இராஜதந்திரப் போர்


ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் தமிழ்மக்களுக்கான பேரம் பேசும் சக்தி இல்லாமல் போய்விட்டது. போர் நிறைவுக்கு வந்த கடந்த எட்டு ஆண்டுகளில் எதுவுமே இடம்பெறவில்லை. ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் இராஜதந்திரப் போர் ஆரம்பமாகி விட்டதாகப் பிரகடனம் செய்து விட்டார்கள். இராஜதந்திரப் போராட்டமெனும் போது முதலில் என் பலம், பலவீனம் அறிய வேண்டும். எதிர்த் தரப்பின் பலம், பலவீனம் அறிய வேண்டும். போதிய தகவல்களைத் தமக்குள் உள்வாங்கியிருக்க வேண்டும். அந்தத் தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் புலனாய்வுத் தகவல்களைப் பெறுவதற்கொரு கட்டமைப்புக் காணப்பட வேண்டும். இவற்றையெல்லாம் உள்ளடக்கிய சரியான கணிப்புப் பொறிமுறை காணப்பட வேண்டும். இவை எதுவுமில்லாமல் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதனை எவ்வாறு இராஜதந்திரப் போராட்டமெனக் கூற முடியும்? உள்நாட்டு யுத்தம் இலங்கையில் நிறைவுக்கு வந்த பின்னர்  இராஜதந்திரப் போர் ஆரம்பமாகி விட்டதாகத் தமிழ்த் தலைமை கூறுவது முற்றுமுழுதான பொய். இனியும் அந்தப் பொய்யைச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என  பிரபல அரசியல், சமூக ஆய்வாளர் ம. நிலாந்தன் தெரிவித்தார்.

தமிழ்மக்களின் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் 'சிங்கள பௌத்தத் தலைமைகளின் இராஜதந்திரத்தை வெற்றி கொள்ளும் திறன் தமிழ்த்தலைமைகளுக்கு உண்டா?” எனும் தலைப்பிலான கருத்துரையும் கலந்துரையாடலும்  கடந்த வைகாசி மாதம் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் யாழ் .குப்பிளான் அறிவொளி சனசமூக நிலைய மண்டபத்தில் தமிழ்மக்களின் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையத்தின் இணைப்பாளர் இன்பம் தலைமையில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் இராஜ்ஜியப் பாரம்பரியத்தை இரண்டு தடங்களில் நாங்கள் நோக்க வேண்டும். இலங்கை அரச தரப்பின் இராஜ்ஜியப் பாரம்பரியம், தமிழ்த் தரப்பின் இராஜ்ஜியப் பாரம்பரியம் என்பவையே அவையாகும். அரசு தரப்பின் இராஜ்ஜியப் பாரம்பரியம் என்பது ஒரு அரசுடைய தரப்பின் இராஜ்ஜியப் பாரம்பரியம். தமிழ்த் தரப்பின் இராஜ்ஜியப் பாரம்பரியம் எனப்படுவது ஒரு காலகட்டத்தில் அரசுடைய தரப்பாகவும்; பின்னர் இடைப்பட்ட ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் ஒரு சிவில் நிர்வாகத்தை நிர்வகித்து நவீன காலத்தில் மீண்டும் அரசற்ற தரப்பாக மாறியுள்ள ஒரு தரப்பின் வரலாறு. அதிலும் அகண்ட தமிழ்ப் பரப்பு என வரும் போது பேரரசுகளை நிர்வகித்து பக்தி இலக்கியங்களைப் படைத்த ஒரு நீண்ட பாரம்பரியமுடைய ஒரு இனத்தின் இராஜ்ஜியத் தொடர்ச்சி அமைந்துள்ளது.

இலங்கை அரசு தரப்பின் இராஜதந்திரப் பாரம்பரியம் மிகவும் செழிப்பானது என மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு தனது நூலொன்றில் குறிப்பிடுகிறார். அவருக்குமப்பால் மிகச் சிலர் தான் இலங்கையின் இராஜதந்திரப் பாரம்பரியம் தொடர்பில் எழுதியிருக்கிறார்கள்.  அரசுத் தரப்பு  இராஜதந்திரத்துக்கு எல்லா வளங்களும் காணப்படும். ஏனைய நாடுகளுடன் அரசுக்கும் அரசுக்குமிடையிலான கட்டமைக்கப்பட்ட உறவு நிலை காணப்படும். நீண்ட தொடரான இராஜதந்திரப் பாரம்பரியத்தை உடையவர்களாக இலங்கை அரச தரப்பின் இராஜதந்திரப் பாரம்பரியம் அமைந்துள்ளது.

இலங்கை அரசு தரப்பின் இராஜதந்திரப் பாரம்பரியத்தை எடுத்து நோக்கினால் இலங்கை அரசு  இந்து மகா சமுத்திரத்தில் இந்தியப் பேரரசுக்குக் கீழே அமைந்துள்ளது. உலகின் முக்கிய கடல்வழிப் போக்குவரத்துப் பாதையாகக்  காணப்படுகின்ற சூழலுக்குள் இலங்கை அமைந்துள்ளது. "இலங்கைத் தீவு அழகானது, ரம்மியமானது. ஆனால், இலங்கை மக்கள் தங்களுக்கருகே காணப்படும் ஒரு பெரிய பனிப்பாறை என்றோ ஒரு நாள் உருகித் தங்களை மூழ்கடித்து விடும் என்ற அச்சத்துடனேயே காணப்படுகிறார்கள்" எனப் பிரபல அரசியலாளரொருவர் கூறியுள்ளார். பனிப்பாறை என்று அவர் இந்தியப் பேரரசையே கருதினார். இந்தியப் பேரரசின் மீதான அச்சமும், அதனால் உண்டாகிய விழிப்பும் தான் இலங்கை அரச தரப்பின் இராஜ்ஜியப் பாரம்பரியத்தின் அடிச்சட்டமாக அமைந்து காணப்படுகிறது.

தலதா மாளிகைக்குள் சென்று புத்தரின் புனித சின்னங்களைக் கவர்ந்து சென்றதுடன்  பௌத்தத்தைத் தோற்கடித்து வடக்கு, கிழக்கில் மறுபடியும் சைவத்தை ஸ்தாபித்ததும் இந்தியா தான். ஆனால், பௌத்தமே இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று தான். அண்மையில் இலங்கையின் தென்பகுதியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது முதலில் இந்தியாவே உதவிக்கு வந்தது. இவ்வாறான அனர்த்தங்களின் போது முதலில் உதவிக்கு முன்வருவதும் இந்தியா தான்.  ஜே. வி.பி கிளர்ச்சியின் போதும் அவர்கள் தான் உதவிக்கு வந்தனர். எனவே இந்தியாவின் செல்வாக்கு வலயத்திற்குள், பாதுகாப்பு வியூகத்திற்குள் தான் இலங்கை அமைந்துள்ளது.

இந்தியா தொடர்பான அச்சம் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையூடாக நோக்கும் போது ஒரு பிரதான விவகாரமாக அமைந்துள்ளது. நவீன காலங்களில் வேறு வேறு அச்சங்களும் உருவாகி விட்டன. ஆனால், இது இலங்கைக்கு மாத்திரமே உரித்தான அச்சமல்ல. பிராந்தியப் பேரசுகளுக்கு அருகிலேயோ, உலகப் பேரரசுகளுக்கு அருகிலேயோ அமைந்திருக்கும் சிறிய நாடுகள் எல்லாவற்றிற்கும் இவ்வாறான அச்சங்கள் இருந்து கொண்டே தானிருக்கின்றன. இந்து மகா சமுத்திரத்தின் மத்தியில் இலங்கை அமைந்துள்ளமையால் அது தொடர்பான அச்சத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை. இந்தியப் பேரரசுக்கு அருகில் அமைந்துள்ள சிறிய நாடாகக் காணப்படுவதால் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையும், இராஜதந்திர நடவடிக்கையும் தற்காப்பு உணர்வுடன் எப்பொழுதுமிருக்கும்.

யானையும், சிங்கமும் வாழும் காட்டில் நரி எவ்வாறு உயிர் வாழ்கிறது? தந்திரத்தால் தான் அது வாழ்கிறது. இலங்கைத் தீவின் இராஜதந்திரப் பாரம்பரியமும் அவ்வாறு தான்.  அவர்கள் வளையும் மட்டும் வளைந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள். வளைய மாட்டோம் முறிவோம்  என அவர்கள் ஒருபோதும் சொல்லியதில்லை.  கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மகிந்த ராஜபக்~ வீழ்வாரா இல்லையா? என்ற அச்ச உணர்வு காணப்பட்ட அந்த இரவு வேளையில் தற்போதிருக்கும் அரச தலைவர் ஒரு தென்னந்தோப்பில் ஒழிந்திருந்தார். இங்கு ஒரு இராணுவப் புரட்சி இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் இருந்தது. அதற்குரிய எல்லா சாத்தியக்கூறுகளும் இலங்கையிலிருந்தன. ஆனால், அவ்வாறான எந்தவொரு சதிப் புரட்சியும் இடம்பெறாமலேயே ஆட்சி மாற்றம் சுமூகமாக நிகழ்ந்தது. இலங்கைத் தீவுக்குள்ள கவர்ச்சிகளில் அதுவுமொன்று எனக் குறிப்பிடுவார்கள்.

ஆனால், அந்தச் சந்தர்ப்பத்தில் மகிந்த ராஜபக்~ சகோதரர்கள் தாங்கள் வளையமாட்டோம் முறிவோம் என முடிவெடுத்திருந்தால் நிலைமை வேறு. ஆனால், அவர்கள் வளைவதெனவே முடிவெடுத்தார்கள். இதன் மூலம் தங்களையும் காப்பாற்றிக் கொண்டார்கள். இலங்கை அரசின் மீது சுமத்தப்பட்ட போர்க்குற்றச்சாட்டுக்களிலிருந்து அரசையும் பாதுகாத்துக் கொண்டனர். இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டத் தேர்தல்களுக்கும் தயாராகி விட்டார்கள். முறியமாட்டோம்....வளையப் போகிறோம் என வீராப்புக் காட்டுவார்கள். ஆனால், உரிய வேளையில் மிகவும் வளைந்து கொடுப்பார்கள். இது தான் இலங்கை இராஜ்ஜியப் பாரம்பரியத்தின் மரபாகவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச இந்தியப் படைகளை அனுப்பும் விவகாரத்தில் கூட அவ்வாறு தான் செயற்பட்டார்.

அதனை விட முக்கியமானவராக முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன காணப்படுகின்றார். அவர் இறுதிவரை இந்தியாவிற்கு அடங்கிப் போவதில்லை என விடாப்பிடியாக நின்றார். ஆனால், இலங்கையில் தமிழர் பிரதேசங்களில் இந்தியாவால் உணவுப் பொதிகள் விமானத்திலிருந்து போடப்பட்ட பின்னர் அவர் அடங்கிப் போகும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறார். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் இணைந்து கலந்து கொண்ட பத்திரிகையாளர் மாநாடொன்றின் போது இந்தியாவை மன்னிப்பேன். ஆனால், மறக்க மாட்டேன் என ஜே. ஆர். ஜெயவர்த்தனா கூறியிருந்தார். ஒரு விடயத்தை நாங்கள் மன்னித்து விட்டால் மறந்தும் விட்டோம் என்று தான் அர்த்தம். ஆனால், ஜே. ஆர். ஜெயவர்த்தனா இவ்வாறு கூறியுள்ளதன் அர்த்தமென்ன?  தன்னை நோக்கி வீசப்பட்ட ஒரு வாளை பூமாலையாக அவர் ஏந்திக் கொண்டார். இதன் மூலம் தமிழர்களுக்கு உதவுவது போல வருகை தந்த இந்தியாவைத் தமிழர்களுடன் மோத விட்டார். இந்தியா  தமிழர்களை ஒரு கருவியாகக் கையாண்டு இந்தச் சிறு தீவினுள் நுழைய முற்பட்டது. அது வல்லரசுகளுக்கிடையேயான பனிப்போர்க் காலம். ஜெயவர்த்தனா அமெரிக்காவுக்குச் சார்பாகவிருந்தார். இந்தியா சோவியத் நாடுகளின் சார்பாகவிருந்தது. எனவே, ஜெயவர்த்தனவை வழிக்கு கொண்டு வருவதற்குத் தமிழ்மக்களுடைய அரசியலைக் கையாள வேண்டிய தேவை இந்தியாவிற்கிருந்தது.

எங்களுடைய இயக்கங்களை அழைத்து இந்தியா பயிற்சி வழங்கியது. வளங்களையும் வழங்கியது. இதன் மூலம் ஊக்குவித்து வளர்க்கப்பட்ட தமிழர்களுடைய ஆயுதப் போராட்டம் ஒரு கட்டத்தில் இலங்கை அரசாங்கத்தால் தானாக அடக்கமுடியாததொரு வளர்ச்சியை அடைந்தது. மேற்குச் சார்பு நாடுகள் அனைத்திடமிருந்தும், குறிப்பாக தென்னாபிரிக்கா, இஸ்ரேல் உட்பட அனைத்து நாடுகளிடமிருந்து உதவிகளைப் பெற்றும் அடக்க முடியவில்லை என்ற நிலை வந்த போது ஒப்பரே~ன் லிபரே~ன் தாக்குதல் நடவடிக்கைக்கு அவர்கள் வியூகம் வகுத்தார்கள்.  ஒப்பரே~ன் லிபரே~னில் வடமராட்சி வீழ்ச்சியுறும் காலகட்டத்தில் இந்தியா உணவுப் பொதிகளுடன் நாட்டிற்குள் பிரவேசித்தது.

அந்த உணவுப் பொதி போடும் காட்சி வரையும் ஒரு மேற்கின் விசுவாசியாக, இந்தியாவிற்கு வீரம் காட்டும் ஒரு தலைவராகக் காணப்பட்ட ஜெயவர்த்தனா அந்தக் கணத்திலேயே தரையொட்ட வளைந்தார். ஆனால், அவர் முறியவில்லை. வளைந்து கொடுத்து உணவுப் பொதிகளுடன் வந்த இந்தியாவை  அரவணைத்தார். அரவணைத்து அடுத்த கட்டமாக இந்தியாவையும், புலிகள் இயக்கத்தையும் மோதவிட்டார்.


சிங்கள இராஜ்ஜியப் பாரம்பரியத்தை விளங்கிக் கொள்வதற்கு ஜெயவர்த்தனா ஒரு சிறந்த வகை மாதிரி.  அவர் தான் மேற்கின் நண்பன். மேற்கின் உதவி பெற்றேன் என்றெல்லாம் சிந்திக்கவில்லை. நானொரு மேற்கத்தைய பாரம்பரியத்தில் வந்தவன், மேற்கினால்  வளர்க்கப்பட்டவன்  என்றெல்லாம் அவர் சிந்திக்கவில்லை. தான் ஒரு முதலாளித்துவக் கட்டமைப்பிலிருந்து உருவானவன் எனவும் சிந்திக்கவில்லை.  நாங்கள் ஒரு அரசு. இன்னொரு அரசிற்கு வளைய மாட்டோம் என வீரம் காட்டவுமில்லை.  அனைத்து வீரப் பிரகடனங்களையும் உணவுப் பொதிகளுடன் கைவிட்டார். அவ்வாறு கைவிட்டுவிட்டு முழுமையாக இந்தியாவிடம் சரணடைந்தார்.

அடுத்த கட்டமாக இந்தியாவையும், தமிழ்மக்களையும் எவ்வாறு மோதவிடலாம் என்பதை அவர் மிகவும் வெற்றிகரமாக முன்நகர்த்தினார். ஜெயவர்த்தனா விட்டுச் சென்ற முதுசத்தைத் தான் இன்று வரை சிங்கள மக்கள் அனுபவித்து வருகின்றனர். எதிர்மறையாகத் தமிழ்மக்கள் அனுபவித்துக் கொண்டிருப்பதும் அதுதான். தமிழ்மக்களை அவர் முழு அளவிலான இந்திய விரோத நிலைக்குக் கொண்டு வந்து விட்டார். மிகத் தந்திரமாகக் காய்களை நகர்த்தினார்.

எந்த இந்தியாவிற்கு முன்னால் வீரம் காட்டிக் கொண்டு நின்றாரோ  அந்த இந்தியாவின் கால்களில் விழுந்தார். சிங்களத் தலைவர்கள் தாங்கள் எப்போதும் முறியமாட்டோம் என வீரம் காட்டுவார்கள். ஆனால், உரிய நேரத்தில் வளைந்து சரணடைவதன் மூலம் தங்கள் காரியத்தைச் செயற்படுத்துவார்கள். அவர்கள் காரியத்தை அடுத்த கட்டம் நகர்த்தும் நோக்கிலேயே அவ்வாறு வளைந்து கொள்கிறார்கள். இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திரப் பாரம்பரியம் எனப்படுவது அப்படியாகத்தான் இருந்து வந்துள்ளது. அவர்கள் எப்போதுமே வளைந்து கொடுத்துச் சுதாகரித்துத் தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள்.

ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில் பிராந்தியத்தில் ஒரு துருவ இழுவிசையும், வெளியில் இரண்டு இழுவிசைகளும் காணப்பட்டன. இந்த நிலையில் பிராந்திய இழுவிசை என்பது வெளியிலிருந்த இழுவிசையின் பிரதிபலிப்புத் தான்.

ஈழத்தமிழர்கள் நடாத்திய யுத்தம் என்பது பனிப் போரின் ஒரு அங்கம் தான். நாங்கள் நடத்தியது அமெரிக்காவினுடையதும், சோவியத் யூனியனினதும் யுத்தத்தைத் தான். அது சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்குமிடையிலான மோதலாகத் தோன்றினாலும் அவ்வாறில்லை. சோவியத் குடியரசுக்கும், அமெரிக்கக் குடியரசுக்குமிடையிலான யுத்தத்தையே நாங்கள் நடத்தினோம். ஜெயவர்த்தனவின் மருமகனின் தற்போதைய காலகட்டத்தில் மூன்று துருவ இழுவிசைகளுக்குள் இலங்கை சிக்கியிருக்கிறது.  சீனா என்ற பிராந்தியப் பேரரசு உலகின் ஆகப் பெரிய பொருளாதாரமாக எழுச்சி பெற்று விட்டது. உலகம் முழுவதும் தன் நிதியுதவிகள் மூலம் தன் பிரசன்னத்தைப் பேணிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா அனைத்து இடங்களுக்கும் படைகளை அனுப்பியது. சீனா அனைத்து இடங்களுக்கும் முதலாளிகளை அனுப்பியது. அமெரிக்கா படைத்தளங்களைப் பேணித் தன்னுடைய பிரசன்னங்களை உறுதி செய்து கொண்டது.  சீனா முதலீட்டின் மூலமும், வரையறையின்றி உதவுவதன் மூலமும் நக்குண்டார் நாவிழந்தார் எனும் நிலைமைக்குச் சிறிய நாடுகளைத் தள்ளுவதன் மூலம் சிறிய நாடுகளைத் தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்தது. சிறிய நாடுகளின் யுத்தங்களில் அந்த நாடுகளின் அரசுகளை ஆதரிப்பதன் மூலமும் அல்லது அந்த நாடுகளுக்கு வேண்டிய உட்கட்டுமானங்கங்களைக் கட்டியெழுப்பும் போது நிதி ரீதியாகவும், வள ரீதியாகவும் உதவுவதன் மூலமும், துறைமுகங்களை விருத்தி செய்வதன் மூலமும், துறைமுகங்களுக்கு அருகில் விமான நிலையங்களை விருத்தி செய்வதன் மூலமும் சீனா நிதி ரீதியாக உலகத்தைத் தனது வலைப்பின்னலுக்குள் கொண்டு வந்து விட்டது.

ஆரம்பகாலகட்டத்தில் ஏசியா பசுபிக் என்று தான் ஒரு பிராந்தியம் அழைக்கப்பட்டது. ஆனால், தற்போது அது இந்தோ பசுபிக் என்று அழைக்கப்படுகிறது. இந்த வார்த்தை அவுஸ்ரேலியரொருவரால் உருவாக்கப்பட்டது. ஆனால், இதனை அமெரிக்கா தனக்கு வசதியாகப்  பயன்படுத்த ஆரம்பித்து விட்டது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஜப்பான், பசுபிக் கடல், அவுஸ்ரேலியா உட்படச் சீனாவையும் இணைக்கும் வகையிலானதொரு பாதுகாப்பு வலயம் முன்பு இருந்தது. இந்த நிலையில் இந்தோ பசுபிக் என்று சொல்லும் போது இந்தியாவும் அதற்குள் உள்வாங்கப்பட்டு விட்டது. இதனால், வலுச் சமநிலை மாறும். ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்குள் சீனாவும், அமெரிக்காவும் இருந்தன.  இந்தோ பசுபிக் எனும் போது இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், அவுஸ்ரேலியா என்பன வருகின்றன.   பூகோளப் பங்காளிகளாக இந்தியாவும், அமெரிக்காவும் இணையும் போது இந்த வலுச் சமநிலைகள் அமெரிக்காவிற்குச் சார்பானதாக மாறும். தற்போது இந்தப் பிராந்தியத்தை இந்தோ பசுபிக் என்ற கட்டமைப்பிற்குள் கொண்டுவருவதற்கு அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான மாநாடு கடந்த ஆண்டு சிங்கப்பூரில் இடம்பெற்ற போது அந்த மாநாட்டில் பங்குபற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதற்குப் பெருமளவிற்குச் சாதாகமாகப் பதிலளிக்கவில்லை. இந்தோ பசுபிக் மூலோபாயத்தின் படி உலகின் மிக நீண்ட கடற் பாதுகாப்பு வலயமாக அது அமையும்.

அமெரிக்காவின் கடற்படைத்தளங்களில் அறுபது வீதமானவை இந்த ஆண்டுக்குள் அந்தப் பிராந்தியத்திற்குள் வந்து விடும். ஒரு புறம் தென் சீனக் கடலை உரிமை கோரும் சீனா அங்கே செயற்கைத் தீவுகளை உருவாக்கி அந்தச் செயற்கைத் தீவுகளைப் படைத்தளங்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றது. இன்னொரு புறம் அமெரிக்கா இந்தோ பசுபிக் வலயத்தை உருவாக்குவதாகக் கூறிக் கொண்டு இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவையும் கூட்டுச் சேர்த்துக் கொண்டு ஒரு துருவ இழுவிசையைத் தீவிரமாக்குகிறது. இந்த முத்துருவ இழுவிசைகளிற்குள் தற்போது இலங்கைத் தீவு சிக்கியிருக்கிறது. இதனை எவ்வாறு கையாள்வது என்பது சிங்கள ஆட்சியாளர்களுக்கொரு சவால். இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. ஒரு புறம் சிங்களத் தலைவர்கள் நிம்மதியாக உறங்கமாட்டார்கள் எனும் நிலை காணப்பட மறுபுறம் அவர்கள் இன்னும் கூர்மையாகச் சிந்திக்கிறார்கள்.

சீனாவுக்கு அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை, கோப் சிற்றி ஆகியவற்றை ஏற்கனவே கொடுத்துள்ள நிலையில் சீனா தென்சீனக் கடலில் மட்டும் செயற்கைத் தீவுகளை உருவாக்கவில்லை. கொழும்பில் துறைமுகத்தைப் பெரிதாக்கிக் கடலை மூடி ஒரு மாதிரி நகரை உருவாக்கி இலங்கையின் நிலப்பரப்பையே சீனா செயற்கையாக அதிகரித்துள்ளது. அதனை இப்போது நிதி நகர் என்கிறார்கள். அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைச் சீனா அபிவிருத்தி செய்து வருவதுடன் அதிலிருந்து மத்தள விமான நிலையத்தை இருபது நிமிடங்களிற்குள் அடையக் கூடிய வகையில் வீதிகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.  சீனா அதனுடைய முத்துமாலைத் திட்டத்தின் படி பாகிஸ்தான் உட்பட இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் அமைத்திருக்கும் அனைத்துத் துறைமுகங்களிற்கும் இவ்வாறான துறைமுக மற்றும் விமானத்தள வசதிகளுண்டு. இவை வெளித் தோற்றத்திற்கு நிதி முதலீடுகளாகத் தோன்றலாம். உட்கட்டுமான அபிவிருத்திகளாகத் தோன்றலாம். ஆனால், யுத்த நடவடிக்கைகளின் போது திடீரென இராணுவத் தேவைகளுக்கென அவற்றை மாற்றக்  கூடிய நெருக்கமான இடங்களில் அவை அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கம் வேறு விதமாகச் சிந்திக்கிறது.


சீனாவை முழுமையாக அகற்ற முடியாத அளவுக்கு ஒரு பொருளாதாரக் கட்டமைப்பு வலையின் கீழ் உலகம் முழுவதும் தற்போது காணப்படுகிறது. இது ஒரு பொருளாதார யதார்த்தம். சீனாவையும் வைத்துக் கொண்டு இந்தியாவையும், அமெரிக்காவையும் கையாள்வதன் மூலம் தங்கள் பேரத்தை இலங்கையின் ஆட்சியாளர்கள் தக்க வைப்பதற்கு முயற்சிக்கிறார்கள். இந்தச் சிறிய தீவு மூன்று வல்லரசுகளும் சண்டையிட்டுப் பெற்றுக் கொள்ளும் ஒரு அப்பமாக மாற்றிவிடக் கூடாது என அவர்கள் சிந்திக்கிறார்கள். அவர்கள் முன்னாள் ஜனாதிபதிகளான ஜெயவர்த்தனாவிடமிருந்தும், மகிந்த ராஜபக்~விடமிருந்தும் பாடங்களைக் கற்றிருக்கிறார்கள். சீனாவை அமைதிப்படுத்த வேண்டிய தேவை இலங்கைக்கிருக்கிறது. சீனாவைக் கோபத்துக்குள்ளாக்கினால் அது மீண்டும் மகிந்த ராஜபக்சவை உருவேற்றும்.
அனைத்து வல்லரசுகளின் சமநிலையையும் பேணுவது அவசியம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் சீனா, இந்தியா, அமெரிக்கா என்ற மூன்று துருவ இழுவிசைகளுக்குமிடையில் ஒரு சமநிலையைப் பேண எத்தனிக்கிறது. யார் பக்கமும் முழுமையாகச் சாயாமல் அவர்கள் முடிவெடுக்க முயற்சிக்கிறார்கள்.


இந்தியா பலாலி விமானத்தை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கையிடம் கோரிக்கை விடுத்திருந்தது. பலாலிக்கு அருகில் மயிலிட்டிக் துறைமுகம் அமைந்துள்ளது. மன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்குமிடையில் ஒரு கடற் பாதை கேட்டது. திருகோணமலையில் எண்ணெய்க் குதங்களைக் கேட்டது. எல்லாவற்றிற்கும் தருவோம் தருவோம் என்று கூறிக் கொண்டே அவர்கள் காலம் கடத்துகிறார்கள். சிலவற்றை வழங்குவதற்கு முன்வந்த போதும் சிலவற்றை வழங்குவதற்குப் பின்னிற்கிறார்கள். நூறு எண்ணெய்க்குதங்களில் ஐம்பது எண்ணெய்க்குதங்களைத் தருவோம் என்று குறிப்பிடுகிறார்கள். அவ்வாறு ஐம்பது எண்ணெய்க்குதங்கள் வழங்கப்பட்டால் துறைமுகமும் அவர்களிடம் தான் போய்ச் சேரும். யாரிடம் எண்ணெய்க்குதங்கள் வழங்கப்படுகிறதோ அவர்களுக்குத் தான் துறைமுகமும் வழங்கப்பட வேண்டும்.

நவீன இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர மரபில் ஜெயவர்த்தனவின் மருமகனான ரணில் விக்கிரம சிங்க ஜெயவர்த்தன எதிர்நோக்கியதை விடவும் புதிய துருவ இழுவிசைகளைச் சந்தித்து வருகிறார். அவர் ஜெயவர்த்தனா, மகிந்த ராஜபக்~ ஆகிய இரு தலைவர்களிடமும் கற்றுக் கொண்ட அனுபங்களின் அடிப்படையில் முப்பெரும் இழுவிசைகளையும் சமாளித்துக் கொண்டு போகும் ஒரு இராஜ்ஜியக் கொள்கையை முன்னெடுத்துள்ளார். இலங்கைத் தீவின் அரச இராஜதந்திரப் பாரம்பரியம் எனப்படுவது செழிப்பானது.  அதனைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். அது எல்லா வளங்களையுமுடைய ஒரு அரசுடைய தரப்பின் இராஜதந்திரம்  இது தொடர்பில் சிந்திப்பதற்கும், தகவல்கள் சேகரிப்பதற்கும் பல செயற்பாட்டாளர்கள் காணப்படுவார்கள். அரசுடைய தரப்பின் இராஜதந்திரப் பாரம்பரியம் வளையும் வரை வளையும். ஒரு நாளும் முறியாது. தன் காரியமாகும் வரை வளையக் கூடிய சிங்கள இராஜதந்திரப் பாரம்பரியம் ஒரு போதும் முழுவளவிலான வீரத்தைக் காட்டாது.

அரசுடைய தரப்பின் இராஜதந்திரப் பாரம்பரியம் இறந்தகாலத்திலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டமையை பின்னணியில் வைத்து நோக்கும் போது அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்~ குடும்பத்திலிருந்து கோத்தபாய ராஜபக்~ தேர்தலில் போட்டியிடுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. அவர் ஊடகங்களுக்கு வழங்கி வரும் பேட்டிகள் ஒவ்வொன்றிலும் இந்தியாவிற்கு ஒரு செய்தியைச் சொல்லுகிறார். தங்களை விடவும் தற்போதைய அரசாங்கம் தான் சீனாவிற்குக் கூடுதலான வகையில் விட்டுக் கொடுப்புக்களைச் செய்துள்ளது எனக் குறிப்பிடுகிறார். தாங்கள்  ஆட்சியிலிருந்த காலகட்டத்தில் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை விடவும் தற்போது தான் அதிகளவிலான பாதிப்புக்கள் ஏற்படுவதாகக் குறிப்பிடுகிறார்.  “நாங்கள் தான் உங்களுக்குக் கூடுதலான நன்மைகள் செய்துள்ளோம். நீங்கள் தவறாக நினைத்து எமது ஆட்சியைக் கவிழ்த்து விட்டீர்கள்” என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார். நான் அறியக் கூடிய வகையில் அவர் இது தொடர்பாக மூன்று பேட்டிகள் வழங்கியுள்ளார்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரெம்ப் தெரிவாகிய போது அவரைப் போன்ற அரசியல் சாரா தொழிலதிபர்கள்  அரசியலுக்குள் வர வேண்டும் என கோத்தபாய ராஜபக்~ கூறியிருந்தார். அவரும் ஒரு அரசியல் சாரா தொழில் வாதி. டொனால்ட் ட்ரெம்ப்பைப் போலவே சிறுபான்மை மக்களைப் பாதிக்கக் கூடிய வகையில் முடிவுகளை எடுக்கும் ஒரு அரசியலை மனதில் வைத்து அவர் அவ்வாறு கூறியிருக்கலாம். எதுவானாலும் மகிந்த ராஜபக்~வின் குடும்பத்திலிருந்து ஒருவர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராக முடியும். ராஜபக்~ குடும்பத்தில் போர்க் குற்றச்சாட்டு சுமத்தப்படாத நாமல் ராஜபக்~ போன்றவர்கள் காணப்படுகின்றனர். நாமல் போன்றவர்களை அனைத்துலக ரீதியாகப் போர்க் குற்றச் சாட்டிற்குள் கொண்டு வர முடியாது. ராஜ்பக்~ குடும்பம் சிங்கள மக்களுக்குப் பெற்றுக் கொடுத்த வெற்றி சாதாரண வெற்றியல்ல. பல ஆண்டுகளுக்கு நினைவு கூரப்படும் ஒரு வெற்றியாக இந்த வெற்றி அமைந்துள்ளது. எனவே, அந்த வெற்றியின் வாரிசாக, போர்க் குற்றச்சாட்டிற்குள் வராத இளைய ராஜபக்~க்கள் அடுத்து வரும் தேர்தல்களில் களமிறங்க முடியும்.

இறந்த காலத்திலிருந்து ராஜபக்~க்கள் பாடம் கற்றுக் கொள்ளாவிட்டாலும்  இலங்கைத் தீவின் ராஜ்ஜியக் கட்டமைப்பு அவர்களுக்கு வழி காட்டும். இதன்படி அவர்கள் தாம் முன்னைய காலங்களில் விட்ட தவறுகளை இனிமேல் விடுவதில்லை என முடிவெடுத்தால் அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் நிலைமை மேலும் பயங்கரமாக மாறும். கடந்த காலங்களில் தாம் கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் சிங்களத் தலைவர்களும், கொள்கை வகுப்பாளர்களும் முடிவுகளை மாற்றுகிறார்கள். இந்த விடயத்தில் அவர்கள் மாறிகள். மாறிலிகளல்ல. ஆனால், தமிழ்மக்களின் உரிமைகள் சம்பந்தப்பட்ட விடயத்தில் அவர்கள் எப்போதும் மாறிலிகளாகவேயுள்ளனர். இந்த விடயத்தில் அவர்கள் இறந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்றதாகத் தெரியவில்லை. தமிழ்மக்களின் உரிமைகளை மறுக்கும் விடயத்தில் அனைத்து ஆட்சியாளர்களுமே மாறிலிகள் தான். ஆனால், இராஜதந்திர முடிவுகளைப் பொறுத்தவரை அவர்கள் மாறிகள். நிலைமைக்கேற்ப சுதாகரிக்கிறார்கள். சரணடைகிறார்கள். விட்டுக் கொடுக்கிறார்கள். வளைந்து கொடுக்கிறார்கள். இவை இலங்கை அரசு தரப்பின் இராஜதந்திரப் பாரம்பரியம்.

இலங்கையில் தமிழ்ப்பரப்பின் இராஜதந்திரப் பாரம்பரியம் எனப்படுவது பல நூற்றாண்டு கால வரலாறு. தமிழ்மக்களின் இராஜதந்திரப் பாரம்பரியம் தொடர்பாக வெளிவந்த எழுத்து ஆவணங்கள் மிகவும்  குறைவு. தமிழில் பேரரசுகள் தோற்றம் பெற்றிருக்கின்றன. இந்தப் பேரரசுகள் பிரமாண்டமான ஆலயக் கோபுரங்களை அமைத்துள்ளன. ஆனால், இந்தப் பேரரசுகள் ஏனைய அரசுகளுடன் பேணிய உறவுகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்கான ஆவணங்கள் போதுமானதாகவில்லை. தமிழின் எழுச்சிக் காலம் பக்தி இலக்கியக் காலமாக  அமைந்துள்ளது. இது தொடர்பான எழுத்து ஆவணங்கள்  காணப்படுகின்றன. ஆனால்,  எமது இராஜதந்திர மரபைக் காட்டும் விதத்தில் எங்களிடம் ஆவணங்களில்லை.  எப்போதுமே ஆவணப்படுத்தல், தொகுத்தல் போன்ற விடயங்களை அந்தத்தக் காலகட்டத்தில்  மத நிறுவனம் அல்லது  அரசு நிறுவனம் மேற்கொள்ள வேண்டும். நிறுவனமயப்படுத்தலூடாகவே ஆவணப்படுத்துவது இலகுவானதாக அமையும்.  ஆனால், தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்குப் பின்னரான தற்போதைய காலகட்டத்தில் தனியார்களும், செயற்பாட்டாளர்களும் இத்தகைய செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் நிலைமை மாறிவிட்டது.

இந்திய இராஜதந்திரப் பாரம்பரியத்தில் கேரளர்கள் செலுத்தியது போன்ற செல்வாக்கைத் தமிழ்மக்கள் செலுத்தவில்லை. தமிழக மக்கள் இந்திய மத்திய அரசைத் தங்களுடையதாகக் கருதாமையே இதற்கான காரணமெனச் சொல்லப்படுகிறது. இதனால், தமிழ்மக்களால் இராஜதந்திரத் துறையில் அதிகளவு பிரகாசிக்க முடியவில்லை. சிறியளவானோரே இந்தத் துறைக்குள் பிரகாசித்திருக்கின்றனர்.  தமிழர் தரப்பில் இந்தத் துறையில் கற்றுத் தேர்ந்தவர்களின்  தொகை மிகவும் குறைவாகவுள்ளது என்பதே யதார்த்தம். இன்றைய காலகட்டத்தில் இராஜதந்திரத் துறையை விரும்பிக் கற்பவர்களின் தொகை மிகவும் குறைவாகவுள்ளது. எங்களுடைய பெற்றோர்களும் இதற்கான ஊக்குவிப்புக்களை வழங்கவில்லை. இதுவொரு சங்கடமான நிலைமை. எங்களுடைய புலம்பெயர்ந்த பரப்பில் கூட இது தொடர்பாக எங்களுடைய பிள்ளைகள் ஊக்குவிக்கப்படவில்லை.  ஆகவே, நவீன காலகட்டத்தில் கூட  தமிழகத்திலும், ஈழத்திலும் எங்களுடைய இராஜதந்திரப் பாரம்பரியம் செழிப்பானதாக அமையவில்லை.

ஈழத்தின் ஆயுதப் போராட்ட காலத்தை எடுத்து நோக்கினால் தனித்தனி ஆளுமைகள் துலங்கியவளவிற்கு இராஜ்ஜியவியல் என்பது நிறுவனமயப்படுத்தப்பட்டிருக்கவில்லை. கடந்த-38 ஆண்டு காலமாகப் போராடிய எமது மக்கள் போதியளவு அறிவாராய்ச்சி மையங்களை உருவாக்கத் தவறி விட்டனர். குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய சிந்தனைக் குழாத்தினரும் எம்மத்தியில் காணப்படவில்லை. ஒரு செழிப்பான இராஜ்ஜிய மரபை உருவாக்குவதற்கு சிந்தனைக் குழாத்தினர் காணப்பட வேண்டும். சிந்தனைக் குழாத்தினர் காணப்பட்டால் அறிவாராய்ச்சி மையங்களும் காணப்பட வேண்டும். அரசியல் அதிகமாக அறிவுபூர்வமாக உள்வாங்கப்பட வேண்டும்.  அவ்வாறெனில் தான் ஒரு இராஜதந்திர மரபை உருவாக்க முடியும். இராஜதந்திரவியல் என்பது ஒரு பரந்து அகன்ற துறை. அந்தத் துறைக்குள் பல்வேறு ஒழுக்கங்கள் வந்து கலக்கும். தற்போது இராஜதந்திரவியல், வெளிநாட்டுக் கொள்கை போன்ற துறைகள் மேற்கத்தையப் பல்கலைக் கழகங்களில் பீடங்களாகி விட்டன. எங்களுடைய பல்கலைக் கழகங்களில் இந்தத் துறைகள் இன்னமும் ஆரம்பமாகவே இல்லை.

தமிழ் இராஜதந்திரப் பாரம்பரியம் பலவீனமாக இருப்பதற்கு அரசியல் வாதிகளும், இயக்கங்களும் மாத்திரம் பொறுப்பல்ல. எங்களுடைய அறிவியல் குழாமும் பொறுப்பு. எங்களுடைய ஊடகவியலாளர்கள் பொறுப்பு. இயக்கங்கள் மீது அதிக விமர்சனங்களை முன்வைத்த தமிழ் மிதவாதிகளே ஒரு சிந்தனைக் குழாத்தினரை உருவாக்கவில்லை, அவர்களிடம் ஆராய்ச்சி மையங்களும் காணப்படவில்லை. இராஜதந்திர மரபு தொடர்பில் அவர்கள் அறவே சிந்திக்கவில்லை. தற்போதும் பூகோள அரசியல் தொடர்பில் கதைத்தால் அது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரின் அகராதியில் மாத்திரம் தான் காணப்படுகிறது எனச் சிலர் நம்புகிறார்கள். அவ்வாறு நம்பியே சில பத்திரிகைகள் ஆசிரியர் தலையங்கம் எழுதுகிறது. பூகோள அரசியல் என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பகிடியாக நினைக்கும் ஒரு கூட்டம் எம்மத்தியில் காணப்படுகின்றனர்.  பூகோள அரசியல் என்பது பகிடியல்ல. அதுவொரு உயிர் நிலை வார்த்தை. ஈழத்தமிழர்களின் பேரமாகவும், பலமாகவும் எங்களுடைய புவிசார் அமைவிடமே விளங்குகிறது. இந்தப் பேரத்தின் ஊடாகவே ஈழத்தமிழர்கள் தங்களுடைய கனவுகளை அடைய முடியும். இவ்வாறிருக்கையில் பூகோள அரசியலை நாங்கள் ஒரு கட்சித் தலைவருக்கு மாத்திரமே உரியதாகப் பார்க்கிறோம். இவ்வாறிருக்கையில் எமது ஊடகங்கள் மற்றும் அறிவியல் சூழல்கள் எவ்வாறு ஒரு செழிப்பான இராஜ்ஜியப் பாரம்பரியத்தை உருவாக்கும்?


மிகவும் அறிவு பூர்வமானதொரு விடயத்தை, பல்துறை சார் ஒழுக்கத்தை நாங்கள் விளையாட்டாகப் பிரகடனம் செய்து விட்டு கடந்த காலங்களை வீணாகக் கழித்து விட்டோம். தமிழ் இராஜதந்திரம் எனப்படுவது மிகவும் பலவீனமானதொரு பாரம்பரியத்தையே கொண்டுள்ளது. ஈழத்தமிழ் மக்கள் அதிகம் கற்றுத் தேற வேண்டியதொரு துறையாக இராஜதந்திரவியல் காணப்படுகிறது. எனவே,  இது தொடர்பாக ஆழமாகச் சிந்திப்பதற்கும், அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் சிந்திப்பதற்கும் தமிழ்மக்கள் தயாராக வேண்டும். சிங்களவர்கள் பெரும்பான்மை இனம். நாங்கள் சிறுபான்மை இனம். அவர்கள் அரசுடைய தரப்பு. நாங்கள் அரசற்ற தரப்பு.  அவர்கள் வென்ற தரப்பு. நாங்கள் தோற்ற தரப்பு. அவர்களுடைய தலைவர்கள் அவர்களுக்காக  எதையும் செய்யத் தயாராகவிருக்கிறார்கள். ஆனால், எங்களுடைய தலைமைகள் எங்களுக்காக எதனையும் செய்யத் தயாராகவில்லை.  இவ்வாறான பல்வேறு பின்னணிகளுக்கு மத்தியில் பல நூற்றாண்டுகளாக வளர்ச்சி பெற்ற அனைத்துலகப் பலம், வளம் என்பவற்றுடன் செழித்து வளர்ந்து காணப்படும் சிங்களப் பாரம்பரியத்துக் கெதிராக நாங்கள் போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்குள் இருந்து கொண்டிருக்கிறோம்.

எங்களுக்குப் பலமான புலம்பெயர்ந்த மக்களும், பலமான தமிழகமும் காணப்படுகிறது. தமிழகத்தில் இராஜதந்திரத் துறையில் கற்றுத் தேர்ந்த பல ஞானிகள் காணப்படுகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுக் களைத்தோ, சலித்தோ  பழுத்த அனுபவத்துடன் பலர் புலம்பெயர் தேசங்களில் வசிக்கிறார்கள். அவர்களின் அறிவைத் தமிழ்மக்களின் நன்மைக்காகப் பயன்படுத்த எம்மவர்கள் முன்வர வேண்டும். தற்போதைய அரசியல் சூழலில் தமிழ்மக்களின் அரசியல் பேரம் எனப்படுவது இரண்டு வழிமுறைகளில் காணப்படுகின்றது. ஜனநாயக வழிமுறையான தேர்தல் மூலம் மக்கள் ஆணையைப் பெற்ற தலைவர்கள், இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் கீழ் இருப்பதான புவிசார் அமைவிடம் என்பனவே தற்போது தமிழ்மக்களின் பிரதான பலமாக அமைந்துள்ளன. அந்தப் பலமுணர்ந்து தமிழ்மக்களின் அரசியலை முன்னெடுப்பதாயின் அது முழுமையாக அறிவுபூர்வமானதாக அமைய வேண்டும். வெறும் தேர்தல் வேட்கை கொண்ட வாக்கு வேட்டை அரசியலுக்கூடாகத் தமிழர்களின் அரசியலை நகர்த்துவதால் பயனேதுமில்லை.

ஆகவே, தமிழ்மக்கள் தங்கள் பலம் எது? பலவீனம் எது? என அறிந்து அந்த அடிப்படையில் தங்களைப் பலப்படுத்த வேண்டிய காலகட்டத்திலிருக்கிறார்கள். அனைத்துலக மட்டத்தில் முத்துருவ இழுவிசைகளுக்கிடையில் போட்டி அதிகரித்து வரும் நிலையில் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் சர்வதேச அளவில் மீண்டும் உயர்வடைந்து வருகிறது. இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்மக்களுக்கான முக்கியத்துவமும் அதிகரித்து வருகிறது. இவ்வாறான நிலையில் தமிழ்மக்கள் எடுக்கும் முடிவுகள் தான் இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தைத் தீர்மானிக்கும். எனவே, போருக்குப் பின்னரான தற்போதைய காலகட்டத்திலும் இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தை வைத்து நோக்கினால் தமிழ்மக்கள் மிகுந்த பலமுடைய தரப்புத் தான். ஆனால், அந்தப் பலத்தை உணர்ந்து பயன்படுத்தும் நிலையில் எங்கள் தலைவர்கள் உண்டா? எனவும் அவர் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

தொகுப்பு - செல்வநாயகம் ரவிசாந்- 

நிமிர்வு ஆனி 2017 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.