சீனாவிலும் மறுவாழ்வு முகாம்கள்




12 ஆம் திகதி  ஆடி மாதம் 2015 ஆம் ஆண்டு சீனாவின் மேற்குப் பகுதி ஆகாயத்தில் ஒரு செயற்கைக்கோள் மெதுவாகப் பறந்து கொண்டிருந்தது.  அது பிடித்த படங்களை பூமியிலிருந்த அதன் கட்டுப்பாட்டு நிலையங்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தது.  அப்படங்கள் எல்லாமே எந்தவிதமான முக்கியத்துவம் அற்ற வெறுமையான பாலைவனப் பிரதேசங்களுடையவையாகவே இருந்தன. ஆனால் 3 வருடங்களிலும் குறைவான காலத்தின் பின் அதே பாலைவனத்தின் மேலாக 2018 சித்திரை 22 ஆம் திகதி ஒரு செயற்கைக்கோள் பறந்தது.  அது பிடித்த படங்கள் புதிய கதை பேசின. அப்பிரதேசத்தின் மாகாணத் தலைநகர் உரும்கிக்கு வெளியே டபான்செங் எனப்படும் சிறு கிராமம் இருந்தது.  அக்கிராமத்துக்கு அருகே மிகவும் பரந்த பாதுகாப்பு மிக்க ஒரு தளம் நிறுவப்பட்டிருந்தது. அது 16 பாதுகாப்பு அரண்களைக் கொண்ட 2 கி.மீ. நீளமான முட்கம்பிகளைக் கொண்ட மதிலால் சூழப்பட்டு இருந்தது.

உரும்கி சீனாவின் வடமேற்கு பிரதேசத்தில் உள்ள சுயாட்சி உரிமையுடைய ஷின்ஜியாங் (Xinjiang) மாகாணத்தின் தலைநகரம்.  ஷின்ஜியாங் சீனாவின் ஆகப்பெரிதானதும் 1.6 மில்லியன் சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டதுமான மாகாண நிர்வாக அலகாகும். இது மொங்கோலியா, ரஸ்யா, கசாக்ஸ்தான், கிர்கிஸ்தான், டஜிகிஸ்தான், அப்கானிஸ்தான், பாகிஸ்தான மற்றும் இந்தியாவை எல்லைகளாக் கொண்டது.  சீனாவின் இன்னுமொரு சுயாட்சிப் பிரதேசமான திபெத்தும் இதன் ஒரு பக்க எல்லையில் உள்ளது. ஷின்ஜியாங்கில் ஷிவீகர் (45.84%), ஹான் (40.48ம%), கஸாக் (6.50ம%), ஹ_ய் (4.51ம%) இனத்தவரும் மற்றும் டஜிக், கிர்கஸ், மொங்காலிய, ரஸ்சிய இன மக்களும் (2.67ம% ) வாழுகின்றனர்.  வரலாற்றுப் பிரசித்தம் மிக்கபட்டுப் பாதை (silk road) கிழக்கிலிருந்து வடமேற்காக ஷின்ஜியாங்கை ஊடறுத்துச் செல்கிறது. அண்மைக்காலத்தில் அங்கு எண்ணெய் வளங்களும் கனிம வளங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  இம்மாகாணம் சீனாவின் ஆகக்கூடிய இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் பிரதேசமாக வந்துள்ளது.

செயற்கைக்கோளினால் இங்கு பிடிக்கப்பட்ட படத்திலுள்ள தளத்தைப் பற்றிய உண்மைகளை அறிய BBC ஐச் சேர்ந்த John Sudworth அண்மையில் அங்கு சென்றிருந்தார்.  அங்கு அவர் கண்டகாட்சி நம்ப முடியாதளவுக்கு இருந்தது.  வெட்டவெளியாக இருந்த பாலைவனத்தில் ஒரு சிறிய நகரமே உருவாகிக் கொண்டிருந்தது.  பாரந்தூக்கிகள் உதவியுடன் 4 மாடிகளைக் கொண்ட பல கட்டடங்கள் வரிசையாக எழும்பிக் கொண்டிருந்தன. காய்ந்த தரையைக் கிழித்துக் கொண்டு எழும்பும் கருஞ்சாம்பல் நிறப் பூதங்களாக அவை காட்சியளித்தன.  அவற்றைப் படம் பிடிக்க முற்பட்ட பொழுது  John Sudworth
உம் அவரது குழுவினரும் அவர்களைப் பின் தொடர்ந்த சீன பொலிசாரால் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.  ஆனால் இதுவரைகாலமும் வெளியுலகத்துக்கு மறைக்கப்பட்டு இங்கு நடந்தவற்றை அவர்கள் நேரடியாக கண்டு விட்டனர்.

இலட்சக்கணக்கான முஸ்லிம் வீகர் இன மக்களை ஷின்ஜியாங் சிறைகளில் அடைத்து வைத்துள்ளது என சீனாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சிலகாலமாக எழுப்பப்பட்டே வந்தன. அது ஒன்றும் புதிதல்ல.  ஆனால் டபான்செங்கில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த தடுப்புமுகாமின் பிரமாண்டம் BBC செய்தியாளர்களை மலைக்க வைத்தது. மேலும் ஷின்ஜியாங் மாகாணத்தில் இதைப் போல பல தடுப்பு முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடப்பட வேண்டியது.

சீன அரசாங்கம் இவை தடுப்பு முகாம்கள் என்று சொல்லப்படுவதை முற்றாக நிராகரிக்கிறது. இவை பயங்கரவாதத்தையும் மதரீதியான தீவிரவாதத்தையும் தடுக்க உருவாக்கப்பட்ட பயிற்சிப் பள்ளிகள் என்று கூறுகிறது. அங்கு வீகர் இன மக்களுக்கு புனர்வாழ்வுக்கான பயிற்சிகள் வழங்கப்படுவதாக கூறுகிறது. அங்குள்ளவர்கள் தாமாகவே இப்பள்ளிகளில் இணைந்துள்ளார்கள் என்றும் சொல்கிறது.

இத்தடுப்பு முகாம்களில் ஏறத்தாழ ஒரு மில்லியன் வீகர் இன மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என ஐ.நா. அறிக்கை ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.  சர்வதேச அழுத்தங்களைச் சமாளிக்க அங்கிருப்பவர்கள் மறுவாழ்வைப் பெற்றுக் கொள்ளும் “மாணவர்கள்” என்ற பிரச்சாரத்தை சீனா உக்கிரமாக முடுக்கி விட்டுள்ளது.  அப்பாடசாலையில் பயில்வதற்கு மாணவர்கள் எவ்வாறு தெரிவு செய்யப்படுகிறார்கள், அவர்கள் பாடத்திட்டம் என்ன என்ற கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க மறுக்கிறது.  மாறாக அரச தொலைக்காட்சி அங்குள்ள தூய்மையான வகுப்பறைகளையும், அங்குள்ள மாணவர்கள் எவ்வளவு தூரம் அரசுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதையும், அவர்கள் எவ்வாறு விருப்புடன் பாடத்திட்டங்களைப் பயில்கிறார்கள் என்றும் காணொளிகளை ஒளிபரப்புகிறது.  அக்காணொளிகளில் இருப்பவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாகவும் வயது வந்தவர்களாகவும் இருப்பது கவனிக்கத்தக்கது. இவர்கள் நிர்வாகத்தினால் அனுமதிக்கப்பட்ட சீருடைகளை மட்டுமே அணிந்திருக்கின்றனர். வீகர் இனப்பெண்கள் பாரம்பரியமாக தமது தலைமுடியைக் கவர அணியும் ஆடை (scarf) ஒரு பெண்களும் அணிந்திருக்கவில்லை. 

அக்காணொளிகளில் சில “மாணவர்களின்” பேட்டிகளும் உள்ளன. ‘நான் எனது தவறுகளை மனதார உணர்ந்து கொண்டேன்.  நான் வீடு திரும்பியபின் நல்லதொரு குடிமகனாக இருக்க உறுதி பூண்டுள்ளேன்’ என ஒருவர் பேட்டியளிக்கிறார்.

இலங்கையிலும் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின் பல மறுவாழ்வு முகாம்கள் உருவாக்கப்பட்டமை இங்கு நினைவுக்கு வருகிறது.  அம்முகாம்களில் இருந்தவர்களும் தமது தவறுகளை உணர்ந்து தாமாகவே மறுவாழ்வு பெற்றுக் கொண்டார்கள் என்று சொல்லப்பட்டதும் நினைவுக்கு வருகிறது. அவை தொடர்பான காணொளிகளும் எமது கண்களில் நிழலாடுகின்றன.

ஷின்ஜியாங்கில் உள்ள தடுப்பு முகாம்கள் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தவும் அங்குள்ள மக்களுக்கு தொழில் கல்வி அளிக்கவும் சீன மொழியைப் பயிற்றுவிக்கவும் உள்ளதாக சீனா தெரிவிக்கிறது. ஆனால் இந்தப் பாடசாலைகளைக் கட்டுவதற்கு அது வாங்கிய மூலப்பொருட்களின் பட்டியலை ஆராய்ந்த பொழுது முட்கம்பிகள், தொடர் கண்காணிப்புக் கருவிகள், வேவுபார்க்கும் உபகரணங்கள், சிறைச்சாலை உபகரணங்கள் என்பன வாங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. ஆரம்பத்தில் இந்த முகாம்களில் இருந்தவர்கள் குறைந்தளவு காலமே தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.  ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இம்முகாம்களிலிருந்து எவருமே விடுவிக்கப்பட்டதாக செய்திகள் இல்லை.  முகாம்களின் எண்ணிக்கை அவற்றின் விஸ்தீரணம் என்பவற்றை வைத்துப் பார்க்கும் போது ஒரு மில்லியனுக்கும் அதிகமான வீகர் இன மக்கள் இங்கு தடுத்து வைக்கப் பட்டுள்ளனர் என அனுமானிக்க முடிகிறது.

ஷின்ஜியாங்கில் 10 மில்லியனுக்கும் அதிகமான வீகர் இனமக்கள் வாழ்கின்றனர்.  இவர்கள் ஒருவகைத் துருக்கிய மொழியைப் பேசுகின்றனர். இவர்களது தோற்றமும் மத்திய ஆசியாவைச் சேர்ந்த மக்கள் கூட்டத்தைப் போலவே இருக்கிறது.  சீன அரசர்களுக்கும் அதன் பின்னர் வந்த ஆட்சியாளருக்கும் எதிராக அவ்வப்போது நடைபெற்ற கிளர்ச்சிகள் காரணமாக இம்மக்களுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவுகள் எப்பொழுதுமே பலவீனமாகவே இருந்து வந்துள்ளன.

உலகின் வேறு எப்பகுதிகளிலும் இல்லாத அளவுக்கு ஒரு அரசாங்கம் தனது மக்கள் மீது விதிக்கக்கூடிய மிகக்கடுமையான கட்டுப்பாடுகளையும் அடக்குமுறைகளையும் ஷின்ஜியாங் மாகாணம் கடந்த 4 ஆண்டுகளில் கண்டு வருகிறது. இஸ்லாமிய அடையாளங்களும் அதனைப் பின்பற்றுவதும் தடை செய்யப்பட்டுள்ளன.  ஆண்கள் தாடி வளர்ப்பதும் பெண்கள் தலைமுடியை மறைக்க ஆடை அணிவதும் தடை செய்யப்பட்டுள்ளன.  இஸ்லாமிய பெயர்களை குழந்தைகளுக்குச் சூட்டுவது கூடத் தடை செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறான சட்டங்கள் ஒரு அடிப்படையான மாற்றம் சீன அரசாங்கத்தின் கொள்கைகளில் ஏற்பட்டுள்ளது என்பதை சுட்டி நிற்கிறது. ‘பிரிவினைவாதம் என்பது ஒரு சிலரின் தூண்டுதலால் நடப்பது அல்ல் அது வீகர் இன மக்களின் கலாச்சாரத்தில் உள்ளது ஆகவே ஒரு மக்கள் கூட்டமாக அவர்களை கலாச்சாரநீக்கம் செய்ய வேண்டும்.’ என்பதே சீன அரச கொள்கையீல் ஏற்பட்டுள்ள அந்த அடிப்படை மாற்றம்.

அண்மையில் ஜெனிவாவில் நடந்த மனித உரிமை மாநாட்டில் முஸ்லிம் வீகர் இனமக்களுக்கு நடத்தப்படும் அநீதிகள் தொடர்பாக சீனாவுக்கு எதிராக சில மேற்கு நாடுகள் குரல் எழுப்பியிருந்தன.  ஆனால் மத்திய கிழக்கையோ ஆபிரிக்காவையோ சேர்ந்த எந்த முஸ்லிம் நாடுமே சீனாவுக்கு எதிராக கதைக்கவில்லை.  அநீதி என்று தெளிவாகத் தெரிந்தும் சர்வதேச நாடுகள் சீனாவுக்கு எதிராக எந்த தீர்மானத்தை நிறைவேற்றவும் முடியாமல் இருக்கின்றன.

இந்த தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒருவராவது அங்கு என்ன நடக்கிறது என்று வெளியுலகுக்குச் சொல்ல முடியவில்லை. லட்சக்கணக்கான மக்களைத் தடுத்து வைத்திருக்கும் இந்த மறுவாழ்வு முகாம்களில் இருக்கும் முஸ்லிம் வீகர் இன மக்கள் அதனை விட்டு வெளியேற எந்தவிதமான சட்டவழிமுறைகளும் அவர்களுக்கு இல்லை. ஆனால் இந்த மறுவாழ்வு முகாம்கள் வெற்றியடைந்துள்ளதாக சீன அரசாங்கம் பறைசாற்றுகிறது.  ஆனால் இவ்வாறான தடுப்பு முகாம்கள் எவ்வாறான விளைவுகளில் முடிகிறது என்பதற்கான சான்றுகள் பல உலக வரலாற்றில் உள்ளன.

ஒரு பில்லியனுக்கும் மேலான சனத்தொகையைக் கொண்ட சீனர்களின் நீண்ட கால இருப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை சீன அரசாங்கத்துக்கு உள்ளது.  மட்டுப்படுத்த வளங்களைக் கொண்ட இப்பூமியில் சீனர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு வேண்டிய வளங்களைப் பெற்றுக் கொள்வதும் அவை தொடர்ந்து கிடைப்பதை உறதி செய்வதும் அவசியமாகிறது. இதற்காக மற்றைய இனங்களுடன் போட்டி போடுதல் அவசியமாகிறது.  அதற்காக நீண்டகாலப் பொருளாதார மற்றும் இராணுவத் திட்டங்களை வகுத்து அது நடைமுறைப்படுத்தி வருகிறது.  அதன் ஒரு அங்கமாக தென் சீனக் கடலின் பெரும்பகுதி தனக்கே உரியது என்று அப்பிரதேசங்களில் உள்ள சிறிய நாடுகளின் கடற்பரப்புக்கு அநீதியான முறையில் உரிமை கோருகிறது.  அதனை எதிர்த்த சில நாடுகளைத் தனது பொருளாதார பலம் கொண்டு கடன்வலையில் சிக்க வைத்துப் பணிய வைத்துள்ளது.  வேறு சில நாடுகளை தன் இராணுவ வலிமையைக் காட்டிப் பணிய வைத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாகவே இலங்கை தொடர்பான சீனாவின் கொள்கைகளையும் நோக்க வேண்டும்.  யுத்தத்தை முடிவு செய்யவும் இலங்கையின் அபிவிருத்திக்கும் உதவுகிறேன் என்ற போர்வையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்கசவின் அரசாங்கத்தை தன் பிடியின் கீழ் கொண்டு வந்தது.  சீனாவிடம் பெற்ற கடனுக்கான வட்டியைக் கூட கட்ட முடியாத நிலைக்கு இலங்கை அரசாங்கத்தைத் தள்ளி இலங்கையின் ஒரு துறைமுகத்தையே 99 வருட குத்தகைக்குப் பெற்றுள்ளது.  இது சீனா இலங்கை மக்களின் உழைப்பையும் வளங்களையும் சுரண்டுவதில் வெற்றி பெற்றுக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. 

இந்நிலை தொடருமானால் ஒரு கட்டத்தில் சீனாவின் கட்டளைகள் எல்லாவற்றுக்கும் இலங்கை மக்கள் அடிபணியும் நிலை ஏற்படும்.  அதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க மக்கள் போராடவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுவார்கள். அப்பொழுது இங்கும் மறுவாழ்வு முகாம்கள் சீன அனுசரணையுடன் இலங்கை அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்படலாம்.  அவ்வாறான ஒரு சூழல் ஏற்படுமாயின் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் இணைந்து அதனை எதிர்த்துப் போராடும் நிலைமை உருவாகும் என்பதையும் நிராகரிக்க முடியாது.


ரஜீவன்  (நன்றி: BBC)
நிமிர்வு கார்த்திகை 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.