காணாமல் ஆக்கப்படும்; காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்


காணாமல்ஆக்கப்பட்டோர் விவகாரமானது இன்று உறவுகளை தவிர ஏனையோரால் கைவிடப்பட்ட ஒன்றாகவே உள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளை தேடியலையும் மக்களோ இன்று யாரை  நம்ப வேண்டும் என்பதில் பாரிய குழப்பத்துக்கு உள்ளாகியுள்ளனர். ஏனெனில் மேற்குலகமும்இ தமிழ் அரசியல் தலைமைகளும்இ சிங்கள அரசும் கைவிட்ட நிலையில் என்.ஜி.ஓக்களின் ரெடிமேட் போராட்டகாரர்களின் கைகளில் இவர்கள் சிக்குண்டு போகும் அபாயமும் உள்ளது.

முன்னைய ஆட்சியாளர் மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் இலங்கையில் அதிகளவு காணாமல் ஆக்கப்பட்டோரை உள்ளடக்கிய மாவட்டங்களில் ஒன்றாக  காணப்படும் அம்பாறை மாவட்டத்தில் இந்த விவகாரத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கு பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முடுக்கி விடப்பட்டு இருந்தன. காணாமல் ஆக்கப்பட்டோருக்காக குரல் கொடுத்த பலரையும் அரசாங்கம் முகவர்களாக பயன்படுத்தி இருந்தது. பலவந்தமாக மரணச் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையில் ராஜபக்ஸ அரசாங்கம் தீவிரம் காட்டியது. இதையும் தாண்டி வாழ்வாதார உதவிகள்இ நலத்திட்ட உதவிகளை வழங்கி மரணச் சான்றிதழ்களை நிர்ப்பந்தித்து வழங்கியது. இதனை தடுத்து நிறுத்துவது சமுகநல செயற்பாட்டாளர்களுக்கு சவாலான பணியாகவே இருந்தது. பெரும்பான்மையாக சிங்கள மக்களை கொண்ட மாவட்டமாக அது அமைந்திருந்ததால் அவர்களுக்கு அச்சுறுத்தல் கடுமையாக இருந்தது. இருந்தாலும் வடக்கிலும் இவ்வாறான முயற்சி  மேற்கொள்ளப்பட எத்தனிக்கப்பட்ட போது தொடர்ச்சியான முன்னறிவித்தல்களைஇ தெளிவூட்டல்களை  வழங்கி அரசின் கபடத்தனத்தை முறியடிக்க முடிந்தது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்காக போராடும் செயற்பாட்டுத் தள அனுபவத்தை கொண்டவர்களாக தென்னிலங்கையில் உள்ள செயற்பாட்டாளர்கள் தான்  இருந்திருக்கிறார்கள். ஜேவிபி கிளர்ச்சியின் போது கொல்லப்பட்ட சிங்கள இளைஞர்களுக்கு நீதி வேண்டிய அவர்களின் போராட்டம்  நல்ல அனுபவத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.   தமிழர் பகுதிகளில் குறிப்பாக வடக்கு கிழக்கை பொறுத்தவரைக்கும் இறுதி யுத்தத்தின் பின்னர் தான் இந்த விவகாரம் ஒரு செயற்பாட்டுத் தளமாகவும் விரிவடைந்தது. சிங்கள செயற்பாடாளர்களின் போராட்ட அனுபவங்களூடாகவும் அவர்களில் சிலர் தமிழர் பகுதிகளிற்கு வந்து வழிகாட்டியதனூடாகவும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மேலும் கூர்மையடைந்தது. 

2009 க்கு முன்னர் வெள்ளை வானில் காணாமல் போகச் செய்யப்படும் சம்பவங்கள்இ கொலைகள்  அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தீவிரமாக இடம்பெற்றன. மஹிந்த ராஜபக்ச ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்தப்படும் வரைஇ  மஹிந்தவின் மோசமான மனித உரிமைகள் பற்றிப் பேசவும் எதிர்வினையையாற்றவும்இ காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இப்போது ராஜபக்சவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்திய பின்னர்இ காணாமல் ஆக்கப்பட்டோருக்காக இடம்பெறும் போராட்டங்கள் தேவையில்லைஇ என்ற நிலைக்கு அன்று தீவிரமாக செயற்பட்டவர்கள் வந்திருக்கிற சூழலை மக்கள் நன்கு அவதானித்துக் கொண்டு  இருக்கிறார்கள். ராஜபக்சவை அப்புறப்படுத்தி தங்களுக்கு சாதகமான ஆட்சியாளர்களை அமர்த்திய மேற்குலகம் இன்று திரும்பிக் கூட பார்க்காத சூழல் நிலவுகிறது. நல்லாட்சி அரசுக்கு
முண்டுகொடுக்கும்   மேற்குலகம் இன்று சில என்.ஜி.ஓக்கள் ஊடாக இத்தகைய போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. 

கடந்த ஆண்டுகளில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் நிலை இருந்தது. காலப்போக்கில் போராட்டத்தில் பங்கேற்கும் மக்கள் தொகை கணிசமாக குறைந்தே வந்திருக்கிறது. அண்மைக்காலங்களில் ஒரு போராட்டம் நடைபெறுவதாக இருந்தால் போராட்டத்தில் பங்கெடுப்பவர்களை விடவும் அந்தப் போராட்டத்தை சுற்றியிருந்து புதினம் பார்ப்பவர்களின் தொகை அதிகமாக உள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்திலும் இதே நிலை தான். ஆயிரக்கணக்கான மக்கள் பங்கெடுத்த போராட்டங்களில் இன்று நூற்றுக்கும் ஐம்பதுக்கும் இடைப்பட்ட மக்கள் தான் கலந்து கொள்கிறார்கள். ஏன் இப்படி ஆனது ஆழமாக ஆராய வேண்டும்.

இந்த நிலையில் எங்களது இந்த பிரச்சினைகளை சர்வதேசத்தில் பேசுபொருளாக்கிய மேரி கொல்வின் அம்மையாரையும்இ சனல் 4 செய்தி நிறுவன ஆவணப்பட இயக்குனர் கெலும் மக்ரேவையும் தமிழர்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்கக் கூடாது. சனல் 4 இல் இலங்கை தொடர்பில்இ காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் தொடர்ச்சியாக ஆதாரங்களுடன் செய்திகள் படங்கள் வீடியோக்கள் வந்திராவிட்டால் உலகம் என்றோ எங்களை மறந்து போயிருக்கும். 

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவனமெல்லாம் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளை கண்டுபிடிப்பதிலேயே உள்ளது. சில என்.ஜி.ஓ க்கள் தென்னிலங்கைக்கு வா என்றால் கூட ஒரு கேள்வி கேட்காமல் ஓடுகிறார்கள் . பிள்ளை பற்றி ஒரு நம்பகமானஇ உறுதியான செய்தி கிடைக்கும் என்று தான்  ஓடுகின்றார்கள். இப்படி ஓடி ஓடி விரக்தியும் சலிப்பும் அடைந்து விட்டார்கள். அரசியல்வாதியின் எல்லை எது செயற்பாட்டாளர்கள் என்ன செய்கிறார்கள் சர்வதேச நிறுவன பிரதிநிதிகள் எதை இலக்கு வைத்து செயற்படுகின்றார்கள் என்று ஓவ்வொருவரைப் பற்றியும் ஓடிக் களைத்த மக்கள் ஒரு சுய மதிப்பீட்டை செய்து கொண்டு விட்டார்கள்.

பலர் இந்த மக்களை வைத்து காசு சம்பாதிக்கும் மோசமான செயற்பாட்டை செய்து வருகிறார்கள்.  இதனை ஆராய்ந்துணர்ந்த மக்கள் அவர்களுக்காகப் போராடுவதாகப் பாசாங்கு செய்யும் சிலரை எதுவும் செய்யாமல் ஒதுங்கும் படி சொல்லி விட்டார்கள்.   இடைத்தரகர்கள் இப்படியான வேலைத்திட்டங்களில் இருந்து உடனடியாக விலக வேண்டும். என வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர்  சங்கத் தலைவி அறிக்கை ஒன்றின் மூலம் பகிரங்கமாகவே கூறியிருக்கின்றார். சில என்.ஜி.ஓக்கள் மக்கள் தங்களுடன் ஒத்துழைக்காத பட்சத்தில் ஏற்கனவே இருக்கும் அமைப்புக்களை இரண்டாக உடைத்து புதிய அமைப்புக்களை உருவாக்கும் வேலைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அதனூடாக தங்கள் புரஜக்ட் திட்டத்தை நிறைவேற்றி காரியங்களை சாதித்து  செல்கிறார்கள்.

இப்படியான ஒரு நலிவடைந்த போராட்ட சூழலில் ஈழத்தில் இடம்பெற்ற  வலிமையான அதிர்வை ஏற்படுத்திய போராட்டமாக வவுனியாவில் கடந்த தைமாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகிய காணாமல் போன உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை குறிப்பிடலாம். கடந்த ஆண்டில் அரசிற்கும் தங்களிடம் வாக்கு கேட்டு வந்த மக்கள் பிரதிநிதிகளிடமும் தமிழ் மக்கள் இப்போராட்ட முன்னெச்சரிக்கையினை செய்து கொண்டே இருந்தார்கள். கடந்த வருட இறுதியில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு ஒரு முக்கிய கோரிக்கையினை வைத்தார்கள். இந்த ஆண்டு தொடக்கத்தில் அதாவது தைப்பொங்கலுக்கு முன்னர் எமது உறவுகள் தொடர்பில் இனிப்பான செய்தியை தராவிட்டால் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை சாகும்வரை போராட்டமாக  மாற்றுவோம் எனக் கூறி எச்சரிக்கை செய்தியை அனுப்பி இருந்தார்கள். இவர்களின் அறிவிப்பு  தொடர்பில் அரசோஇ தமிழ் மக்கள் பிரதிநிகளோ இளக்காரமான மனநிலையில்  இருந்திருக்கின்றார்கள். இந்த சூழலில் தான் வவுனியாவில் 14 உண்ணாவிரதிகள் சாகும்வரையிலான உண்ணாவிரதத்தினை மேற்கொண்டு இருந்தார்கள்.

மலையை மத்தாக கொண்டு கடலை மோராக கரைத்து தரும்படி அவர்கள் அரசைக் கேட்கவில்லை. மிகவும் இலகுவான கோரிக்கைகளையே அவர்கள் முன்வைத்து இருந்தார்கள்.  முதலாவது கேள்விஇ காணாமல் போன எங்கள் உறவுகள் உயிரோடு இருக்கின்றார்களா? இல்லையா? (ஒரே கேள்விஇ ஒரே பதில்) இரண்டாவது கேள்விஇ உயிரோடு இருந்தால் அவர்கள் எந்த இரகசிய முகாம்களில் இருக்கிறார்கள்? முகாம்களின் பெயர்களையும்இ காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர் பட்டியலையும் அம்பலப்படுத்து.  மூன்றாவதுஇ உயிருடன் இல்லை என்றால் அவர்களை கொன்றது யார்? கொல்லச் சொல்லி உத்தரவிட்டது யார்? எங்கே புதைக்கப்பட்டு இருக்கிறார்கள்? உடனே அந்த இடத்தை தோண்டு.

இந்த கேள்விகளை முன்வைத்து தான் உறவுகள்  உண்ணாவிரதமிருந்தார்கள். இங்கே நடக்கும் எல்லாப் போராட்டங்களும் எதற்காக நடத்தப்படுகின்றன என ஏற்கனவே ஊடகங்களில் அறிவித்துவிட்டு தான் நடாத்தப்படுகின்றன. ஆகவேஇ போராட்டகளத்துக்கு வரும் மக்கள் பிரதிநிதிகளோஇ அரச பிரதிநிதிகளோ தீர்வோடு தான் போராட்டகளத்துக்கு வர வேண்டும். ஆனால்இ நான்கு நாட்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு உறவுகள் சாகக் கிடக்கும்  சூழலிலும் அங்கு வந்த பெரும்பாலான அரசியல்வாதிகள்  ஊடகங்களுக்கு போஸ் கொடுக்கவே அங்கு வருகிறார்கள். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட வயதான தாய்மார்களின் உடலில் நான்காவது நாளாகும் போது இலையான்கள் மொய்க்க ஆரம்பித்து விட்டன. அவர்கள் உடல்நிலை மோசமான நிலைக்கு சென்று விட்டது. ஊடகங்கள் வரும் வரை சில நிமிடங்கள் இருக்கும் அரசியல்வாதிகளோ அவர்கள் வந்து படமெடுத்ததும் கிளம்பி விடுவார்கள். எம்.பிஇ அமைச்சர் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு   என்று அடுத்த நாள்  பேப்பரில் செய்தி வரும்.

ஒவ்வொரு எம்பிக்கும்இ மாகாண சபை உறுப்பினருக்கும் குறைந்தப்பட்சம்  10000 க்கும் மேற்பட்ட வாக்குகள் விழுகின்றன. தன்னை ஏற்று வாக்களித்த 10000 பேரையும் கூட்டிக் கொண்டு களத்துக்கு வரவேண்டாம். குறைந்த பட்சம் 100 பேரையாவது கூட்டிக் கொண்டு வர முடியும். ஆனால் வருபவர்கள் தங்கள் பிரத்தியேக படப் பிடிப்பாளரைத் தான் கூட்டிக் கொண்டு வந்து உறவுகளின் உண்ணாநிலைப் போராட்டத்தில் இருந்து படமெடுத்துவிட்டு கிளம்பி  விடுவார்கள்.   அரசியல்வாதிகளின் போராட்ட ஆதரவுத்தளம் என்பது இவ்வாறாகவே இருக்கின்றது.

போராட்ட களத்தில் ஆதரவென்பது குறித்த போராட்டங்களை பெரும் மக்கள் போராட்டங்களாக மாற்றுவதாகவே இருக்க வேண்டும். அது தான் உண்மையில் ஆதரவு. போராட்டம் நான்கு நாட்கள் ஆகும் போது இதனை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதில் அரசை விட என்.ஜி.ஓ போராட்ட மனநிலைக்காரர்கள் கடும் அக்கறை எடுத்தார்கள். ஏனெனில் இந்த விவகாரம் ஒரு இறுதி நிலைக்கு போகக் கூடாது என்பதில் இவர்கள் பெரும் சிரத்தையுடன் இருக்கின்றார்கள். ஆனால்இ மக்களோ இந்த விவகாரம் இப்படியே இழுபட்டு செல்கிறதுஇ எங்களுக்கும் வயதாகிவிட்டது நாங்களும் இறந்து விட்டால் இந்த விவகாரம் அப்படியே நீர்த்துப் போகச் செய்யப்பட்டு விடும் ஆகவே இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்.

அன்று ஜெனீவா மனிதவுரிமை கூட்டத்தொடர் இடம்பெறவிருந்த சூழலிலும்இ போராட்டத்துக்கு தாயகத்திலும்இ புலம்பெயர் தேசங்களிலும் ஆதரவுத்தளம் விரிந்து சென்றது. இது அரசுக்கு பெரும் அழுத்தத்தையும் நெருக்கடியையும் கொடுத்தது. அரச உயர்மட்ட அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து உண்ணாவிரதப் போராட்டம் நிறுத்தப்பட்டு பின்  அலரிமாளிகையில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பு  இடம்பெற்றது.  இலங்கைக்குள் காணாமல் ஆக்கப்பட்ட 32000 பேருக்கு நீதி கேட்டே போராடினோம் என சொல்லப்பட்ட போதுஇ உண்ணாவிரதமிருந்து 14 பேரின் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதனை  பொலிஸ்மா அதிபர் தலைமையில்  விசேட குழு அமைத்து  முதலில் கண்டறிவோம் என சொல்லப் பட்டது. அதனை ஏற்றுக் கொள்ளாத மக்கள் சந்திப்பில் இருந்து வெளியேறி வந்து விட்டார்கள். ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட படி ஜனாதிபதியோஇ பிரதமரோ சந்திப்பில் பங்கேற்கவில்லை.  இறுதியில் அது தோல்வியில் முடிவடைந்தது. மீண்டும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக தற்போதுவரை இடம்பெற்று வருகின்றது.

விசேட குழுக்களை நியமிப்பதுஇ சிறப்பு ஆணைக்குழுக்களை நியமிப்பதுஇ செயலணிகளை நியமிப்பதுஇ நிபுணர் குழுக்களை நியமிப்பது என சந்திரிக்கா காலத்திலிருந்து எத்தனையோ குழுக்களை தமிழ் மக்கள் கடந்து வந்துவிட்டார்கள். இவையெல்லாம் பிரச்சினைகளை நீர்த்துப் போகச் செய்வதற்கான ஒரு ஏமாற்று நாடகமே. இந்த குழுக்களுக்கும்இ விசாரணை அறிக்கைகளும் எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டன என்பது யாவரும் அறிந்ததே. முதலில் இவற்றுக்கு ஒரு விசாரணைக் கமிஷன் சர்வதேச கண்காணிப்புடன் அமைக்கப்பட வேண்டும்.   

மஹிந்தவால் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவின் விசாரணைக்கு காலநீட்டிப்பை மைத்திரி அரசு வழங்கியது.  ஆனால்இ  அதிலிருந்து கூட விசாரணையை தொடங்க இந்த அரசால் முடியாமல் போனது ஏன் என்கிற கேள்வி எழுகிறது.

அண்மையில் ஜனாதிபதியிடம் கேளுங்கள் என்கிற மையத்தின் திறந்து வைக்க யாழ்ப்பாணம் வந்த மைத்திரி அவர்கள்இ ஆற்றிய உரை கவனிப்புக்கு உரியதுஇ அதில் முக்கியமாகஇ இப்போது எல்லோரும் போராடுகிறீர்கள்இ வேலை கேட்டு போராடுகிறீர்கள்இ காணிகளை கேட்டு போராடுகிறீர்கள்இ காணாமல் ஆக்கப்பட்ட  உறவுகளை தேடி போராடுகிறீர்கள்இ கடந்த ஆண்டில் நீங்கள் இப்படிக்கு போராடி இருந்தால் காணாமல் ஆக்கப்பட்டு இருப்பீர்கள் என்கிற எச்சரிக்கை செய்தியினையும் சொல்லி இருந்தார். இதிலிருந்து தன்னை ஜனநாயகவாதியாக சித்தரிக்கும் ஜனாதிபதிஇ உங்களுக்கு போராடும் ஜனநாயக வெளியை தந்துள்ளோம் என்கிறார். இதன் மூலம் கடந்த ஆட்சியில் ஜனநாயக வழியில் போராடியவர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன விடயத்தை ஒத்துக் கொள்கிறார்.

இதனால் கடத்தப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுத் தரும் உரிமையும் கடமையும் அவருக்கு  இருக்கிறது. கடத்தியவர்கள் இன்றும் எங்கோ ஒரு மூலையில் தங்களை காப்பாற்றிக்  கொண்டுள்ளனர். கடத்தியவர்களுக்கு என்ன தண்டனை என்பதையும் அவர் தான் சொல்ல வேண்டும். கடந்த அரசாங்கத்தில் உயர்பதவியை வகித்திருக்கிறார். பிரதிப் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்திருக்கிறார். கடந்த ஆட்சியிலும் அரச வளங்களையும்இ சலுகைகளையும் அனுபவித்தவர்.  ஆகவேஇ தன் வாயாலேயே ஒத்துக் கொண்டபடி கடந்த ஆட்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

ஆனால்இ கடத்தியது மஹிந்த அரசாக இருக்கும் போது அதனை காப்பாற்றுகிறது மைத்திரி அரசு. இதுதான் இலங்கைத் தீவின் இன்றைய யதார்த்தமான சூழல். அலரிமாளிகையில் நடந்த சந்திப்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவானைப் பார்த்து தாயொருவர் சுட்டு விரலை நீட்டி கேள்வியொன்றை கேட்டுள்ளார். என்னுடைய பிள்ளையை என் கண்முன்னே கடத்தி சென்ற அந்த இராணுவப் புலனாய்வாளனை நான் அடையாளம் காட்டுகிறேன். நாளைக்கே அவனை கைது செய்து உள்ளே போட்டு மிதிக்க முடியுமா? மிதித்தால் உண்மை வரத்தானே வேண்டும் எனக் கேட்டார். அதற்கு ருவானால் எந்தப் பதிலையும் வழங்க முடியவில்லை.

இவர்களால் இந்த  விடயத்தில் நடவடிக்கை எடுக்க முடியாது . ஏனெனில் தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட விடயத்தில் இவர்கள் அனைவருமே கூட்டுப் பங்காளிகள். ஒருவரை சொல்லி விட்டு மற்றையவர் தப்பித்து விட முடியாது. நீதியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டால்  ஒருவர் பின் ஒருவராக சங்கிலிக் கோர்வையாக ஒவ்வொருவரும் அடையாளம் காணப்படுவார்கள்.     "நீ முன்னால போனால் நான் பின்னால வாறேன்" என்கிற பழம் தமிழ் பாடலுக்கு ஏற்ற மாதிரி ஒவ்வொருவர் மீதும் சட்டம் பாயும்.  இதனால் மஹிந்த அரசை மைத்திரி அரசு காப்பாற்றும். அதே போல் மைத்திரி அரசையும் மஹிந்த அரசு காப்பாற்றும். இது தான் சிங்கள பேரினவாத அரசு.

இப்படியான சூழலில் தான்இ ஐக்கியநாடுகள் சபையின் செயலணி ஒன்று திருகோணமலையில் கோத்தா கப்பல் தளத்தில் இருந்த ரகசிய சித்திரவதை முகாமுக்கு நேரில் சென்று அம்பலப்படுத்தியது. முகாம் சுவர்களில் இரத்த சிதறல்கள் காணப்பட்டதுடன்இ பலரும் தங்கள் பெயர்களை இரத்தத்தால் அதில் எழுதியிருந்தமையையும் குழுவினர் அவதானித்துள்ளனர். உண்மைகளை நீண்டகாலம் பொத்தி வைக்க முடியாது. என்றோ ஒருநாள் அவை வெளியில் வரும் என்றே அந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் நம்பியுள்ளனர் . அந்த நம்பிக்கையில் தான் தங்கள் பெயர்களையும்   அங்கு எழுதியுள்ளனர். அந்த பெயர்கள் என்றாவது ஒருநாள் ஊடகங்களில் வரும் போது எம் உறவுகள் பார்த்துக் கொள்வார்கள் என்கிற சிந்தனையில் தான் பெயரை இரத்தத்தால் எழுதியுள்ளனர்.

தமிழ்மக்கள் அரசின் அனைத்து உள்நாட்டு பொறிமுறைகளிலும் நம்பிக்கை இழந்தவர்களாக இருக்கின்றனர். உள்நாட்டில் விசாரணை நடத்தி நீதியை பெற்றுக் கொடுக்கும் நெஞ்சுரமும்இ நேர்மைத்திறனும் சிங்கள பேரினவாத அரசிடம் கிடையவே கிடையாது. முதலில் இதனை இந்த அரசு மானசீகமாக ஒத்துக்கொள்ள வேண்டும். இந்த பிரச்சினைக்கு உண்மையில் நீதியும்இ நியாயமும் கிடைத்து ஒரு பரிகார நீதியை நோக்கி நகர வேண்டுமாக இருந்தால் ஏனைய பல உலக நாடுகளை முன்மாதிரியாக கொண்டுஇ சர்வதேச தரத்திலான விசாரணையை ஆரம்பித்த்தால் மாத்திரமே இப்பிரச்சினைக்கு பரிகார நீதியினை பெற்றுக் கொள்ள முடியும்.

அ. ஈழம் சேகுவேரா
நிமிர்வு சித்திரை 2017 இதழ் 


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.