தமிழர் வளங்களின் சுரண்டல்: எதிர்த்து நிற்கும் திருமுருகன் காந்தி




இந்த நூற்றாண்டுக்குள் வல்லரசு ஆகிவிடவேண்டும் என்று கனவு காணுகிறது இந்திய மத்திய அரசு.  இந்திய ஆளும் வர்க்கம் பல்தேசிய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு அபிவிருத்தி என்ற போர்வையில் நாட்டு வளங்களையும் மக்களையும் சூறையாடி கொண்டிருக்கிறது.  அதற்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழும் போது வன்முறை கொண்டு அடக்குகிறது. இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகநாடு, இங்கு அமைதி நிலவுகிறது, உங்கள் முதலீடுகள் லாபம் தரும், மக்கள் அதனை விரும்புகிறார்கள் என்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அது காட்ட நினைக்கும் விம்பத்துக்கு இந்த மக்கள் போராட்டங்கள் பங்கம் ஏற்படுத்துகின்றன.


அதன் வெளிப்பாடே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டங்களின் போது நடைபெற்ற அரசு அடக்குமுறை, மனித உரிமைமீறல்கள்.  இவை குறித்து ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விபரமாக எடுத்துரைத்தார்.  இந்திய ஆளும் வர்க்கத்துக்கு திருமுருகன் காந்தி ஒரு பெரும் தலையிடியாக உருவெடுத்துள்ளார். அவரை எவ்வாறாவது முடக்கிபோட வேண்டும் என அது பிரயத்தனப்படுகிறது.  இதனாலேயே ஆவணி 9 ஆம் திகதி அதிகாலை 3.45 மணிக்கு கர்நாடகா பெங்களூரு விமானநிலையத்தில் வந்திறங்கிய அவரை கைது செய்து தமிழ்நாட்டு பொலிசிடம் ஒப்படைத்தது கர்நாடகா பொலிஸ்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின்போது நடந்த பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து,  ஜூன் மாதம் ஜேர்மனிக்குச் சென்ற திருமுருகன் காந்தி ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்பது ஒரு சர்வதேசப் பிரச்னை. தூத்துக்குடியில் நடந்த படுகொலை ஒரு சர்வதேசக் குற்றம்’ என்று ஐரோப்பிய நாடுகளின் அரசியல் கட்சிகள் மற்றும் அங்குள்ள அமைப்புகளிடம் பேசி,  இதைச் சர்வதேசப் பிரச்னையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.


ஐ.நா. வில் பேசியதற்காக ஒருவரை கைது செய்ய முடியாது என்பதனால் அவரின் பேச்சை தமிழில் மொழிபெயர்த்து பேஸ்புக்கில் போட்டதற்காக கைது செய்துள்ளதாக பொலிசார் கூறினர். அவ்வாறெனின் அந்த பேஸ்புக் பக்கத்தை முடக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கேள்வி எழுப்பினார்.  திருமுருகன் காந்தியின் கைது சட்டபூர்வமானதல்ல என்று கூறி அவரை விடுதலை செய்தார்.  ஆனாலும் அவ‍ரை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது தமிழ்நாடு அரசு.  கடந்த ஆண்டு பெரியார் சிலைக்கு மாலையிட்டுப் பேசியது தொடர்பாக, திருமுருகன் காந்திமீது வழக்கு இருந்தது. அந்த வழக்கில் கூடுதல் பிரிவுகளைச் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட புதிய குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் நடக்கும் வளங்களின் சுரண்டல்கள், உரிமைப் பறிப்புகள், அரச அடக்குமுறைகளை எதிர்த்து இளைஞர்கள் அதிக அளவில் திரள்கிறார்கள் என்பது அரசுக்குப் பிரச்சினையாக இருக்கிறது. எனவேஇ திருமுருகன் காந்தி போன்றவர்களைக் கைதுசெய்வதன் மூலம் மற்றவர்களை அச்சுறுத்த முடியும் என அரசு நினைக்கிறது.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி மீது வேண்டுமென்றே பொலிஸாரினால் வழக்கு சோடிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் கைது செய்யும் நிலையானது தமிழ்நாட்டைத் தாண்டியும் உலகத்தமிழர்களை பாதிக்கும் ஒரு விடயம்.  கைதுக்கு எதிராக பல்வேறு அரசியல்கட்சிகள், இயக்கங்கள், அமைப்புக்கள் உலகெங்கும் குரல் கொடுத்துள்ளன. இவ்வாறான நடவடிக்கைகளில் உலக தமிழர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.  தமிழ் மக்களின் பூர்வீக பூமியை பல்தேசிய நிறுவனங்களைக் கொண்டு சூறையாடும் சர்வதேச சதித்திட்டத்தை முறியடிக்க உலக தமிழர் ஒன்றிணைவது இன்றியமையாதது.

நிமிர்வு ஆவணி 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.