தேர்தல் அரசியல்
ஐப்பசி 24, 2018 அன்று தமிழ் மக்கள் பேரவை நடத்திய கூட்டத்தில் பங்கேற்று யாழ். பல்கலைக்கழக சட்டத் துறைத்தலைவரும், வழக்கறிஞருமான குமாரவடிவேல் குருபரன் உரை ஆற்றினார். இந்த உரையிலே தேர்தல் அரசியலினுடைய வகிபாகம் பற்றியும், அதில் தமிழ் மக்களின் பங்கு பற்றுதல் எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்பது பற்றியும் தனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு,
தேர்தல் அரசியல் பற்றி அதிகம் பேசுகின்ற ஒரு அரசியல் சூழலாக தமிழ் அரசியல் சூழல் மாற்றம் அடைந்திருக்கின்ற ஒரு காலத்தில் இன்று நாங்கள் நிற்கின்றோம். ஏறத்தாழ 40 வருடங்களாக விடுதலை அரசியல் பேசிய இனம் யாரை எந்தக் கதிரையில் ஏற்றுவது யாரை எந்தக் கதிரையிலிருந்து இறக்குவது என்பதனை பிரதான பேசுபொருளாக்கி இருக்கக்கின்றது. இவ்வாறான துர்ப்பாக்கியமான சூழலிலே நாங்கள் இருக்கின்றோம். தேர்தல் அரசியலினுடைய வகிபாகம் என்ன என்பது தொடர்பாக ஆழமான ஒரு சமூக உரையாடலை நிகழ்த்தாத ஒடுக்கப்பட்ட ஒரு தேசமாக நாங்கள் நிற்கின்றோம். ஆயுத போராட்டம் உச்சமாக இருந்த காலப்பகுதியிலே தேர்தல் அரசியலுக்கு ஒரு வரையறை கொடுக்க முயற்சித்த பொழுது உருவானது தான் தமிழ்தேசியக் கூட்டமைப்பு. மாமனிதர் சிவராம் அவர்கள் அந்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முக்கிய பங்களிப்பைச் செய்தவர். பேராசிரியர் மார்க் வைட் சிவராமின் சுயசரிதையை "Learning Politics from Sivaram- சிவராமிடமிருந்து அரசியலைக் கற்றுக்கொள்ளல்" என்ற புத்தகத்திலே எழுதியுள்ளார். அந்நூலில் சிவராம் அவர்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உருவாக்கத்தின் காரணங்கள் பற்றி விளக்குகின்றார். ஆயுதப் போராட்ட அரசியலினதும் மிதவாத அரசியல் தலைவர்களினதும் நோக்கங்கள் வெவ்வேறானவை. சர்வதேசத்தின் அரசியல் சூழலிலே ஆயுத போராட்ட அரசியலுடைய நோக்கங்களுக்கு துணைசெய் அரசியலாகவே தேர்தல் அரசியல் இருக்கின்றது. இதனடிப்படையிலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படுகின்றது. இதுவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உருவாக்க நோக்கம் என்று மாமனிதர் சிவராம் சொல்லுகிறார்.
இது இரண்டையும் இரு துருவப்படுத்தி மிதவாத அரசியல் தலைமைகளைக் கையாள்வதன் மூலமாக ஆயுதப்போராட்ட அரசியலை சிக்கலுக்குள்ளாக்குவது என்பதுதான் தென்னிலங்கை அரசியலினுடைய, சர்வதேச அரசியலினுடைய, சர்வதேச சமூக அரசியலினுடைய போக்காக இருக்கிறது. அதனை உடைப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு.
ஆகவே ஆயுதப்போராட்ட அரசியல் உச்சமாக இருக்கின்ற பொழுது தேர்தல் அரசியலினூடாக ஆயுதப் போராட்டத்தினுடைய அரசியல் இலக்குகள் என்ன என்பதனைக் காட்டுவதற்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இது உருவாக்குவதற்கான காரணமாக இருந்த ஆயுதப்போராட்டம் 2009 இல் மௌனிக்கப்பட்டது. அதற்குப் பின்னரான சூழலில் தேர்தல் அரசியலினுடைய வகிபாகம் என்ன என்று ஒரு கேள்வி இருக்கின்றது. 30 வருடங்களாக கொள்கை உருவாக்கத்திலும் அந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதிலும் அந்தக் கொள்கையை செயற்பாட்டு ரீதியாக மக்களினுடைய நாளாந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரக்கூடிய வகையில் ஒரு நிழல் அரசையும் நடத்திக்காட்டிய ஒரு கட்டமைப்பு இருந்தது. அதன் பின்னராக எழுந்துள்ள நிலைமையில் தேர்தல் அரசியலினுடைய வகிபாகம் என்ன என்ற கேள்வி எழுகின்றது. இதை நாம் சற்று ஆழமாக பார்க்க வேண்டும்.
இதிலே ஜனாதிபதி தேர்தலை எடுத்துக்கொண்டு பார்த்தால் 2010ஆம் ஆண்டிலும் சரி 2015 ஆம் ஆண்டிலும் சரி தமிழ் மக்களின் வாக்குகளை எடுத்துப் பார்ப்போம். சிங்கள பௌத்த பேரினவாதத்தினுடைய திணிப்புக்கும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை நிகழ்ச்சி நிரல்களுக்கும் எதிராக ஒரு செய்தியை சொல்லுகின்ற ஒரு இடமாக அவர்கள் தேர்தல்களை பாவித்திருப்பதை பார்க்கலாம். அதாவது வெளிப்படுத்தலை காட்டுவதற்கான ஒரு நிகழ்வாக தேர்தலினை பாவித்திருக்கின்றார்கள். அதனால் தான் யுத்தத்திற்கு தலைமை தாங்கிய கொமாண்டர் இன் சீவ்ப் (commander in chief) இற்கு எதிராக நிறுத்தப்பட்ட கொமாண்டருக்கு தமிழ் மக்கள் வாக்களித்தார்கள். அதே கொமாண்டர் இன் சீவ்ப் இனுடைய கட்சியிலிருந்து வந்தவர் தானே இன்று இறுதிநேரத்தில் யுத்தத்தை தானே நடத்தினேன் என்று மார்பைத் தட்டிக் கொண்டிருக்கும் இன்றைய கொமான்டர் இன் சீவ்ப். இவருக்கும் 2015 இல் தமிழ் மக்கள் வாக்களித்தார்கள். ஏனென்றால் அதற்கு காரணம் இந்த இரண்டு நபர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை அல்ல. ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான ஒரு எதிர்ப்பு வாக்காக மக்கள் அதனை பதிவு செய்தார்கள். இது ஜனாதிபதித் தேர்தல்.
பாராளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல்களை எவ்வாறாக நாம் பார்க்க வேண்டும்? இன்று ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட சூழலிலே தமிழ் மக்கள் என்ன அரசியலின் பாற்பட்டு நிற்கின்றார்கள் என்பதனை வரையறை செய்யக்கூடிய இடத்திற்கு தேர்தல் அரசியல் வந்து சேர்ந்துவிட்டது. ஆகவே பாராளுமன்றத் தேர்தல்களிலும் மாகாணசபைத் தேர்தல்களிலும் நாங்கள் யாரைத் தெரிவு செய்கின்றோம் என்பது தமிழ் மக்கள் என்ன கொள்கையில் நிற்கின்றார்கள் அல்லது என்ன நிகழ்ச்சி நிரலில் போருக்கு பிந்திய அரசியலைப் பார்க்கின்றார்கள் என்பதில் மிகவும் முக்கியமான வகிபாகத்தை எடுக்கின்றது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னரான சூழலில் இந்த தெரிவு ஒரு தலையாய பாத்திரத்தை எடுக்க வைக்கின்றது.
நீண்டகாலமாக மக்கள் அணிதிரள்வில் தேர்தல் அரசியல் பங்கெடுக்கவில்லை. திடீரென 2009 ஆம் ஆண்டிற்கு பிற்பட்ட சூழலில் கொள்கையையும், நிகழ்ச்சி நிரலையும் வரையறை செய்ய வேண்டிய ஒரு மிகப் பெரிய பொறுப்பு அதற்கு வந்து சேர்கின்றது. இந்த தேர்தல் அரசியலில் மக்களினுடைய விருப்பை பெற்றவர்கள் அதனை எப்படி கையாண்டிருக்கின்றார்கள் என்பதனை நாங்கள் பார்க்க வேண்டும்.
பொதுவாகவே 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் தென்னிலங்கை அரசியலினுடைய நிகழ்ச்சி நிரல் என்பது தமிழ் தேசிய சிந்தனை அகற்றல் என்று நாங்கள் சொல்லாம். தமிழ் தேசிய சிந்தனை அகற்றல் நிகழ்ச்சித் திட்டம் ஒன்று இங்கு அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால் நிலைமாறுகாலத்தில் இருக்கக்கூடிய ஒரு சமூகத்திலே தமிழ் தேசிய சிந்தனை அகற்றல் என்ற நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக செயற்ப்படுத்துவது என்பது இலகுவானது அல்ல. ஒரு பக்கம் அடக்குமுறை மூலமாக சிந்தனை அகற்றலை செய்யலாம் என்று கடந்த அரசாங்கம் முயற்சித்தது. இன்று இருக்கக்கூடிய அரசாங்கம் தமிழ் தேசிய சிந்தனை அகற்றலை தமிழ்ப் பிரதிநிதிகளை வைத்துக்கொண்டே செய்யலாம் என எண்ணுகின்றது.
இந்த சிந்தனை அகற்றலை செய்ய முற்படுகின்ற பொழுது சிக்கல் இருக்கின்றது. ஏனென்றால் வந்து வாக்கு கேட்க வேண்டும். நீங்கள் வாக்களிக்க வேண்டும். தேசிய சிந்தனை அகற்றல் நிகழ்ச்சி நிரலுக்கு நீங்கள் வாக்களிக்க மாட்டீர்கள். நீங்கள் வாக்களிக்க மாட்டீர்கள் என்றால் என்ன சொல்லவேண்டும்? நாங்களும் தமிழ் தேசியவாத சிந்தனையோடுதான் நிற்கின்றோம் என்ற விம்பத்தை தொடர்ந்து கட்டியமைக்கின்ற தேவை அவர்களுக்கு இருக்கின்றது.
கடந்த மாகாணசபைத் தேர்தலிலாக இருக்கலாம் அல்லது பாராளுமன்றத் தேர்தலிலாவது இருக்கலாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசிய பேச்சுக்களை எடுத்துப் பார்த்தால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் கடந்த ஐந்து வருடங்களில் பேசிய பேச்சுக்களைவிட திறமான பேச்சுக்களை பேசினார்கள். தாயகம், சுயநிர்ணயம், தேசியம் பேசாத கூட்டமே இல்லை. 2013 லும் சரி 2015 லும் சரி தேர்தல் முடிந்ததன் பின்னராக வழமையாக மிதவாத அரசியலுக்கு உள்ள குணம் மீள எட்டிப்பார்க்கின்றது. வடக்கு கிழக்கில் ஒன்றை சொல்லலாம் கொழும்பில் இன்னொன்றை சொல்லலாம். வடக்கு கிழக்கில் தேர்தல் நேரத்தில் திரும்பி வந்து அதே விடயத்தை சொல்லலாம். வாக்குகளை அள்ளிவிட்டு போகலாம்.
தழிழ்த் தேசிய சிந்தனை அகற்றல் என்பது தேர்தல் காலங்களில் அவர்களால் சாதிக்க முடியாததாக இருக்கின்றது. எனவே மீள மீள தமிழ் தேசிய சிந்தனை தொடர்பான வாக்குறுதிகளும் அந்த மொழிப்பாவனையும் பாவிக்கப்படுகிறது. ஆனால் தென்னிலங்கையிலும் வொசிங்டனிலும் புதுடில்லியிலும் வேறு மொழி பாவிக்கப்படுகிறது. வேறு மொழிக்கு என்ன பெயர்? எங்களுடைய அரசியலை எங்களுடைய வேணவாக்களை வரையறுக்கின்ற அதனை மட்டுப்படுத்துகின்ற ஒரு முயற்சி.
பல உதாரணங்கள் சொல்லாம். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி அதற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு மசோதா என்ற ஒன்றை கொண்டு வந்திருக்கின்றார்கள். அந்தப் பயங்கரவாத தடைச்சட்டத்தில் உள்ள பல பிற்போக்கான விடயங்களை அகற்றி உருவாக்கப்படுகின்ற சட்ட மசோதா என்று சொல்லப்பட்டிருக்க தென்னிலங்கையில் இருக்கக்கூடிய சில முற்போக்கான சிவில் சமூகத்தவர்களே இப்பொழுது வந்திருக்கின்ற மசோதா இன்னும் பல தீங்கான விடயங்களை கொண்டு வந்திருக்கின்றது என்று சொல்லியிருக்கின்றார்கள். ஆனால் இன்று எங்களுக்கு சொல்லப்படுகின்ற செய்தி என்ன? பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டுமாக இருந்தால் இதற்கு நாங்கள் ஆதரவு தெரிவித்து தான் ஆகவேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும், அதற்கு மாற்று எதுவும் தேவையில்லை என அழுத்தங்கள் கொடுக்க முடியாதவர்களாக இருக்கின்றோம். ஆனால் என்ன நடக்கின்றது? நாங்கள் அந்த அழுத்தத்தை கொடுக்க வெளிக்கிட்டால் பயங்கரவாத தடைச்சட்டமே எஞ்சும். இதுவுமில்லை அதுவுமில்லை என்ற நிலை உருவாகும் என்று கூட்டமைப்பினர் சொல்கிறார்கள். இது எங்களை குறிப்பிட்ட அரசியலுக்குள் வரையறை செய்வதற்கான ஒரு முயற்சி.
இன்னொரு உதாரணம், அரசியலமைப்பு உருவாக்கத்தை எடுத்துப் பாருங்கள். ஒருமித்த நாடு ஒற்றையாட்சியைப்பற்றி ஊர் ஊராக விளக்கம் வழங்கப்படுகின்றது. ஒற்றையாட்சிக்கு அரசியலமைப்பு ஒரு விளக்கம் சொல்கிறது. இடைக்கால அறிக்கை ஒரு வியாக்கியானம் சொல்கிறது. இடைக்கால அறிக்கைக்கு பொழிப்புரை எழுதிய கட்சிகள் ஒவ்வொன்றும் வியாக்கியானம் சொல்கின்றன. குறிப்பாக சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் ஐக்கியதேசியக்கட்சியும் தங்களைப் பொறுத்தவரையில் ஏக்கிய ராட்சிய என்று இருப்பது ஒற்றையாட்சியைத்தான் குறிக்கும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். ஆனால் ஊர் ஊராக எங்களுக்கு விளக்கம் சொல்லப்படுகின்றது இது சமஷ்டி தான் என்று. இந்த விளக்கத்தை குறைந்தபட்சம் அரசியல் அமைப்பு பேரவையில் இருக்கக்கூடிய நிறைவேற்று குழு அங்கத்தவர்களையாவது ஏற்றுக்கொள்ள வைப்போமென்றால் அதுவுமில்லை. அவர்கள் சொல்லுகின்றார்கள் ஒருமித்த நாட்டையும் ஏற்றுக்கொள்ள இயலாது என்று.
இதை நாங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் ஏனென்றால் மிதவாத அரசியல் தமிழ் தேசிய சிந்தனையினுடைய நிலையை குறைத்துவிடுகின்ற பொழுது அந்த குறைந்த நிலையைத் தானும் சிங்களப்பேரினவாதம் ஏற்றுக்கொள்ளும் என்று நினைப்பது பிழையென மீளமீள எங்களுக்கு நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. நாங்கள் குறைக்க குறைக்க எங்களுடைய குறைந்த பட்சம் அவர்களுக்கு உயர்ந்த பட்சமாக தெரிகின்றது. அதுதான் சிங்கள பௌத்த பேரினவாதத்தினுடைய 60 வருட இயல்பு என்பது எங்களுக்குத் தெரியும். எங்களுடைய குறைந்த பட்சம் அவர்களுடைய அதிகபட்சம். ஆகவே நாங்கள் குறைக்க குறைக்க மாவட்ட சபைகள் அதிகபட்சமாக தெரியும். எதிர்காலத்தில் உள்ளூராட்சி சபைகளும் அதிகபட்சமாக தெரியக்கூடும். இதிலும் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
மிதவாத அரசியலினால் படிப்படியாக எங்கள் கோரிக்கைகளை நாங்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் படிப்படியாக நீங்கள் இறங்கி வந்தாலும் சிங்களபேரினவாதம் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றதா என்றால் அதுவும் இல்லை. ஆனால் இறுதியாக என்ன நடக்கின்றதென்றால் தமிழ் மக்களினுடைய கோரிக்கைகள் தாழ்ந்த வடிவம் பெறுகின்றன. சமஷ்டி என்ற கோரிக்கை இப்பொழுது ஒருமித்த நாடு என்று மாற்றப்பட்டிருகிறது.
இதுதான் இந்த அரசியலினுடைய நோக்கம். இதைத்தான் நான் தமிழ்த் தேசிய சிந்தனையினுடைய மீள் வரைபு அல்லது சிந்தனை அகற்றல் முயற்சி என்று சொல்லுகின்றேன். ஒவ்வொருமுறையும் சமாதானத்திற்கான பேச்சுவார்த்தைகளிலே நாங்கள் இந்த அணுகுமுறையோடு போகும் பொழுது அவர்கள் எங்களுடைய வேணவாக்களை குறைத்து அனுப்புகிறார்கள். குறைத்து அனுப்பிய வேணவாக்களை எங்களுடைய வேணவாவாக மாற்ற முயற்சி நடக்கின்றது. இதேதான் ஜெனீவாவில் நடக்கின்றது. நாங்கள் சர்வதேச விசாரணை கேட்டோம் கலப்பு பொறிமுறை என்றார்கள். கலப்பு பொறிமுறையென்றால் என்ன என்று வரைவிலக்கணப்படுத்தாத அல்லது அதனுடைய உள்ளடக்கத்தைப்பற்றி பேசாத போதும் அதை ஏற்றுக்கொண்டு கையுயர்த்திவிட்டு வந்தோம். நிறைவேற்றப்படுகின்ற 2015 தீர்மானம் என்பது தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்படுகின்ற தீர்மானம் என்று சொல்லப்படுகின்றது. சர்வதேசப் பொறிமுறையில் இருந்து கலப்பு பொறிமுறைக்கு குறைந்தார்கள். கலப்பு பொறிமுறையிலிருந்து கொண்டு OMP போதும் என்றார்கள். காணாமல்போனோர் அலுவலகம் போதும். இழப்பீட்டுக்கான சட்டமூலம் போதும். இனி உண்மையை தேடுவதற்கான ஒரு ஆணைக்குழு போதும் என்று அடுத்த ஐ.நா மனிதவுரிமை அமர்வு நடக்கும் பொழுது பேசுவார்கள். இவை போதும் என்றவகையிலே எங்களுடைய எதிர்பார்ப்புக்களை அபிலாசைகளை குறைத்து வருகின்றார்கள்.
இன்று தேர்தல் அரசியலினுடைய போக்கு என்ன? அதாவது தேர்தல் நேரத்தில் நாங்கள் விரும்பும் தமிழ்த் தேசிய சிந்தனை மொழியில் பேசுவதை பேசிவிட்டுச் சென்று பின்னர் படிப்படியாக தமிழ்த் தேசிய சிந்தனை அகற்றுதல் ஒன்று இடம்பெற்று வருகின்றது. இதைத்தான் நாங்கள் யதார்த்தத்தில் பார்க்கக்கூடியது.
தேர்தலில் ஒன்றை சொல்லி அதற்குப்பின்னர் வேறொன்றை செய்வதை புத்திசாலித்தனம் என்று சொல்லுகின்றார்கள். அந்த புத்திசாலித்தனத்தை படிக்காத முதலமைச்சர் விக்னேஸ்வரன் போன்றவர்களை தீவிரவாதிகள், முட்டாள்கள் என்று சொல்லுகின்றார்கள். தேர்தல் அரசியல் நேரத்தில் மக்களை ஏமாற்றுவது என்பது தேர்தல் அரசியலை அயளவநச பண்ணுவது என்று சொல்லுவார்கள். தேர்தல் அரசியலில் எதனை சொன்னார்களோ அதனை பின்னர் நடவடிக்கையில் காட்டாததுதான் இளைஞர்கள் ஆயுதம் தூக்கினார்கள் என்பதனை நாங்கள் ஞாபகம் வைத்திருக்க வேண்டும். இந்த சமூகம் மீள ஒரு வன்முறைக்கு சென்றுவிட முடியாது. செல்லக் கூடாது.
நிமிர்வு கார்த்திகை 2018 இதழ்
Post a Comment