தீவிரமாகும் கொழும்பு அரசியல் குழப்பம்
கொழும்பு அரசியலில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. யார் யாருக்கு முதுகில் குத்துவார்கள் என்று தெரியாத நிலை நீடிக்கின்றது. சட்டம் தான் ஆட்சிக்கான முடிவைச் சொல்ல வேண்டும். தற்போதைய நிலை குறித்து யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் குமாரவடிவேல் குருபரன் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
நாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலானது வெளிப்படையாக அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு முரணான ஒரு அறிவித்தல் ஆகும். ஜனாதிபதியின் சட்ட தரப்புக்கள் உறுப்புரை 33/2 C ஐ குறிப்பிடுகின்றன. அது நாடாளுமன்றை கூட்டுவது, கலைப்பது, ஒத்திவைப்பது தொடர்பான ஜனாதிபதியின் பொதுவான அதிகாரங்களை பற்றிப் பேசுகின்றன. ஆனால், உறுப்புரை 70 உபபிரிவு 01 அதனுடைய காப்பு வாசகம் மிகத் தெளிவாக உள்ளது. அதாவது நாடாளுமன்றம் கூடிய முதலாவது நாளில் இருந்து நான்கரை வருடங்களுக்கு நாடாளுமன்றம் கலைக்க முடியாது. ஆனால், இரண்டில் மூன்று பெரும்பான்மையினால் நாடாளுமன்றத்தினால் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியிடம் கலைக்கச் சொல்லிக் கேட்டால் நாடாளுமன்றைக் கலைக்கலாம். பொதுவாக அரசியலமைப்பில் முரண்பாடான தெளிவற்ற விடயங்கள் இருக்கக் கூடும். ஜனாதிபதி நான்கரை வருடங்களுக்குள் தற்துணிவின் பாற்பட்டு நாடாளுமன்றை கலைக்க முடியாது. தற்போது ஐக்கிய தேசிய கட்சி,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனதா விமுக்தி பெரமுன ஆகிய கட்சிகள் இந்த விடயத்தை உயர்நீதிமன்றுக்கு கொண்டு போவதாக சொல்லுகின்றன. உயர்நீதிமன்றமும் இந்த நாடாளுமன்ற கலைப்பை தவறானது என்று சொல்வதற்கான வாய்ப்புக்களே அதிகம். அந்த ஒரு முடிவை தவிர வேறு முடிவுகளுக்கு வருவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்பதே எனது கருத்து.
ரணில் விக்கிரமசிங்கவை நீக்கியமை, மஹிந்தவை பிரதாமராக நியமித்தமை, நாடாளுமன்றை கலைத்தமை தவறானது என்பது தான் அரசியலமைப்பு நிபுணர்களின் கருத்தாகும். ருணிலை நீக்கிவிட்டு தாங்கள் பெரும்பான்மையை காட்டுவோம் என வெளிக்கிட்டு ஆனால், அது குறித்த காலப்பகுதியில் முடியாத பட்சத்தில் நாடாளுமன்றைக் கலைத்து உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெறுகின்ற நேரத்தில் மீள பெரும்பான்மையை காட்டவெளிக்கிடுகின்றார்கள் என எடுத்துக் கொள்ளலாம். நாடாளுமன்றை கலைத்ததன் மூலம் நெருக்கடி நிலையை தொடர்ந்தேச்சையாக வைத்திருந்து அதன் மூலமாக பொதுமக்கள் மத்தியிலும் சரி, அரசியல்வாதிகள் மத்தியிலும் சரி, சர்வதேசத்தின் மத்தியிலும் சரி ஒரு சோர்வு மனநிலையை ஏற்படுத்தி இவற்றுக்கெல்லாம் தீர்வுதேர்தல் ஒன்றுதான் என அவர்களாகவே ஏற்றுக் கொள்ளச் செய்கின்ற ஒரு தந்திரோபாயமாக கூட இருக்கலாம்.
தமிழ்மக்களைப் பொறுத்தவரையில் முக்கியமாக நாங்கள் பார்க்க வேண்டியது என்னவென்றால் தமிழ்மக்கள் அரசியலமைப்பு ரீதியாக ஒரு நியாயமான தீர்வினை கோரி நிற்கின்றார்கள். இந்த வேளையில் அரசியலமைப்பு இவ்வளவு மோசமாக மீறப்படுகின்றது என்பது எதிர்காலத்தில் ஒரு தீர்வு வந்தாலும் அதன் நிலைத்தகு தன்மை தொடர்பாக அடிப்படையான கேள்விகளை எழுப்பக் கூடிய ஒரு சம்பவமாக நாங்கள் இதனைப் பார்க்க வேண்டும். இது ஜனநாயகத்துக்கு முரண் என்பதற்கு அப்பால் எங்களுடைய அரசியல் தீர்வுக்கான பயணத்திலும் அரசியலமைப்பு சார்ந்து தென்னிலங்கை கட்சிகள் காட்டுகின்ற அணுகுமுறையானது கவலைப்பட வேண்டியதாகும்.
ரணில் ஏன் அரசியலமைப்புக்கு முரணாக தான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட போது உயர்நீதிமன்றத்தை நாடவில்லை என்கிற கேள்வி எழுகின்றது. அவர் அந்நேரம் உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தால் விடயம் சட்டப் பிரச்சினையாகி இருக்கும். நீதித்துறைக்கு சென்றிருக்கும். நீதித்துறையில் அது தீர்க்கப்படும் வரைக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வேறு தெரிவுகள் இருந்திருக்க முடியாது. அந்த காலப்பகுதிக்குள் தங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களை ராஜபக்ச வாங்கிவிடுவார் என்கிற அச்சத்தினாலேயே “உடனடியாக நாடாளுமன்றை கூட்டுங்கள். எனக்கிருக்கும் பெரும்பான்மையை நிரூபிக்கின்றேன்.” என்று சொல்லிக் கொண்டு வந்தார். தற்போது நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் நாடாளுமன்றம் கூடுவதற்கான வாய்ப்புக்கள் இல்லாதவிடத்து வெறுமனே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது மாத்திரமல்ல, தனது நியமனம் இரத்து செய்யப்பட்டதையும், மஹிந்த பிரதமராக நியமிக்கப்பட்டதையும், இல்லாமல் செய்வதற்கு ஏதுவான சூழல் ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இப்போது அதனை கேட்பது உகந்தது என்ற நிலை ரணிலுக்கு ஏற்பட்டிருக்கலாம்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிங்கள மக்களுடைய பெரும்பான்மை வாக்குகளை பெற முடியவில்லை என்கிற தாழ்வு மனப்பான்மையில் இருக்கக்கூடிய நபர். ஒருவிதத்தில் தமிழ், முஸ்லீம், மலையக தமிழர்களின் வாக்குகள் மூலம் தான் ஆட்சிக்கு வந்தேன் என்பதனை அவர் ஒரு புறம் பார்க்க வேண்டியவராக இருந்தாலும், சிங்கள பௌத்தர்களின் தலைவராக தான் அங்கீகரிக்கப் படவில்லை என்கிற தாழ்வு மனப்பான்மையால் தான் இந்த முரண்பாடான கருத்துக்கள் வருகின்றன. தற்பொழுது ராஜபக்சவை நோக்கிய சாய்வு தனியே இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக வரும் விருப்பம் மாத்திரமல்ல சிங்கள மக்களின் தலைவர் அல்லது ராஜபக்சவோடு ஒத்துப் போகக் கூடிய தலைவர் தான் தான் என்பதை காட்டுவதாக தான் உள்ளது. ரணிலை பொறுத்தவரையில் அவருக்கு தெரியும் எதிர்காலத்தில் தேர்தல் வந்தால் அது ஐக்கியதேசியக் கட்சிக்கு சாதகமாக அமையாது. இதனால் தான் மாகாணசபைத் தேர்தல்களையும் முறையற்ற விதத்தில் ஒத்தி வைத்திருக்கிறார். தேர்தலை எதிர்கொள்ள பயப்படுகின்றார்கள். ராஜபக்ச மக்கள் மத்தியில் சொல்கிறார். தான் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கின்ற ஜனநாயகவாதி என்று. ரணில் சொல்கின்றார் தான் அரசியலமைப்பின் வழி நடக்கின்ற ஜனநாயகவாதி என்று.
ஒரு பக்கம் பெரும்பான்மையினரின் ஜனநாயக விருப்பங்களை தாம் தான் வைத்திருப்பதென நினைத்துக் கொண்டு ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் மோதவிடுகின்ற ஒரு சூழ்நிலையைத் தான் உருவாக்கி இருக்கின்றார்கள். ஆகவே இப்போது தேர்தலை நடாத்த தயாரில்லை என்பதை மக்களைச் சந்திக்க இவர்கள் தயாரில்லை என்று அர்த்தப்படுத்தி ராஜபக்ச சொல்லுவார். அரசியலமைப்பை இவர்கள் மீறிவிட்டார்கள் என்று ரணில் சொல்லுவார். ஆனால், சிங்கள மக்கள் மத்தியில் கூடுதலாக வீரியம் பெறக்கூடிய வாதம் ஜனநாயக ரீதியாக மக்களை சந்திக்க ரணில் தயாரில்லை என்பது தான்.
19 ஆவது திருத்தத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொண்டு வந்தார். சிறிசேன பங்காளியாக இருந்தார். உருவாக்கத்தில் முக்கிய வகிபாகம் ரணிலுடையது. ஒரு புறத்தில் பார்த்தால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கி அதனை சுயாதீனமாக்க வேண்டும் என்று பார்த்தாலும் அதன் உண்மையான நோக்கம் எதிர்காலத்தில் சிறிசேனவினால் தான் பதவி நீக்கப்படலாம், நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்பதனை முன்னுணர்ந்து ரணில் அந்த ஏற்பாடுகளை செய்ததாக தான் கொள்ள வேண்டும். இந்த நாட்டினுடைய வரலாற்றில் கட்சிகள் தங்கள் நலன் சார்ந்தே அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொண்டிருக்கின்றன.
சர்வதேச சமூகத்தை பொறுத்தவரை சீனா ராஜபக்ஸவுடனும், அமெரிக்கா, இந்தியா ரணிலுடனும் நிற்கின்றன. 'தற்போது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்திருக்கும் ராஜபக்சவினை ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீக்க இந்தியாவும், அமெரிக்காவும் எந்த அளவிற்கு செயற்படும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதன் விளைவாக பொருளாதாரதடை, போக்குவரத்துதடை என்பவற்றை கொண்டு வருவார்களா? என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். போர்குற்ற காலத்தில் இவ்வாறான தடைகளை கொண்டு வரவேண்டும் என்று கேட்ட போது அமைதியாக இருந்த அமெரிக்கா தற்போது அதனை கொண்டு வருவது தொடர்பில் சிந்திப்பது யாருடைய நலன் அங்கு கருதப்படுகின்றது என்பதை தெளிவாக புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது”
நிமிர்வு கார்த்திகை 2018 இதழ்
Post a Comment