மாற்றுவழிகளில் ஒன்று




கடந்த ஐப்பசி மாதம் 24 ஆம் திகதி தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற யாழ். பல்கலைக்கழக சட்டத் துறைத்தலைவரும், வழக்கறிஞருமான குமாரவடிவேல் குருபரன் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை இங்கே தருகிறோம்.  மாற்றுவழி என்ன என்பது தொடர்பான தேடலில் நிமிர்வின் பார்வையின் இரண்டாவது பாகம் இந்த இதழில் உள்ளது. அத்தேடலின் இன்னுமோர் அங்கமாக இந்த உரை அமைகிறது எனலாம்.

அண்மையில் பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் கரவெட்டியில் தியாகி திலீபனின் நினைவு தினத்தில் பேசுகின்ற பொழுது எங்களுடைய கொள்கைக்கு மாற்றாக நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள், உங்களால் ஆயுதம் தூக்க முடியுமா, ஆயுதம் தூக்குவதாக இருந்தால் விடுதலைப்புலிகளை விட திறமாக ஆயுதப்போராட்டத்தை நடத்த முடியுமா என்ற கேள்வி முன்வைத்திருந்தார். இது பொறுப்பான பேச்சா?

ஐக்கிய இராச்சியத்திலிருந்து வந்த இங்கிலாந்தினுடைய வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் மார்க் பீல்ட் அண்மையில் கொழும்பிற்கு வந்திருந்தார்.  அவரிடம் “புதிய அரசியலமைப்பு வராவிட்டால் இலங்கையில் வன்முறை வெடிக்கும்.” என்று கூட்டமைப்பினர் தெரிவித்திருந்தார்கள். இது தமிழ்தேசிய கூட்டமைப்பின் டுவிட்டரிலே அவர்களே போட்ட பதிவு.

நான் சொல்லுகின்றேன் அது பொறுப்பற்ற பேச்சு. ஏனென்றால் இவர்களுக்கு தெரியும் புதிய அரசியலமைப்பு வராது என்று. ஏன் இவர்கள் வன்முறையைப் பற்றி பேசுகின்றார்கள்? உண்மையில் கேட்கின்றேன் வன்முறையைத் தூண்டுவது யார் என்று. அதையும் விட அண்மையில் “அகிம்சைவழியில் நாங்கள் ஒழுங்காக போராடியிருந்தால் ஆயுதப் போராட்டம் தேவையிருந்திருக்காது” என்றும் சொல்கிறார்கள்.

இவற்றையெல்லாம் நாங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். இவை அடுத்த தேர்தலுக்கான ஆயத்தங்கள். நாங்கள் கேட்டும் அவர்கள் தரவில்லை. ஆகவே திருப்பி போய் கேட்கப்போகின்றோம் உங்கள் வாக்குகளைத் தாருங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் திருப்பப் போய் எதை கேட்கப்போகின்றோம்? எமது உரிமைக்கான கோரிக்கையின் வடிவம் இன்னும் குறையும். குறைவதற்கான வாய்ப்புத்தான் இருக்கின்றது. 2009 இலிருந்து தேர்தல் அரசியலினுடைய போக்கை பார்க்கின்ற பொழுது அதுதான் நிதர்சனம்.


தமிழ்தேசிய கூட்டமைப்பால் முன்வைக்கப்படக்கூடிய கொள்கைகளுக்கு மாற்று என்ன? அந்த மாற்றை பொறுப்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பை விமர்சித்தவர்கள் முன் வைத்திருக்கின்றார்களா என்று கேட்கப்படுகிறது. வெறுமனே திரும்ப திரும்ப கொள்கைகளை மட்டும் பேசுவது உசுப்பவதாக இருக்காதா? அந்த கொள்கைகளுக்கு அமைவான மாற்று அரசியலைப் பேசவேண்டும். இந்த மாற்று என்ன என்பது தொடர்பாக தமிழ்மக்கள் பேரவையினர் மிகத் தெளிவாக மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும்.

இன்று எங்களுக்குள் இருக்கக்கூடிய பிரச்சனை தேர்தல் அரசியலினுடைய மட்டுப்பாடுகளை விளங்கிக்கொள்ளல், பொதுமக்கள் பாவிக்க வேண்டிய சரியான தரப்பை அடையாளம் காட்டல், அல்லது சரியான கொள்கையை அடையாளம் காட்டல் என்று அமையும். ஆனால் மக்கள் தேர்தல் அரசியலில் மட்டும் நின்று கொள்வார்களாக இருந்தால் எங்களுக்கு அந்த அரசியல்தான் கிடைக்கும் என்பதனை நாங்கள் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். இன்றைய தேவை என்ன? தமிழ் சமூகத்தை எடுத்துப்பாருங்கள். மிக அடிப்படையிலே நாங்கள் ஒரு இயக்கமற்ற நிறுவனங்களை உடைய சமூகமாக போய்க்கொண்டிருக்கின்றோமா அல்லது போய்விட்டோமா என்கின்ற ஒரு கேள்வி எழும்புகின்றது. பாடசாலைகளிலே பிரச்சனை, பல்கலைக்கழகத்திலே பிரச்சனை. எல்லாவிதமான பொதுவிடத்திலும் மீள் எழும்புவது தொடர்பாக நாங்கள் மிக அடிப்படையான சவால்களை எதிர்கொள்கின்றோம்.

தேர்தல் அரசியலில் ஈடுபட்ட மாகாணசபை  முதலமைச்சர் கூட தனது உரையிலே மிக தெளிவாக குறிப்பிட்டிருந்தார். அதாவது மாகாணசபையின் கட்டுப்பாடுகள் மீள் எழும்புவதற்கான வெளியை எங்களுக்குத் தராவிட்டால் என்ன செய்வது நாங்கள் என்று கேட்கிறார். ஆயுதம் தூக்குவதா என்ற பொறுப்பற்ற பேச்சுக்களை தவிர்த்து மாற்றுக்களை நாங்கள் அடையாளம் காண வேண்டும். அது என்ன மாற்று. இன்று எங்களுக்குத் தேவை பொதுக்கட்டமைப்புக்கள். வெவ்வேறு இயங்கு துறைகளில் தாங்களாக முன் வந்து தங்களைத் தாங்களே ஒழுங்கமைத்து ஒரு சமாந்தரமான அரசை வடக்கு கிழக்கில் நாங்கள் கொண்டு நகர்த்துதல். விவசாயமாக இருக்கலாம். மீன்பிடியாக இருக்கலாம். பொருளாதாரத்தினுடைய இன்னோரன்ன உபதுறைகளாக இருக்கலாம். கல்வியாக இருக்கலாம். நாங்கள் எங்களுடைய சமூக நிறுவனங்களை மீளக்கட்டியமைக்க வேண்டிய மிக முக்கியமான தேவையிலே இருக்கின்றோம்.

ஒரு உதாரணத்தை மட்டும் சொல்லுகின்றேன். முதலமைச்சர் அவர்களுடைய நிதியத்தை கடைசி நேரம் வரைக்கும் அதனை அங்கீகரிக்காது 5 வருடங்களாக காலம் தாழ்த்தினார்கள். வருகின்ற எதிர்கால முதலமைச்சர் அந்த முதலமைச்சர் நிதியத்தை மாகாணசபைக்கு வெளியே உருவாக்க வேண்டும். அடுத்து வரக்கூடிய மாகாண சபையாக இருக்கட்டும் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கட்டும் எங்களுடைய தொழிற்சங்கங்கள் எங்களுடைய பொதுமக்கள் பிரதேச சபைகள் வெவ்வேறு மட்டத்திலான மக்களோடு கலந்தாலோசித்து ஒரு பொருளாதார பார்வையை மக்கள் மத்தியிலே முன்வைக்க வேண்டும்.

அந்த பொருளாதார பார்வை அடிப்படையிலே 10 பிரதானமான  பொருளாதார சமூக கலாசார மறுமலர்ச்சித்திட்டங்களை கண்டுபிடித்து முன்னோடித்திட்டங்களாக அறிவிக்க வேண்டும். நாங்கள் எங்களுடைய புலம்பெயர் தமிழர்களிடமிருந்து யாரெல்லாம் பணம் தருவார்களோ அவர்களிடமெல்லாம் வாங்கி அந்த திட்டங்களை நாங்கள் மாகாணசபையில் இருந்து கொண்டு மாகாண சபைக்கு வெளியே நடத்த வேண்டும். ஏனென்றால் கொழும்பு பணம் தரும் என்று பார்த்துக்கொண்டிருந்தால் ஒரு நாளும் அது நடைபெறாது.  இன்று தேவை எங்களுடைய கற்பனா சக்தி. எங்களுடைய அரசியல் கற்பனா சக்தியிலே மாற்று அமைப்புக்களை அரசு செய்யவேண்டிய விடயங்களை சமூகம் பொறுப்பெடுத்து நடத்தக்கூடியவாறாக அதற்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி நிரல் தான் எங்களுக்குத் தேவை.

இது வேறெங்கும் செய்யப்படவில்லை இவர் புதிதாக சொல்லுகின்றார் என்று சிலர் நினைக்கக் கூடும். கொசவோவிலே இது செய்யப்பட்டது. சேர்பியாவிலே  கொசவோ மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகார கையளிப்பு  1992 இல் நீக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் சமாந்தரமான ஒரு கட்டமைப்பை தொடர்ந்து நடத்தி வந்தார்கள். தங்களுடைய பங்களிப்பு மூலமாகவும் கொசவோ புலம்பெயர் சமூகத்தின் ஊடாகவும் நடத்தி வந்தார்கள். மிக அண்மித்த உதாரணம் இன்று குர்திய மக்கள் ஈராக்கில் செய்யக்கூடிய ஒரு புரட்சி. குர்திய மக்களும் எங்களைப்போன்றே ஒரு தேசத்திற்காக ஏங்குபவர்கள். அவர்கள் இன்று அவ்வாறான கட்டமைப்புக்களை உருவாக்கி தங்களைத் தாங்கள் பார்த்துக் கொள்ளக்கூடிய அளவில் இருக்கின்றார்கள்.

இதனைச் செய்வதற்கு எங்களுக்கு தேர்தல் அரசியல் தேவை இல்லை. ஆனால் தேர்தல் அரசியலினுடைய அனுசரணை இருந்தால் அதனை இன்னும் வீச்சாகச் செய்ய முடியும் என்பதுதான் உண்மை. ஆகவே தமிழ் மக்களுடைய எதிர்காலம் என்பது  தமிழ்தேசியவாதத்தோடு மட்டும் நிற்பதாக இருந்தால் இன்று அவர்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கும் பதிலளிக்கக்கூடியதாக எங்களுடைய நிகழ்ச்சி நிரலை மாற்ற வேண்டும். தமிழ் தேசியவாத முறைமைக்குள்ளே நின்று கொண்டே இதனைச் செய்யலாம். புதிதாக ஒர் தேசக்கட்டுமான முயற்சியில் நாங்கள் ஈடுபடலாம். அதனை எதிர்காலத்திலே மாகாணசபை செய்ய வேண்டும் என்பது என்னுடைய கருத்தாகும்.

அதேபோன்று போர்க்குற்ற விசாரணை இனப்படுகொலை விசாரணை போன்ற விசாரணைகளின் போதும் நாங்கள் எங்களுடைய நிலைப்பாடுகளில் தெளிவாக இருக்க வேண்டும். பலர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு போக வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றார்கள். இவர்களுக்கு சர்வதேச சட்டம் தெரியாதா? ஐக்கியநாடுகளினுடைய பாதுகாப்பு கவுன்சிலில் இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டு அவர்களால் அது தீர்மானிக்கப்பட வேண்டும். இந்த விடயம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்வதா இல்லையா என்பதை அங்கு சீனாவும் ரஷ்யாவும் முடிவு செய்யும்.  அவர்கள் வீற்றோபவரைப் பாவிப்பார்கள்.

எங்களுக்குத் தெரியும் கலப்பு பொறிமுறை வேலைசெய்யவில்லை. உள்ளகப் பொறிமுறை ஒருபோதும் வேலைசெய்யாது என்பதை பலவருடகாலமாக நிரூபித்துவிட்டோம். தமிழர்களைப்பொறுத்தவரை சர்வதேச விசாரணைதான் என்றால் ஒரு கோரிக்கை என்ற வகையில் நாங்கள் அதனை வைத்திருக்க வேண்டும் என்ற கருத்தும் இருக்கின்றது.

தமிழ் மக்கள் தங்களுடைய போராட்டங்களையும் போராட்ட உத்திகளையும் எவ்வாறு வகுத்துக் கொள்ள வேண்டுமென்றால் மற்றைய ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் முன்மாதிரியாக அவர்களுக்கும் துணைசெய்யும் விதமாக இருக்கவேண்டும் என்று மாமனிதர் சிவராம் சொல்லுவார். ஆகவே நாங்கள் றோகின்யா மக்களோடு இணைந்து கொள்வோம். ஆப்கான் மக்களோடு இணைந்து கொள்வோம். ஈராக்கியர்களோடு இணைந்துகொள்வோம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்பது அகில உலக ரீதியானது இந்த விசாரணை வேண்டும் என்றால் இந்த விடயத்தை ஒரு சர்வதேச கோரிக்கையாக்கி நாங்கள் அவர்களோடு சேர்ந்து வேலை செய்ய வேண்டும். இன்று எங்கள் முன்னால் இருக்கக்கூடிய சவால் மற்றைய ஒடுக்கப்பட்ட தேசங்களோடு சேர்ந்து அகில உலக ரீதியிலே நாங்கள் இந்தக் கோரிக்கையை எவ்வாறு முன்னகர்த்தப்போகின்றோம் என்பதே. அதனைச் செய்வதற்கான தேவையும் தலைமைத்துவம் வழங்குவதற்கான தகுதியும் உள்ள ஒரு இடத்தி தமிழர்கள் இருக்கின்றார்கள்.

அதைத்தவிர விசாரணையில் நாங்கள் உண்மையில் செய்யக்கூடியது என்ன?  ஒழுங்காக சர்வதேச சட்டத்திற்கு ஏற்புடையதாக சான்றுகளை பத்திரப்படுத்தல். இந்த விடயத்தை செய்வதுதான் இன்று தேவையானதாக இருக்கின்றது. அதற்கும் சமூக கட்டமைப்புக்கள் தேவையானதாக இருக்கின்றது.

ஆகவே ஜெனீவாவுக்கு வருடாந்தம் திருவிழா போவது போல் போவது என்பது எங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வாகாது. மாற்று யோசனைகள் மாற்று மும்மொழிவுகளை நாம் உள்வாங்கி தமிழ் தேசம் ஒரு கட்டுமானச் சிந்தனைக்குள் வரவேண்டிய தேவை இருக்கின்றது. இது சிலருக்கு நகைப்பாக இருக்கலாம். கொழும்போடு சொறிந்து கொண்டு அவர்களோடு பேசிக்கொண்டு அவ்வப்போது வந்து தமிழ் மக்களோடு அதுபற்றிய விளக்கங்களை பேசுவதுதான் எங்களுடைய அரசியல் எதிர்காலம் என்றும் அவர்கள் நினைத்தால் அதற்கு மாற்று இல்லைத்தான். நாங்கள் மோடிக்கு விளங்கப்படுத்துவோம். எதிர்காலத்தில் ராகுல்காந்திக்கு விளங்கப்படுத்துவோம். ட்ரம்புக்கும் விளங்கப்படுத்துவோம். அடுத்து வரக்கூடிய எலிசபெத் மகாராணிக்கும் விளங்கப்படுத்துவோம் என்று சொல்லி தலைமுறை தலைமுறையாக அரசியல்வாதிகள் விளங்கப்படுத்தி விட்டார்கள். றீகன் காலத்திலிருந்து வோ~pங்டன் போகின்றோம். இந்திராகாந்தி காலத்திலிருந்து புதுடில்லி போகின்றோம். இதெல்லாம் செய்யவேண்டாம் என்று நான் சொல்லவில்லை. அவற்றால் மட்டுமே தீர்வு வரும் என்று சொல்லி நம்புவதுதான் பிழை.

ஆகவே மாற்று இருக்கிறது. நாங்கள் சிந்திக்கத் தயாராக இருந்தால் எங்களிடம் அந்தப் பொறுப்பு இருக்கின்றது என்பதனை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தால் மாற்று இருக்கின்றது. தமிழ் தேசியக் கொள்கை தொடர்பாக சரியான நிலைப்பாடுகளை எடுத்துக்கொண்டு நாங்கள் இவற்றை செய்யமுடியும் என்ற நம்பிக்கை இருந்தால் நாங்கள் இதை செய்து முடிக்கலாம். ஆகவே தமிழ் மக்கள் பேரவையும் தமிழ் மக்களும் மிகவும் தீர்க்கமாக முடிவெடுக்கவேண்டிய காலப்பகுதி இது. எப்பொழுதும் தமிழ் தேசிய அரசியலுக்குள் மாற்று சிந்தனை என்பது தமிழ் தேசிய அரசியலை சரியான பாதையில் கொண்டு சென்றிருக்கின்றது. அந்த வகையில் மாற்று அரசியலைச் செய்த  முதலாவது தமிழ் அரசியல்வாதி என்றால் எஸ்.கே.வி.செல்வநாயகம். அந்த நேரத்திலே அகில இலங்கை காங்கிரசிலிருந்து வெளியே வந்து சமஷ்டி கோரிக்கையை பிரதானப்படுத்தியது ஒரு மாற்று அரசியல் முயற்சி. அந்த மாற்று அரசியல் முயற்சியை அவர் எடுத்ததால் ஏறத்தாழ எட்டு வருடங்கள் பாராளுமன்றத்திற்கு செல்ல முடியாதநிலையில் செல்வநாயகம் அவர்கள் இருந்தார். தமிழரசுக் கட்சி அடுத்து வந்த தேர்தலிலே தோல்வி கண்டது.

தமிழரசுக் கட்சியின் கொள்கை பிழையாக இருக்கின்றது என்பதற்கு பின்னர் மாற்று அரசியல் செய்தவர் சுயாட்சிக் கழகம் திரு.நவரட்ணம் அவர்கள். நவரட்ணம் அவர்களின் கொள்கையை தமிழரசுக் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. அவரும் மக்கள் முன்னால் சோபிக்க முடியவில்லை. ஆனால் நவரட்ணம் அவர்களின் அரசியல் சிந்தனை தான் தமிழ் விடுதலை இயக்கங்களினுடைய அரசியல் சிந்தனையாக மாற்றமடைந்தது. போருக்குப் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் குறைபாடுகளையும் பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டி ஒரு தரப்பு வந்தது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில். அதுவும் ஒரு மாற்று அரசியல் முயற்சி. அதுவும் தேர்தல் அரசியலில் என்ன பயன்கிட்டும் என்பது தொடர்பாகவும் உடனடித்தேவைகள் என்ன என்றும் கண்டறியாமல் வெளியே வந்த சக்தி. இன்று எங்களுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் அந்த மாற்று அரசியலை முன்மொழிகின்றார்.

பொதுவாக தமிழ் மக்களுக்கு இந்த மாற்று அரசியலை ஏற்றுக்கொள்வது என்பதிலே வேகம் குறைவாகத்தான் இருந்து வந்திருக்கிறது உடனடியாக ஆர்வம் காட்டியதே இல்லை. ஆனால் இன்று முதலமைச்சருக்கு இருக்கக்கூடிய பொதுபிம்பம் அவர்மீது வைத்திருக்கக்கூடிய மரியாதை என்பவை இந்த மாற்று அரசியலை தமிழ் மக்களின் பிரதான அரசியலாக மாற்றுவதற்கான ஒரு அரிய வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருக்கின்றது. முதலமைச்சரை தூற்றுபவர்களும் ஏராளமானபேர் இருப்பார்கள். தலைமீது தூக்கிவைத்து ஆடுபவர்களும் ஏராளமானபேர் இருப்பார்கள். இந்த இரண்டு தரப்பிலும் அவதானமாக இருக்க வேண்டும். மாற்று அரசியல் என்பது கொள்கைரீதியான சரியான அரசியல் என்றால் அதற்குரிய அரசியல் தெரிவுகளை முதலமைச்சர் அவர்கள் கவனமாகவும் நேர்த்தியாகவும் செய்ய வேண்டும். அதற்கு நாங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

தொகுப்பு-அமுதீஸ்
நிமிர்வு கார்த்திகை 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.