வீரத்தாயும் அவரது பிள்ளைகளும்




கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட பேட்டோல்ட் பிறெஹ்ட் அவர்களின் ‘வீரத்தாயும் அவளது பிள்ளைகளும்’ நாடகம் சர்வதேச அரங்க விழாவில் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் இராசதுரை அரங்கில்  31.03.2017 அன்று அளிக்கை செய்யப்பட்டது. இந்த நாடகத்தை நான் மேடையேற்ற நினைத்தமைக்கு அரங்கு சார்ந்த காரணங்களே முதன்மையானவை. அதாவது, ஈழத்துத் தமிழ் அரங்கு ஒரு புத்தெழுச்சியை வேண்டி நிற்கின்றது. ஈழத்துச் சூழலில் அரங்கச் செயற்பாடானது ஒரு பலமான, செழுமையான, வன்மையான கலைச் செயற்பாடாகவும், சமூகச் செயற்பாடாகவும் வளர்ந்து வந்திருக்கின்றது. சடங்கரங்குகள், கூத்துக்கள், இசைநாடகங்கள், தொழின்முறைசார் நாடகங்கள், ஊர் நாடகங்கள், சாதிய எதிர்ப்பு நாடகங்கள், இன ஒடுக்கு முறைக்கு எதிரான நாடகங்கள், புலமைத்துவ நாடகங்கள், பள்ளிக்கூட நாடகங்கள் என நாடகமானது பல்வேறு வடிவங்களில், பல்வேறு நோக்கங்களின் அடிப்படையில், பல்வேறு தரப்பினரால் முனைப்புடன் முன்னெடுத்து வரப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் வடக்குக் கிழக்கில் கிராமங்கள் தோறும் நாடகத்துடன் சம்பந்தப்படாத இளைஞர் என்று எவரும் இருக்கவில்லை. அந்தளவுக்கு நாடகமானது எங்கள் வாழ்வியலின் ஒரு அங்கமாக இருந்து வந்துள்ளது. 30 வருடப் போராட்டச் சூழலில் அரங்கானது அதன் உச்ச வீரியத்துடனும் வினைத்திறனுடனும் செயற்பட்டது. வளர்ந்தது. பல மாற்றங்களுக்கு உட்பட்டது.

 2009க்குப் பின்னரான நிலைமை தமிழர்களின் அனைத்துத் துறைகளிலும் ஒருவித போலித் தன்மையை உருவாக்கி விட்டுள்ளது என்பது வெள்ளிடைமலை. அந்தப் போலித் தன்மையானது ஒவ்வொரு துறையிலும் மந்தப் போக்கையும், வினைத்திறன் இன்மையைம் உருவாக்கிவிட்டுள்ளது. ஈழத்துத் தமிழ் அரங்கும் இதற்கு விதிவிலக்கல்ல. 2009க்குப் பின்னரான தமிழ் அரங்கானது, சமூகத்துக்கான அரங்காகவும் அல்லாமல், தொழில் முறைசார் அரங்காகவும் அல்லாமல், மகிழ்வளிப்பு அரங்காகவும் அல்லாமல் ஏதோ ஒரு வேறு வழியில் சென்று கொண்டிருக்கின்றது. அரங்கு ஒரு புறமாகம் மக்கள் ஒரு புறமாகவும் ஒருவர் மற்றவருடன் சம்பந்தம் இல்லாமல் பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள். அரங்கும் அரங்கவியலாளர்களும் மக்களில் இருந்து அந்நியப்பட்டவர்களாகத் தங்கள் வட்டத்துக்குள் ஒரு உலகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். தாங்களே ஆற்றுகை செய்கிறார்கள். தாங்களே அவற்றை விமர்சனம் செய்கிறார்கள். தாங்களே சிலாகித்துக் கொள்கிறார்கள். தாங்களே தங்களுக்கு விருதுகளும், பரிசில்களும் வழங்கியும் கொள்கிறார்கள்.

 நாடக அனுபவச் சுவையை மக்கள் இழந்து கொண்டிருக்கின்றார்கள். போருக்குப் பிந்தைய பல நாடகங்கள் பார்ப்போரை விரக்தி நிலைக்கோ அல்லது மன அழுத்த நிலைக்கோ அல்லது ஒருவித குற்ற உணர்ச்சிக்கோ அல்லது தோல்வி மனப்பான்மை நிலைக்கோ தள்ளி விடுகின்றது. பார்ப்போரின் வாய்களை அடைப்பனவாகவும் அவ்வரங்குகள் செயற்படுகின்றன. அவர்கள் இறுகிப் போன நிலையில் அரங்கை விட்டு வெளியேறுகின்றார்கள். நாடகம் பார்க்க மக்கள் பயப்படுகின்றார்கள். நாடகம் தங்களைத் தொந்தரவு செய்துவிடும் என எண்ணுகின்றார்கள்.

போருக்குப் பிந்தைய ஒரு சமூகத்தின் மனநிலை என்பது ஆழமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம் ஆகும். ஆனால்பெரும்பாலான நாடக ஆற்றுகையாளர்கள் இந்த விடயம் பற்றி மேலோட்டமான அல்லது அலட்சியமான புரிதலுடனேயே மக்கள் முன்னே நாடகங்களை மேடையேற்றுகின்றார்கள். இத்தகைய போக்குகள் ஒரு புறம் நாடகத்தில் இருந்து மக்களை அந்நியப்படுத்துவதுடன் மக்களை இயங்கவிடாமலும் தடுத்து விடுகின்றன அல்லது அவர்களை முடக்கி விடுகின்றன.

 இந்நிலையில் நாடகத்தை நாடகமாகப் பார்ப்பதற்கு மக்களைப் பழக்க வேண்டியுள்ளது. நாடகத்தை அனுபவிக்க மக்களைப் பழக்க வேண்டியுள்ளது. ப்றெஹ்ட் அவர்களின் நாடகக் கட்டமைப்பானது இயல்பாகவே பார்ப்போரை வழிப்படுத்தும் அம்சத்தைக் கொண்டது ஆகும். அந்தவகையிலேயே பிறெஹ்ட் அவர்களின் நாடகங்களில் பாடகர் குழு (chorus)  அங்கம் வகிக்கின்றது.

‘வீரத்தாயும் அவளது பிள்ளைகளும்’ நாடகத்தில், ஐம்பதுக்கும் மேற்பட்ட பாடகர் குழு நடிகர்கள் நடிக்கின்றார்கள். இவர்கள் நடைபெறும் நாடகத்தின் பார்வையாளர்களாகவும் அதேநேரம், நாடகத்தின் ஆற்றுவோராகவும் செயற்படுகின்றனர். இவர்களை இலட்சியப் பார்வையாளர்கள் (ideal spectator)  எனச் சொல்லப்படுவதுண்டு. அதாவது பார்ப்போர் எந்த இடத்தில் மகிழ வேண்டும், எந்த இடத்தில் கவலைப்பட வேண்டும், எப்போது நாடகத்தில் இருந்து வெளியில் நின்று சிந்திக்க வேண்டும், எதைப் பற்றிக் கேள்வி எழுப்ப வேண்டும் போன்ற விடயங்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்களாகச் செயற்படுகின்றனர். அதேநேரம் நாடகம் பற்றி நாடகத்துக்குள்ளேயே கருத்துச் சொல்பவர்களாகவும் இவர்கள் இருக்கின்றனர். நாடகத்தில் நடைபெறும் சம்பவங்களுக்கு இவர்கள் கொடுக்கும் பதிற்குறிகள், இவர்களது ஆடல்கள். பாடல்கள் பார்ப்போரை வழிப்படுத்துவது மட்டுமன்றிப் பார்ப்போரை நாடகத்தின்பால் ஈர்ப்பதற்கும், நாடகத்துக்கு வெளியால் நின்று நாடகத்தை அனுபவிப்பதற்கும் வழி செய்கின்றன.

அத்துடன் நாடகமானது, நடிகர்களின் படைப்பாற்றலுக்கும் இடம் அளிப்பதாக இருக்க வேண்டும். வீரத்தாய் நாடகத்தின் இசை, நடனம் போன்ற விடயங்களைப் பாடகர் குழுவினரே வடிவமைத்துக் கொண்டார்கள். அவர்களுடைய ஆற்றுகைகளை அவர்களே கூட புதிதளித்தல் முறைமையில் உருவாக்கிக் கொண்டார்கள். ஒரு நெறியாளராக நான் அவர்களை வழிப்படுத்தினேன்.

அடுத்து நாடகமானது, நடிகர்களுக்கு முக்கியபங்கு அளிப்பதாக இருக்க வேண்டியுள்ளது. நடிகர்கள் தங்கள் முகங்களைப் பார்வையாளர்களுக்குக் காட்டும்படி இருக்கவேண்டும். நாடகத்தின் உயிர்நாடியாக நடிகர்கள் இருக்கிறார்கள். வீரத்தாய் நாடகத்தின் ஒளியமைப்பானது ஒவ்வொரு நடிகரையும் பார்ப்போர் வடிவாகப் பார்க்கக் கூடியவகையில் விதானிக்கப்பட்டது.

அரங்கானது மக்களைப் புத்தெழுச்சி கொள்ளச் செய்வதாக இருக்க வேண்டும். குறிப்பாக, 2009க்குப் பின்னரான இன்றைய சூழலில் நம் மக்களுக்கு இது மிக மிக அத்தியாவசியவமாக உள்ளது. துன்பியல் சம்பவங்களைப் பற்றிப் பேசினாலும் அதற்கூடாக மக்களை மலர்ச்சி கொள்ள வைக்க வேண்டும். மக்களை மட்டுமல்ல, ஆற்றுவோரும் மலர்ச்சி கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில் ஆடல், பாடல், பிரகாசமான ஒளியமைப்பு, மகிழ்வளிப்பு என்பன வீரத்தாய் நாடகத்தின் அம்சங்களாக உள்ளன.

பார்ப்போரை நாடகத்தின்பால் ஈர்ப்பதில் வீரத்தாய் நடிகர்களின் குரலும், உடல்மொழியும் பெரும் பங்கு வகித்தன. நாடகத்திற்கு உடல் அசைவும், குரலும் அடிப்படையான விடயங்கள். இந்த இரண்டு விடயங்களிலும் அதிக பயிற்சிகள் அவசியம். வீரத்தாய் நாடகம் பார்வையாளரின் பெரும் வரவேற்பைப் பெறுவதற்கு இந்த இரண்டு விடயங்களில் நாம் காட்டிய அக்கறையும் பயிற்சிகளும், நடிகர்களின் அர்ப்பணிப்பும் முக்கிய காரணங்கள் ஆகும்.

 பிறெஹ்ட் தன்னுடைய நாடகப் பார்ப்போரை ‘active audience’  என்று சொல்கின்றார். அதாவது, பார்ப்போர் செயல்முனைப்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும். பார்ப்போரைச் சும்மா கதிரையில் கட்டிப்போட்டு வைப்பதை அவர் வெறுக்கின்றார். வீரத்தாய் நாடக ஆற்றுகையின்போது பார்ப்போர் சிரிக்கவும், விசில் அடிக்கவும், எழுந்து நின்று கைதட்டவும், பாடகர் குழுவின் பாடலுக்கேற்ப அவர்களைத் தாளம் போடவும் செய்தமை இந்த நாடகத்துக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும். பார்ப்போர் மத்தியில் இருந்து இத்தகைய பதிற்குறிகள் எழுவது நடிகர்களை மேலும் உற்சாகப்படுத்துகின்றது. அவர்களுக்கு தன்னம்பிக்கையை வழங்குகின்றது. நடிகர்கள் தன்னம்பிக்கை பெறும்போது அவர்கள் தத்தமது படைப்பாற்றலைத் தன்னெழுச்சியாக வெளிப்படுத்துகின்றார்கள். காலம், வெளிக்கு ஏற்பத் தமது நடிப்பு உத்திகளைத் தாமாக மாற்றிக் கொள்வதற்கான துணிவையும் வழங்குகின்றது. இது நாடகம் பார்ப்போரை மென்மேலும் உற்சாகமூட்டுவதாக அமையும். பார்ப்போருக்கும் ஆற்றுவோருக்கும் இடையிலான இந்தச் சுழற்சி நாடகத்துக்கு மிக முக்கியமாக உள்ளது – அதாவது, ஒருவர் மற்றவரை உற்சாகப்படுத்துவது அல்லது தூண்டுவது.

 பிறெஹட் அவர்களின் நாடகத்தின் இன்னொரு முக்கிய அம்சம், அவர் கதாநாயகர்களை, வில்லன்களைப் படைப்பதில்லை. பாத்திரங்கள் அனைத்தும் அவரவர்க்குரிய நல்ல குணங்களையும் கெட்ட குணங்களையும் கொண்டிருப்பர். இதுவும் ஒரு அந்நியமாதல் உத்திதான். அதுமட்டுமன்றி, நடைமுறையில் மனிதர்கள் அப்படித்தான் இருக்கின்றார்கள். அதேபோன்று ஒவ்வொரு சம்பவத்தின் பின்னாலும் அதற்குரிய சாதக, பாதக விடயங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு செயலிலும் நியாயங்களும் அநியாயங்களும் உள்ளன.

இங்கு வீரத்தாய் தனது இரண்டு மகன்களுடனும் வாய் பேசாத தன் மகளுடனும் போர்ச் சூழலுக்குள் தள்ளுவண்டிலில் உணவுவிடுதி நடாத்தி வருகின்றாள். அவள் தன் பிள்ளைகளைக் கோழிகுஞ்சுகளைப் பாதுகாப்பது போன்று பாதுகாத்து வருகின்றாள். அதேநேரம், இரண்டு இராணுவ உத்தியோகத்தர்கள் சண்டைக்குப் போதிய சிப்பாய்கள் இல்லாமல், இளைஞர்களை இராணுவத்தில் சேர்ப்பதற்காகப் படாதபாடு படுகின்றனர்.

 இந்த நாடகம் போரின் கொடுமைகளையும், அது ஏற்படுத்தும் அழிவுகளையும் போருக்குள் மக்கள் படுகின்ற இன்னல்களைம் சொல்கின்றது. அத்தோடு எப்படி மக்கள் போரைத் தமக்குச் சாதமாக்கிக் கொண்டு தம் பிழைப்புகளை மேற்கொண்டனர் என்பதையும் சொல்கின்றது. தம் தேசத்தைக் காக்கும் பொருட்டு ஊரார் வீட்டுப் பிள்ளைகள் போர்க்களத்தில் சண்டையிட்டு இறந்து கொண்டிருக்க எப்படி ஒவ்வொரு பெற்றரும் தத்தமது பிள்ளைகளைப் பொத்தி வைத்துக் கொண்டிருக்க முனைகின்றனர் என்பதையும் சொல்கின்றது. அதுவும் வீரத்தாய் பாத்திரத்தின் ஊடகவே அவை சொல்லப்படுகின்றன.

இராணுவத்துக்கு ஆட்சேர்க்கும் பணியில் உள்ள இராணுவ உத்தியோகத்தர்கள் மேலோட்டமான பார்வைக்குக் கொடியவர்கள் போன்று தென்படுகின்றனர். ஆனால், அவர்கள் தேசத்துக்கான எவ்வளவு
 முக்கியமான பணியைச் செய்ய முனைகின்றனர் என்பதும் வெளிப்படுகின்றது. மனிதகுல வரலாற்றில் போர் எவ்வாறான வளர்ச்சியை ஏற்படுத்தியது என்பது பற்றியும் பேசுகின்றது.

 உண்மையில், வீரத்தாயும் அவளது பிள்ளைகளும் நாடகம் முற்றுமுழுதாக ஐரோப்பிய நாட்டில் 17ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற 30 ஆண்டுகாலப் போரை மையப்படுத்திய கதையாகும். அக்கதையானது எவ்விதத்திலும் எமது சூழலுக்கு  ஏற்பமாற்றி அமைக்கப்படவில்லை. ஐரோப்பிய, 17ஆம் நூற்றாண்டு காலகட்டக் கதையாகவே ஆற்றுகை செய்யப்படுகின்றது. அதேநேரம் இது இரண்டு நாடுகளுக்கிடையிலான சண்டையைக் கூறும் கதை. ஒரு ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்ட கதையும் அல்ல. ஆயினும் போர்ச்சம்பவங்கள் பல எமது சூழலுடன் கதையைத் தொடர்புபடுத்துவதாக அமைவது தவிர்க்க முடியாது.

அந்தவகையில், 30 வருடகாலப் போராட்டச் சூழலை அந்நியமாக நின்று அதன் நியாயங்கள், அநியாயங்களைப் பார்க்கக்கூடிய ஒரு உந்துதலை இந்த நாடகம் வழங்குகின்றது.

நாடகநெறியாளர்- கலாநிதி ஜெயரஞ்சினி ஞானதாஸ் 
(கிழக்கு பல்கலைஇ சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகம்-நாடகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர்)
நிமிர்வு சித்திரை 2017 இதழ் 


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.