மாற்று வழி என்ன?தியாகதீபம் திலீபனின் 31ஆம் ஆண்டு நினைவு விழாவிலே பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் ம.சுமந்திரன் எமது உரிமைகளை வென்றெடுக்க மாற்று வழி என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார்.  இந்த கேள்வி ஆமாக சிந்திக்கப்பட வேண்டியதொன்று. இந்தக் கேள்விக்கான பதிலை கண்டு அடைவதிலேயே இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக வாழ்வதற்கான சாத்தியம் தங்கியுள்ளது.  இந்தப் பதிலை தமிழ் மக்களின் இன்றைய நிலையை வைத்துக் கொண்டு கண்டுவிட முடியாது.  இந்தக் கேள்வியின் வரலாற்றுப் பின்னணி முக்கியமானது.

இலங்கையில் தமிழ் தேசத்தின் போராட்ட வரலாற்றுப் பின்னணியை தேடி சுதந்திரம் கிடைத்த நாள் வரை பின்னோக்கிப் போகலாம். சிங்கள பேரினவாதத்தின் திட்டமிட்ட தமிழ் தேச அழிப்பை எவ்வகையான போராட்ட வழிகளினூடாக தமிழ் தேசம் தடுக்க முனைந்தது என்பதை ஆராய்வதன் மூலமே சரியான பதிலை கண்டு அடைய முடியும். அன்று தந்தை செல்வா நடத்திய சத்தியாக்கிரக போராட்டவழியில் இருந்து இன்று காணாமல் போனவர்களை தேடும் தாய்மார்களின் போராட்டவழி வரை ஆராய்வதன் மூலமே மாற்று வழி என்ன என்ற கேள்விக்கு சரியான பதிலை கண்டு அடைய முடியும்.

இலங்கையின் பெரும்பான்மை மக்களுக்கு சமமான பாதுகாப்போடும் உரிமைகளோடும் வாழ்வதற்கென தமிழ் மக்கள் சுதந்திரம் கிடைத்த நாட்களிலிருந்து முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது.  அவர்கள் ஒரு சமூகமாக முன்வைத்த கோரிக்கைகளுக்கும் அவற்றுக்கு பெரும்பான்மை அரசாங்கம் அளித்த பதில்களும் நாம் எல்லோரும் அறிந்ததே.  பல்வேறு ஒப்பந்தங்கள் பிரேரிக்கப்பட்டதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் கிழித்தெறியப்பட்டதும் நாம் அறிந்ததே.  பெரும்பான்மை அரசாங்கங்களின் துரோகங்களும் ஏமாற்றுகளும் எமது மக்களை இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழக்கச் செய்தது வரலாறு. இந்த அடிப்படை உண்மையை சிங்களவரோ தமிழரோ இலங்கையர் எவரும் நிராகரிக்க முடியாது.

இந்த நம்பிக்கை இழப்பின் விளைவுகளில் முக்கியமான ஒன்றே வட்டுக்கோட்டைத் தீர்மானம்.  தந்தை செல்வா தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி 1976 ஆம் ஆண்டு வைகாசி மாதம் பதினான்காம் திகதி தமிழருக்கு ஒரு தனிநாடு வேண்டும் என தீர்மானத்தை நிறைவேற்றினர்.  இத்தீர்மானம் வெறுமனே ஒரு அரசியல் கட்சியாலோ அல்லது அதன் தலைமைத்துவப் பதவிகளில் இருந்து சிறு கூட்டத்தவராலோ நிறைவேற்றப்பட்ட ஒன்று என்று கருதி விட முடியாது.  1977 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பாராளுமன்ற தேர்தலில் இத்தீர்மானத்தை முன்வைத்து போட்டியிட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மிகப்பெரும்பான்மையான வாக்குகளை வடக்கு கிழக்கு எங்கெனும் பெற்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமர்ந்தது.  இதுவே தமிழ் மக்கள் தனிநாட்டுக் கோரிக்கைக்கு வழங்கிய அங்கீகாரம் என எல்லோராலும் கருதப்பட்டது.  இலங்கையின் வரலாற்றிலே ஒரு சிறுபான்மைக் கட்சி தனது ஆசன எண்ணிக்கையால் தெற்கில் இருந்த தேசியக்கட்சியைத் தோற்கடித்து எதிர்க்கட்சியாக அமர்ந்தது அதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து நடந்த 1977 இனக்கலவரத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிங்களவரால் கொல்லப்பட்டனர்.  அகதிகளாக வடக்குக்கும் கிழக்குக்கும் துரத்தியடிக்கப்பட்டனர்.  பாராளுமன்றம் சென்ற தமிழ் பிரதிநிதிகள் தமிழ் மக்களுக்கு நீதி வேண்டியும், பாதுகாப்பு வேண்டியும், உரிமைகளைக் கோரியும் பல்வேறு வகைகளிலும் வேண்டிப் பார்த்தார்கள்.  சாத்வீக போராட்டங்களை நடத்திப் பார்த்தார்கள்.  அவர்களின் எந்த கோரிக்கைகளுக்கும் சிங்கள அரசாங்கம் செவிமடுக்கவில்லை.  அவர்கள் தோல்வி மேல் தோல்வி காண அதனைப் பார்த்திருந்த தமிழ் இளைஞர்கள் பாராளுமன்ற அரசியலிலும் சாத்வீகப்போராட்டங்களிலும் நம்பிக்கை இழந்து ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.  அப்பொழுதும் கூட தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளைப் புரிந்து கொண்டு அவர்கள் கேட்ட தனிநாட்டுக்கு சமமான ஒரு குறைந்த பட்சத் தீர்வைக் கூட அரசாங்கம் தரவிரும்பவில்லை.  ஏற்கனவே இருந்த மாவட்ட சபைகளுக்கு கூடிய அதிகாரங்களை வழங்க மட்டுமே அது தயாராக இருந்தது.  அதேவேளை தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்ட பூச்சாண்டியை முன்னுக்கு நிறுத்தி தமிழ் மக்கள் மீது இராணுவ அடக்குமுறைகளை ஏவிவிட்டது.

இது மேலும் மேலும் தமிழ் மக்களை தனிநாட்டுக் கோரிக்கையை நோக்கித் தள்ளியது. அக்காலகட்டத்தில் தோன்றிய பல்வேறு ஆயுதப் போராட்ட இயக்கங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இணைந்து கொண்டார்கள்.  இவர்கள் வடக்கு கிழக்கிலிருந்து மட்டும் வரவில்லை மலையகத்திலும் தெற்கிலுமிருந்து வந்தும் இணைந்து கொண்டார்கள். இந்த வரலாற்று நிகழ்வுகள் தமிழ் மக்கள் இலங்கையில் தம்மை ஒரு தேசிய இனமாக சுயஅடையாளம் செய்து கொள்ள வித்திட்டன.

ஆயுதப்போராட்ட இயக்கங்களின் வளர்ச்சி தேசிய இன உணர்வுகளை தமிழ் மக்கள் மத்தியில் வளர்க்க உதவின.  தமிழ் மக்களும் இலங்கையில் சிங்கள இனத்துக்கு சமமான சுயநிர்ணய உரிமையைக் கொண்ட ஒரு தேசிய இனம் என்ற கருத்தாக்கத்தை பரந்து படுத்தவும் விரைவாக்கவும் ஆழமாக்கவும் உதவின.  ஆனால் நாளடைவில் இந்த இயக்கங்கள் இழைத்த தவறுகளும் அதனையடுத்து நடந்த சோகவரலாறும் நாம் அறிந்ததே.

2009 ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னரும் கூட அப்பொழுது ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தமிழ் மக்கள் மீது கொண்டிருந்த இராணுவப்பிடியைத் தளர்த்த முற்படவில்லை.  அதேவேளை உலகின் பல்வேறு முற்போக்கு சமூகத்தினர் (நாடுகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புக்கள், சர்வதேச ஊடகங்கள்) இலங்கையில் நடந்தது ஓர் இனப்படுகொலை எனக் கூறின.  மகிந்த ராஜபக்ச ஒரு போர்க்குற்றவாளி எனப் பிரகடனப்படுத்தின.  அவரை சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டும் என அபிப்பிராயப் பட்டன. மகிந்த போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப் பட்டால் போரை நடத்த அவருக்கு உறுதுணையாக இருந்த அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளின் முகத்திரை கிழிந்திருக்கும்.  அது சர்வதேச சமூகத்தில் ஒரு இனப்படுகொலைக்கு ஆதரவானவர்கள் எனக் காட்டியிருக்கும். அதனைத் தடுக்க வேண்டிய தேவை இந்த மூன்று அரசுகளுக்கும் இருந்தது.

அதேவேளை மகிந்த அரசாங்கம் சீனாவுடனான உறவை மேலும் மேலும் இறுக்கமாக்கிக் கொண்டு போவதை நிறுத்த வேண்டிய தேவை அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இருந்தது.  மகிந்தவை தப்ப வைக்கவும் அதேவேளை சீனாவின் ஆதிக்கத்தை நிறுத்தவும் அமெரிக்காவும் இந்தியாவும் சேர்ந்து ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தின.  அதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு அவர்களுக்கு தேவைப்பட்டது.  ஏனெனில் சிங்கள இனவாதத்தால் பெரிதும் விரும்பப் பட்ட மகிந்தவை ஆட்சியில் இருந்து அகற்றுவது இலகுவான காரியமாக இருக்கவில்லை.  சிங்கள இனவாதத்தையும் திருப்திப்படுத்த வேண்டும் அதேவேளை மகிந்தவையும் காப்பாற்ற வேண்டும் என்ற இரட்டை இலக்கை நிறைவேற்ற 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன நிறுத்தப்பட்டார்.  அவருக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு அமெரிக்காவினாலும் இந்தியாவினாலும் அறிவுறுத்தப்பட்டது.  மைத்திரியின் அரசாங்கம் ஜனநாயக முறைகளுக்கு மதிப்பளிக்கும் என வாக்குறுதியும் வழங்கப்பட்டது.

இந்த வரலாற்றுமுக்கியத்துவம் மிக்க தருணத்தில்தான் தமிழ் மக்கள் ஒரு மாற்றுவழி பற்றி சிந்திக்கவேண்டிய தேவை எழுந்தது.  அதுவரை தமிழ்மக்கள் பேச்சுவார்த்தைகள், பாராளுமன்ற அணுகுமுறைகள், சத்தியாக்கிரகங்கள், உண்ணாவிரதங்கள் என்பவற்றை நடத்திப் பார்த்திருந்தார்கள்.  ஓர் ஆயுதப்போராட்டத்தைக் கூட நடத்திப் பார்த்திருந்தார்கள். இந்தப் போராட்டங்களில் தோல்வியடைந்திருந்தாலும் அவர்கள் அதுவரை கட்டி வளர்த்திருந்த ஒரு தேசிய இனம் என்ற அடையாளம் மட்டும் உறுதியாக இருந்தது.  இந்த அடையாளம் இருக்கும் மட்டும் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கும் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் தொடருவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உள்ளன. ஆகவே அந்த மாற்றுவழி என்பது அந்த அடையாளத்தைப் பேணவும் வளர்க்கவும் கூடிய அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

2009 ஆம் ஆண்டு தமிழருக்கென எஞ்சியிருந்த அரசியல்த் தலைமையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாற்றுவழியைத் தேடுவதற்காக எந்த விதமான முயற்சிகளையும் எடுக்கவில்லை.  அதனையடுத்து 2015 ஆம் ஆண்டு கிடைத்த சந்தர்ப்பத்திலும் அவர்கள் மாற்றுவழிபற்றி சிந்திக்கவில்லை.  மீண்டும் மீண்டும் தோல்வியடைந்த பாராளுமன்ற வழிமுறைகளுக்குள்ளே தம்மை அடக்கிக் கொண்டனர்.  தமிழ்த் தேசியத்தை வளர்க்கவும் அதன் இருப்புக்கான போராட்டத்தை தொடர்வதற்குமான மாற்றுவழியை அவர்கள் தேடவில்லை.  மாறாக மகிந்தவைக் காப்பாற்றும் சிங்கள பேரினவாதத்தின் நோக்கத்துக்கும் அதனூடக மேற்குலகினதும் இந்தியாவினதும் நலன்களை பேணுவதற்கும் துணை போனார்கள்.  அவர்களுக்கு மேற்குலகம் உறுதியளித்த “கணிசமான அளவுக்கு சமஸ்டி உரிமைகளை கொண்ட” பதிய அரசியல் அமைப்பும் அவர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை.

தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வை ஒரு வருடத்தில் பெற்றுத் தருவோம் என நடைமுறைச்சாத்தியமில்லாத வாக்குறுதிகளை தமிழ் மக்களுக்கு வழங்கி அடுத்து அடுத்த வந்த தேர்தல்களில் தமது கட்சிகளை வளர்க்கவே கூட்டமைப்பினர் முயன்றினர்.  புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் கூட அதில் சமஸ்டி இருக்கின்றது என்று தமிழ்மக்களுக்கும் அதில் ஒற்றை ஆட்சியே இருக்கிறது என்று சிங்கள மக்களுக்கும் சொல்லி ஏமாற்று அரசியலில் ஈடுபட்டனர்.  இரு இனங்களையும் ஏமாற்றும் இந்த அரசியலை விடுத்து தமிழ்த் தேசியத்தின் பக்கம் உறுதியாக நின்று தமது கோரிக்கைகளை வென்றெடுக்க அவர்களால் முடியவில்லை.  அவர்களது கோரிக்கைக்கு மேற்குலகமும் இந்தியாவும் இணங்காத நிலையில் மைத்திரி அரசாங்கத்தை முண்டு கொடுத்துக் கொண்டு இராமல் தமிழ் மக்கள் மத்தியில் சென்று அவர்கள் ஒன்றும் தரப்போவதில்லை மாற்றுவழி என்ன என்று அவர்கள் கேட்கவில்லை.

2009 ஆம் ஆண்டு எஞ்சியிருந்த அரசியல்த்தலைமையாக தமிழ்மக்களின் தேசியத்தை முன் நகர்த்திச் செல்லவில்லை.  மாற்றுவழி பற்றி சிந்திக்கவில்லை.  தோற்றுப்போன பாராளுமன்ற அரசியலையேதொடர வேண்டும் என்று நினைத்தனர்.  அந்த சமயத்தில் தமிழ் மக்களிடம் வந்து மாற்றுவழி என்ன என்று அவர்கள் கூட்டம் வைத்துக் கேட்கவில்லை.  2015 ஆம் ஆண்டு கிடைத்த சந்தர்ப்பத்தில் கூட தமிழ் மக்களிடம் வந்து மேற்குலகத்தினதும் இந்தியாவினதும் அறிவுறுத்தல்களை விளக்கி மாற்றுவழி என்ன என்று அவர்கள் கூட்டம் வைத்துக் கேட்கவில்லை.  எல்லாம் முடிந்து தாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று உணரும் தறுவாயில் தான் மக்களிடம் வந்து மாற்றுவழி என்ன என்று கேட்கிறார்கள்.  தாம் எதிர்பார்த்த அரசியல் அமைப்பு நிறைவேறப்போவதில்லை. ஒப்புச்சப்புக்கு ஒரு அரசியல் அமைப்பு நிறைவேறினாலும் அதில் தமிழ் மக்களுக்கு ஒன்றும் இருக்க சிங்கள இனவாதம் இடமளிக்கப் போவதில்லை என்ற உண்மை அவர்களுக்கு உறைக்கத் தொடங்கிய பின்னரே அவர்கள் மாற்றுவழி என்ன என்று கேட்கிறார்கள்.

இதுவரை காலமும் தமிழ்த்தரப்பிலிருந்து பெருமளவு குரல்கள் அவர்கள் செல்லும் வழி தமிழருக்கு எதையும் பெற்றுத் தராது என்று ஓங்கி ஒலித்த போதும் அவர்கள் காதுகளுக்கு அவை கேட்கவில்லை.  அந்தக் குரல்களுக்குரியவர்களை அழைத்து மாற்றுவழி என்ன என்று அவர்கள் கேட்கவில்லை. அதேவேளை அதுவரை பல்வேறு வழிகளால் தமிழ் மக்கள் கட்டியெழுப்பியிருந்த தமிழ்த்தேசியத்தை சிதைக்கும் பணியில் அவர்கள் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.  எல்லாம் முடிந்த பின் மாற்று வழி என்ன என்று கூட்டம் வைத்து கேட்கிறார்கள்.  முடிந்தால் சொல்லுங்கள் என்று சவால் விடுகிறார்கள்.  9 ஆண்டுகளாக எமது தேசவிடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்திருக்க வேண்டியவர்கள் அப்போராட்டத்தின் அடித்தளமான தேசிய இனக்கோட்பாட்டை சிதைக்கும் வேலைகளை முன்னெடுத்துவிட்டு அதே தேசவிடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க மாற்றுவழி என்ன என்று கேட்பது ஒரு வரலாற்றுத் துரோகம்.  மேலும், தாம் போகும் வழிதான் சரி என்று சொல்லிக்கொண்டு மாற்றுவழிகளைப் பற்றி சிந்திக்காமல் இருக்கிறார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டிய கூட்டமைப்பினர் தாங்களும் அதே தவறையே இழைத்துள்ளார்கள் என்பதே உண்மை.

இவ்வாறான பின்னணியில் மாற்றுவழி என்ன என்பது பற்றிய விவாதம் அவசியமாகிறது. மாற்றுவழிக்கான விவாதம் என்பது தீர்வு என்ன என்ற விவாதம் அல்ல.  தீர்வுக்கான வழி தீர்வு என்ன என்பதில் தங்கியிருக்கிறது என்பது உண்மையே.  தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய ஒரு அரசியல் அமைப்புத்தான் தீர்வு.  அந்த தீர்வை உள்ளடக்குவதாக ஒரு பிரேமையை ஏற்படுத்தும் அரசியல் அமைப்பொன்றின் முன்மொழிவை மைத்திரி-ரணில்-கூட்டமைப்பு அரசாங்கம் முன்வைத்திருக்கிறது. தமிழ் மக்கள் பேரவையும் தீர்வுக்கான ஓர் அரசியல் அமைப்பை முன்வைத்திருக்கிறது.  முதலாவது கேள்வி தமிழ்மக்கள் எந்த தீர்வை ஏற்றுக் கொள்ளப்போகிறார்கள் என்பது.  இரண்டாவது கேள்வி ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் விரும்பும் அரசியல் அமைப்பைப் பெற்றுக்கொள்ள எந்த மாற்றுவழியில் போராடுவது என்பதே.

இவற்றுக்கான விடைகள் பற்றிய நிமிர்வின் எண்ணக்கருவை அடுத்த இதழில் பார்ப்போம்.

நிமிர்வின் பார்வை
நிமிர்வு 2018 ஒக்டோபர் இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.