அடுத்த ஜெனீவாவுக்கு தயாராகுவோம்.
ஜெனீவாக் காட்சிகள் தற்போது தற்காலிகமாக முடிவிற்கு வந்திருக்கிறன. தமிழ் மக்கள் எதிர்பார்த்தது போல அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை. இலங்கை அரசாங்கம் விரும்பியது போல பெரிய நிபந்தனைகள் எதுவுமில்லாமல் காலஅவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றது. சர்வதேச வல்லரசுகளைப் பொறுத்தவரை இலங்கையை தொடர்ந்தும் ஜெனீவாப் பிடிக்குள் வைத்திருக்கும் விருப்பமும் நிறைவேறியிருக்கிறது. ஜெனீவா தமிழ் மக்களுக்கு கிடைத்த ஒரு சர்வதேச களமாகும். அந்த சர்வதேச களத்தை நாங்கள் சிறந்த முறையில் பயன்படுத்தாவிட்டால் வரலாறு எங்களை ஒருபோதும் மன்னிக்காது. இந்த விடயத்தில் ஒரு கூட்டுச் செயற்பாடும், பொறிமுறையும், வேலைத்திட்டமும் அவசியமாகும். இனிவருங்காலங்களிலாவது நாங்கள் ஜெனீவாவை சிறந்த முறையில் பயன்படத்துவதற்கான ஒரு திட்டமிடலை மேற்கொள்வது உண்மையில் ஆரோக்கியமாக இருக்கும்.
கடந்த 01.04.2017 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணம் நாவலர் கலாச்சார மண்டபத்தில் தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘ஜெனீவாக் களமும் தமிழ் மக்களும்’ என்கிற தலைப்பிலான கருத்தரங்கில் உரையாற்றிய அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான யோதிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார். கிராமிய உழைப்பாளர் சங்கத் தலைவர் இன்பம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் இடம்பெற்று முடிந்த பிற்பாடு தமிழர் தாயகப் பகுதியில் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடல், கருத்துப்பகிர்வு நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
யோதிலிங்கத்துடன், யாழ். பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பீட தலைவர் கலாநிதி கே.ரி.கணேசலிங்கம், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன், ஆகியோரும் உரையாற்றினர். இறுதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் கருத்து தெரிவித்தனர். இந்நிகழ்வில் கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
யோதிலிங்கம் கருத்து தெரிவிக்கையில், ஜெனிவாவில் நடைபெறுகின்ற நிகழ்வுகள் எல்லாமே சர்வதேசரீதியாக பேசுபொருளாகக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன. இந்தக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு தமிழ் மக்களுக்கு வேண்டிய நியாயங்களையும் வலுவாகப் பேசக்கூடிய வாய்ப்பு தமிழத் தரப்புக்கு இருக்கின்றது. சர்வதேச அரச பிரதிநிதிகளுடனும் அங்கீகரிக்கப்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்களுடனும் உரையாட நிறையவே சந்தர்ப்பங்கள் உள்ளன. தமிழ் மக்களோடு தொடர்புடைய சக்திகள் என்பது கொஞ்சம் தான். ஒன்று தாயகத்தில் வாழ்பவர்கள் இரண்டாவது புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற எங்களுடைய சகோதரர்கள் மூன்றாவது தமிழகத்தில் வாழ்கின்ற எங்களுடைய சகோதர சக்தி. இம்மூன்று சக்திகளும் ஓரிடத்தில் சந்தித்து பேசக்கூடிய ஒரு தளமாக ஜெனீவா திகழ்கின்றது. அத்துடன், ஜெனீவாவில் எமது கோரிக்கையை மையமாக வைத்து போராட்டத்தை நடாத்தக்கூடிய வாய்ப்பும் இருக்கின்றது. அப்படி நடாத்துகின்ற பொழுது தனித்து தமிழர்கள் மாத்திரம் பங்கு பெறாமல், சர்வதேச முற்போக்கு ஜனநாயக சக்திகளெல்லாம் பங்குபற்றக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. தாயகத்திலும் புலம்பெயந்த நாடுகளிலும் தமிழகத்திலும் சமாந்தரமான வலுவான போராட்டத்தை நடாத்தியிருந்தால், அந்தப் போராட்டம் சர்வதேசரீதியாக பேசுபொருளாகக்கூடிய வாய்ப்புக்கள் வலுவாக ஏற்பட்டிருக்கும். அங்கு நடத்தப்படக்கூடிய ஆவணக்கண்காட்சிகள் நேரடியாக வருபவர்கள் அதைப்பார்த்து அந்தவிடயத்தை புரிந்து கொள்வதற்கான வாய்ப்பினை உருவாக்குகின்றன.
போர்க்குற்ற விசாரணையைப் பொறுத்தவரையில் அது நான்கு விடயங்களை உள்ளடக்கியதாக உள்ளது. உண்மையைக் கண்டறிதல், நீதிகாணல், இழப்பீடு வழங்குதல், மீளநிகழாமையை உறுதிப்படுத்துதல் ஆகியவனவாகும். மீளநிகழாமையை உறுதிப்படுத்துதல் என்பது முழுக்க முழுக்க தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வோடு தொடர்புடையது. ஒரு வலுவான தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு அரசியல் தீர்வு காணப்படுகின்ற பொழுதுதான் ஏற்கனவே நடந்த அந்த மோசமான நிகழ்வு மீளநடைபெறாமல் தடுக்கக்கூடியதாக இருக்கும். ஆகவே ஜெனீவாக் களமானது பொறுப்புக் கூறலை மட்டும் முன்வைக்கின்ற களமாக இல்லாது, தமிழ் மக்களின் அரசியல் தீர்வை முன்வைக்கிற களமாகவும் இருக்கின்றது.
இந்த விடயத்தில் தமிழ் மக்களின் அங்கீகாரம் பெற்ற அமைப்பாக இருப்பது கூட்டமைப்புதான். கூட்டமைப்பு ஜெனீவாவைப் பயன்படுத்தியிருந்தால் சிறப்பான விளைவு கிடைத்திருக்கும். ஆனால், ஜெனிவாவில் எமது நலன்களைக் காக்க ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்கியதாக தெரியவில்லை. கூட்டமைபில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சி தவிர ஏனைய அமைப்புக்கள் காலஅவகாசத்துக்கு சம்மதித்தமையும் அவதானிக்க கூடியதாக இருந்தது. காலஅவகாசத்துக்கு சம்மதித்த வேளை அக்கால அவகாசத்தில் நடத்தி முடிக்கப்பட வேண்டியவற்றிற்கான கால அட்டவணையைக் கூட கூட்டமைப்பு வற்புறுத்தவில்லை. சுவிஸ்லாந்து, அவுஸ்ரேலியா போன்ற சில நாடுகள் கால அட்டவணையை வழங்க வேண்டுமென்ற கருத்தை முன்வைத்திருந்தனர். தமிழ்த் தரப்பு அந்தக் கோரிக்கையை அழுத்தமாக முன் வைத்திருந்தால் அமெரிக்கா போன்ற வல்லரசுகளும் கொஞ்சம் கீழே இறங்கி வந்திருக்கும் என்றார்.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன், பேசியவை: தமிழர் தரப்பு ஒருங்கிணைப்புக்கள் இல்லாமல் குழுமச்செயற்பாடுகளினூடாக தங்கள் தங்களுக்குள் முரண்பட்ட கருத்துக்களை வகுத்துக் கொண்டும் நிபந்தனைகளைத் தெரிவித்ததும் கொண்டும் இருக்கின்றோம். புலம்பெயர்ந்த தேசத்தில் இருக்கின்ற அமைப்புக்கள் கூட ஒருங்கிணைந்து செயற்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. கட்டமைக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலை ஏற்படுத்தாமையும் ஈழத்திலும், இந்தியாவிலும், புலம்பெயர்ந்த தேசத்திலும் ஒருங்கிணைந்த கூட்டுச்செயற்பாடு இல்லாததினாலும் எம்மால் ஜெனிவாவை சாதகமான முறையில் பயன்படுத்த முடியாமலுள்ளோம்.
ஜெனிவாவிற்கு முன்னதாகவே ஜனவரியில் காலஅவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்று கொழும்பை மையமாகக் கொண்டு செயற்படுகின்ற மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும், வேறுசில செயற்பாட்டாளர்களும் 97 பேர் சேர்ந்து ஜெனிவாவிற்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்கள். அங்கு ஏற்கனவே 2,3 மாதங்களுக்கு முன்னரே எந்தெந்த நாடுகளுக்கு எவ்வாறான கட்டமைப்பில் எந்த ஒரு நிகழ்ச்சி நிரலை ஒழுங்குபடுத்தப்பட வேண்டுமென அவர்கள் தீர்மானித்திருந்தார்கள். இவ்வாறாக சர்வதேச சதிவலையின் பின்னால் நசுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் பல இன்னல்களில் சிக்கித் தவிக்கிறார்கள்.
சிங்களதேசத்து டி.எஸ்.சேனநாயக்கா தொடக்கம் மைத்திரி வரை ஒரு வரைமுறையில் அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறாரகள். காலத்திற்கு காலம் சர்வதேசரீதியான அணுகுமுறைகளை எவ்வாறு கையாள வேண்டுமென்று நகர்ந்து அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் சர்வதேசரீதியான அணுகு முறைகளினூடாக தமிழினத்தை எவ்வாறு காக்கப் போகின்றோம் என்ற அடிப்படை கொள்கையையாவது நாங்கள் வகுத்திருக்கிறோமா? இல்லை. இதனால்தான் சிங்கள அரசு தொடர்ந்து ஜெனிவாவில் வெற்றியடைந்து வருகின்றது.
வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் பின்வரும் கருத்துக்களைத் தெரிவித்தார்: இலங்கையில் சர்வதேச ரீதியான தலையீடு செய்யக்கூடிய அளவிற்கு உங்களுடைய தரப்புவாதம் உறுதியானது என 2015 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற தமிழர் ஆதரவு கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றும் போது திருமதி நவநீதம்பிள்ளை கூறினார். அவர் மேலுமொரு விடயத்தை அங்கே கூறினார், இரண்டாம் உலகப்போரின் முன்னர் ஜப்பான் இராணுவம் கொரியப் பெண்களை பாலியல் து~;பிரயோகம் செய்தது, அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதி கோரி கடந்த 70 வருடங்களாக ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கிறார்கள். போரின் கொடூரங்களை விளக்கும் நூதனசாலையையும் அமைத்து வைத்திருக்கிறார்கள். நீங்கள் உறுதியாக போராட்டங்களை முன்னெடுப்பீர்களாக இருந்தால் வெகுவிரைவில் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்றார். ஆனால், நாங்கள் அதைசெய்யத் தவறிவிட்டோம். போர்க்குற்றத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும், நீதிகிடைக்க வேண்டுமென்று கேட்கின்றோம். 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த விடயங்களில் ஒன்றுகூட இந்த நிமிடம் வரை நடைபெறவில்லை என்றார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரே~; பிரேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கையில்: 2015ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவது அல்லது நடைமுறைப்படுத்துவதற்காக 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 மாதகால அவகாசம் வழங்கப்பட்டது. அந்த 18மாத காலஅவகாசத்துக்குள் இலங்கை அரசாங்கத்தால் அதனை நிறைவேற்றுவதற்கு எதனையும் செய்ய முடியவில்லை. இப்பொழுது 24 மாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 18 மாதகாலத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டியவற்றில் குறைந்த பட்சம் 25 வீதம் விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு மீதி நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று சொல்லி சொன்னால் ஒரு வாய்ப்பை அளிப்பதில் அர்த்தம் உள்ளது. ஆனால், எதுவுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆகவே இந்த 18மாதமும் நடைமுறைப்படுத்தாத அரசாங்கம் 24 மாதகாலத்திற்குள் என்ன செய்யப்போகிறது என்பது ஒரு பெரிய கேள்வி.
2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தினுடைய தீர்மானத்தில் பல விடயங்கள் இருந்தாலும் முக்கியமான அம்சம் சர்வதேச நீதிபதிகளினுடைய ஒத்துழைப்புடன் ஒரு விசாரணைக்குழுவை நிறுவுவது முக்கியமானது. ஏன் அந்த விசாரணைக்குழு? இந்த நாட்டில் யுத்தக் குற்றங்கள் நடந்திருக்கிறன. மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் நடந்திருக்கிறன. இதைப்பற்றி விசாரணை செய்யப்பட வேண்டும். விசாரித்து உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். அந்த உண்மையின் பிரகாரம் எதிர்காலத்தில் இவை நடைபெறாமல் பார்க்க வேண்டும். அவை நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதான் 2015 ஆம் ஆண்டின் தீர்மானத்தினுடைய முக்கியமான விடயம். ஆனால் அவ்வாறான ஒரு குழு அமைக்கப்படமாட்டாது என, ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, அமைச்சர்கள், அமைச்சரவை எல்லோரும் சேர்ந்து பல சந்தர்ப்பங்களில் தெளிவாக கூறிவிட்டார்கள். அவ்வாறிருக்கையில் இந்த 24 மாத காலஅவகாசத்தின் தேவை என்ன?
ஜெனீவா கூட்டத் தொடர் பெப்ரவரி 27 இல் ஆரம்பமானது. ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்னரே இரண்டு வருடகால அவகாசம் கொடுப்பது தொடர்பில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் கிடையாது என கூட்டமைப்புத் தலைமை அமெரிக்காவிடம் கூறிவிட்டது. இன்று சுமந்திரன் அதற்கு விளக்கம் சொல்கிறார். நாங்கள் தனித்து நின்று எதுவும் செய்ய இயலாது. வல்லரசு நாடுகள் எடுக்கின்ற முடிவுகளிலிருந்து நாங்கள் எதுவுமே செய்யமுடியாது. நாங்கள் அவர்களோடு சேர்ந்து போக வேண்டும் என்கிறார். அவ்வாறு சேர்ந்து போனதால் தமிழ் மக்களின் நலன்கள் ஏதாவது பாதுகாக்கப்பட்டதா? தமிழர்களது நிலம் விடுவிக்கப்பட்டதா? இராணுவம் வெளியேற்றப்பட்டார்களா? காணாமல் ஆக்கப்பட்டோர் கண்டுபிடிக்கப்பட்டார்களா? அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டார்களா? ஆகவே ஐ.நா சபையினூடாக நாங்கள் என்ன செய்தோம், இந்த அரசாங்கத்தை பாதுகாக்க பக்கபலமாக இருந்திருக்கிறோம் என்பதுதான் இங்கே முக்கியமான விடயம்.
ஐநா களம் என்பது மிகவும் முக்கியமானது. எமக்குக் கிடைக்கும் களங்கள் உதாசீனப்படுத்தப்படுகின்றன. இது ஓரிருவர் கையாளும் விடயமல்ல. இந்தக் களங்களை நாம் கையாள வேண்டுமாயின் சரியான நிலைப்பாடுகள் எடுக்க வேண்டும், சரியான அமைப்புக்கள் உள்வாங்கப்பட வேண்டும். கொள்கை ரீதியாக முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். எல்லாவற்றையும் விட முதன்மையானது இந்த வழிமுறைகளினூடாக அதற்கான சரியான தலைமைத்துவங்கள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஐ.நா களம் வருங்காலத்திலாவது தமிழர் தரப்பால் வினைத்திறனுடன் பயன்படுத்தப்படுமா?
தொகுப்பு-துருவன்-
நிமிர்வு சித்திரை 2017 இதழ்
Post a Comment