கொரோனாவும் உளநலனும்!- மருத்துவ நிபுணர் சிவதாஸ்

 


நோய்த்தொற்று தொடர்பான பாதிப்புக்களோடு  பல்வேறு உளப்பாதிப்புக்களையும் கோவிட்-19 சமூகத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. தொடர் ஊரடங்கு மற்றும் பொருளாதார பாதிப்புக்களை பெருமளவான மக்கள் எதிர்கொண்டுள்ள இந்த நிலையில் சிறார்கள், வயதானவர்களின் நிலைமை தான் மோசமானதாக உள்ளது.

கொரோனாவில் இருந்து தப்பிக்க சொல்லும் முக்கிய காரணங்களில் ஒன்று சமூக இடைவெளி. அதுவும் முதியவர்கள் இயன்றவரை தனிமைப்பட்டு இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். ஏற்கனவே ஓய்வுகாலங்களை தனிமையில் கழிக்கும் முதியவர்கள் இந்த கொரோனா காலத்தில் பல்வேறு உளப்பாதிப்புக்களை சந்தித்து வருகின்றனர்.

சிறார்களும் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளதால் வெளியில் சென்று விளையாடுவது கூட தடுக்கப்பட்டுள்ளது. பல நாடுகளின் அரசுகள் கொரோனாவுடன் வாழப் பழகுங்கள் என அறிவுறுத்தி உள்ளன. 

இந்தப் பின்னணியில் உளநல மருத்துவ நிபுணர் சிவசுப்பிரமணியம் சிவதாஸ் நிமிர்வுக்கு தெரிவித்த விடயங்கள் வருமாறு.  

கொரோனா பரவியமையை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட  ஊரடங்கு காலத்தில் குடும்பங்களுக்குள் நடக்கும் வன்முறை அதிகரித்துள்ளது என்ற கருத்து ஒன்று உள்ளது.  ஆனால் இக்காலங்களில் விபத்துக்கள் மற்றும் ஏனைய நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவது குறைவடைந்ததால், வீட்டு வன்முறை அதிகரித்துள்ளது என்கிற தோற்றப்பாடு தான் காணப்படுகின்றதே ஒழிய மேற்கு நாடுகள் மாதிரி இங்கே குடும்ப வன்முறைகள் அதிகரிக்கவில்லை.

என்னைப் பொறுத்தவரை கொரோனா என்கிற பொதுப் பிரச்சினையால் குடும்பத்துக்குள் ஒன்றிணைவு கூடிக் காணப்படுகிறது. மதுபாவனையும் குறைந்து காணப்படுகிறது. எமது நாட்டில் மது பாவனையுடன் இணைந்து தான் குடும்ப வன்முறை அதிகரிப்பது வழக்கமாகக் காணப்படுகிறது. இதனாலேயே மதுபாவனை குறைவடைய குடும்பவன்முறையும் குறைந்துள்ளது.

ஏற்கனவே பிரச்னைகள் உள்ள குடும்பங்களில் முரண்பாடு கூடத்தான் செய்கிறது.  ஆனால், ஏற்கனவே ஆரோக்கியமாக இயங்கி வந்த குடும்பங்கள் இப்போது மிகவும் அற்புதமாக இயங்கிக் கொண்டிருக்கிறன. அதேவேளை, குடும்பங்களுக்கிடையே முரண்பாடுகள் பெரியளவுக்கு அதிகரிக்காவிடினும்,  குடும்பங்கள் தங்களுக்கிடையே உள்ள முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்கு இதுவொரு நல்ல சந்தர்ப்பமாகும்.

எங்களது குடும்பக் கட்டமைப்புக்கள் இன்னும் சிதைந்து போகவில்லை. எங்களுடைய கலாச்சாரத்தில் குடும்பக் கட்டமைப்பு என்பது இறுக்கமானதாகவும் வலுவானதாகவும் பாதுகாப்பைத் தரக் கூடிய அரணாகவும் இன்னமும் இருக்கின்றது என்பதுதான் உண்மை.

நீண்டகாலமாக நடந்த போரில் எம் மக்களுக்கு தாங்குதிறனும் அதிகரித்துள்ளது. இதனால் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்ற தன்மையும் அதிகரித்து  உள்ளது. குடும்பம் சிதையாமல் இறுக்கமாக ஒருவரை ஒருவர் புரிந்து ஒரு தொழிற்படுகின்ற குடும்பமாக இருக்கும் குடும்பங்களில் சுனாமிக் காலங்களிலும் சரி யுத்த காலத்திலும் சரி இப்போதும் சரி பாதிப்பு குறைவாகத்தான் உள்ளது.

ஆனால், சிறுவர்கள் துன்புறுத்தப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஏனென்றால் சிறார்களால் ஒரு இடத்தில் உட்கார முடியாது. அது இது என்று அவர்களின் கவனம் மாறிக்கொண்டே இருக்கும்.  அது இது என்று பலதையும் செய்வார்கள். அதனால் பெரியவர்களுக்கும் சிறார்களுக்கும் முரண்பாடுகள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் அதிகம். இந்தச் சூழலில் பெற்றோர்கள் பொறுமையுடன் கவனமாக சிறார்களைக் கையாள்வது அவசியம்.

ஊரடங்கு அனுபவம் என்பது இந்தக் காலத்து சிறார்களுக்கு திடீரென வந்தது. இதனால் அவர்கள் பதற்றமடைவது கூடுதலாக காணப்படுகின்றது. பல பெரியவர்களுக்கும் இந்த விடயத்தை பதற்றமாக அணுகியபடியால் பெற்றோர்களின் பதற்றம் பிள்ளைகளுக்கும் கடத்தப்படுகிறது. வைரஸ் தொற்றுகிற மாதிரி அதுவும் தொற்றி விடும். பெரும்பாலான பெற்றோர்கள் நினைப்பது பிள்ளைகளுக்கு இவை தெரியத் தேவையில்லை என. ஆனால் ஆய்வுகளின் படி 2 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் ஏன் பதற்றப்படுகிறார்கள் என்பதனை உணரும் திறன் உள்ளது.  இதனால் பெற்றோர்கள் பதற்றப்படாமல் இருப்பதன் மூலம் பிள்ளைகளை ஓரளவு பாதுகாக்கலாம்.

சின்னப் பிள்ளைகளுக்கு அவர்கள் நினைப்பனவற்றை வார்த்தைப்படுத்தல் கொஞ்சம் கடினமானது. அவர்களுக்கு தங்கள் பிரச்சினையை வார்த்தைப்படுத்த கஷ்டமாக இருக்கும். நாங்களும் தெளிவில்லாமல் சொன்னால் அவர்களுக்கு விளங்காமலும் இருக்கும். அதனால் வார்த்தைப்படுத்தலை நாங்கள் கவனத்தில் எடுத்து பிள்ளைகளுக்கும் சொல்வதற்கான வெளியை ஏற்படுத்த வேண்டும். பெற்றோரும் சரியான தெளிவோடு நிலைமையை விளக்க வேண்டும். அது மிக முக்கியமானது. பிள்ளைகளுக்கு ஏற்படும் சலிப்பை எப்படிக் கையாள்வது என்பது தான் பெரிய பிரச்சினை. சலிப்பு தொடரும் போது பெற்றோர்களுடன் முரண்பாடுவார்கள். இதனால் பெற்றோர்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. சலிப்படையாமல் நாட்களை கொண்டு செல்வதற்கான நிலைமையை தோற்றுவிக்க வேண்டும்.

கொரோனா காலத்தில் பிள்ளைகளுக்கு படிப்பதற்கான நேரம் கூடுதலாக கிடைத்திருக்கிறது. படிப்பதற்கான விடயங்களும் அதிகமாக உள்ளன. ஆனால், கொரோனா நிலைமை எப்போது முடியும் என்கிற விடயம் தெரியாததால் அவர்கள் சோர்வடைகின்றார்கள். அடுத்த இலக்கு நோக்கி நகர்கிற நிலைமை இல்லை.  சலிப்பில்லாமல் கற்க தூண்டுதலும் வேண்டும். பரீட்சைகள் நடந்தால் பிள்ளைகள் இலக்கு நோக்கி கற்க தொடங்கியிருப்பார்கள்.  எமது சமூகத்தில் கல்வியை ஒரு தொடர்பாடலுக்குள்ளால் தான் இலக்கு நோக்கி நகர்த்துகிறோம். அந்த தொடர்பாடல் இல்லாததை ஏதோ ஒரு வகையில் நிவர்த்தி செய்ய வேண்டி இருக்கிறது. கல்வி, பொழுதுபோக்கு விளையாட்டு என்பவற்றை உள்ளடக்கிய ஒரு சரியான நேர அட்டவணையை பிள்ளைகளுக்கு தயாரித்து  கொடுத்து நடைமுறைப்படுத்தல் அவசியம்.

எங்கள் சமூகத்தில் பிள்ளைகளை எந்நேரமும் படி படி என்று சொல்லும் தன்மை உள்ளது. அப்போது அவர்களுக்கு சினம் ஏற்படுகின்றது. படி படி என்று சொல்லாமல் படிப்பதற்குரிய வெளியை உருவாக்க வேண்டும். படிப்பதற்குரிய நேர கால ஒழுங்குகளை திட்டமிட வேண்டும். உடற்பயிற்சிகளை செய்ய ஊக்கப்படுத்த வேண்டும். பொதுவாக இளையோருக்கு எதிர்காலம் குறித்தான நிச்சயமற்ற தன்மை காணப்படும். அந்தப் பயம் இப்போது அதிகரிப்பதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது. கூட்டுப்பிரார்தனை, தியானம் என்பவற்றுக்கூடாக அவர்கள் மனதை ஒருமுகப்படுத்த பயிற்றுவிக்கலாம்.

அடுத்தது தான் சுதந்திரமானவன். என்னை யாரும் கட்டுப்படுத்தக் கூடாது என்று நினைக்கிறவருக்கு திடீரென்று ஒரு இடத்தில் முடக்கப்படும் போது, திடீரென கட்டுப்பாடுகள் அதிகரிக்கும் போது எதிர்ப்புணர்வு ஏற்படும். அது இளையோர் என்று சொல்லக் கூடிய இளம் பருவத்தினருக்கு உரிய பிரச்சினை.  

இளவயதில் உழைத்துக் கொண்டிருப்பவர்கள் பொருளாதார ரீதியாக கடன்களை வாங்கியிருப்பார்கள். பல திட்டமிடல்களை பொருளாதார ரீதியாக செய்திருப்பார்கள்.  அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவது தவிர்க்க முடியாதது. ஆனால் இன்று நடப்பவை அவர்களது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது. ஊரோடு ஒத்தது. இவ்வாறான எண்ணங்களை உருவாக்கிக் கொண்டு இந்த நெருக்குவாரங்களை எதிர்கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். 

இன்று பல நிகழ்வுகள், கல்விச் செயற்பாடுகள் எல்லாமே இணையத் திரையூடாக வருகின்றன. இணையத்தினூடாக தங்களை வளப்படுத்திக் கொண்டு செயற்படும் சந்தர்ப்பம் இளையோருக்கு கிடைத்திருக்கிறது. அதனை ஆக்கபூர்வமாக பயன்படுத்தலாம்.

கொரோனா காலத்தில் பல நாள்கள் தொடர்பு விடுபட்டு போயிருந்த நண்பர்கள் உறவுகளுக்கு தொடர்பை ஏற்படுத்தலாம். தொடர்பாடல் சரியாக பயன்படுத்தப்படும் போது இணைப்பை ஏற்படுத்தலாம். சிறுவயதில் இருந்தே ஒருவர் பெற்றுக் கொள்ளவேண்டிய முக்கியமான ஒன்று நபர்களிடத்தில் இணைப்பை ஏற்படுத்துகின்ற திறனாகும்.  அதனை வளர்க்க முடியும். எங்கள் நண்பர்கள் வட்டம், அயலவர்கள் வட்டம், தொழில் செய்வோர் வட்டம் என நெருங்கி செயற்படும் வலையமைப்பை ஏற்படுத்தினால் எந்தக் கொரோனாவையும் கடந்து போகலாம்.

அடுத்து, ஊரடங்கு காலங்களில் முதியோர்களுக்கு சரியான தகவல்கள் போய்க் கிடைக்கின்றமை குறைவு. கொரோனா நிலைமையை சரியான முறையில் தெளிவுபடுத்தல் அவசியமாகும். இந்த கோவிட்-19 நிலைமை தொடர்பான விடயங்களை பாரதூரமாக அல்லது மிகைப்படுத்தப்பட்ட  அல்லது பூதாகரமாகப் பார்க்கின்ற தன்மையை முதியோர்களிடம் கூடுதலாக அவதானித்து இருக்கின்றேன். உடற்பயிற்சி என்கிற விடயம் முதியோர்களுக்கும் முக்கியமானது. வீடுகளில் அமைதியாக இருந்து தியானங்களை செய்யலாம். சிறார்களோடு விளையாடலாம். குடும்பத்தில் உள்ள ஏனையவர்கள் முதியோர்களுடன் நேரமெடுத்து கதைத்தல் அவசியமானது. இனிமையான பழைய நினைவுகளை மீட்டுப் பார்க்கலாம்.

நிமிர்வு 

வைகாசி- ஆனி - 2020 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.