ஹொங்ஹொங் போராட்டத்தை வெற்றி கொள்ளுமா சீனா
சீனாவின் கட்டுப்பாட்டிலிருக்கும் ஹொங்ஹொங்கில் அரசை எதிர்த்து கடந்த சில மாதங்களாக மக்கள் போராட்டம் நடாத்தி வருகின்றனர். ஹொங்ஹொங் குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்துச் செல்லும் அரசின் முடிவை எதிர்த்து மக்களின் போராட்டம் தொடங்கியது. இதனை அடுத்து அரசு இந்த முடிவை திரும்பப் பெற்றது. எனினும் ஹொங்ஹொங்கில் போராட்டங்கள் இடம் பெற்றுவருகின்றன. ஹொங்ஹொங் போராட்டத்திற்கான பின்னணி மற்றும் போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம் பெற்றுவருவதற்கான காரணங்கள், சீனா ஹொங்ஹொங் போராட்டத்தை கையாள பயன்படுத்தும் உத்திகள் தொடர்பாக அலசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

1898 ஆம் ஆண்டு சீனாவின் குவிங் (Qing)பேரரசுடன் பிரித்தானியா மேற்கொண்ட 99 ஆண்டு குத்தகை ஒப்பந்தத்தின் கீழ் ஹொங்ஹொங் நகரம் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த ஒப்பந்தம் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஹொங்ஹொங்கை சீன அரசிடம் பிரித்தானியா 1997ம் ஆண்டு ஒப்படைத்தது. அதனையடுத்து ஹொங்ஹொங் சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாக இணைத்துக் கொள்ளப்பட்டது. அதாவது  சீனா“ஒரு நாடு இரு அரச முறைகள்” என்ற அடிப்படையில் ஹொங்ஹொங்கை தன்னுடன் இணைத்துக் கொள்ளும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அதற்கு திருப்பி வழங்கப்பட்டது. இதன்படி அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு சீனா ஹொங்ஹொங் மக்களின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் பாதுகாக்க வேண்டும்.வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களைத் தவிர்ந்த ஏனைய விடயங்களில் ஹொங்ஹொங் மக்கள் அதிக அளவில் சுயாட்சியை அனுபவிக்க உரித்து உடையவர்கள் என்றவாறு கொள்கை வகுக்கப்பட்டு இருந்தது.

இதன் மூலம் சீனர்களுக்கு கிடைக்காத சுதந்திரம் ஹொங்ஹொங் மக்களிற்கு கிடைத்தது. அதாவது எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமை, பத்திரிகைகளுக்கான கருத்துரிமை மற்றும் பேச்சு சுதந்திரம் ஆகியவற்றோடு ஹொங்ஹொங்கிற்கு அதன் ஜனநாயகத்தை வளர்த்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. மேலும் சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும் ஹொங்ஹொங் நாட்டுக்கென தனி நாணயம், சட்டம், அரசியலமைப்பு என்பவற்றை கொண்டுள்ளது.

ஹொங்ஹொங்கின் பெரும்பாலான மக்கள் சீனர்கள். ஆனால் அவர்கள் யாவருமே தங்களைச் சீனர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்வதுமில்லை; அதை விரும்புவதும் இல்லை. ஹொங்ஹொங் பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவுகளின் படி ஹொங்ஹொங்கின் பெரும்பாலான மக்கள் தங்களை ஹொங்ஹொங்கர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். 11 சதவீத மக்கள் மாத்திரமே தங்களைச் சீனர்கள் எனக் கூறிக் கொள்கின்றனர்.

இதன் காரணமாகவே சீனா கடந்த 20 வருடங்களில் பல முறை ஹொங்ஹொங்கிற்கு கொடுத்துள்ள சிறப்பு அதிகாரத்தை நீக்கிவிட்டு ஹொங்ஹொங் முழுவதையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயன்று வருகின்றது. அதிலும் கடந்த சில வருடங்களாகச் சிறப்புச் சட்ட மசோதாக்களைக் கொண்டு வர தீவிரமான முயற்சிகளை எடுத்திருக்கிறது. இதன் ஒரு பகுதியாக ஹொங்ஹொங்கில் குற்றவாளிகள் எனச் சந்தேகிக்கும் நபர்களை நாடுகளுக்கிடையே பரிமாற்றம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதாவைச் சீன அரசின் நிர்ப்பந்தத்தின் பேரில் ஹொங்ஹொங் நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொண்டு வந்தது. இந்த மசோதாவின் மூலம் ஹொங்ஹொங்கில் உள்ள யாரை வேண்டுமானாலும் ஹொங்ஹொங் ஆட்சியாளர் அனுமதியின்றி சீனா உள்ளிட்ட எங்கேயும் நாடுகடத்த முடியும்.

இந்த மசோதாவுக்கு எதிராகவும் வேறுபல அம்சக் கோரிக்கைகளையும் முன்வைத்து இப்போது ஹொங்ஹொங்கில் போராட்டங்கள் இடம் பெற்று வருகின்றன. ஹொங்ஹொங் நிர்வாகத் தலைவர் உட்படசீன ஆதரவு அதிகாரிகள், உடனடியாகப் பதவி விலக வேண்டும், ஹொங்ஹொங்கில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்று மக்களாட்சி நடைபெற வேண்டும், பொலிஸாரின் வன்முறைகள் குறித்து விசாரணை நடக்க வேண்டும், போராட்டத்தின் போது கைதானவர்களை விடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் முன்வைக்கின்றனர். எனினும் போராட்டக்காரர்கள் பயங்கரவாதிகள் போலச் செயல்பட்டு வருவதாக சீனா குற்றம் சாட்டி வருவதுடன் ஹொங்ஹொங் போராட்டத்தினை வலுவிழக்கச் செய்யும் வகையில் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றது.

அவ் உத்திகள் தொடர்பாக நோக்கும் போதுமுதலாவதாக சீனாவின் அரச நாளிதழான குளோபல் டைம்ஸ் இல் தியானன்மென் சம்வத்தை குறிப்பிட்டு மறைமுகமாக போராட்டக்காரர்களை சீனா எச்சரிக்கும் உத்தியை கையாண்டது. இவ் இதழில் “1989 ம் ஆண்டு யூலை 4ம் திகதி நடைபெற்ற அரசியல் குழப்பச் சம்பவம் ஹொங்ஹொங் விவகாரத்தில் மீண்டும் நடைபெறாது. அப்போது இருந்ததைவிட சீனா இப்போது அதிக வலிமையாகவும் பக்குவம் கொண்டதாகவும் ஆகியுள்ளது. சிக்கல் நிறைந்த சூழல்களை எதிர்கொள்வதற்கான சீனாவின் திறமை பெரிதும் மேம்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சர்ச்சைக்குரிய இச்சம்பவத்தை சீனா குறிப்பிட்டுப் பேசுவது ஆபூர்வமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவதாக ஹொங்ஹொங்கின் எல்லைப் பகுதியில் சீனா இராணுவப் படைகளை குவிக்கும் உத்தியையும் கைக் கொண்டுள்ளது. ஹொங்ஹொங்கில் ஏற்பட்டுள்ள கலவரத்தைக் கட்டுப்படுத்த சிறப்புப் பயிற்சி பெற்ற  துணை இராணுவப் படையை களமிறக்க சீனா முடிவு செய்துள்ளது. அதாவது ஹொங்ஹொங் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு 10 ஆயிரம் பேர் அடங்கிய இராணுவப் படையை ஹொங்ஹொங் எல்லைப் பகுதியான ஷென்ஷன் என்ற இடத்தில் நிறுத்தியுள்ளது. கலவரத்தடுப்பு ஒத்திகையில் துணை இராணுவப் படையினர் ஈடுபடும் காணொளியையும் சீனா வெளியிட்டுள்ளது. அத்துடன் வன்முறையை தூண்டும் வகையிலான போராட்ட முறைமைகளை போராட்டாளர்கள் கைக்கொண்டால் சீனா இராணுவம் ஹொங்ஹொங்கிற்குள் நுழையும் என நேரடியாகவே எச்சரிக்கையும் விட்டது. இவ் எச்சரிக்கையினை தொடர்ந்து கடந்த வாரம் இடம்பெற்ற போராட்டம் அதிகளவான மக்களை கொண்ட போராட்டமாகவே காணப்பட்டாலும் மிக அமைதியான முறையிலேயே இடம் பெற்றமை சீனாவிற்கு கிடைத்த சிறு வெற்றியாகவே நோக்கப்படுகின்றது.

மூன்றாவது உத்தியாக ஹொங்ஹொங்கில் இடம் பெற்று வரும் போராட்டங்களுக்கெதிராக பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களைச் சீனா பயன்படுத்தி வருகின்றது. அத்துடன் ஹொங்ஹொங்கில்போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சீனா இரண்டு பாடல்களை வெளியிட்டுள்ளது. பாடல்கள் மூலம் கருத்துக்களை பரிமாறுதல் என்பது இலகுவானதும், வேகமானதும், மக்களின் சிந்தனைகளில் அதிகளவில் செல்வாக்கும் செலுத்தும் என்பதனால் போராட்டம் பற்றிய தனது நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் பதிய வைக்கவும் அதன் மூலம் சிறந்த பிரதிபலனை பெற்றுக் கொள்ளவும் முடியும் என்பதனால் இவ் உத்திகளை கைக் கொண்டுள்ளது.

இவ்விரண்டு பாடல்களில் மேற்கத்திய நாடுகளே ஹொங்ஹொங்கில் போராட்டங்களைத் தூண்டி விடுவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. ஹொங்ஹொங்கில் போராட்டத்தை தூண்டிவிடும் வெளிநாட்டவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்னும் கருத்து அந்தப் பாடலில் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்தப் பாடலின் வீடியோவில் ஹொங்ஹொங் போராட்டக்காரர்கள் காவல் துறையினரைத் தாக்கும் காட்சிகளும், ஹொங்ஹொங் அரச அலுவலகங்களைப் போராட்டக்காரர்கள் தாக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. மற்றொரு பாடலில் ஜனநாயக ஆட்சி கோருகிறீர்கள், ஆனால் உங்களின் வன்முறையால் நாடே போர்க்களம் போலக் காட்சியளிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பாடல்களை சீன அரசு தனது சமூக வலைத்தளங்களின் பக்கங்களில் பகிர்ந்தும் உள்ளது.

நான்காவதாக இலங்கை அரசாங்கம் போன்று விடுதலை உணர்வு உள்ள போராட்டக்காரர்களை பயங்கரவாதிகளாக சித்திரிக்கும் உத்தியை சீன அரசு கைக்கொண்டது. ஹொங்ஹொங் போராட்டக்காரர்களை கரப்பான் பூச்சிகள் எனவும் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் போன்றவர்கள் எனவும் ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பல்வேறு கணக்குகளைத் உருவாக்கி விமர்சித்தது.

எனினும் பேஸ்புக் மற்றும் ட்விட்டரும் சீனாவிலிருந்து செயற்படுத்தப்படும் சீன ஆதரவு பெற்ற இரகசிய சமூக ஊடக பிரச்சாரத்தை அறிந்து அவற்றை நீக்குவதாக கூறியுள்ளது. ஹொங்ஹொங்கில் நடந்து கொண்டு இருக்கும் போராட்டத்தை இழிவாகப் பேசுவதையும் போராட்டக்காரர்களை தவறாக சித்தரிப்பதையும் அனுமதிக்க முடியாது என்றும் ஆரோக்கியமான மற்றும் வெளிப்படையான கருத்துரையாடல்களைத் தாங்கள் பாதுகாக்க விரும்புவதாகவும் அவற்றின் அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

இந்த சூழலில் பேஸ்புக்கும் ட்விட்டரும் சீன அரச சார்புடைய 900 கணக்குகளை முடக்கி உள்ளன. அத்துடன் சீன அரசின் சார்புடைய கணக்குகள், சீன சார்பு செய்தி நிறுவனங்களின் விளம்பரங்கள் ஆகியவற்றை சமூக வலைத்தளங்கள் முற்றிலுமாகப் புறக் கணித்துள்ளன. எனவே சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி போராட்டத்திற்கெதிரான கருத்துக்களை முன்வைக்கும் சீனாவின் உத்தி இதன் மூலம் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

ஐந்தாவதாக ஹொங்ஹொங் போராட்டத்தில் பல வெளிநாட்டு நிறுவன ஊழியர்களும் பங்கேற்று இருந்தனர். இதனால் சீனா அந்நிறுவனங்களுக்கு கடுமையான அழுத்தத்தை கொடுக்கும் உத்தியை கையாள்வதன் மூலம் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களின் பங்குபற்றலை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஊடாக ஹொங்ஹொங் போராட்டத்தில் ஈடுபடுவர்களுக்கு நெருக்கடியை கொடுக்க முற்படுகின்றது. அதாவது கதே பசுபிக் நிறுவன ஊழியர்கள் சட்டவிரோத போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் அந்நிறுவனம் தார்மீக ரீதியிலான தொழில் தர்மங்களை மீறியதாக சீனாவின் உள்நாட்டு வான் போக்குவரத்து அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளதோடு அவ் ஊழியர்கள் சீனாவின் வான் பரப்பிலோ, சீனாவிற்கு வந்து செல்லும் விமானங்களிலோ பணியாற்றக் கூடாது என சீனா உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு சீனாவிற்கு விமானங்களை இயக்குவதோடு அந்நாட்டின் வான்பரப்பை பயன்படுத்தி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் கதே பசுபிக் விமான நிறுவனத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஹொங்ஹொங்கில் இயக்கும் ஏனைய வெளிநாட்டு பல்துறைசார் கம்பனிகளின் போராட்ட ஆதரவு செய்றபாடுகளுக்கும் சீனா எச்சரிக்கை விட்டுள்ளது.

இதனை விட சீன நகரமான ஷென்ஷென் அண்மையில் பயணம் செய்தார் என ஹொங்ஹொங்கில் உள்ள பிரிட்டன் தூதரகத்தில் பணியாற்றி வரும் ஒர் அதிகாரியை சீனா கைது செய்துள்ளது. ஹொங்ஹொங் போராட்டங்கள் வலுவடைந்தமைக்கு வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதல்களே காரணம் என கூறும் சீனா அவற்றை களையெடுப்பதற்கான உத்திகளை அதிகளவில் கைக் கொள்ளத் தொடங்கியது.

சுயாட்சி பிரதேசமாக ஹொங்ஹொங்கை சீனாவிடம் பிரித்தானியா 1997ஆம் ஆண்டில் ஒப்படைத்தற்கு பிறகு அங்கு சீன ஆளுகைக்கு விடுவிக்கப்பட்ட மிகப்பெரிய சவாலாக இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. எது எப்படி இருந்த போதும் 2047 ம் ஆண்டுக்குப் பிறகு ஹொங்ஹொங்கின் சுயாட்சி முடிவுக்கு வருமென்பது தான் சர்வதேச அரசியல் பார்வையாளர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது. அதுவரையாவது அந்த மக்களின் சுயாட்சிக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்கிற வகையில் அவர்களின் போராட்டத்தைச் சர்வதேச சமூகமும் ஆதரிக்கின்றது.


லக்ஷனா பாலகுமாரன் 
நிமிர்வு ஒக்டோபர்  2019 இதழ்  


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.