையும் உயிர் இழப்புக்களையும் பெருமளவில் சந்தித்து இருந்தது. இவற்றால் இப்பிரதேச மக்களுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பும் அளப்பரியது. அம்மக்கள் தொடரும் வலிகளோடு அன்றாட வாழ்க்கையை நடாத்தி வருகின்றார்கள். யுத்தம், சுனாமியால் யாழ் மாவட்டத்திலேயே வடமராட்சி கிழக்கில் தான் அதிக உயிர் இழப்புக்கள் ஏற்பட்டது. இந்திய இராணுவத்தின் காலத்திலிருந்து 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தம் வரை ஏராளமானோர் உயிர் பறிக்கப்பட்டும் காணாமல் போகவும் செய்யப்பட்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி  ஒரு வருடத்திற்கு மேலாக மருதங்கேணியில் உறவுகள் போராடி வருகிறார்கள்.

வடமராட்சி கிழக்கு பிரதேசம் யாழ் குடாநாட்டின் வடமுனைவின் தென்கிழக்கே எழில் வனப்பு மிக்க வயல் வெளிகளையும், கடல் பிரதேசங்களையும் கொண்டு மருத நிலமும் நெய்தல் நிலமும் ஒருங்கே சேரப்பட்டு காணப்படும் ஒரு வளமான பிரதேசம். மணற்காடு தொடக்கம் சுண்டிக்குளம் வரை 18 கிராம சேவகர் பிரிவுகளில் 5000 இற்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் 80 வீதமானவர்கள் கடற்தொழில் மற்றும் விவசாயம் போன்றவற்றை பிரதான வாழ்வாதார தொழிலாக செய்து வருகின்றார்கள்.

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தின் எல்லைகளாக வடமேற்கே வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவையும் வடகிழக்கே சமுத்திரத்தினையும் தென்கிழக்கே முல்லைத்தீவு மாவட்டத்தினையும் தென் மேற்கே பச்சிளைப்பள்ளி பிரதேச செயலக பிரிவு மற்றும் தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுகளை கொண்டுள்ளது.

இப்பிரதேசம் பறவைகளின் சுவர்க்க பூமியாகவும் மணல் மண் வளம் நிறைந்த பகுதியாகவும் வரலாற்று காலத்தில் பூர்வீக குடிகளான நாகர்கள் வாழ்ந்த பிரதேசமாக இது சிறப்பு பெறுகிறது. நாகதம்பிரான் ஆலயம் வரலாற்று தொடர்புடன் கூடிய ஆலயமாக உள்ளது. மண்டலாய் கோயில், கப்பல் ஏந்திய மாதா கோவில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று. இப்பிரதேசம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில்கள், தேவாலயங்கள், ஒல்லாந்தர் கோட்டைகள், மணல் குன்றுகள், காடுகள், கடற்கரைகள் என பல்வேறு சிறப்புக்களையும் கொண்டுள்ளது.

இவ்வாறு பல சிறப்புக்களைக் கொண்டிருந்த போதும் தாங்கவொண்ணா துயரங்களை சந்தித்த இப்பிரதேச மக்கள் சிறிது சிறிதாக தமது இயல்புநிலை வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.  இதற்குத் பெரும் அச்சுறுத்தலாக இப்பிரதேசங்களில் நடக்கும் சட்ட விரோத தொழில்கள், அரசாங்கத்தின் காணிபறிப்புச் செயற்பாடுகள் மற்றும் போதைவஸ்து பாவனை என்பன தலையெடுத்துள்ளன. 2009 ஆம் ஆண்டு யுத்தத்துக்கு முன் இருந்த சட்ட நடைமுறை, வாழ்க்கை முறைகள் இன்று இல்லை. அதனால் எதிர்கால சந்ததியினர் எவ்வாறு சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக உருவாக முடியும் என்ற கேள்வி எழுகின்றது.
மறுபுறம் கடல்வள சுரண்டல், சரணாலய விரிவாக்கம் என்ற பெயரில் காணிகள் சுவீகரிக்கும் முயற்சிகள், சட்ட விரோத மணல் அகழ்வுகள் என  “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும்” செயற்பாடுகள் தொடர்கின்றன.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் நிலங்கள் கடல் வளங்கள் பறி போவதை போன்று வடமராட்சி கிழக்கு கடல்வளமும் பறிபோகக் கூடும் என உள்@ர் மீனவர்கள் அச்சம் கொண்டுள்ளனர். திட்டமிட்ட முறையில் தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வளங்களை சூறையாடும் செயற்பாடு அண்மைக்காலமாக அதிகமாக இடம்பெறுகிறது. தமிழர்கள் தமது பிரதேச வளங்களை காப்பாற்ற பல போராட்டங்களை முன்னெடுத்தாலும்  இந்த அரசு அதை செவி சாய்ப்பதாக இல்லை. அதைப்பற்றி பொருட்படுத்துவதும் இல்லை. அச்சுறுத்தல்களை மேற்கொண்டு மக்களை நசுக்கும் செயற்பாடே தொடர்ந்து வருகிறது.

வடமராட்சி கிழக்கில் முஸ்லீம் சிங்கள மீனவர்கள் வாடி அமைத்து அண்மைக்காலமாக கடல் அட்டை பிடிக்கின்றார்கள். இவர்கள் சிலிண்டர்களினை பயன்படுத்தி பிடிப்பதனால் அதிலிருந்து வரும் வாயுக்களின் இராசாயன தாக்கத்தினாலும் நவீன மீன் பிடி முறைகளாலும் மீன் வளம் அழிவடைகிறது. மீன்கள் வேறு இடங்களிற்கு நகர்ந்து செல்லும் நிலையும் தோன்றுகிறது. கடலட்டைகளையும் சங்கு போன்ற பல பெறுமதியான வளங்களையும் சூறையாடுவது தொடர்கதையாகி உள்ளது.  யுத்தத்திற்கு பின்னர் தென்னிலங்கை மற்றும் வேறுமாவட்ட மீனவர்கள் வடமராட்சி கிழக்கு பிரதேசங்களில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் முல்லைத்தீவு நாயாற்றில் தமிழ் மீனவர்களின் வாடிகள் எரியூட்டப்பட்டு பல இலட்சம் பெறுமதியான வலைகள், படகுகள். ஏரியூட்டப்பட்டது. அதே போன்று வடமராட்சி கிழக்கில் தாளையடி, கட்டைக்காட்டில் தமிழ் மீனவர்களின் படகுகள், இஞ்சின் என்பன எரியூட்டப்பட்டன. இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். இவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையும், நில அபகரிப்பும் தொடர்ந்தால் தமிழ் சமுதாயம் கையேந்தும் நிலை ஏற்படும். அத்தோடு கடல்வள சுரண்டல், இனப்பரம்பலை மாற்றியமைத்தல், சுகாதார சீர்கேடுகள் ஏற்படுதல் என பாதகமான விளைவுகளை நோக்கி நகரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இதே போன்று சரணாலய விரிவாக்கம் என்ற பெயரில் மக்களின் காணிகள் அபகரிக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. வனவிலங்கு பரிபாலன திணைக்களம் இதனை நன்றாகவே நிறைவேற்றி வருகின்றது. வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் உள்ள சுண்டிக்குள கிராமசேவகர் பிரிவில் பறவைகள் சரணாலயம் 24000 ஏக்கர் பரப்பாக இருந்து வந்துள்ளது. அதேவேளை இச்சரணாலயத்திற்கு இறுக்கமான எல்லைகள் காணப்படவில்லை. கிழக்கு கரைப்பகுதியில் பருவகால மீன்பிடியும் இடம்பெறுவதுண்டு. 2015 மாசி 20 ஆம் திகதி வர்த்தகமானியின் பிரகாரம் சுண்டிக்குள பறவைகள் சரணாலயத்தின் (தேசிய பூங்கா) பரப்பளவு 48000 ஏக்கராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் குடியிருப்பு பகுதிகள் வயல் நிலங்கள், முள்ளியான் றோ.க.த. பாடசாலை, தனியார் நிலங்கள், அரச காணிகள் என்பன தேசிய இயற்கை ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் போக்கறுப்பு, முள்ளியான் மற்றும சுண்டிக்குள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பரம்பரையாக வைத்திருந்த காணிகள் இழக்க வேண்டியதாக இருக்கின்றதுடன் மக்களின் வாழ்வாதார செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இலங்கை குடிக்கணிப்பின்படி 1911 இல் முள்ளியானில் 387 பேரும் பெரிய பச்சிலைப்பளையில் 90 பேரும் போக்கறுப்பில் 217 பேரும் சுண்டிக்குளத்தில் 34 பேரும் இருந்துள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றது. இக்கிராமங்களின் நிலங்கள் கிராமிய மக்களுக்குரியது. சட்டபூர்வமற்று சமூக நியாயங்களை புறந்தள்ளி வனஜீவராசி திணைக்களம் செயற்படுவது நியாயமற்ற செயலாகும். மக்களின் நிலங்களைப் பறித்து பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வளவு நிலப்பகுதியினை அபகரிக்க வேண்டிய தேவையும் இல்லை. மக்களும் பறவைகளும் இணைந்து வாழக்கூடிய நிலையை தோற்றுவிக்க வேண்டுமல்லாது மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சிக்க கூடாது. சுண்டிக்குள பறவைகள் சரணாலயத்துக்கு மேலதிகமாக எடுத்த 24000 ஏக்கர் நிலப்பகுதியை கைவிட வேண்டும். இதனூடாக மக்களின் வாழ்வியலை மேம்படுத்தலாம். மக்களின் வாழ்வாதாரத்தையும்  அபிவிருத்தியையும் பாதிக்காது மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்பட வேண்டும்.

தமிழ் மக்களின் நிலங்களை எப்படியாவது அபகரிக்க வேண்டும்  என இனரீதியாக பாகுபாடு காட்டுவது எந்த வகையிலும் நீதியாகாது. அது மக்கள் மத்தியில் தொடர்ந்தும் காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகம் இல்லை.

கரையோர வீதியான பருத்தித்துறையிலிருந்து மருதங்கேணி , சுண்டிக்குளம், அம்பலவன், பொக்கணை கிராமங்கள் ஊடாக வீதி அமைக்கப்பட்டால் யாழ்ப்பாண குடாநாட்டுக்கும் முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, பொத்துவில் பகுதிகளுக்கும் இடையிலான போக்குவரத்து இலகுவாகும். இதனூடாக கடற்கரைப் பிரதேசங்கள் அபிவிருத்தியடையகூடிய சாத்திய கூறுகள் அதிகம். இவ்வாறு மக்கள் தேவைகளை அறிந்து மக்கள் பிரதிநிதிகள் செயற்பட வேண்டும். அதைவிடுத்து நிலஅபகரிப்பு, சிங்கள் குடியேற்றம், பௌத்த விகாரைகள் அமைத்தல் என மக்களுக்கு மேலும் மேலும் வலியை ஏற்படுத்தினால் இந்நாட்டில் அனைத்து மக்களும் உரிமைகளை பெற்று எவ்வாறு சகோதரத்துடன் வாழமுடியும்? மீண்டும் மீண்டும் முரண்பாடுகள் தான் ஏற்படும். நல்லிணக்கம் என்பது வெறும் பேச்சால் ஏற்படுவதில்லை. செயற்பாடுகள் மூலம்தான் ஏற்படும்.

வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தியில் மிகவும் பின் தங்கி காணப்படுகிறது. இங்குள்ள பாடசாலைகளில் உயர்தர பிரிவுகளுக்கு போதிய ஆசிரியர்கள் இல்லை. கலை பிரிவுகளை தவிர ஏனைய பிரிவுகள் இல்லை. இதனால் வெளியிடங்களுக்கு சென்று மாணவர்கள் படிக்க வேண்டிய  ஒரு கட்டாய நிலை ஏற்படுகின்றது. வசதி குறைந்த மாணவர்கள் வெளியிடங்களுக்கு சென்று படிப்பதனால் பொருளாதாரம், பாதுகாப்பு போன்ற பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

இப்பிரதேசங்களில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்கள் இல்லை. சுனாமி யுத்தம் காரணமாக கணவனை இழந்த பெண்கள் அதிகம். அவர்களுக்கு வேலைவாய்ப்போ வாழ்வாதார வசதிகள் இன்றி சிரமப்படுகிறார்கள். இதனால் இப்பகுதிக்கு ஏற்ற மாதிரியான தொழிற்சாலைகளை அமைத்து கொடுத்தால் இப்பகுதி மக்கள் பயன்பெறுவார்கள். வேலைவாய்ப்பு பிரச்சனைகளும் இருக்காது. தரமும் உயரும். அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சிந்திப்பார்களா?

அரசியல்வாதிகள் ஏன் இப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதில் அக்கறை காட்டுவதில்லை? அவர்கள் மக்களின் நலனில் செயற்படுவது குறைவு கட்சிரீதியாக தமக்குள் யார் பெரிது என்று சண்டை பிடித்து கொள்கிறார்களே தவிர மக்களின் நலனிலோ பிரதேச அபிவிருத்தியிலோ செயற்படுவது மிக குறைவு என்றே கருதலாம். எதிர்வரும் காலங்களில் வடமராட்சி கிழக்கு நிலங்களும் கடல்வளங்களும் சுரண்டப்படுவதை தடுத்து மக்களும் தமிழ் அரசியல்வாதிகளும் ஒன்றாக செயற்பட்டால் வளங்களை பாதுகாக்க முடியும் என்பதில் எந்த சந்கேமும் இல்லை. பொறுத்திருந்து பார்க்கலாம்.

பானு- கிழக்கு பல்கலைக்கழக மாணவன்
நிமிர்வு 2018 ஒக்டோபர் இதழ்


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.