ஜெனீவாக் களமும் தமிழ் மக்களும்
ஜெனீவாவை ‘திருவிழா’ என்றும் மேற்கின் நலனுக்கான ஆடுகளம் என்றும் அதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடும் உரையாடல்கள் கடந்த ஒரு மாதமாக நிகழ்ந்துள்ளன. அமெரிக்காவின் விருப்பத்திற்கு இலங்கையை ஆடவைக்கும் உத்தியின் மையமே ஜெனீவா என்று புலமையாளர்கள் உட்பட பத்தி எழுத்தாளர்கள் விமர்சித்து வருகின்றனர். இக்கட்டுரை இத்தகைய விமர்சனங்களுக்கு அப்பால் ஜெனீவாவை தமிழர் எப்படி எல்லாம் பேண வேண்டுமென கூற முயலுகிறது.
இலங்கையின் இனப்பிரச்சனையும் அதற்கான தீர்வும்
ஐ.நா.வை ஆட்டி வைக்கும் அரசுகள் இன்னும் அமெரிக்கா உள்ளடங்கிய மேற்குலகமே. ஆனால் ஐ.நா.வின் தீர்மானங்களும்இ முடிவுகளும் அதன்சட்ட திட்டங்களும் உலகிலுள்ள அனைவருக்கும் பொதுவானது. அத்தகைய பொதுவான கருத்தியலை அமுல்படுத்தும் நாடுகள் தமது நலனுக்கு உட்பட்டே பணிபுரிவன. எந்த அரசும் தனது நலநன இழந்து இன்னோர் தேசிய இனத்தையோ அரசையோ பாதுகாக்காது.
ஐ.நா.சபையின் முதலாவது தீர்மானம் 1948ஆம் ஆண்டு இஸ்ரேல்-பலஸ்தீன பாகப்பிரிவினைத் திட்டமாக அமைந்தது. அந்த தீர்மானம் 181ஐ ஏற்றுக்கொண்ட இஸ்ரேல் இன்று முழுப்பலஸ்தீனத்தையும் ஆட்சி புரிய பலஸ்தீன அரபுக்கள் அடிமைப்பட்டு வாழ்கின்றனர். அதனை யூதர்கள் அடைவதற்கு பாரிய முயற்சிகளை தனித்தும் கூட்டாகவும் நியாயமாகவும் போராடினார்கள். ஐயாயிரம் வருடமாக தோற்கடிக்கப்பட்ட யூதர்கள் 1948 இல் தமக்கான அரசை கட்டி எழுப்பினார்கள். இதற்கு யூதர்கள் மட்டும் காரணமல்ல. அவர்களது நலனும் பிரித்தானியா, சோவியத்யூனியன் உட்பட்ட வல்லரசுகளின் நலனும் ஒரே புள்ளியில் சந்திக்க யூதர்கள் முயன்று வைத்தார்கள். அதுவே யூதர்களின் வெற்றியாகியது.
இஸ்ரேலின் அமைவிடத்தின் புவிசார் அரசியல் முக்கியத்துவமும் இலங்கையூம் ஏறக்குறைய ஒன்றானது. இந்து சமுத்திரமே இலங்கையின் நிரந்தர ஈர்ப்புக்கு காரணமாகும். ஜெனீவாவில் ஈழத்தமிழருக்காக பரிந்து முயன்று போராடிய பல வெள்ளைக்கார ஐரோப்பியர் காணப்பட்டனர். இவர்களுள் தென்னாபிரிக்கா மனித உரிமை ஆர்வலரும் அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான திட்டத்தின் செயற்பாட்டாளருமான யஸ்மின் சுகா மிக முக்கியமானவர்.
ஜெனீவா வெளியரங்கில் அவரது உரையாடலானது மனிதஉரிமை மீறலாளர்களுக்கு அதிக சங்கடத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக ஜோசப் இராணுவ முகாமினது சித்திரவதைகளும் கொடுமைகளும் சார்ந்த ஆதாரங்களுடனான தகவல்கள் மிகப் பெறுமதி மிக்க விடயங்களாகும். 46 சாட்சிகளைக் கொண்டு தகவலை வெளியே தந்த யஸ்மின் சூகாவூக்கு தமிழர் வரலாற்றில் தனி இடம் கொடுக்கப்பட வேண்டும். ஜெனீவாவில் தமிழர்களது உண்மையான உழைப்பாளியாகம்இ நியாயமாக தமிழருக்காக பாடுபட்டவர்களில் ஒருவராகவும் சூகா காணப்பட்டார். ஜெனீவாவில் தமிழரையே தமிழன் நிராகரிக்கும் போது ஒரு வெளிநாட்டவராக இருந்து கொண்டு எமக்காகச் செயல்பட்டார். இவரைப் போன்றே நவநீதம்பிள்ளையின் நடவடிக்கையும் அமைந்தது.
இரண்டாவது மிக முக்கியமானவராக ஐ.நா.சபையின் மனித உரிமைக்கான உயர்ஸ்தானிகர் அல்ஹீசைன் குறிப்பிடத்தக்கவர். அவரது பிரதான கோரிக்கைகள்.
1. 30/1 தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துதல்.
2. கலப்பு நீதிமன்றத்தை நடைமுறைப்படுத்துதல்.
3. அரசியலமைப்பு உபகுழுக்களின் அறிக்கைகளில் அரசாங்கம் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்.
4. மாற்று நிலைமைக்கான நீதிப்பொறிமுறையை ஸ்தாபிப்பதற்குரிய முன்னேற்றத்தை அரசாங்கம் தாமதமாக்க முயலுகின்றது.
5. பலவந்தமாக காணமால் ஆக்கப்பட்டோர் அங்கவீனருக்கான சாசனம் இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் உடனடியாக உருவாக்க வேண்டும்.
6. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை அமைப்பதில் துரிதமாக செயல்படுத்த வேண்டும்.
7. பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்காக
• இழப்பீட்டுக்கு நடவடிக்கை எடுத்தல்
• தண்டனையை விலக்களித்தல்
• சர்வதேச பங்கேற்புடனான நீதி விசாரணையை மேற்கொள்ளல்.
• இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறலை சரிவர கையாளுதல்
• உண்மைஇ நீதி, என்பவற்றை எட்ட இலங்கை அரசாங்கம் முயலுதல் வேண்டும்.
இவ்வாறு ஹீசைனின் உரை தமிழ் மக்களுக்கு சார்பாக நியாயத்தை கோருவதாக அமைந்தது.
ஈழத்தமிழர் துரோகம் இழைத்தவரை மறந்துவிட்டு மேற்குறித்த தலைவர்களை ஆதரிப்பதும் நன்றி கூறுவதுமான நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் இதே போன்ற நபர்களை உருவாக்க உழைக்க வேண்டும். இவர்களுடனான நட்பும் நிச்சயம் ஒரு சந்தர்ப்பத்தில் அதிக சாத்தியப்பாடான விளைவுகளை தரும்.
எனவே ஜெனீவாக்களம் தொடர்ந்து தக்கவைக்கப்பட வேண்டும். நியாயம் கிடைக்கவில்லை என்பதை விட அதனை அடைவதற்கு ஆயிரம் தமிழ் தரப்புக்கள் எப்படியான உழைப்பைத் தந்தன என்பது தமிழர்களுக்கு நன்கு தெரியும். ஜெனீவாவுக்கு மாற்றுப் பொறிமுறை இல்லாத நிலையில் நீதிக்கான தமிழரின் போராட்டம் சளைக்காமல் தொடர்ந்து ஜெனீவாவில் முன்னெடுக்கப்பட வேண்டும். தமிழிரின் கோரிக்கையும் சர்வதேச நலனும் ஒன்றுகூடும் தருணத்தில் இம்முயற்சிகள் நிச்சயம் வெற்றி தரும். அந்த வகையில் எமது தரப்பு நியாயத்தை சர்வதேச மட்டத்தில் தூக்கிப் பிடித்திருக்கும் சூகா, ஹீசைன், நவநீதம்பிள்ளை போன்றவர்கள் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
கே.ரி. கணேசலிங்கம்-
நிமிர்வு சித்திரை 2017 இதழ்
Post a Comment