போதைப்பொருள் நிராகரிப்பு - இதயபூர்வமான பங்களிப்புக்கு அழைப்பு

                   

          
 அறிமுகம்:

போதைப்பொருள் பாவனையால் இன்று பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்குள் நாம் சிக்கித் தவிக்கின்றோம். இதன் பாவனை எமது நிகழ்காலத்தை மட்டுமல்ல எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கிவிட்டது. போதைப் பொருள்களை உள்ளெடுப்பதால் கிடைக்கும் போலியான சொற்பநேர சுகம் உண்மையான நீண்ட காலவாழ்வை அழிக்கின்றது. இது தனியாட்களை மட்டுமல்ல மனிதகுலத்தையே அழித்து வருகின்றது.

போதைப்பொருள் நிராகரிப்புக்கான சிந்தனை – செயற்பாட்டு முன்மொழிவுகள்:

மனிதவாழ்வு புனிதமானது, இயல்பாக சமூகமாக மகிழ்வுடன் வாழவேண்டிய ஒன்று. இந்த ஆரோக்கியமான வாழ்க்கை கட்டமைப்பை சீர்குலைக்கும் போதை மையசிந்தனை செயற்பாடுகளை நிராகரிப்பதும் தடுப்பதும் அனைவரதும் கடமை. இதனை அனைவரும் அங்கீகரித்து யதார்த்த இயல்பு வாழ்வுக்கு எதிரானதாக போதைபாவனையை நோக்க வேண்டும். போதை நிராகரிப்பை யதார்த்தமயமாக செயற்பட முன்வரவேண்டும்.

போதைப்பொருள் உற்பத்தி, சந்தைப்படுத்தல், பாவனை மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாதல் என்பவற்றை நிராகரிப்பது தொடர்பாக விழிப்புணர்வூட்டல் பொறிமுறை தொடர்ந்தேட்சையாக முன்னெடுக்கப்பட வேண்டும். பாடசாலை, வழிபாட்டிடங்கள், மருத்துவமனைகள், சந்தைகள் போன்ற பொதுவிடங்களில் கட்டமைப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன் “தெருக்கூத்து, நாடகங்கள்” போன்றவை மூலம் நடமாடும் விழிப்புணர்வுச் செயற்பாடுகள் குறிப்பிட்ட பிரதேச கிராமமட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வாழ்வாதாரத்திற்காகவும், ஆடம்பர பகட்டு வாழ்க்கைக்காகவும் சிலர் போதைப்பொருள் உலகவலையமைப்புகளுடன் தொடர்புபட்டு, பேராசையுடன் சுயநலமாக வாழமுற்படுவது அனைவருக்கும் ஆபத்தை விளைவிக்கின்றது. முக்கியமாக வன்முறை, பாலியல் வல்லுறவு மற்றும் கொலை போன்றவை போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விபரீதவிளைவுகள் என்பதை அனைவரும் புரிந்துகொள்வது அவசியம். ஒருவரது வாழ்வாதாரம் பலரது அழிவுக்கு ஆதாரமாகின்றது என்பதை புரிந்துகொள்வது முக்கியம்.

போதைப்பொருட்கள் இலங்கைக்குள் கொண்டு வரப்படுவதும் அவைபல இடங்களுக்கும் விநியோகப்படுத்தப்படுவதும் கட்டமைப்புரீதியாக தடுக்கப்படவேண்டும். இதனை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான சட்டவாக்கங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். நீதிமன்ற ஆணைகளை முறையாக நடைமுறைப்படுத்தும் சிவில் ஆட்சி உறுதிசெய்யப்பட வேண்டும். உண்மையையும் நீதியையும் மனிதத்துடன் பேணும் கண்காணிப்பு ஜனநாயக விழுமியங்கள் அரசினால் முன்னெடுக்கப்பட வேண்டும் அவை மக்களால் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மரண தண்டனையை நிறைவேற்றுவதே போதைப்பொருள் பாவனையை தடுக்க ஒரே வழி என கருதுவது எவ்வளவு தூரம் பொருத்தமானது? அச்சத்தை ஏற்படுத்துவதால் ஆரோக்கியமான சமூகம் உருவாகும் என நோக்குவது எவ்வளவு தூரம் பொருத்தமானது? தவறிழைக்கும் ஒருவரை கொல்லுவது மட்டும் தானா தவறற்ற சமூகத்தை நோக்கி பயணிக்க ஒரே வழி? போதைப்பொருள் உலகத்தை இயக்கும் அதிகாரம் கொண்ட பலர் பாதிப்பின்றி தொடர்ந்து போதையுலக வலையமைப்பை பேண போதைப்பொருட்களுடன் தொடர்புறும் சிலரைமட்டும் கொலை செய்வது பொருத்தமானதா? எனும் கேள்விகளை ஆழமாக நோக்குவது இன்றைய காலத்தின் தேவை. இதில் அனைவரதும் பங்களிப்பு அவசியம்.

‘அனைவரும் அடிப்படைகளுடன் வாழவேண்டும்’ எனும் போராட்டம் தொடர்வதை தடுக்கவும், நீதி, உண்மை, அடையாளங்கள், அபிலாசைகள், உரிமைகள்  போன்றவை தொடர்பான சிந்தனைகள் செயற்பாடுகளை நீண்டகாலப்போக்கில் தடுக்க போதைப்பொருட்கள் பாவிக்கப்படுகின்றன. போதைப்பொருட்களுக்கு மற்றும் போதைக்கு அடிமைப்பட்ட சமூகம் ஒருநாளும் அவர்களுடைய உரிமைகளுக்காக ஒற்றுமையாக போராடாது என்பதை புரிந்து போதை உலகை நிராகரிப்பது அனைவரதும் கடமையாகும்.

அத்துடன் இன்றைய எமது வாழ்க்கை இயங்கு நிலைகளை ஆழமாக நோக்கினால் நாம் போதைப்பொருட்களை பாவிக்காமலே ஒரு போதைக்குள்ளாக்கப்பட்டுள்ளதை புரிந்துகொள்ளலாம். சுயநலமாக மற்றவரை மிதித்தும் மற்றவர்கள் மீது ஏறி எப்படி நான் மட்டும் முன்னே செல்லலாம் என்பது போட்டியாக்கப்பட்டுவிட்டது. அடிப்படைகளைப் பற்றி யோசிக்காமல் உரிமைகளுக்காக போராடாமல் முதலாளித்துவ மைய நுகர்வுவாதத்துக்குள் மூழ்கி, நாளாந்த பிரச்சினைகளே தஞ்சம் என வாழபழக்கப்பட்டு விட்டோம். இதனை கடந்து வாழ்வின் அடிப்படைகளை இயல்பாக நோக்க முயற்சிப்பது அவசியம்.

இதயபூர்வமான பங்களிப்புக்கு அழைப்பு:

இன்றைய யதார்த்தத்தில், போதைப்பொருட்களின் ஒழிப்பில் சமூகமாகவும் கட்டமைப்புகளாகவும் தனியாட்களாகவும் எமக்கு பாரிய பொறுப்பு உண்டு. இதனை இதயபூர்வமாக மேற்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும்.

கடந்தகால துன்ப அனுபவங்கள் இன்றும் தொடர்கின்றன. துப்பாக்கிச்சத்தங்கள், எறிகணைகள், விமானக்குண்டுவீச்சுகள் இல்லை. இனப்பிரச்சினைக்கு தீர்வும் இல்லை. இது இப்படியேயிருக்க எம்மை அழிக்கும் இன்னொரு கருவியாக போதைப்பொருட்கள் நடமாடுகின்றன. அவற்றுக்கு நாமே பாதுகாப்புக் கொடுக்கின்றோம், அவற்றை நாமே பாவிக்கின்றோம். இவை எம்மை அழிக்கின்றன, சுயநினைவற்றவர்களாக்குகின்றன என்பதை நன்கு தெரிந்தும் அவை எம்மவர்களுக்குள் மற்றும் எம் எதிர்காலத்துக்குள் இருக்க அனுமதிக்கிறோம். எமது இனத்தை அழிக்க துணைபோகின்றோம். இது இன அழிப்பு மட்டுமல்ல மனித அழிப்பு என்றே இதனை கூறவேண்டும்.

எல்லாவற்றையும் தனித்தனியாக நோக்கும் போக்கை கடந்து எல்லாவற்றுக்கும் இடையேயுள்ள தொடர்பை புரிந்துகொள்வது காலத்தின் தேவை. முக்கியமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வாழ்வாதாரத்துக்காக பணம் உழைப்பவர் இன்னொரு வழியில் அவருடைய ஐந்து வயது மகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட வழியமைத்துள்ளார். போதைப்பொருள் தொடர்பாக நான் எதுவும் யோசிக்கத் தேவையில்லை என நினைப்பவர் நீதியோடும் உரிமைகளோடும் நாம் வாழத்தேவையில்லை எனும் கருத்தியல் நிலைப்பாட்டுக்கு பெரும் பங்களிப்புச் செய்கின்றார். போதையேற்றி சொற்பநேரம் மகிழ்ச்சியாக கற்பனை உலகில் மிதப்போம் என நினைப்பவர், நோயாளி சமூகம் உருவாக அல்லது சமூகம் நோயாளியாக அடிப்படைகளை வகுக்கின்றார்.

இதனால் போதை உலகையும் போதை வலையமைப்பையும் நிராகரிக்க சிந்திப்பதும் செயற்படுவதும், மனிதம் பேண நாம் இன்றைக்கு மட்டுமல்ல எதிர்காலத்துக்காகவும் மேற்கொள்ளும் நடவடிக்கையாகும்.

அருட்பணி SDP செல்வன்
sdpselvan@gmail.com

நிமிர்வு ஆவணி 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.