தேசியத்தின் குறியீடு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்திருக்கும் விவகாரம் வடக்கில் பெரும் கொந்தளிப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான அறிக்கையின் அடிப்படையில், இரு அமைச்சர்களை பதவி விலகுமாறும், இருவரை கட்டாய விடுமுறையில் செல்லுமாறும் முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளை புறம்தள்ளி அவருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டமையே தமிழ்மக்களின் கொந்தளிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.
இலங்கை உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியான விக்கினேஸ்வரன் வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு ஒரு இலட்சத்து 32,255 விருப்பு வாக்குகளை பெற்று வடமாகாணசபையின் முதலமைச்சராக 2013 இல் பதவியேற்றிருந்தார். கடந்த நான்கு வருடங்களாக பெரிதாக அதிகாரங்கள் எதுவும் அற்ற வடமாகாண சபை இனப்படுகொலை உள்ளிட்ட ஏராளமான தீர்மானங்களை நிறைவேற்றியும் குறிப்பிடத்தக்க அளவில் மக்கள் நலன்சார்ந்தும் மாகாண சபை இயங்கியிருக்கிறது. மேலும், இழுத்த இழுப்புக்கெல்லாம் யார் பக்கமும் சாய்ந்துவிடாமல் மக்கள் பக்கம் முதலமைச்சர் நின்று இருக்கின்றார்.
இந்நிலையில் இலஞ்சம், ஊழல், நிர்வாக முறைகேடுகளுக்கு எதிராக வடமாகாண அமைச்சர்கள் மீது தொடர்ச்சியாக பல்வேறு தரப்புக்களில் இருந்தும் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. மாகாண சபை உறுப்பினர்கள் சிலரும் சில அமைச்சர்களின் ஊழல் விவகாரங்கள் தொடர்பில் வடமாகாண சபை அமர்வுகளில் தொடர்ச்சியாக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்கு சுயாதீன விசாரணைக்குழு ஒன்றை முதலமைச்சர் நியமித்தார். அக்குழுவின் அறிக்கையை வெளியிடாமல் தனக்கு வேண்டப்பட்டவர்களைப் பாதுகாக்க முற்படுகிறார் என முதலில் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் அறிக்கையின் பிரகாரம் இரு அமைச்சர்களைப் பதவி விலகும்படியும் மற்றய இரு அமைச்சர்களை ஓரு மாதம் கட்டாய விடுப்பில் இருக்கும் படியும் முதல்வர் உத்தரவிட்டார். தான் சேர்ந்திருக்கும் கட்சியின் அபிலாசைகளை மீறி சுயாதீனமாக முடிவெடுத்ததனால் தான் முதலமைச்சருக்கு எதிரான சதிச் செயல் அரங்கேறியது. கட்டாய விடுப்பு என்பது பதவி நீக்கம் அல்ல என்பதும் இந்நடைமுறை ஏனைய ஜனநாயக நாடுகளில் சாதாரணமாக பின்பற்றப் படும் நடைமுறை என்பது இங்கு குறிப்பிடப் பட வேண்டியவை.
தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் கையெழுத்திட்டு முதலமைச்சரை பதவி நீக்குமாறு கோரி அவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் ஒன்றை ஆளுநரிடம் கையளித்ததன் பின்னர் தான் முதலமைச்சருக்கு ஆதரவான அலை தாயகத்தில் வலுப்பெறத் தொடங்கியது. அடுத்தநாளே தன்னெழுச்சியாக வடமாகாண சபைக்கு முன்னால் திரண்ட இளைஞர்கள் “மக்கள் முதல்வரை அகற்ற துரோகிகளுடன் கூட்டா?", “மக்களின் முடிவை மறுதலிக்க நீங்கள் யார்?” போன்ற பதாகைகளுடன் வடமாகாண சபைக்கு முன்னால் திரண்டு கோஷமிட்டனர். பின்பு கோவில் வீதியில் உள்ள முதலமைச்சரின் வீட்டுக்கு சென்று அங்கும் முதலமைச்சருக்கு ஆதரவாக கோஷமிட்டனர். வெளியே வந்த முதலமைச்சர் மக்களை பார்த்து “நான் உங்களுடன் இருப்பேன்" என்று கூறிய போது இளைஞர் கூட்டம் ஆரவாரித்தது.
அதற்கடுத்தநாள் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் ஹர்த்தாலும் அனுட்டிக்கப் பட்டது. நல்லூரில் இருந்து ஆரம்பமான பேரணி முதலமைச்சரின் வீடு வரை சென்று நிறைவடைந்தது. இதில் ஆயிரம் வரையிலான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர். கடந்து போன சம்பவங்கள் தமிழ் மக்கள் இன்னும் தமிழ்த் தேசிய உணர்வுடன் தான் உள்ளனர் என்பதனை மெய்ப்பித்திருக்கிறது. மக்கள் வாக்களித்துவிட்டு பேசாமல் இருந்துவிடுவார்கள், பின் அரசியல்வாதியாகி எதனையும் செய்து விடலாம் என்கிற சிந்தனைக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளார்கள்.
இங்கு அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைகளை மக்கள் அங்கீகரிக்கிறார்கள் என்பதல்ல கருத்து. தமது தலைவிதியை நிர்ணயிக்கும் இது போன்ற முக்கிய விடயங்கள் தம்மைக் கலந்தாலோசிக்காமல் கட்சி அரசியலூடாக தீர்மானிக்கப் படுவதை மக்கள் ஏற்கத் தயாராயில்லை என்பதே முக்கிய புள்ளி. முதலமைச்சருக்கு எதிரானவர்கள் மக்கள் மத்தியில் வந்து ஆலோசனைக் கூட்டங்களை, கலந்துரையாடல்களை நடத்தி பொதுவான அபிப்பிராயம் ஒன்றை உருவாக்கி அதனடிப்படையில் நடவடிக்கை எடுத்திருந்தால் நாம் இன்றைய நிலைக்கு வந்திருக்க மாட்டோம்.
தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பினால் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு அவர் வெற்றி பெற்றிருந்தாலும், கட்சி அரசியல் ஊழல் என்பவற்றுக்கு அப்பால் தமிழ் மக்களின் தேசிய நலன்சார்ந்து முயற்சிகளை எடுத்துள்ளார். மாகாணசபை முதலமைச்சர் என்ற வகையில் மக்களுக்கு கிட்டவாக இருக்கிறார். தான் சார்ந்த கடசியினரின் எதிர்ப்பையும் தாண்டி முதலமைச்சர் விக்கினேஸ்வரன் யாருடைய நிகழ்ச்சி நிரலுக்குள்ளும் இல்லாமல் தனித்து நிற்பது, செயற்படுவது மேற்குலகு, இந்தியா, இலங்கைக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கின்றது என்பதனையும் மக்கள் அவதானிக்கிறார்கள். . அதனால் தமது தேசியத்தை அடையாளப்படுத்தும் ஒரு குறியீடாக தமீழ் மக்கள் அவரைக் கருதுகிறார்கள். அந்தக் குறியீட்டின் மீது தமது அனுமதியின்றி யாராலும் கைவைக்க முடியாது என்று வடமாகாணம் எங்கிலும் தன்னிச்சையாக திரண்டு உலகுக்கு பறை சாற்றியுள்ளார்கள்.
முள்ளிவாய்க்காலோடு எமது போராட்டம் முடிந்து போகவில்லை, நாம் விழிப்புடன் தான் உள்ளோம் என்பதனை மீள உறுதிப்படுத்தி இருக்கிறது இந்த மக்கள் எழுச்சி. என்னை நீக்குவதற்கு தெற்கில் சதித்திட்டம் என்கிற முதலமைச்சரின் கூற்றை நாம் சாதாரணமாக கடந்து போக முடியாது.
நிமிர்வு ஆனி 2017 இதழ்
Post a Comment