நெகிழியை தவிர்ப்போம்: ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வோம்



இந்தியாவின் தமிழ்நாட்டை தளமாக கொண்டு இயங்கி வரும் சுற்றுச் சூழல் அமைப்பான  சூழல் அறிவோம் அமைப்பினரின் கேள்வி பதில் நிகழ்ச்சியில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் சார்ந்த கேள்விகளுக்கான பதில்களை வழங்குகிறார் சூழலியல் செயற்பாட்டாளரான தீபக் வெங்கடாச்சலம்.  

நெகிழியை (plastic) நன்முறையில் பயன்படுத்த வாய்ப்புள்ளதா?

நெகிழியை நன்முறையில் பயன்படுத்த முடியாது. நெகிழி என்றாலே சுற்றுச் சூழலுக்கு தீமையான அங்கமாக போய் விட்டது.  எப்படிப் பார்த்தாலும் தீமை தான். மறுசுழற்சி பண்ணினாலும் தீமை தான். முடிந்தவரை அதன் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டு  ஏற்கனவே இருக்கும் நெகிழிகளை பொருத்தமான மறுசுழற்சிக்கு உட்படுத்தலாம். வீதிகளை அமைக்கலாம். வீட்டு மதில்களை அமைக்க நெகிழிப் போத்தல்களை பயன்படுத்தலாம். ஆனால் இதனை ஒரு நிரந்தரத் தீர்வாகவோ முழுமையான தீர்வாகவோ எடுத்துக் கொள்வதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால், காலப்போக்கில் நெகிழியை முற்றாக ஒழிப்பதே ஒரே வழி.

வீடுகளில் அன்றாடம் சேரும் நெகிழிகளை தாவரக்கழிவுகளுடன் சேர்க்காமல்  தனியே சேகரித்து நெகிழி மறுசுழற்சி செய்யும் நிறுவனங்கள் கையில் கொடுத்தால் நல்லது. சில நிறுவனங்கள் கிலோவுக்கு பணம் கொடுத்தும் வாங்கிக் கொள்கிறார்கள். நெகிழியை எரிப்பது என்பது பெரும் சூழல் மாசுபாட்டையும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்திலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.  

நெகிழி உற்பத்தியை நிறுத்துவதற்கான வழி வகைகள் உள்ளதா? நெகிழிப் பயன்பாடே இல்லாத ஒரு நிலையை கொண்டு வர முடியுமா?

ஒரு பொருளின் உற்பத்தி என்பது பயன்பாட்டாளரின்  தேவையைப் பொறுத்ததே ஆகும். இங்கே பயன்பாட்டாளர்களுக்கு நெகிழி தேவைப்படுவதால் தான் அங்கே நெகிழியை உற்பத்தி பண்ணிக் கொண்டே இருக்கிறார்கள். உலக வணிகம் அவ்வாறு தான் தொழிற்படுகிறது. ஆனால் மக்கள் தங்கள் தேவைகளை மாற்றிக் கொள்வார்களேயானால் நெகிழி உற்பத்தியாளர்களும் தங்கள் வணிக நடவடிக்கையை மாற்றிக் கொள்வார்கள். சூழல் நேயம் மிக்க மாற்றுப் பொருள் தயாரிப்பில் ஈடுபடுவார்கள். இவையெல்லாம் எங்கள் சக்திக்கு அப்பாற்பட்டது தான். நேரடியாக போய் இவற்றை நிறுத்த முடியாது.  அப்படி நெகிழி உற்பத்தியை உடனே நிறுத்துவோமாக இருந்தால் நெகிழி தொழிற்துறையை சார்ந்து வாழ்ந்து வரும் மக்களுக்கு வேலை இல்லாமல் போகும் இதனால் சமூகத்தில் குழப்பம் ஏற்படும். தொடர்ச்சியான விழிப்புணர்வுகளுக்கு ஊடாகவே சமூகத்தில் படிப்படியாக நெகிழிப் பாவனையை குறைத்து மாற்றத்தை கொண்டு வர முடியும்.

குழந்தைகளுக்கான அணையாடை (diaper) மற்றும் பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் சுகாதார அணையாடை (sanitary napkin) வயதானவர்கள் பயன்படுத்தும் அணையாடைகள் போன்றவை இன்று சுற்றுச் சூழலில் தீங்குகளை ஏற்படுத்துகின்றன. அது பற்றி.

இது ஒரு முக்கியமான பிரச்சினை. இன்று நீங்கள் கடற்கரைகளில் பார்த்தால் கூட குழந்தைகளுக்கு   பயன்படுத்தும் அணையாடைகள் ஆங்காங்கே சிதறிக் கிடைக்கும். இவை அதிகமாக கடந்த ஐந்து வருடங்களில் சேர்ந்த குப்பைகளாகவே உள்ளன. முன்பெல்லாம் மறுசுழற்சியாக பயன்படுத்தும் துணியையே குழந்தைகளுக்கும் பயன்படுத்துவார்கள். இது பெண்களின் சுகாதார அணையாடை அவர்களுக்கு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினையாக இப்போதும் தொடர்கிறது. ஆனால் இவற்றை பாதுகாப்பான முறையில் அகற்றும் வழிமுறை செயற்படுத்தப்பட வேண்டும்.

நெகிழியை எப்படி நமது வாழ்வில் தவிர்க்க முடியும்?

முக்கியமாக திருமணமாகி புதிதாக குடி போகின்றவர்கள் தங்கள் வீட்டில் எவ்வாறு எல்லாம் நெகிழியின் பாவனையை குறைக்க முடியும் என திட்டமிட வேண்டும்.  கடந்த காலங்களில் பார்த்தால் வீட்டில் முதல் மட்பாண்டங்களும், பின் கண்ணாடி பாத்திரங்கள்,  அலுமினிய, வெண்கல பாத்திரங்களும் இருக்கும். இப்போது வீட்டில் கூடுதலாக நெகிழி பாத்திரங்கள் வீடுகளை ஆக்கிரமித்து விட்டன. அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருள்களில் அதிகம் நெகிழி மயமாகிவிட்டது.   ஆனால் இப்போதும் நெகிழிக்கு மாற்றாக என்ன வாங்கலாம் என சிறிது யோசிக்க வேண்டும். எல்லாவற்றுக்குமே எங்களிடம் மாற்று இருந்தது. கண்ணாடிப் பொருள்களை பாதுகாப்பாக பயன்படுத்தினால் நல்லது. ஆனால் அவை உடைந்தாலும் மீள் சுழற்சிக்கு பயன்படுத்த முடியும்.

மக்கும் நெகிழி உருவாக்கியுள்ளதாக சொல்கிறார்களே? அது சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லையா?

மக்கும் நெகிழி என்று சொல்வதே ஒரு வியாபார தந்திரம் தான். இரண்டு விதமான மக்கும் நெகிழிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒன்று கரும்பு சக்கைகள் மூலமும் ஏனைய தாவர பகுதிகள் மூலமும் உருவாக்கப்படுகிறது. மற்றையது சாதாரண நெகிழியை வேறு பொருள்களோடு கலந்து மக்கும் நெகிழியாக கொண்டு வருகிறார்கள். சாதாரண நெகிழி மக்க நூறு வருடங்கள் ஆகும் என எடுத்துக் கொண்டால், மக்கும் நெகிழி என்று சொல்லப்படும் நெகிழி மக்குவதற்கு  நான்கு வாரங்கள் ஆகலாம். இரண்டையுமே நீங்கள் எடுத்து சாக்கடையிலோ நீர்நிலையிலோ போட்டால்  அதுவும் போய் நீர்நிலைகளை அடைத்துவிடும். இதுவும் அதே தான். உணவுச் சங்கிலியில் உள்ள உயிரினங்கள் உண்டாலும் நிச்சயமாக இரண்டுமே பாதிப்பை தான் ஏற்படுத்தும். மக்கும் நெகிழியை அதற்கான சூழல் வெப்பநிலை உள்ள இடங்களில் மட்டும் தான் மக்க வைக்க முடியும். இது இப்போதுள்ள பிரபலமான வியாபாரத் தந்திரம் என்று தான் சொல்ல முடியும்.

நாங்கள் நெகிழி பயன்பாட்டைத் தவிர்ப்பது மட்டும் தான் இன்று மாற்றாக இருக்கும்.   காய்கறி, பொருள்களை வாங்கும் போது துணிப்பைகளை பயன்படுத்துவது தான் மாற்றாக இருக்க முடியும்.  மக்கும் நெகிழிகள் என்று சொல்லப்பட்டாலும் அவை சார்ந்த கழிவுகள் திரும்ப திரும்ப உருவாகிக் கொண்டே இருக்கும். திரும்ப திரும்ப நெகிழிக் குப்பைகளை உருவாக்கும் செயற்பாட்டை நிறுத்த வேண்டும்.

குப்பை மேடுகளின் அமைப்பை பார்த்தால் அடியில் மண் இருக்கும், நடுவில் குப்பை இருக்கும் மேலே சூரிய ஒளி படும். ஒரு பொருள் மக்குவதென்றால் மண், நீர், சூரிய ஒளி மூன்றும் அவசியம். ஆனால் பொதுவாக குப்பை மேடுகளில் இந்த மூன்றில் ஒரு காரணி கிடைக்காது. ஆகவே நெகிழி கலந்து இருக்கும் குப்பை மேடுகள் சூழலை வெப்பமாக்கும் பசுமை வாயுக்களை வெளியிடும் இடமாக இருக்குமே ஒழிய அவை நெடுங்காலத்துக்கும் மக்காது என்கிற உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்.



நெகிழி ஓர் அறிமுகம்

நெகிழி என்பது, கச்சா எண்ணையில் இருந்து பெறப்படும் ஒரு செயற்கை பொருள். மேலும், எளிதில் மக்கும் தன்மை கொண்டது அல்ல. நெகிழி கண்டுபிடிப்பதற்கு முன்னர், இயற்கை வளங்களிலிருந்து பெறக்கூடிய சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு உபயோகப்படுத்தப்பட்ட நெகிழிப் பொருளும், எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், நீண்ட காலம் பூமியில் நிலைத்திருக்கிறது. நெகிழி உபயோகத்தினால், உயிரினங்களுக்கு மரபணு பாதிப்புகள் ஏற்படுதல், நீர்நிலைகள் மாசுபடுதல், மற்றும் நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டு மழைநீர் நிலத்துக்குள் ஊடுருவது தடுக்கப்படல் என்று பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒரு முறை மட்டும் உபயோகித்து தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருட்கள் பெருமளவில் கடலை சென்றடைகின்றன.  அவை கடல்வாழ் உயிரினங்களின் சூழலை மாற்றியமைக்கிறன்றன. கடல்வாழ் உயிரினங்களின் உணவுச் சங்கிலிக்குள்ளும் நெகிழிகள் உள்வாங்கப்படுகின்றன. அதனால் அவற்றின் உடல் மாசுபடுகிறது. அவ்வுயிரினங்களை உண்பதனூடாக மனிதர்களின் உடல்களுக்குள்ளும் நுண்ணிய நெகிழித் துகள்கள் பரவலடைகின்றன. அவை மனிதர்களுக்கு பலவித நோய்களை தோற்றுவிக்கின்றன.

நெகிழி இன்று நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் ஒன்றாக திகழ்கிறது. காய்கறி பொட்டலங்கள், பால் கொள்கலன்கள், துணிக்கடைகள், மருந்துக்கடைகள், மின்னணு சாதனங்கள், மளிகை பொருட்கள், தேனீர் கடைகள், வாகனப் பொருட்கள், உணவுப் பொருட்கள் போன்ற எண்ணற்ற முறைகளில் நெகிழியின் பயன்பாடு அதிகமாக உள்ளது. ஆனால் இவை உபயோகப்படுத்தப்படும் நெகிழியின் தீமைகள் பற்றி யாரும் சிந்திப்பது இல்லை. குறைந்த விலையில் நெகிழிப் பைகள் கிடைப்பதாலும் வசதியாக இருப்பதாலும் மக்கள் அவற்றை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

பசு, நாய் போன்ற கால்நடைகள், மற்றும் வனவிலங்குகள் போன்றவை உணவுடன் நெகிழியையும் சேர்த்து உட்கொள்வதால் உணவுக் குழாய் அடைப்பாட்டினால் அவை துன்புறவும், மரணமடையவும் ஏதுவாகிறது. மேலும் வீட்டிலிருந்து தூக்கியெறியப்படும் நெகிழிப் பொருட்கள் மண்ணின் (உயிர்வேதியியல்) தன்மையைப் பாதிக்கின்றன.

நெகிழியால் செய்யப்பட்ட குடிதண்ணீர்ப் புட்டிகள், குளிர்பானப்  புட்டிகள்  போன்றவை எக்காலத்திலும் அழியாது. இவைகள் சாக்கடைகள் போன்ற இடங்களில் அடைத்து கொண்டு பல இன்னல்களை ஏற்படுத்துகின்றன. நெகிழிப் பைகள் மற்றும் தூக்கி எறியப்பட்ட நெகிழிப் பொட்டலப் பொருட்கள் மழை நீர் ஊடுருவி நிலத்தடி சென்றடைய இடையூறாக உள்ளன.

நம் அன்றாட வாழ்வில் தூக்கியெறியப்படும் பிரிக்காத குப்பைகளினால் நுளம்புகளால் பரவும் கொடிய நோய்கள் உருவாக காரணமாகிறது. நெகிழி உறைகளால் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட, உணவு பொருட்களால் உடலுக்கு பல ஊறுகள் விளைகின்றன. நெகிழிப் பைகளால், கழிவு நீரில் தேக்கம் ஏற்பட்டு புதிய நோய்கள் பரவவும், சுகாதாரக் கேடு உருவாகவும் ஏதுவாகிறது.

மக்கள் பண்டைய காலங்களில் இருந்து வாழை இலையில் சாப்பிடுவதையும் துணிப்பைகளில் தாம்பூலத்தை தருவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்கள். மட்பாண்டங்கள், பித்தளைப் பாத்திரங்கள், வெள்ளிப் பாத்திரங்கள் போன்றவற்றையே தண்ணீர் சேமித்தல், நீர் அருந்துதல், போன்றவற்றுக்கு பயன்படுத்தினர். ஆனால்,தற்போது பிளாஸ்டிக் மோகத்தில் இயற்கை வாழை இலைக்கு பதிலாக நெகிழித் தட்டுகள், நெகிழிக் குவளைகள், நெகிழி  கரண்டிகள் போன்ற எண்ணற்ற வடிவங்களில் செயற்கையை நாடிச் செல்கின்றனர். ஆனால் நெகிழியால் உருவாக்கப் படும் பொருட்கள் அனைத்தும் வேதிமுறையில் தயாரிக்கப்பட்டவை. அந்த பொருட்களை உணவு முறைகளில்  நாம் பயன்படுத்தும் போது நம் உடலில் தேவையற்ற கொடிய வேதிப்பொருட்கள் சேர்கின்றன. இதனால் புற்று நோய் உட்பட பல  வியாதிகள் உருவாகின்றன. மேலும் இது வளரும் நமது சந்ததியினரையும் வெகுவாகப் பாதிக்கிறது.

நெகிழி மக்குவதற்கு ஆகும் காலம்

நெகிழிப் பைகள்                           (100-1000 ஆண்டுகள்)

நெகிழிப் பஞ்சுக் கழிவுகள்       (1-5 மாதங்கள்)

காகிதம்                                             (2-5 மாதங்கள்)

தோல் காலணி                               (25-40 ஆண்டுகள்)

அணையாடைகள்                       (500-800 ஆண்டுகள்)


நெகிழிப் பாவனையை குறைக்க...

மளிகைப் பொருட்கடை, துணிக்கடை, மருந்து கடை, மின்னணு சாதனக் கடை போன்ற இடங்களுக்கு செல்லும் போது தனியொரு சேமிப்பு துணிப்பையை வைத்துக் கொள்ள வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட மற்றும் நெகிழியால் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும்.

அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தப்படும் நெகிழித் தட்டுகள், குவளைகள் மற்றும் ஏனைய நெகிழி சார்ந்த பொருட்களை தவிர்த்தல் வேண்டும்.

நெகிழி உள்ளடங்கிய பொருட்களை திறந்தவெளிகளில் எரித்தல் கூடாது நெகிழியின் மறுசுழற்சி, மறு பயன்பாடு

நெகிழிப் புட்டிகள், நெகிழிப் பைகள்,  வணிக நெகிழிக் குப்பைகள், மளிகை பொருட்கள் அடைக்கப்பட்ட நெகிழிப் பைகள் போன்றவைகளை உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது.

இப்பொருட்களை மீண்டும் மறுசுழற்சி செய்தல் பெருமளவுக்கு பயனளிக்காததாக உள்ளது. ஒரு நெகிழிப் பையின் சராசரி பயன்பாட்டு நேரம் வெறும் 20 நிமிடம் மட்டுமே ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலம் பல நூற்றுக் கணக்கான ஆண்டுகள்.

கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90% நெகிழி சார்ந்த பொருட்களே காணப்படுகின்றன. இது நெகிழிப் பொருட்களை மறுசுழற்சி செய்வதில் மனிதகுலம் தவறி விட்டதைக் காட்டுகிறது. தற்போது உற்பத்தி செய்யப்படும் நெகிழியில் வெறும் 7% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது.

அனைத்து வணிகர்களும், பொதுமக்களும் தமக்கென நெகிழி தவிர்ப்பு முறைகளை வைத்துக் கொள்ள வேண்டும்.  நெகிழியை தவிர்க்க முடியும் என்ற எண்ணம் எல்லாத் தரப்பினரிடமும் உருவாக வேண்டும்.

நெகிழியை தவிர்ப்பது விவசாய நிலம், மணல்,  நீர்நிலைகள், விலங்கினங்கள், சுற்றுச்சூழல் மேம்பாடு அடைதல், தட்பவெப்ப நிலையை சமன்படுத்துதல் போன்றவைகள் மூலம் நம் நாடு தூய்மையாகவும், பசுமையாகவும் இருக்க உதவும்.

நெகிழி இல்லாத தேசமாக எமது பிரதேசங்களை மாற்றுவோம் என ஒவ்வொரு குடிமகனும் உறுதிமொழியை எடுத்துக் கொள்ளுதல் அவசியம்.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப் பொருட்களுக்கு மாற்றாக இயற்கையில் கிடைக்கும் மக்கும் தன்மை கொண்ட பொருட்களை பயன்படுத்தி நெகிழி இல்லா உலகை உருவாக்குவோம்.

தொகுப்பு : தருராசன் 

கார்த்திகை 2022 நிமிர்வு இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.