ஆசிரியர் பார்வைதமிழ்மக்களுடனான யுத்தம் முடிந்து எட்டுஆண்டுகளாகின்றன. அவ்வாறனஅழிவு மீண்டும் இலங்கையில் ஏற்படாமல் எல்லா இனத்தவரும் சமாதானமாக வாழ அரசாங்கமும் சர்வதேசசமூகமும் யாப்பு மாற்றம் உட்பட நிரந்தர தீர்வுக்கான பொறிமுறைகளை விவாதித்து வருகின்றன.  இக்காலகட்டத்தில் தமிழ் மக்களின் நோக்குநிலையில்இருந்து நடுநிலையாக விடயங்களைஆராய்ந்து எழுத வேண்டிய சூழலில் இப்பத்திரிகையின் தோற்றம் அவசியமாகிறது.
தமிழ் மக்களின் தொலைநோக்க தேசிய அரசியல் மற்றும் சமூக மாற்றம் பற்றி விவாதிப்பதனூடாக எம் மக்கள் உண்மையில் எப்படியான தீர்வை விரும்புகின்றார்கள் என்பதனை கிராமிய மட்டங்களில் இருந்து நிதர்சனமாக கண்டுணர்ந்து  வெளியே கொண்டு வரும் நோக்கில் தான் இப்பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மாதமொரு முறை வெளிவர இருக்கும் இப்பத்திரிகை தேவையைப் பொறுத்து மாதம் இரு முறையாக அதிகரிக்கப்படும்.
உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தையும் தாண்டி அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் என துருவமயப்பட்டுக் கொண்டு வரும் புதிய உலக அரசியல் சூழலில் இலங்கைத் தமிழ் மட்டுமல்லாமல் உலகளாவிய தமிழ் இனத்தின் பாத்திரத்தையும் இருப்பையும் உறுதி செய்யும் ஒரு புதிய ஒழுங்கமைப்பை நோக்கி நகர்வதனை இலக்காக இப்பத்திரிகை கொண்டிருக்கும். எமது வரலாற்றைத் தொட்டுக் கொண்டு அந்த வரலாற்றுப் படிப்பினைகள் எதிர்காலத்தில் எவ்வாறு பிரயோகிக்கப்பட வேண்டும் என்பதனை நோக்கியும் தனது பார்வையை நிச்சயம் செலுத்தும்.
இன்றைய சூழலில் தமிழ் மக்களின் நிமிர்வின் அவசியத்தை சொல்வதும்; அந்நிமிர்வு எவ்வகையான ஜனநாயக வழிமுறைகள் ஊடாக அடையப்படலாமெனவும், அந்நிமிர்வு எப்படிப் பலமானதாக இருக்க வேண்டும் என்றும் அந்த நிமிர்வின் சாதக பாதக பின்விளைவுகள் என்னவென்று ஆராய்வதும், அதில் பாதகமான விடயங்களை களைவதற்கு என்ன செய்யலாம் என்பதனை ஆராய்தலும ;தான் இப்பத்திரிகையின் நோக்கம்.
தொலைதூர எதிர்கால உலகை எதிர்வுகூறி அவ்வுலகுக்கேற்ற தமிழ் மக்களுக்கான கருத்துருவாக்கமும், அறிவுத்தேடலும் இங்கே நிகழவேண்டும் என விரும்புகின்றோம். இப்பத்திரிகை மூலம் தமிழ் மக்கள் எப்படியான தீர்வை விரும்புகிறார்கள், எந்த வழியில் செல்ல ஆசைப்படுகிறார்கள், எந்த எல்லை வரை தங்களின் நியாயமான மக்கள் போராட்டங்களை கொண்டு செல்ல போகிறார்கள், என்பதனை பல்வேறு தரப்பினரும் விவாதிக்க இப்பத்திரிகை ஒரு களம் அமைத்துக் கொடுக்கும். அந்தவகையில் தமிழ் இனத்தின் எதிர்கால முன்னேற்றம் தொடர்பாக உங்கள் தரப்புவாதங்களை விவாதிக்க எல்லோரையும் அன்பு கொண்டு அழைக்கிறோம்.
செ.கிரிசாந்-
நிமிர்வு மாசி 2017 இதழ் 


 
No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.