சமூகத்தின் வளர்ச்சியில் சனசமூகநிலையங்களின் வகிபாகம்


சனசமூக நிலையங்கள் என்பது சமூக முன்னேற்றத்திற்கான ஒரு செயற்பாட்டு மையமாகும். ஒவ்வோர் ஊரிலும் சமூகத்தின் மையமாகவும் சமூகத்தில் உள்ள பல்வேறுபட்டவர்களையும் ஒருங்கிணைக்கும் நிலையமாக இவை வளர்ச்சியடைந்துள்ளமை சிறப்பானதாகும்.

ஒரு சனசமூக நிலையத்தை எடுத்துக் கொண்டால் நூலகம், பத்திரிகைப் பிரிவு, கலை, கலாச்சார செயற்பாடுகள், பொருளாதார அபிவிருத்தி, விளையாட்டு அபிவிருத்தி, ஆய்வரங்குகள், கருத்தரங்குகள் என்பவற்றை இலகுவாக செய்யக் கூடிய மையமாகவும் விளங்கி வருகின்றமை முக்கியமானதாகும். இதனூடாக கிராமம், நகரம், மாவட்டம் மட்டுமல்ல நாட்டின் வளர்ச்சியும் தங்கியுள்ளது.

உலக நடப்புக்கள் அனைத்தையும் அறிந்து கொள்ள பத்திரிகைகள், நூல்கள் என்பன உதவுகின்றன. அவை அனைத்தும் கிடைக்கும் இடமாக சனசமூக நிலையங்கள் திகழ்கின்றன. வாசிப்பு ஆற்றலை விருத்தி செய்யவும் இவை உதவுகின்றன. தகவல் தொழில்நுட்பத்துறையிலும் தொலைத்தொடர்புத்துறையிலும் ஏற்பட்ட வளர்ச்சிக்கு முன்னர், உலக வலைத்தொடர்பும், தகவற்தொலைபேசிகளும் கண்டுபிடிக்கப்பட முன்னர், 80 களிலும் 90 களிலும் சனசமூக நிலையங்கள் நமது கிராமங்களின் முக்கிய தாபனங்களாக இருந்தன.

கிராம, நகர மட்டத்திலும் பல சனசமூக நிலையங்கள் தோற்றம் பெற்றன. அவை பல செயற்திட்டங்களை செய்தன. பாமரன் முதல் கல்வியாளர்கள் வரை சனசமூக நிலையங்களில் அனைவரின் பங்களிப்பும் இருந்தன. ஊரின் அனைத்து நடவடிக்கைகளும் சனசமூக நிலையங்களினூடாகவே முன்னெடுக்கப்பட்டு வந்தன. கோயில்களுக்கு அடுத்ததாக மக்கள் பெருமளவு கூடிய இடங்களாக இருந்தன.

சனசமூக நிலைய நூலகங்களில் அன்றைய தினசரிகள் உடனுக்குடன் கிடைத்தன. மாதாந்த சஞ்சிகைகளும் வாராந்த வெளியீடுகளும் கூடக் கிடைத்தன. சிலர் காலையிலும் பலர் மாலையிலும் செய்திகளை வாசித்து தமது அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் விடயங்களைப் பற்றி தெளிவாக அறிந்திருந்தனர். அவற்றைப் பற்றிக் கூடிக்கதைக்கவும் சனசமூகநிலையங்களைப் பயன்படுத்தினர். தமிழரின் ஆயுதப் போராட்ட ஆரம்ப காலகட்டங்களில் இயக்கங்களின் பிரச்சார வேலைகளுக்கும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளிலும் சனசமூகநிலையங்கள் பெரும் பங்காற்றின.


 இன்று சனசமூக நிலையங்களின் செயற்பாட்டுத் தன்மைகள் குறைந்தவண்ணம் உள்ளன. சனசமூக நிலையங்களுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு போகின்றது. முன்னைய காலங்களில் செய்திகளை அறிவதற்காக மக்கள் சனசமூக நிலையங்களை நாடிச்சென்றனர். இன்று தொழிநுட்பவளர்ச்சியால் தாம் இருந்த இடத்தில் இருந்தே உடனுக்குடன் செய்திகளை இணையத்தில் பார்க்கின்றனர். சனசமூக நிலையங்களுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமே. இன்று வயதானவர்கள் தான் சனசமூக நிலையங்களுக்கு செல்வதனை காணக்கூடியதாக உள்ளது.

 செயற்பாட்டுத் தளத்தில் பல தடைகளை எதிர்கொண்டாலும் எல்லாவற்றையும் மீறி சில சனசமூக நிலையங்கள் மக்களுக்கு அளப்பரிய சேவைகளை ஆற்றிவருகின்றன. குறிப்பாக சனசமூக நிலையங்களின் கீழ் எத்தனையோ முன்பள்ளிகள் இயங்குகின்றன. அவற்றில் சில முன்பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாக சீருடை, மதிய உணவு, பசுப்பால் என்பவையெல்லாம் வழங்கப்படுகின்றன. அவற்றுக்கு எந்தவிதமான கட்டணங்களும் அறவிடப்படுவதில்லை. இவற்றுக்கான செலவினை சனசமூக நிலையங்களே வழங்குகின்றன என்பது பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.

அத்தோடு இலவச மருத்துவமுகாம்கள், இரத்ததான நிகழ்வுகள், கல்விக் கௌரவிப்புக்கள் என பல விடயங்களை சில சனசமூக நிலையங்கள் இன்றும் நடத்தி கலை கலாசார அம்சங்களை விருத்தி செய்கின்றன. சில சனசமூக நிலயங்களில் தையல், கணனி, ஆங்கிலமொழி என்பன இலவசமாக கற்பிக்கப்பிடுகின்றன. சில சனசமூக நிலையங்கள் இவ்வாறான செயற்பாடுகளால் வளர்ச்சி அடைந்து வருகின்றன. ஆனால் சில சனசமூக நிலையங்கள் செயற்பட முடியாமல் குறிப்பாக ஊர்மக்களின் ஒத்துழைப்புக்கள் சரிவரக்கிடைக்காமையினால் மூடப்பட்டு வருகின்றன. 


சனசமூக நிலையம் ஒன்று ஒழுங்காக இயங்க வேண்டுமாயின் அந்த ஊர் மக்கள் அனைவரினதும் ஒத்துழைப்பும் கிடைக்க வேண்டும். தற்போதைய இளைஞர்கள் சிலர் சனசமூக நிலையங்களை அரட்டை அடிக்கப் பயன்படுத்தும் நிலையும் உள்ளது. சனசமூக நிலையங்களையும் நூல் நிலையங்களையும் எமது சமூகம் சிறந்த முறையில் பயன்படுத்துமாக இருந்தால் நல்லதொரு பலனை அறுவடை செய்யலாம். 

ஊரின் ஒவ்வொரு சனசமூக நிலையமும், நூல் நிலையமும் வாசகர் வட்டங்களை உருவாக்குவதன் ஊடாக இளைஞர்களுக்கிடையே ஆரோக்கியமான வாசிப்பு பழக்கத்தையும் ,விவாததிறமையையும் வளர்த்துக் கொள்ளமுடியும். சுpல சனசமூக நிலையங்கள் சமூகதொண்டுகளை செய்து வருகின்றன. அதாவது பொது இடங்களை சுத்தம் செய்தல், மரங்களை நாட்டி இயற்கையை பாதுகாத்தல், இரத்ததானம் செய்தல், ஆலயத்திருவிழாக் காலங்களில் வேண்டிய தொண்டுகளை செய்தல், அன்னதானநிகழ்வுகள், தண்ணீர்பந்தல் போடுதல் என சமயத் தொண்டுகளும் ஆற்றிவருகின்றன. ஒரு ஊரின் முன்னேற்றத்திற்கு அங்குள்ள சனசமூக நிலையமே பெரும் பங்காற்றுகின்றது. வறிய மாணவர்கள் கல்வி கற்பதற்கு சில சனசமூக நிலையங்கள் ஏதாவதொருவகையில் உதவி செய்து அவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கு ஊக்கமளிக்கின்றன.

சுயதொழில் ஊக்குவிப்பிற்கான சிறுதொகைப் பணத்தை கடனாக வழங்கி சில சனசமூக நிலையங்கள் தமது ஊரினை முன்னேற்றுகின்றனர். எமது பிரதேசங்களில் சனசமூக நிலையங்களின் வளர்ச்சிக்கு புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். பல சனசமூக நிலையங்களை நிர்வகிப்பதற்கு புலம்பெயர் மக்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளில் சங்கங்கள்,அமைப்புக்களை வைத்திருக்கிறார்கள். பல ஊர்களில் சனசமூக நிலையங்கள் முன் மாதிரிகளாக விளங்குகின்றன. ஊர்களின் அடையாளங்களாகவும் உள்ளன. சனசமூக நிலையங்களை வளர்ப்பது எங்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

 கல்வியலாளர்கள், முதியவர்கள் எல்லாம் இன்றைய சமூகத்தினரிடம் வாசிப்புத் தன்மை குறைவடைந்து விட்டதாக கவலையடைகின்றனர். இன்று தமிழ் மாணவர்கள் பெரும்பான்மையினரின் கல்வி நிலையினை எடுத்துப் பார்த்தால் மற்றைய இடங்களைவிட பின்தங்கியே உள்ளது. அவர்களிடம் தேடல் என்ற தன்மை இல்லாமல் போய்விட்டது. கல்வி என்பது பாடப்புத்தகத்துடன் நின்று விடுவதல்ல. தேடித் தேடி அறிவார்ந்த விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நாம் நூல்கள் பத்திரிகைகளை வாசிக்க வேண்டும். இதற்கு சனசமூக நிலைய நூலகங்கள் நல்லதொரு வளமாகும். எனவே சனசமூக நிலையங்களுக்கு மீண்டும் இளைஞர்களைக் கவரந்திழுக்க வேண்டிய தேவை உள்ளது.

 தகவல் தொழில்நுட்பவளர்ச்சியின் பயனாக வீட்டுக்கு வீடு கணனிகள் வந்துவிட்டன. தொலைக்காட்சிகளும் மலிந்துவிட்டன. எல்லார் கைகளிலும் கைபேசிகளும் வந்துவிட்டன. இதனால் பொழுதுபோக்குக்கும் செய்தித் தேடலுக்கும் சனசமூக நிலையங்களுக்குப் போக வேண்டிய தேவை இளைஞர் மத்தியில் குறைந்து கொண்டு போகிறது. மேலைநாடுகளில் இதனைக் கண்டுணர்ந்த சனசமூக நிலையங்கள் தமது வழமையான சேவைகளை விடுத்து வேறு சேவைகளை வழங்கத் தொடங்கியுள்ளனர். அவர்கள் இளைஞர்களைக் கவருவதற்காக உள்ளக விளையாட்டு அரங்குகளை அமைத்துள்ளனர். அங்குநீச்சல் தடாகம், பட்மின்டன் திடல் (பூப்பந்தாட்டம்), ,கரம் விளையாட்டுமேசைகள், சதுரங்கமேசைகள் போன்றவற்றை நிறுவியுள்ளனர். இலவச கணனி பயன்பாட்டை வழங்குகின்றனர். வாரமொரு முறை இலவச திரைப்படங்களை காண்பிக்கின்றனர். ஆண் பெண்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் விருந்துபசாரங்களையும் நடனங்களையும் நடத்துகின்றனர். கவிதை மேடைகள், கலந்துரையாடல்கள், அரங்காற்றுகைகள் என்பவற்றுக்கு களம் அமைத்துக் கொடுக்கின்றனர். இவற்றினூடாக ஒரு ஆரோக்கியமான, சமாதானமான, செயற்திறன் கூடிய ஒரு இளைய சமூகத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

 இவற்றைப் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் எமது சனசமூக நிலையங்களையும் தற்போதைய தகவல் பரிமாற்ற யுகத்திற்கு பொருத்தமான மையங்களாக மாற்றமுடியும்.

விக்கினேஸ்வரி-

நிமிர்வு ஆடி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.