ஆசிரியர் பார்வைகொள்கையில் உறுதியுடன் இருப்போருடன் இணைந்து பயணிப்பதே ஆரோக்கியமானது

தெற்கில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் ஒருபுறமிருக்க, அண்மையில் தமிழர் அரசியல் தளத்தில் நடைபெற்ற இரு நிகழ்வுகள் முக்கியமானவை.  வடமாகாண சபை முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி என்கிற புதிய கட்சியை அறிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் காலத்தில் ஆண்களுக்கு சமமாக போர்க்களத்திலும் அரசியற்களத்திலும் சாதனைகளை நிகழ்த்திய தமிழ்ப்பெண்களின் பங்களிப்பு போருக்குப் பின்னர் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.  உதாரணமாக விக்னேஸ்வரன் தனது கட்சியை அறிவித்த தமிழ் மக்கள் பேரவையால் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் 4 பெண்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.  போர்க்காலத்தில் அடையப்பட்ட பெண்விடுதலை தொடர்பான முன்னேற்றங்களை எமது சமூகம் மறக்கவும் மறுக்கவும் நினைக்கிறது.  இதனை அனுமதிக்க முடியாது. இதனை அனுமதிக்க முடியாது.  அந்தவகையில் பெண் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்ட அரசியற்கட்சி முக்கியம் பெறுகிறது.  இக்கட்சி தொடர்ந்தும் பெண்கள் தொடர்பான கொள்கை வகுப்புக்களையும்  அவர்களின் முன்னேற்றத்தையும் முதன்மையாக முன்னெடுக்க வேண்டும் என அறைகூவல் விடுக்கிறோம்.

முதலமைச்சர் தேர்தல் அரசியலுக்குள் நுழைந்தபோது அவரது தமிழ்த்தேசிய அரசியற் புரிதல் என்பது குறைபாடாகத் தான் இருந்தது. பின் பல்வேறு மக்கள் சந்திப்புக்கள், உரையாடல்கள் மூலமாக தமிழ்த் தேசிய அரசியல் புரிதலை மேம்படுத்திக் கொண்டார். நல்லூரில் முதலமைச்சரின் உரையும் பல்வேறு விடயங்களையும் சுட்டிக் காட்டியுள்ளது. எதற்காக நாம் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தோமோ அதனைப் பெற்றுக்கொள்ளும் வரை இந்தப் போராட்டத்தைக் கையில் எடுத்தே ஆக வேண்டும் என்று கூறியுள்ளார். இதில் வெற்றி காணக்கூடிய சாணக்கியமும், ஆற்றலும், பொறுப்பும் உடைய அடுத்த தலைமுறையினரிடம் கையளிக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளதாகவும் தெரிவித்தார். இறுதியில் தமிழ்த் தேசிய கோட்பாடுகளின் வழிநின்று எமது இனத்தின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடுதலையை வென்றெடுத்து மேன்மையை அடைவதற்கு, மனித உரிமைகளை மதித்து நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றும் அனைவரையும் ஒரு குடையின் கீழ் சேர்க்க இந்தக் கட்சிப் பயணம் உறுதுணையாக அமையும். என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால்,  தமிழ்த் தேசிய கோட்பாடுகளின் வழி கொள்கைகளில் உறுதியாக நிற்போருடன் இணைந்து பயணிக்கப் போகின்றாரா அல்லது தேர்தல்களில் வெற்றியடைவதற்காக நாளொரு கட்சியுடன் அவர்களின் சுய இலாப உள்நோக்கங்களை உணராது இணைந்து பயணிக்கப் போகிறாரா என்பதற்கான விடையை அவர் இப்பொழுதே தீர்மானித்துக் கொள்வது நல்லது. விக்னேஸ்வரன் தன்னுடன் சேர்த்துக் கொள்பவர்கள் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும்.  கொள்கைத் தெளிவுடன் இருப்பவர்களுடன் இணைந்து பயணிப்பது தான் முதலமைச்சருக்கு நல்லது. அல்லது காலப்போக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போல் செயற்பட வழி வகுக்கும். கூட இருப்பவர்கள் இழுத்துக் கொண்டு போய் பாதாளத்தில் தள்ளி விட முதலமைச்சர் அனுமதிக்கக் கூடாது.


செ.கிரிசாந்-
நிமிர்வு 2018 ஒக்டோபர் இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.