சர்வதேச அறிவியலாளர் மாநாடு




தமிழ்த் தேசியம் மற்றும் சிறீலங்காவின் தமிழின அழிப்புக்கு எதிராக தமது கூட்டு நிலைப்பாடுகளை வலுவாக்கும் புலம்பெயர் தமிழர்கள்;

இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீதான இனவழிப்பு மற்றும் ஈழத் தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பவற்றை முன்னிறுத்தி மே மாதம் 5ஆம் 6ஆம் திகதிகளில் ஓட்டாவா கால்ட்டன் பல்கலைக் கழகத்தில் இரண்டாவது சர்வதேச மாநாடு நடைபெற்றது.

புலம்பெயர் அமைப்புக்களின் கூட்டு முயற்சியில் உலகின் பல நாடுகளிலிருந்தும் அறிவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களை அழைத்து இம் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு நாள் மாநாட்டிலும் பெருமளவிலான கனடியத் தமிழ் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். மாநாட்டின் தொகுப்புக்கள் மற்றும் தீர்மானங்களுடன் மூன்றாம் நாள் மே 7ஆம் திகதி கனடியப் பாராளுமன்றத் கட்டிடத் தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இறுதி நிகழ்வு நடைபெற்றது.


இலங்கையில் தமிழ் மக்கள் கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக இன ரீதியான அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இதனை எதிர்த்து சாத்வீகமாக போராடிய தமிழ் மக்கள் இலங்கையில் தமக்கான பாதுகாப்பு என்பது தமிழ் மக்களை தனித்துவமான அடையாளமாக அங்கீகரிப்பதன் அடிப்டையில் மட்டும்தான் என்பதை 1976ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானம் மற்றும் அதன் பின்னரான 1977 பொதுத் தேர்தலில் முன்வைத்த மக்கள் ஆணை என்பவற்றினூடாக தெளிவாக முன்வைத்திருந்தார்கள்.

இருந்த போதிலும் தமிழ் மக்கள் மீதான தொடர்ச்சியான இன அழிப்பு பல இனக்கலவரங்கள் ஊடாகவும் ஆயுத அடக்குமுறைகளூடாகவும் நிகழ்த்தப்பட்டன. இந்தப் பின்னணியில் தமிழ் மக்கள் தம்மைத் தற்காத்துக் கொள்ள ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றது.

தமிழ் மக்கள் தமது விடுதலைக்காக முப்பது வருடகாலமாக முன்னெடுத்து வந்த ஆயதப் போராட்டம் பூகோள அரசியலில் தோன்றிய எதிர்பாராத சூழல்களைக் காரணமாக வைத்து பயங்கரவாதப் போராட்டமாக சித்தரிக்கப்பட்டதோடு, உலகின் பல நாடுகளின் உதவியுடன் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட பாரிய மனிதப் பேரவலத்துடனான இனப்படுகொலையுடன் அழித்தொழிக்கப்பட்டது.


2009ல் முள்ளிவாய்யக்காலில் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட பாரிய இனவழிப்பின் பின்னர் அம் மக்களின் அங்கமாக இருந்துவரும் புலம் பெயர் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனவழிப்பு என்பவற்றின் மீது சர்வதேச சட்ட நிதியங்களை முன்வைத்து ஐ.நா மனதவுரிமைச் சபையில் அதற்கான நியாயங்களைக் கோரி நிற்கின்றனர்.

இம் முயற்சியில் கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக இலங்கையின் வடகிழக்கு தமிழ் மக்களும் தம் மீதான இன அழிப்புக்கான முக்கிய ஆதராங்களை சாட்சியங்களை ஐ.நா மனிதவுரிமைச் சபையில் முன்வைத்துள்ளனர். இதனடிப்படையிலும், மற்றும் புலம் பெயர்வாழ் தமிழ் மக்கள் தத்தமது நாடுகளின் அரசுகளுக்குக் தொடர்ச்சியாக கொடுத்த வரும் அழுத்தங்கள் காரணமாகவும் 2015ல் ஐ.நா மனிதவுரிமைச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத் தீர்மானம் காத்திரமான நடைமுறைகள் இன்றி இழுத்தடிக்கப்பட்டுவருவதும் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல், சித்திரவதைகள் கொலைகள் இன்னமும் தொடரும் நிலையிலும் இவற்றிற்கான நியாயத்தைக் கோரி கடந்த 400 நாட்களுக்கு மேலாக தாய்மார்களின் போராட்டம், காணி விடுவிப்புப் போராட்டம் என்பன நடைபெற்று வருகின்றன.

இவை அனைத்துமே இலங்கையில் தமிழ் மக்களுக்கான நியாயம் என்பது தமிழ் மக்களை தனித்துவமான இனமாக அங்கீகரிப்பதில் அமைந்தாலேயொழிய மாற்று வழியில்லை என்பதை மீளவும் நிறுவியிருக்கின்றது. இச்சூழலில், தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை மற்றும் இலங்கையில் தமிழர்கள் ஒரு தேசம் என்பவை முன்னிறுத்தப்படல் வேண்டும் என்பதன் அவசியத்திலேயே இம் மாநாடு திட்டமிடப்பட்டது. இந்நிலைப்பாடுகளை அறிவியல் தளத்தில் ஆய்வுக்குட்படுத்தி ஆவணப்படுத்தி சர்வதேச சமூகத்திடம் முன்வைப்பதாகவும் இம்மாநாடு அமைந்தது.

 ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர் சமூகத்தின் கூட்டு நிலைப்பாடுகளாக முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியத்தில் பல புலம்பெயர் அமைப்புக்களின் கூட்டு முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் சர்வதேச பல்கலைக்கழக சமூகங்கள், மாணவர் அமைப்புக்கள் மற்றும் உலகளாவிய புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் இணைந்த ஆதரவுடன் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக முழுமையான ஈடுபாட்டுடன் திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து 30ற்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் பிறசமூக அறிவியலாளர்கள் அமைப்பு சார் பிரதிநிதிகள் ஊடகத்துறையினர் போன்றோர் பங்கு பற்றியிருந்தனர்.


இம் மாநாட்டின் முதலாம் நாள் பங்கேற்ற கல்வியாளர்களின் தலைமையில் குழுநிலை விவாதங்கள் நடைபெற்றன. இரண்டாம் நாள் குழுநிலை விவாதங்களுடன் பல சமநேர அமர்வுகளும் இடம்பெற்றன. மாநாட்டில் தாயகத்திலிருந்து காணொளி ஊடாக கல்வியாளர்களுடன் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர். மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய ஆவணப்படம் உட்பட கண்காட்சியும் இடம் பெற்றிருந்தது.

இரண்டாம் நாள் முடிவில் மாநாட்டு அமைப்புக்குழு மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கவனத்தில் எடுத்து நகல் தீர்மானம் ஒன்றை தயாரித்து பங்கு பற்றிய இளையோர்களிடம் கையளித்தது. இறுதியாக்கப்பட்ட தீர்மானம் மாநாட்டில் வாசிக்கப்பட்டு பலத்த வரவேற்புடன் நிறைவேற்றப்பட்டது.

மூன்றாம் நாள் நிகழ்வுகள் கனடியப் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இரண்டு நாட்களும் இடம் பெற்ற மாநாட்டின் தொகுப்புக்கள் மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்திப்பதாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.


இந்நிகழ்வில் மூன்று கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுகளை இளையோர்கள் முன்னெடுக்க இலங்கை அரசின் போர்குற்றம், இனப்படுகொலை என்பவற்றின் சாட்சியாக இருக்கக் கூடிய வண பிதா பேர்ணாட் அவர்கள் தமது உரையுடன் தொடக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாநாட்டில் பங்கேற்ற கல்வியாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் இனப்படுகொலை மற்றும் தமிழர் தேசம் தொடர்பான உறுதியான நிலைப்பாடுகளை எடுத்துரைத்தனர்.

கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம் மாநட்டின் அவசியம் கருப்பொருளின் முக்கியத்துவம் மற்றும் மாநாட்டின் பெறுபேறுகளை, தீர்மானங்களை கனடிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டியது குறித்து தத்தமது நிலைப்பாடுகளை முன்வைத்தனர்.

முழுமையான தமிழ் மக்களது பங்கேற்றலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மாநாட்டின் ஒருங்கமைப்புக்குழுத் தலைவர் திரு பெனற் மரியநாயகம் அவர்களால் அவை முன்னிலையில் வாசிக்கப்பட்டது. நிறைவில் அனைவரும் எழுந்து நின்று தீர்மானத்தை வரவேற்றனர். இத் தீர்மானம் உலகளாவிய ரீதியிலான புலம்பெயர் அமைப்புக்களால் ஒப்புதலளிக்கப்பட்ட ஆவணமாக முன்வைக்கப்படுகின்றது.

நிமிர்வு  வைகாசி 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.