இன்றைய அரசியல் யதார்த்தம் - மாற்றம் வேண்டுமா? மாற்றத்தின் உந்துசக்திகள் யார்?
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறையின் தலைவரான கே.ரீ கணேசலிங்கம் "இன்றைய அரசியல் யதார்த்தம் - மாற்றம் வேண்டுமா? மாற்றத்தின் உந்துசக்திகள் யார்?" என்கிற தலைப்பில் ஆவணி மாதம் 6 ஆம் திகதி  பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் உரையாற்றினார். 'ஆய்வு' நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள 'எம்மால் முடியும்' கருத்தரங்கத் தொடரின் முதலாவதான "இன்றைய அரசியல் சமூக பொருளாதார நிலை என்ன? மாற்றம் வேண்டுமாயின் அதன் போக்கென்ன வீச்சென்ன?" என்ற கருத்தரங்கில் அவர் ஆற்றிய உரையின் முக்கிய விடயங்கள் வருமாறு:

அரசியல் தான் எல்லாவற்றுக்கும் மையமாக உள்ளது. இங்கு முன் வைத்த பிரச்சனைகளுக்கும் முன் வைக்கப்படப்போகின்ற பிரச்சனைகளுக்கும் தீர்வு அரசியல் தான். ஆகவே அரசியல் என்ற தளத்தில் எங்களுக்கு மாற்றம் என்ற ஒன்று அவசியமானது. மாற்றம் என்ற ஒன்று சமூகத்திற்கு, தேசிய இனத்திற்கு அவசியமானது. தேசிய இனமாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு இங்கு தொடர்ந்து இருக்க முன்நிற்கின்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் பாதைகளை மாற்றி அவ்வப்போது புதிதாக இன்னொரு பாதையின் பரப்புக்குள் போக வேண்டும். 2009 க்குப் பின் புதிய பாதைக்குள் நாங்கள் போகவில்லை. யாரும் போக எத்தனிக்கவில்லை. எங்களிடம் கிடைத்த வாய்ப்புக்களைக் கூட நாங்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. அதற்கு அடிப்படையில் வேறு காரணங்கள் இருக்கின்றன. நாங்கள் இப்பொழுது வலிமை குறைந்தவர்களாக இருக்கின்றோம். இந்த நிலையில் மாற்றம் என்ற ஒன்று எங்கே தொடங்க வேண்டும் என்ற ஒரு கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

பல்கலைக்கழகத்தில் ஒரு விரிவுரையாளனாக இருக்கின்றேன் என்றபடியால் நான் முழு அறிவாளியும் கிடையாது. என்னை விட அதிகம் அறிவில் தேர்ச்சியுடையவர்கள் இந்த சமூகத்தில் நிறையப்பேர் இருக்கின்றார்கள். எனக்கு வாய்ப்புக் கிடைத்தது நான் இதற்குள் இருக்கின்றேன் அவ்வளவுதான். ஆகவே அரசியல் நிறுவனம் ஒன்று அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களுடைய பேச்சுக்களையும் உரைகளையும் செவி சாய்த்து செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படுவதனால் தான் நாங்கள் இந்த சமூகத்தோடு இணைவதற்கான வாய்ப்பு இலகுவாக கிடைக்கும். புலிகள் இருந்த காலத்தில் ஒவ்வொரு மாதமும் கைலாசபதி அரங்கில்  உரை ஆற்றினேன். அதற்கு வெளியில் ஒரு மாதத்திலை ஏறக்குறைய மூன்று உரைகள் இருக்கும். புலிகளுடைய காலப்பகுதியில் என்னுடைய கருத்தாடல்கள் இவ்வாறாக இடம்பெற்றன. அதில் இருந்தவர்கள் நிறையப் பேர் போராளிகளாக இருந்தார்கள், மாணவர்களாக இருந்தார்கள், பொதுமக்களாக இருந்தார்கள். ஆனால் இன்று நான் படித்தவற்றை சொல்லுவதற்கு எனக்கு அரங்கம் அமையவில்லை. இங்குள்ள காட்சி ஊடகமொன்று எப்போதாவது ஒரு நாள் கூப்பிடுவார்கள். அதுவும் உலகம் பற்றி கதைக்க சொல்லுவார்கள். நான் உலகம் பற்றி கதைச்சிட்டு வருவேன். இதைவிட வேறு அரங்கம் இல்லை. எனக்குள்ள ஆதங்கம் இதுதான்.

ஆய்வு நிறுவனம் ஒரு புதிய சாகாப்தத்தை பற்றி சிந்திக்க தொடங்கியுள்ளது. அரசியல் அரங்கத்தில் உள்ள வெற்றிடத்தை இந்த ஆய்வு நிறுவனம் நிச்சயமாக நிரப்ப வேண்டும். நிரப்புவதற்கான காலத்தை நாங்கள் ஒரு சமூகமாக அவர்களிடம் ஒப்படைக்கின்றோம். ஏனென்றால் இதை கேட்பவர்கள் இதை விளங்கிக்கொள்பவர்கள் இந்த சமூகத்தில் இல்லாத போதுதான் இந்த சமூகத்தின் இருப்பு கேள்விக் குறியாகின்றது. ஆகவே இந்த கேட்பவர்களையும் விளங்கிக் கொள்ள வேண்டியவர்களையும் ஊக்குவிப்பதற்கு ஒரு நிறுவனம் வேண்டும். பல்கலைக்கழகத்தை தயவுசெய்து நம்பி விடாதீர்கள். பல்கலைக்கழத்தில் இருப்பவர்களுக்கு தங்களுடைய வாழ்க்கையை தக்க வைப்பது மட்டும் தான் பிரதான நோக்கம்.  அவர்கள் பிற சமூகங்களை பற்றி  சிந்திக்கத் தயாராக இல்லை என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

2009 ஆண்டிற்கு பின்னர் எங்களுடைய பாய்ச்சல் வேறுவிதமாக இருந்திருக்க வேண்டும். நாங்கள் அதற்கு போகமால் தடுத்ததற்கு இந்த சமூகம் ஒரு காரணம், அரசு ஒரு காரணம், தகவல் தொழில்நுட்பம் ஒரு காரணம். இவையெல்லாம் நிறைய பங்களிப்பு செய்திருக்கின்றன. விரிவுரையாளரைப் பார்த்து, பேராசிரியரைப் பார்த்து குற்றம் சாட்டிவிட்டு போக முடியாது. இவையெல்லாம் சேர்ந்து இதற்குள் இரு, இதற்கு மேல் பேசாதே, இதற்கு மேலே உரையாடதே என்று சொல்லுகின்றன.  இதை நான் நல்லா அனுபவித்தனான்.  ஆகவே அந்தத் தளத்தை விடுவிக்கக்கூடிய ஒரு புற அரசியல் சூழல் எங்களுக்கு வேண்டும். இந்த சூழலில் இருந்து விடுவித்தால் மட்டுமே இந்த நிறுவனங்கள் போன்றவற்றிலிருந்து  எங்களுக்கு ஏதாவது கிடைக்கும். இந்த நிறுவனத்தால் மட்டுமல்ல வடக்கு கிழக்கில் உள்ள வேறு நிறுவனங்களாலும் எங்களுக்கு ஏதாவது கிடைக்கும்.

நான் நான்கு தளங்களில் நீங்கள் தந்த தலைப்பை பற்றி உரையாடப்போகின்றேன். இவ்வகையான வெறுமைக்குள் எப்படி எமது அரசியல் இருக்கின்றது என பார்ப்போம்.  எங்கள் சமூகம், தென்பகுதி சமூகம், பிராந்திய சமூகம், சர்வதேச சமூகம் என நான்கு தளங்களாக நான் பிரிக்கிறேன். கீரை வாங்க தின்னவேலி சந்தைக்கு ஆரம்ப காலகட்டத்தில் போனால் அந்த கீரை விற்பவன் யோசிப்பான் இந்தக் கீரையில் நஞ்சூட்டப்பட்டால் என்னுடைய சமூகத்திற்கு விரோதமானது என்று. இன்று எனது பணப்பை நிரம்புகிறதா என்று தான் அவன் பார்ப்பான். இன்று எனது பணப்பை நிரம்பும் என்றால் நான் என்னவும் செய்துவிட்டு போகலாம் என நினைக்கிறான். பழைய ஒழுக்க நெறிமுறை இன்று எங்களிடம் இல்லை. அது கெட்டு போனதற்கு நாங்கள் மட்டும் காரணம் இல்லை. இந்த உலகமயமாக்கம் எங்களிடம் திணித்து வைத்திருக்கின்றது.

இவ்வாறான எமது சமூக பின்புலத்தில் தமிழர்களுடைய இருப்பின் யதார்த்த  நிலை என்ன? இலங்கை அரசியல் சூழலுக்குள்  தமிழர்களுடைய இருப்பினுடைய யதார்த்த நிலை என்ன?  மூன்றாவதாக பிராந்நிய அரசியல் சூழல் எத்தகைய எண்ணங்களை கொண்டு இயங்குகின்றது என்பதையும் சர்வதேச அரசியல் சூழல் எவ்வாறு இயங்குகின்றது என்பதையும்  துலாம்பரமாக காட்டுவதே என்னுடைய நோக்கமாகும்.

தென்னிலங்கை அரசியலில் இருக்கக்கூடிய மிக முக்கியமான விடயம் ஏறக்குறைய ஜனாதிபதி தேர்தல் மட்டுமே ஆகும். தேசிய அரசாங்கம் 2009 ஆண்டுக்குப் பின்னருள்ள  சர்வதேசத் தளத்தை மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. இப்பொழுது அது அடுத்த கட்டத்திற்கு வந்துவிட்டது. உண்மையில் ஜனாதிபதி தேர்தல் என்பது இரண்டு பிரதான முகாம்களுக்கிடையானதே. ஒருவர் சீன ஆதரவு வேட்பாளர், மற்றவர் மேற்கு ஆதரவு வேட்டபாளர். மேற்கு என்று நான் சொல்வது இந்தியாவையும் சேர்த்து தான். இந்தியாவை நான் அரசியலில் அமெரிக்காவுடன் ஒன்று சேர்த்து தான் பார்ப்பேன். உலகளாவிய ரீதியில் அமெரிக்கா எவ்வாறு இயங்குகின்றது என்பதை வைத்துக் கொண்டு இந்தியா அதற்கேற்ற வகையில் இயங்க முயற்சிக்கின்றது. இந்த தேர்தல்; களத்தில் பயன்படுத்தக்கூடியவர்கள் என்று அவர்கள் கருதுவது இலங்கைத் தமிழரைத் தான்.  இலங்கைத்தமிழரின் பாற்பட்டே இந்த நாட்டினுடைய அரசியல் இருப்பு நிர்ணயிக்கப்படப் போகின்றது.

இப்பொழுது கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் பார்த்தால் நிறைய எதிரும் புதிருமான காட்சிகள் காட்டப்படுகின்றது. அமெரிக்கா  பாரிய பொருளாதார உதவியை இலங்கைக்கு வழங்க விரும்புகின்றது. அமெரிக்கா ஆசியாவிற்கு பொருளாதார உதவியை வழங்க விரும்புகின்றது. இந்தியா பெருமளவிற்கு இலங்கை தொடர்பான கொள்கையில் புதிய மாற்றுத் திட்டங்களுக்கான உரையாடல்களை அண்மைக்காலத்தில் முன்வைத்திருந்தது. இவ்வாறு நிறைய விடயங்கள் ஒரு பக்கம் போக இன்னொரு பக்கம் இந்த மகிந்த ராஜபக்ஸவின் வெதமுல்ல அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழருடைய பிரச்சனையை அடுத்த ஆறு வருடங்களில் தீர்த்துவிடுவார்கள் என்ற செய்தியும் இங்கே வெளிவிடப்பட்டிருக்கின்றது. இரண்டு செய்திகளையும் ஊடகங்களில் பார்த்தீர்கள் என்றால் தென்னிலங்கையின் யதார்த்தம் எதை நோக்கி நகருகின்றது என்பதையும் அதனூடாக சர்வதேசப் பரப்பில் இருக்கிறவர்களுடைய ஊக்கிவிப்புக்கள் எப்படி அமைந்திருக்கின்றன என்பதையும் நாங்கள் இனங்காணமுடியும்.

ஆகவே இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் வாள் அரசியல், அல்லது குள்ள மனிதர்கள், கிறிஸ்மனிதன் எல்லாம் அவ்வப்போது வந்து போவார்கள். அந்த மனிதர்களுக்கான தேவை ஒன்று இந்த நாட்டிற்குள் இருக்கின்றது. அதற்கு பின்னால் தெளிவான ஒரு வடிவம் இருக்கின்றது. தெளிவான ஒரு வீச்சு இருக்கின்றது. அவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்றால் இந்த ஆய்வு மையம் நினைப்பது போல சிந்திப்பதோ, அல்லது பேராசிரியர் சிவச்சந்திரன் வைத்திருந்த சிந்தனைக்கூடம் போல சிந்திக்கவிடுவதையோ ஒரு போதும் அனுதமதிக்க கூடாது. நீங்கள் சிந்திக்கவும் கூடாது, செயற்படவும் கூடாது. அதற்கேற்ற வகையில் உங்களை எச்சரிக்கையோடு வைப்பதே தென்னிலங்கையின் திட்டம்.  இந்தச் சமூகம் பதற்றமாக்கிக்  கொண்டிருப்பது இலங்கைக்கு மட்டுமல்ல சர்வதேச பிராந்தியத்திற்கும் இலாபகரமானது. சர்வதேசம் மனிதஉரிமை,  சிறுவர், பெண்கள் உரிமை  சுதந்திரம் பற்றிப் பேசுவது எல்லாமே வெறும் போலி.  இவை அரசியலுக்காக கையாளப்படுகின்ற ஊக்கிகளாக மட்டும் தான் இருக்கின்றன. எங்களிடம் இருக்கக்கூடிய ஜனாதிபதி தேர்தல் குறித்த கணிப்பு என்ன? நாங்கள் எவ்வகை சூழலுக்குள் இந்த ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்? தென்னிலங்கை அதற்கு தயாராகிவிட்டது.  அதைவிட உலகம் அதற்கு தயாராகிவிட்டது. இதற்குள் எங்களை எப்படி கையாள்வது என்பது தொடர்பிலான முடிவை  அது தானே எடுத்து விட்டு எங்களை வழி நடாத்திக் கொண்டிருக்கின்றது.

பொதுநலவாயத்தினுடைய செயலாளர் இலங்கைக்கு விஜயம் செய்கின்றார் என்றால்  அவர் சும்மா பயணம் செய்யவில்லை.  தேர்தல் முடியும் வரை மேற்குநாடுகளிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் நிறைய தூதுவர்கள் வரப்போகின்றார்கள். எங்களை சந்திக்க போகின்றார்கள். எங்களுடைய நாட்டில் நிறைய தகவல்களை பரிமாறப் போகின்றார்கள். உலகத்தில் தற்போதுள்ள தகவல் யுகம் எல்லா மனிதர்களையும் இலகுவில் சலவை செய்து மாற்றுவடிவத்தில் கொண்டு வந்திருக்கின்றது. இலங்கையினுடைய உள் கட்டமைப்பும் தமிழர்களினுடைய இருப்பினுடைய அடையாளமும் இதில் உள்ளடக்கப்படுகின்றது. தமிழர்களினுடைய வடமாகாணசபையின் இருப்பும்  அது இலங்கையினுடைய சகல தமிழர்களின் கட்டமைப்பு என்பதுவும் ஏறக்குறைய முடிந்த நிலைக்குள் போய்விட்டது. 

இரண்டாவது விடயத்திற்கு வருகின்றேன். இது பிராந்திய தளம் பற்றிய உரையாடல். ஏன் இதை முதன்மைப்படுத்துகின்றேன் என்றால் எங்களுடைய அரசியலின் இருப்பு எங்களுக்கானது கிடையாது. ஈழவிடுதலைப் போராட்டமானாலும் சரி,  விடுதலைப்புலிகளுடைய ஆயுதப் போராட்டமானாலும் சரி, தென்னிலங்கை ஜனாதிபதியினுடைய ஆட்சிமுறையானாலும் சரி, அல்லது 1972 ஆம் ஆண்டு, 1978 ஆம் ஆண்டு வரையப்பட்ட அரசியல் யாப்புகளானாலும் சரி எல்லாமே பிராந்தியத்தையும் சர்வதேசத்தையும் தழுவி அவர்களுக்கு சலாம் போடுகின்ற உத்திகளைக் கொண்டவை தான்.   இவையெல்லாம் எங்களுக்கானது என நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

அண்மையில் நடந்த பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தலில் இம்ரான்கான் வெற்றி பெற்றுள்ளார்.  உண்மையில் மேற்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் அனைத்தும் தவறிவிட்டன. உண்மையில்  இம்ராம்ஹானுடைய வெற்றி என்பது சீனாவினுடைய வெற்றிதான். இராணுவத்தினுடைய வெற்றிதான். கரகோரம் நெடுஞ்சாலை (Karakoram Highway) மூலம் சீனர்கள் இந்தியாவை கையாள்வதற்கான முழு உத்திகளையும் அந்த பிராந்தியத்திலே ஏற்படுத்தியிருந்தார்கள். ஆகவே சீனர்களுடைய கடல் பாதையாக இருக்கலாம், தரைப்பாதையாக இருக்கலாம் இந்தியாவை சுற்றி வளைக்கின்ற வலு என்பது சீனர்களுக்கு இயல்பாகவே வந்துவிட்டது. அந்த வலுவை உடைத்தல் என்பது எங்களுடைய அரசியலோடு இணைத்து பார்க்கப்பட வேண்டியது. அம்பாந்தோட்டை சிற்வே (Sittwe), சிற்றகொங் (Chittagong), குவாடார் ( Gwadarவரிசை முழுவதையும் பார்த்தீர்கள் என்றால் இந்து சமுத்திரம் கிட்டத்தட்ட சீனர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டது அல்லது போய்க்கொண்டிருக்கின்றது.  இந்தியர்கள் இயங்க முடியாமல் இருக்கின்றார்கள். விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் அவர்களுடைய இருப்பு கேள்விக்குறியாகிவிட்டது. முன்பு விடுதலைப்புலிகளின் இருப்பினூடகவே அவர்களது இருப்பு தக்க வைக்கப்பட்டது. அந்த இயல்பை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் பெருமளவு முதன்மைப்படுத்தவில்லை. இப்பொழுது என்ன செய்கிறார்கள்? கண்கானிக்கிறார்களாம். பொருளாதார கருத்திட்டங்களை தென்னாசியாவில் ஊக்குவிக்க முயற்சிக்கிறார்களாம்.

சீனக்கடன் பற்றி உரையாடுவதற்காக அண்மையில் டெல்லியில் ஆசியா நாடுகளின் தூதுவர்கள் எல்லோரையும் அழைத்து ஒரு உரையாடலை இந்தியர்கள் நடத்தியிருக்கின்றார்கள். என்பது என்னைப் பொறுத்தவரையில் இந்தியர்களுக்கு சீனாவை முறியடிக்கும் வாய்ப்பு இல்லையென்றுதான் நான் கருதுகின்றேன். முன்னரே சீனர்கள் கட்டிய  BMICHஎனப்படுகின்ற பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த நிலையம்  இருக்கின்றது.  இந்தியர்களால் உருவாக்கப்பட்ட ஏதாவது ஒரு நிறுவனம், ஏதாவது ஒரு மையம் நிரந்தரமான ஒன்று இலங்கையில் இருக்கின்றதா? BMICH ற்கு சம வலுவுடையதாக ஏதாவது இருக்கின்றதா? இதே மாதிரி ஆயிரம் கருத்திட்டங்களை அவர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள். பொருளாதார ரீதியான வாய்ப்புக்களை நிறைய அவர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள். அம்பாந்தோட்டைக்காக அவர்கள் செலவழித்தது இன்றைக்கு உதவாமல் இருக்கலாம். 2040 ஆம் ஆண்டிற்கிடையில் அது வேறுவிதத்தில் உதவக்கூடியதாக இருக்கலாம் என்று சர்வதேச ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றார்கள்.

அந்த சூழலில் இந்த பிராந்திய போட்டிக்குள் நாங்கள் அகப்பட்டிருக்கின்றோம். இந்த பிராந்திய போட்டியின் இருப்புக்குள்தான் அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.  என்னை கேட்டால் தமிழர்கள் தங்களுக்கு என்று ஒரு வேட்பாளரை அனுப்ப வேண்டும். தென்னிலங்கை வேட்பாளர் எவரும் 50 வீதத்திற்கு மேல் பெறமுடியாத ஒரு நிலை வருகின்ற பொழுது தென்னிலங்கையில் ஒருவர் ஜனாதிபதியாக வரமுடியாது என்ற நிலை வரும். ஒரு பேரம்பேசல் செய்வதற்கு வாய்ப்பு ஏற்படும். இதற்கு எமது அரசியல்வாதிகள் தயாரா?

யார் கூப்பிட்டாலும் நான் வருவேன். யார் கூப்பிட்டாலும் நான் பேசுவேன். நம்பிக்கைதான் எனக்கு அரசியல்.  ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நம்பிக்கை தான் வாழ்க்கை. ஆனால் அரசியலில் நான் நம்பிக்கையாக இருக்கின்றேன் அவர்கள் இனப் பிரச்சனையை தீர்த்துவிடுவார்கள், அரசியல் யாப்பு நிச்சயமாக தந்துவிடுவார்கள்  என  யாரும் சொல்லிக்கொண்டு திரியலாம்.   இவ்வாறு உரையாடுவது என்பது இந்த பேரம்பேசல்  அரசியலுக்குள் சாத்தியம் அற்ற ஒன்று. ஆகவே தமிழர்கள் ஒருவரை நிறுத்துங்கள். அவர் பேரம்பேசலுக்கான (bargain) தகுதியுடையவராக இருக்க வேண்டும். தமிழரை நிறுத்துவதன் ஊடாக அந்த அரசியலை மீளக் கொண்டு வரவேண்டும். அதற்கான முயற்சிகள் இந்த ஆய்வு மையங்களினூடாக நடத்தப்பட வேண்டும்.  இந்த பொறிமுறைகளை முடிந்த வரை கையாளுவதற்குரிய ஒரு சூழ்நிலை இங்கு உள்ளது என்பது தான் என்னுடைய பிரதானமான விடயம்.

அடுத்தது சர்வதேச அரங்கம். இன்றைய சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் இருப்பு  என்பது  ஒரு கேள்விக்குறியோடு நகருகின்றது. சில வேளை தலைமைத்துவத்தால் இவ்வாறு நடக்கின்றதா? அல்லது பின் வாங்கலாக  நகர்ந்துவிட்டு  அது முன்நோக்கி நகரப்போகின்றதா என்பது எனக்குத் தெரியாது. அது ஈரான் தொடர்பாகவும், வடகொரியா தொடர்பாகவும் அது கொண்டிருக்கின்ற கொள்கையில் உலகத்தோடு சேர்ந்து இயங்கக் கூடிய தன்மைகள் அல்லது கட்சி அரசியலோடு சேர்ந்திருக்க கூடிய தன்மைகள் இல்லை. அமெரிக்கன் என்ற அடிப்படையில் இருக்கக்கூடிய தன்மைகள் தான் இருக்கின்றது. இது ஐரோப்பாவிடமும் இருக்கின்றது. அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் மீளவும் தங்களுடைய தேசியம் பற்றிய உரையாடல்களை தொடங்கியிருக்கிறார்கள். தேசியம் பற்றிய உரையாடல் உலக மயப்படுத்தல், உலக வாதம் என்வற்றில் ஒரு உடைவை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சிலவேளை பயங்கரவாதம் அதனை ஏற்படுத்தியிருக்கலாம். அது தொடர்பான நீண்ட உரையாடலை நாங்கள் இங்கே செய்ய வேண்டி வரும். இந்த சூழலை ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் ஐரோப்பாவிற்குள்ளும் அமெரிக்காவிற்குள்ளும் ஏற்பட்டிருக்கின்ற இந்த சூழல் என்பது எங்கள் போன்ற பிராந்திய நாடுகளில் இருக்கக்கூடிய தேசிய சக்திகளுக்கு ஒரு இலாபகரமான செய்தி. சிலவேளைகளில் அமெரிக்கா வீழ்ச்சியடைந்து சீனா உலகத்தினுடைய ஆதிக்கத்தை பெறுமாக இருந்தால் ஈழத்தமிழர்கள் கடலுக்குள் போகும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். சீனர்களுடைய எழுச்சி சாத்தியமாக இருக்குமானால் இந்த சிங்கள பௌத்த தேசியம் என்பது தனக்குரிய இயங்கு திறனை எவ்வாறு அமைத்துக் கொள்ளும் என்பது கடந்த காலத்தில் எங்களுடைய அனுபவமாகும்.

இந்த தளத்தில் வைத்தும் நாங்கள் இதனை உரையாடலாம்.  எல்லாவற்றுக்கும் தடுப்புக்கட்டை போடவேண்டிய சூழலும் ஒரு கட்டமைப்பும் அதற்குரிய வாய்ப்பும் ஈழத்தமிழர்களிடம் மட்டும் தான் இருக்கின்றது. அந்த தளத்தை ஈழத்தமிழர்கள் உருவாக்க தவறினால் ஈழத்தமிழர்களின் இருப்பு பாரிய நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும்.


தொகுப்பு  - துருவன்
நிமிர்வு ஆவணி 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.