வியக்க வைக்கும் பனையின் உற்பத்திகள்
பாகம் 03
பனை உற்பத்திகள் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மட்டும் பெறப்படுகிறது என்பதனை ஏற்கனவே பார்த்தோம். நம் முன்னோர்கள் பதநீரிலிருந்து பனை வெல்லம் பனம்பாணி என்பன உற்பத்தி செய்து அடுத்த பருவகாலம் வரை பாதுகாத்து வைத்து பாவித்தனர். ஆனால் இன்று இதை நாம் தற்போது ஆச்சரியத்துடன் பார்க்கின்றோம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. இத்தொழில் செய்பவர்கள் குறைவடைந்தது ஒரு காரணம். இத்தொழில் செய்பவர்கள் கூடிய வருமானம் பெற முடியாத காரணத்தினால் இத்தொழிலை விடவேண்டியேற்பட்டது. மேலும், பனை மிகவும் உயர்ந்த தாவரம் என்பதால் அதில் ஏறி இத்தொழிலை மேற்கொள்வது அபாயகரமானது என்பதனாலும் இந்நிலை ஏற்பட்டது.
பனை அபிவிருத்தி சபை மூலம் பனை ஆராய்ச்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்ட பின் சிறுமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பதநீர் பதப்படுத்தப்பட்டு மூன்று மாதங்கள் வரை கெடாமல் வைத்திருந்து பாவிக்கலாம் எனக் கூறப்படுகிறது. அம்முயற்சியை மேற்கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதை விற்பனை செய்யமுடியும். பனையின் ஒவ்வொரு உற்பத்தியினதும் தரத்தை உயர்த்துவதற்கு பனை ஆராய்ச்சி நிலையம் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவது வரவேற்கத்தக்கது.
மேலும் பனை உற்பத்திகளை நோக்கும் போது பழ உற்பத்தி முதன்மையானது. இதிலிருந்து பனங்கழியினை வேறாக்கி பதப்படுத்திய பனங்களி ஒருவருடம் கெடாமல் பாதுகாக்கக் கூடியதாக உள்ளது. பனங்களியை சூரிய ஒளியில் உலர்த்தி பனாட்டு பெறப்படுகிறது. இப்பனாட்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டி பனம் பாணியுடன் மற்றும் மிளகு, சீரகம், மிளகாய் மற்றும் கறுவா, ஏலம் போன்ற வாசனைத்திரவியங்களும் சேர்த்து பாணிப்பனாட்டு செய்யப்படுகின்றது. இதுவும் நீண்டகாலம் வைத்து உண்ணக்கூடிய சுவை மிகுந்த உணவாகும்.
கள்ளு இறக்கப்பயன்படும் கருவிகள்.
பனங்களியை கோதுமை, அல்லது தினை, அரிசிமா போன்ற ஏதாவது ஒரு மாவுடன் சிறிதளவு சீனி சேர்த்து கலந்து நேரம் விட்டபின் கலவையை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக்கி கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து பனம் பலகாரம் செய்யப்படுகிறது. நம்மூர் வழக்கில் பனங்காய் பணியாரம் எனப்படும். இதை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகின்றனர்.
வெறுவேறு இடங்களில் பனங்களியை மாவுடன் கலந்து பிட்டாகவும் செய்து சாப்பிடுகின்றர். பனம் பழத்தைச் சற்று சூடுகாட்டி அதை தோல் நீக்கி நேரடியாகவும் உண்பர். இதனால் பற்களிற்கிடையில் உள்ள மஞ்சள் காவி இல்லாமற்போகும். பனங்களியிலிருந்து குடிக்கக் கூடிய பானம் தயாரித்தும் அருந்தப்படுகிறது. பனங்களி சிறந்த பிறபொருள் எதிர்ப்புச்சத்துள்ளது (Antibiotic) எனவும் ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
பனங்களி எடுத்து மீதமாயுள்ள பனம் விதைகளை பத்திரப்படுத்தி வைத்து ஐப்பசி மாத நடுப்பகுதியில் பாத்திகள் போட்டு அதில் பனம் விதைகளை பக்குவமாக அடுக்கி மூடிவிடுவர். மூன்று மாதங்களின் பின் நல்ல கிழங்கு பெறப்படும். கிழங்கினை நெருப்பில் சுட்டுச் சாப்பிடலாம். நீராவியில் அவித்தும் சாப்பிடலாம். அதுமட்டுமல்ல அவித்த கிழங்கை பத்திரமாக காயவிட்டு எடுத்து காய்ந்த ஒடியலாக 6 மாதங்கள் வைத்துப் பாவிக்கலாம். இதை “புழுக்கொடியல்” (Boiled odyal) என அழைக்கின்றோம்.
புழுக்கொடியலை சிறுசிறு துண்டாக்கி உலர்த்தி மாவாக ஆக்கி அரிதட்டினால் அரித்து தும்பை நீக்கி மாவாக எடுக்கப்படுகிறது. இதைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கலாம். தேவைப்படும் போது மாவுடன் தேங்காய் துருவல் குறித்தளவு, பனைவெல்லம் தேவையானளவு சேர்த்து நீர்விட்டு சிறுசிறு உருண்டைகளாக்கி உண்ணலாம். சில இடங்களில் இது ஒரு நேர உணவாகவும், சிலர் மாலைநேரச் சிற்றுண்டியாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
கிழங்கு முளைவரும் படங்கள்
பனங்கிழங்கினை நேரடியாகவே தோலைநீக்கி கிழித்துக் காயவிட்டு நன்றாக காய்ந்த பின் சிறுசிறு துண்டுகளாக்கி அரைத்து மாவாக்கி அரித்து தும்புகளை நீக்கி பத்திரப்படுத்தி வைத்து நீண்டகாலம் பாவிக்கலாம். இம்மாவிலிருந்து பிட்டு அவிக்கலாம். பிட்டிற்கு இலைக்கறி, நெத்தலிமீன், இறால் என்பன சேர்த்து ஒரு நேர உணவாக உட்கொள்ளலாம். நம்முன்னோர்கள் இவ்வாறு உட்கொண்டு நோய்நொடியின்றி நீண்டகாலம் வாழ்ந்தனர். இவ் உணவுப்பழக்கத்தை நாமும் மேற்கொண்டால் நீரிழிவு போன்ற நோய்களிலிருந்து நாமும் எம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
அதுமட்டுமல்ல ஒடியற்கூழ் என்னும் சிறந்த திரவ உணவு செய்து முன்னோர்கள் உண்டனர். முதலில் பயிற்றங்காய் மரவள்ளிக்கிழங்கு சிறிதளவு குத்தரிசியுடன் வெங்காயம் பச்சைமிளகாய் போட்டு அவியவைப்பர். ஒடியல் மாவை நீர்விட்டு உப்பும் சிறிதளவு சேர்த்து சிறிது நேரம் விட்டபின் எடுத்து நீரினால் கழுவி சுத்தமான துணியில் விட்டு வடித்து மாவை எடுத்து மேற்கண்ட கலவையில் சேர்த்து முசுட்டை இலை, முருங்கை இலை, கொவ்வை இலை, முல்லை இலை இவற்றில் ஏதாவதொரு இலைக்கறியினையும் சேர்த்து காய்ந்த மிளகாய், மிளகு, உள்ளி, சீரகம் என்பவற்றை தேவையானளவு எடுத்து அம்மியிலிட்டு அரைத்து இக்கலவையும் சேர்த்து உப்பு, புளி என்பவற்றை அளவுடன் சேர்த்து சிறந்த சுவையான ஊட்டச்சத்துமிக்க திரவ உணவை தயார் செய்வர். இதற்கு மீன், நண்டு, இறால், கணவாய் என்பன சேர்த்தும் சுவையை அதிகரித்து தயார் செய்வர். நம்முன்னோர்கள் இத்திரவ உணவை உற்பத்தி செய்து தமது சுற்றத்தவர்களுடன் கூடியிருந்து மண் சட்டிகளில் ஊற்றி பலா இலையைக் கோலி அதனால் மெண்டு சாப்பிடுவர் என பலநூல்கள் வாயிலாக அறிகின்றோம். இன்னும் சிலர் பனை ஓலையில் பிழா செய்து இவ் ஒடியற் கூழினைப் பருகிவந்தனர் எனவும் அறிகின்றோம். அவர்கள் பெரும்பாலும் பனை உணவுகளை விதவிதமாக உட்கொண்டு சுகதேகிகளாக ஆரோக்கியமாக வாழ்ந்தனர் என அறிகின்றோம். இன்று இவ் உணவு சிலசில இடங்களில் உற்பத்தி செய்து சாப்பிடுகின்றனர். ஒடியல் மாவில் லட்டு, பிஸ்கேற் போன்ற பொருட்களையும் உற்பத்தி செய்து சாப்பிடுகின்றனர்.
நம்முன்னோர்கள் இவ் உணவுகளை உட்கொண்டு தமது பொருளாதாரத்தையும் மேம்படுத்தி உள்ளனர் என அறியக்கூடியதாக உள்ளது. இயற்கையாக கிடைக்கும் இந்த மூலவளத்தினை நாமும் தகுந்த முறையில் பயன்படுத்தி வளமாக வாழலாம்.
அதுமட்டுமல்ல விதை முளைத்து வரும் போது அதை வெட்டிப்பிளந்தால் நல்ல சுவையான பொருள் கிடைக்கும். இது மிகவும் சுவையான ஊட்டம் மிகுந்தது. இதை “புத்தமுதம்” என புலவர்கள் கூறுகின்றனர்.
கிழங்கெடுத்த பின் விதையின் கோது சிதையாமல் இருக்கும். இதை “ஊமல்” என அழைப்பர். இவ் ஊமல் முன்பு எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டது. இக்கரியிலிருந்து Activated Carbon உற்பத்தி செய்வதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர். இவ்வாய்வு பனை ஆராய்ச்சி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டது. பனையிலிருந்து பெறப்படும் பண்டங்களினால் சில நோய்கள் குணமடைகின்றன
“கிழங்குநன் மதுரமாகும் கெட்டியாய்
மலத்தைப்போக்கும்
கழங்கமில் பிட்டு மக் காமர்கூழ்
கிருமி போக்கும்
பழத்திறள் மலங்குண்மம் போம்
பனங்கட்டியுண்டாற் கண்டு
முழங்கிய சேடங்குன்ம முதிர்ந்திட
நடக்குமண்றேன்”
இவ்வாறு பனையின் பெருமை, அதன் பயன்பாடுகள் என்பன பற்றி நாம் பார்த்துள்ளோம். மரத்தின் நுனிமுதல் வேர்வரை எவ்வித கழிவுமின்றி மக்களிற்கு பயன்படும் தாவரம் என்பது நாம் கற்றுணர்ந்ததே. இந்த பூலோக கற்பகதருவை நாமும் பயன்படுத்தி எமது உடல்நலத்தை பேணுவதோடு பொருளாதாரத்தையும் மேம்படுத்தலாம்.
இவற்றை உணர்ந்த நமது முன்னோர்கள் பதநீர் பெறல், பனங்கள்ளு என்பன போன்ற உற்பத்திகளை விடாமல் மேற்கொண்டதின் பயனாக, 19ஆம் நூற்றாண்டு காலப்பகுதிகளில் பனங்கள்ளு, தென்னங்கள்ளு என்பவற்றை தவறணைகள் அமைத்து விற்பனவு செய்து வந்தனர். இத்தவறணைகள் மதுவரி முறை என அழைக்கப்பட்டது. ஏலமிடல் நடைமுறைகள் மூலம் பணம் படைத்தவர்கள் அதை குத்தகைக்குப் பெற்று நடாத்தி தொழிலாளர்களில் உழைப்பைச்சுரண்டி பயனடைந்தார்கள் எனக் கூறப்படுகிறது. மதுவரிமூலம் அரசும் வருமானமீட்டிக் கொடுண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடரும்…
தியாகராஜா பன்னீர்ச்செல்வம்
ஓய்வுபெற்ற பனை அபிவிருத்திச் சபை அதிகாரி
நிமிர்வு 2018 ஒக்டோபர் இதழ்






Post a Comment