ஜனாதிபதி குந்தியிருந்து பொய் சொன்ன கதிரை


     
   

தென்பகுதியை சேர்ந்த பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய தேசிய சகோதரத்துவ அமைப்பினர் இரண்டு நாட்கள் வடக்குக்கு விஜயம் செய்து இங்கு தமிழ் மக்கள் நடத்தும் நிலமீட்பு போராட்டம், காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டங்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.  வடக்குக்கு வருகை தந்த 12 பேர் கொண்ட மேற்படி அமைப்பினர் கடந்த 26.03.2017 ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்துக்கு சென்று அங்கு மக்களின் போராட்டங்களை நேரடியாக படம் பிடித்து சமூகவலைத்தளங்களில் குறிப்பாக பேஸ்புக்கில் நேரடி காணொளிகளை பதிவும் செய்து தரவேற்றினர்.

 வடக்கு மக்களின் ஜனநாயக போராட்டங்களை நாடு முழுவதும் தெரியப்படுத்தவே இந்த அமைப்பினர் வடக்குக்கு வந்தனர் என அதற்குதலைமை வகித்த இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.  அவர்கள் கேப்பாபிலவு நிலமீட்பு போராட்டம், மருதங்கேணி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் ஆகியவற்றுக்கும் சென்று மக்களின் இன்றைய நிலைகளை நேரில் பார்த்தனர்.   பின்னர் இந்தக் குழுவினர் ஜனாதிபதி விஜயம் செய்த மல்லாகம் கோணப்புலம் அகதிகள் முகாமுக்கும் சென்றனர். சொந்த நிலத்தில் நல்ல வாழ்வாதாரத்தோடு வாழ்ந்த மக்கள் இன்று எவ்வாறு குறுக்கலான வீடுகளுக்குள் அல்லலுறுகின்றமையை நேரில் பார்த்து தங்கள் கவலையை வெளிப்படுத்தினர்.

 புலிகளை அழிச்சுப் போட்டோம் எண்டு சொல்லுறியள். ஆனால், மயிலிட்டியில் கடற்கரைக்கு போகாம அடைச்சு வைச்சிருக்கிறியள்.... போர் முடிஞ்சா பிறகு எதுக்கு எங்கட நிலத்துக்கு போக விடுறியள் இல்லை. என்ன காரணம்? எங்களுக்கு அரசோட எந்த உதவியும் வேண்டாம். நிலத்துக்கு விட்டா போதும். மீன் பிடித்து வாழுவோம். நாங்கள் ஏன் மற்றவர்களிடம் அரிசி, மாவுக்கு கையேந்த வேண்டும்? (அறைக்குள் ஓடிச் சென்று சின்னக் கதிரையை எடுத்து வெளியில் வைக்கிறார்)  கடந்த 22.12.2015 இல் மல்லாகம் கோணப்புலம் அகதி முகாமுக்கு வந்த ஜனாதிபதி இந்தக் கதிரையில் இருந்துதான் சொன்னவர் “100 நாளில உங்களை ஊருக்கு (மயிலிட்டிக்கு) அனுப்புறேன் என்று" ஆனால், இன்று ஒருவருடமும் 4 மாதங்களும் கடந்து விட்டது... ஜனாதிபதியே பேய்க் காட்டிப் போட்டார் பேந்து என்ன? என்று சிங்கள அமைப்பை சேர்ந்தவர்களிடம் முகாமில் வசிக்கும் ஐயா கூறியபோது அவர்களும் வாயடைத்துப் போய் நின்றனர்.


இறுதியாக யாழ்ப்பாணம் சென்ஜேம்ஸ் தேவாலயத்தில் உள்ள கருத்தரங்க மண்டபம் ஒன்றில்; அருட்தந்தை ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினருக்கும்  மேற்படி சிங்கள அமைப்பினருக்கும்  கலந்துரையாடல் 27.03.2017 திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற போது தாங்கள் இதுவரை பார்த்த விடயங்களை விளக்கி கூறினர். இங்கே நடக்கும் மக்கள் போராட்டங்கள் தொடர்பிலான தெளிவுகளையும் பெற்றுக் கொண்டனர். 

 ராகம வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் வைத்தியாகலாநிதி சுனிமல் ஜெயக்கொடி கருத்து தெரிவிக்கையில், வவுனியாவில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் உட்பட பல இடங்களுக்கும்  சென்று பார்த்த போது சில உண்மைகளை அறிந்து கொண்டோம். 22000 க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக அறிந்து கொண்டோம். காணாமல் போனவர்கள் தொடர்பில் உண்மை நிலையை அறிந்து கொள்ள அவர்களின் உறவுகளுக்கு உரிமை இருக்கிறது. நூற்றுக்கணக்கானோர் அரசியல் கைதிகளாக இன்று சிறைகளில் .இருக்கிறார்கள். அவர்கள் தங்களை விடுதலை செய்ய சொல்லி கேட்கிறார்கள். அவர்களும் விடுதலை செய்யப்படுவது அவசியமானது. யாழில் உள்ள முகாம்களில் மக்கள் மலசலகூட வசதிகள் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி 27 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். இதனை கண்கூடாக நாங்கள் பார்த்தோம்.   தேசிய இனப்பிரச்சினை சரியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். இங்கேயுள்ள மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளிப்படுத்தி இருக்கிறோம். இந்தப் பயணம் முடிந்ததும் இது தொடர்பில் கட்டுரைகளை எழுதி சிங்கள மக்களிடம் சேர்ப்பிக்கும் வேலைகளை கண்டிப்பாக செய்வோம்.

சந்திப்பில் பங்கேற்ற இன்னொரு சிங்கள சகோதரி கருத்து தெரிவிக்கையில், போர் நடக்கும் போது ஆட்கள் காணாமல் போவது தவிர்க்க முடியாதது என்றே பெரும்பாலான சிங்கள மக்கள் நம்புகிறார்கள். நானும் கூட அவ்வாறு தான் நம்பினேன். வவுனியாவில்  காணாமல் ஆக்கப் பட்டவர்கள் தொடர்பிலான உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சென்ற போது தான்  பெரும்பாலான பெற்றோர்கள் இராணுவத்தினரிடம் தங்கள் பிள்ளைகளை கையொப்பமிட்டு கையளித்துள்ளார்கள் என்கிற உண்மை நிலவரம் தெரிய வந்துள்ளது.   அவர்களை இலங்கை அரசும், இராணுவமும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றார்.

 அருட்தந்தை ரவிச்சந்திரன் கலந்துரையாடலில் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு, நல்லெண்ண சமிக்ஞையாக கூட உடனுக்குடன் செய்யக் கூடிய விடயங்களை கூட ஏன் இந்த அரசாங்கம் செய்ய முடியாமல் இருக்கிறது என்பது எங்களுக்கும் உண்மையில் விளங்கவில்லை. போர் முடிந்து 8 வருடங்கள் கடந்து விட்டன. பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பிலும் நாங்கள் எதுவும் காணவில்லை. அப்படியிருக்கையில் இவ்வளவு ஆயிரம் இராணுவம் ஏன் இங்கு உள்ளது. இவ்வளவு இராணுவம் இங்கே நிலைகொண்டிருப்பதால் தான் இவ்வளவு காணியும் அவர்கள் வசம் உள்ளது. இந்த இராணுவப் பிரசன்னத்துக்குள் இருந்து கொண்டு மக்கள் ஒருபோதும் நிம்மதியாக வாழ முடியாது. மேலும் அரசியல் கைதிகளை விடுவிப்பதில்  எந்த தடையும் இருப்பதாக எமக்குத் தெரியவில்லை. புலிகளுக்கு சாப்பாடு கொடுத்தார்கள் போன்ற சின்ன குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் இந்த தமிழ் அரசியல் கைதிகள். புலிகளையே புனர்வாழ்வளித்து விடுதலை செய்த அரசு ஏன் இவர்களை உடன் விடுதலை செய்ய முடியாமல் இருக்கின்றார்கள். இவற்றை எல்லாம் தர்க்க ரீதியில் எங்களால் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது.

இந்த அரசாங்கத்தால் சில நன்மைகள் வரப்போகுது என்று தமிழ் தலைமைகள் சொல்லி தான் தமிழ் மக்கள் வாக்களித்தனர். ஆனால், இன்று இந்த மக்களுக்கு அரசாங்கமும் ஒன்றும் செய்யவில்லை, தமிழ் தலைமைகளும் ஒன்றும் செய்யவில்லை. மக்கள் தங்களின் பிரச்சினைகளுக்கு தாங்கள் தனித்து போராடுகின்ற அல்லது போராட விடப்படுகிற ஒரு அவலமான சூழல் இன்று உள்ளது. இப்படியான சூழலில் மக்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிற விரக்தி மனநிலை தான் மிகவும் ஆபத்தானது. இது உண்மையில் நல்லிணக்கத்துக்கு எதிரானது. அது ஆபத்தான நிலையில் எங்கள் நாட்டைக் கொண்டு போகப் போகிறது என நான் நினைக்கிறேன்.

 இப்படி சின்ன சின்ன விடயங்களையே செய்யமுடியாமல் பேசாமல் இருக்கின்ற அரசாங்கம் தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டக் கூடிய ஒரு அரசியல் அமைப்பை கொண்டு வரும் என்றோ, போரில் தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமைகளை சரியாக விசாரித்து உண்மைகளை வெளிக்கொணர்ந்து நட்ட ஈடும் கிடைக்கக் கூடிய செயற்திட்டத்துக்குள் போகும் என்றோ எங்களால் எண்ணியும் பார்க்க முடியாமல் உள்ளது. தமிழர் பகுதிகளில் செயற்படும் சிவில் அமைப்புக்களிடமும் இப்போது சோர்வு நிலை தான் காணப்படுகிறது.    எவ்வளவு பேரை சந்தித்து தொடர்ச்சியாக நாங்கள் கதைச்சுக் கொண்டிருக்கிறோம். இதனால் என்ன பிரயோசனம் என்கிற விரக்தி நிலை சிவில் அமைப்புக்களில் அங்கம் வகிப்பவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த மக்கள் நாள் கணக்கில் போராடுகிறார்கள். ஒன்றுமே நடக்கப் போவதில்லை என இங்கேயுள்ள சாதாரண மக்கள் பேசிக் கொள்ளும் நிலை உள்ளது. இப்படியான மனநிலை நல்லிணக்கத்துக்கு சமாதானத்துக்கும் எதிரானது.

 காணாமல் ஆக்கப்பட்டோர் உண்ணாவிரதப்போராட்ட குழுவினரை ஜனாதிபதியை சந்திக்க என்று கூட்டிக் கொண்டு போனார்கள். ஆனால் அந்தச் சந்திப்பு நடக்கவில்லை. அதற்கு முன் பல்கலை மாணவர் படுகொலையில் விரைவில் நீதி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தும் இன்னும் தீர்வு வழங்கப்படவில்லை. சந்திப்புக்கு பின் வழங்கும் வாக்குறுதிகள் ஒன்றும் நிறைவேற்றப்படுவதில்லை. இதனால் எங்களுக்கு அரசுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பிலும்  நம்பிக்கையில்லை.   இப்படியான சந்திப்புக்களை எந்த விதத்தில் மாற்றங்களை கொண்டு வரும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. வடக்கு - தெற்கு இணைந்து நடாத்தும் பாரிய போராட்டங்கள் எந்த அளவில் சாத்தியம் என்றும் தெரியவில்லை என்றார்.

 எப்போதும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் சிங்கள மக்கள் மத்தியில் தவறாகவே விளங்கிக் கொள்ள வைக்கப்படுகிறது. அதில் சிங்கள ஊடகங்களும் முதன்மையான பணியை செய்து வருகின்றன. இங்கே சிங்கள அமைப்பினர் பார்த்த தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களை, கோரிக்கைகளை  ஏனைய சிங்கள மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும் என்பதே தமிழ் மக்களின்   விருப்பாகும். மேலும் சமூக வலைத்தளங்கள் ஊடா கமுடிந்தளவு போராட்டங்கள் தொடர்பில் வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என சிங்கள அமைப்பினரிடம் தெளிவுபடுத்தப்பட்டது.  இங்கே பல உண்மைகளை விளங்கிக் கொண்டுள்ள அவர்கள், தாங்கள் இங்கே பார்த்த விடயங்களை இயன்றளவு சிங்கள ஊடகங்கள் மூலமாக வெளிக்கொண்டு வருவதாக உறுதியளித்தனர்.

சிந்து-
நிமிர்வு சித்திரை 2017 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.