வன்னிப் பெருநிலப்பரப்பில் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய தொல்லியல் மையங்கள்
வன்னி, இது ஒரு நிலப்பரப்பின் பெயர் அல்ல, காலங்கள் தாண்டியும் நிமிர்ந்து நிற்கும் இனத்தின் வரலாறு. தமிழுக்கும், வீரத்திற்கும் பேர் போன ஈழ தேசத்தில் வடதிசையில் ஆனையிறவையும், தென் திசையில் அநுராதபுரத்தையும், கிழக்கே இந்து சமுத்திரத்தையும் கொண்டதாக இன்று சுருங்கிப் போய் விட்ட ஈழத்தின் இதய பூமியே இந்த வன்னிப் பெருநிலப்பரப்பு. வன்னி மக்களின் எதிர்கால இருப்பை தக்கவைக்க வரலாற்றுத் தாயகத்தின் மூலத்தை அறிய வேண்டியது இன்றியமையாததாகின்றது.
வன்னி மண்ணில் தான் ஈழத்தின் மூத்தகுடிகள் வாழ்ந்தனர் என்பதற்கு பூநகரி, உருத்திரபுரம், கோணாவில், அக்கராயன், குருந்தனூர்மலை, கூழாமுறிப்பு, மகிழமோட்டை, காஞ்சூரமோட்டை, அரியாமடு, வெடுக்குநாறிமலை, தண்ணிமுறிப்பு, சேமமடு, கள்ளிக்குளம், பெரியதம்பனை, பெரிய புளியங்குளம், பிரப்பமடு, மாமடுவ, செட்டிகுளம், இரணைமடு, அன்னதேவன்மடு, முத்தரிப்புத்துறை, பொம்பரப்பு போன்ற இடங்களில் பரந்து காணப்படும் ஈமைத்தாழிகளும், கட்டட இடிபாடுகளும், மட்பாண்டங்களும், சிற்பங்களும், கல்லாசனங்கள் முதலியவையும் இப்பிரதேசத்தில் காணப்படும் 700 இற்கு மேற்பட்ட குளங்களும் இப்பிரதேசத்தின் தொன்மையைக் காட்டுவதற்குப் போதுமான சான்றுகளாகும்.
மூத்தகுடிகள் வன்னி மண்ணில் தான் வாழ்ந்தனர் என்பதற்குப் பூநகரி, பனிக்கன்குளம் மற்றும் கோணாவில், பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட 5000 ஆண்டுளுக்கும் மேல் பழமைவாய்ந்த தொல் பொருட்கள் முக்கிய சான்றாதாரங்களாகும். அந்தவகையில் வன்னிப்பகுதியில் வாழ்ந்த மக்களினதும், வன்னி மன்னர்களதும் வாழ்விடங்கள் பல காலத்தால் அழியுண்டுபோய் காடுகளுக்குள் புதைந்துகிடக்கின்றன. இவை இன்றும் ஆய்வு செய்யப்படாது கைவிடப்பட்டநிலையிலேயே உள்ளன. எனவே இவ்விடங்களை இனியாவது பக்கச்சார்பின்றி உண்மை வரலாற்றைக் கண்டறியும் நோக்கில் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். அந்த அடிப்படையில் தொல்லியற்சான்றுகள் கிடைக்கக்கூடிய ஆய்வுக்குட்படுத்தப்படவேண்டிய இடங்களுக்கு அண்மைக் காலங்களில் நான் சென்று பார்வையிட்டேன். அங்கு அறிந்துகொண்ட வன்னிப் பெரு நிலப்பரப்பின் தொல்லியற் தடையங்கள் பற்றிய குறிப்புக்களை எதிர்கால ஆய்வுக்குத் தருவதுதான் இப்பத்தியின் நோக்கம்.
1) கல்நீராவி மலை
A9 வீதியில் (கண்டி – யாழ் வீதி) கனகராயன் குளத்திலிருந்து பிரிந்து செல்லும் பழைய கண்டி வீதியிலிருந்து ஆரம்பிக்கும் கற்கிடங்கு – கரப்புக்குத்தி வீதியில் மரகுத்தி என்னுமிடத்திலிருந்து மூன்று மைல் கிழக்கேயிருப்பதுதான் இந்தக் கல்நீராவி மலை என்றழைக்கப்படும் கற்பாறைத்தொகுதி. இப்பிரதேசம் முல்லைத்தீவு மாவட்டத்தினுள் அடங்குகின்ற பிரதேசமாகும். இப்பாறைத் தொகுதியின் மேல் உச்சிப் பகுதியில் 30 அடி தொடக்கம் 40 அடி நீள அகலங்கொண்ட மூன்று பாறைகள் அடுப்பு வடிவில் இருக்கின்றன. அதன்மேல் மூன்று பாறைகளையும் உள்ளடக்கியதான தட்டையான பெரும் பாறை ஒன்று இக்குன்றின் உச்சிக்கு ஒரு குகை வடிவிலான தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்தமலையிலிருந்து தென் மேற்கு நோக்கிப் பார்க்கின்றபோது ஒரு நீரேரி 50 மீற்றர் தூரத்தினுள் காணப்படுகிறது. இது இயற்கையான நீரேரியன்று. அது செயற்கையாக வெட்டப்பட்ட ஒரு கேணியாகும். நீண்ட கால ஓட்டத்தில் பயன்பாடற்றுத் தூர்ந்துபோய் நீரேரியாகக் காட்சியளிக்கிறது. இதற்கு அருகாமையில் வழிபாட்டுத்தலம் ஒன்று இருந்ததற்கான இடிபாடுகளும் எச்சங்களும் ஆங்காங்கே பரவிக்காணப்படுகின்றன. அங்கே காணப்பட்ட குகை வடிவ அமைப்பினுள் கற்கால மனிதர் வாழ்ந்திருக்கலாமென்பதற்கான தடயங்களாக உட்பகுதி செயற்கையாக அமைக்கப்பட்ட வழுவழுப்பான தோற்றம் கொண்டதாகக் காணப்படுகின்றது.
அத்தோடு அக்குகையின் கூரைப்பகுதியாக அமைந்த மேற்பாறையில் குகையின் நேர் செங்குத்தாகச் செயற்கையாகக் குடையப்பட்ட கோளவடிவமான ஒரு மறைவிடம் உருவாக்கப்பட்டு இருப்பதாக தென்படுகின்றது. அதன் வாயிலை செங்கற்கள் கொண்டு மட்டமாக மூடி இருக்கும் வண்ணம் காணப்படுகின்றது. இவ்வமைப்பினை புதையல் தோண்டும் கும்பல்கள் 1980 களில் உடைத்து நாசப்படுத்தி விட்டனர். இருப்பினும் மிக நீண்டகாலத்திற்கு முன்னர் மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களை இன்றும் சாதாரணமாகக் காண முடியும்.
10 ஆம் நூற்றாண்டில் எழுப்பப் பட்ட கட்டடங்களின் தன்மையை ஒத்த கட்டட எச்சங்களும், ஆரம்ப வரலாற்றுக்கால மட்பாண்டங்களை ஒத்த தன்மையுடைய கறுப்புச் சிவப்பு மட்பாண்டங்களையும் அங்கே காணமுடிகிறது. இப்பகுதி இன்றுவரை ஆய்வு செய்யப்படாமலே உள்ளது. இவ்வாறு இயற்கையாகவே குகைவடிவாக அமைந்த பாறை 1988 ஆம் ஆண்டு காலப்பகுதியிருந்து பெருந்தெருக்கள் அமைக்கும் பணிக்காக கற்பாறைகள் உடைக்கப்கப்பட்டபோது தொல்லியற் சான்றுகள் பலவும் அழிக்கப்பட்ட நிலையிலேயே இன்றும் காணப்படுகிறது. அவ்வேளை கல்லுடைப்போரின் தேவைக்கு நீர் பெறுவதற்காக வற்றியிருந்த நீரேரியை ஆழப்படுத்தியபோது சில உலோகப்பொருட்களும், மட்பாத்திரங்களும் கண்டெடுக்கப்பட்டன. மிகத்தொன்மையான மனித வாழ்விடம் பற்றிய அரிய தகவல்களை அந்தபகுதி தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கின்றது.
2) வாவெட்டி மலை
வன்னியின் மேல்ப்பற்று வடக்கிலே அமைந்திருக்கும் வாவெட்டிமலை என்கின்ற சிறிய பாறைக் குன்றின் அமைவிடத்தை நோக்குவோம். மாங்குளம்- ஒட்டுசுட்டான் வீதியில் மணவாளன் பட்டமுறிப்புக்கும் ஒட்டுசுட்டானுக்குமிடையே 9 ஆம் கட்டைக்கு அண்மையிலிருந்து தெற்கு நோக்கிச் சிறு நடைபாதை செல்கின்றது. அவ்வழியே காடுகளுக்கூடே நான்கு அல்லது ஐந்து மைல்கள் சென்றால் இந்த வாவெட்டி மலையையடையலாம். இந்த வாவெட்டி மலைச்சுற்றாடலில் கோயிற் கட்டடச் சிதைபாடுகளும், இராசதானியின் சிதைபாடுகளும், ஒரு பெரிய குகையும் காணப்படுகின்றன. இதற்கு வையாபாடலில் வரும் “வாவெட்டி மாமரம் தானரசு– மாணிக்கப் பண்டாரம் பூசை செய்து” என்னும் பாடலடியும் சான்றாகின்றது. வாவெட்டி மலையின் மேற்பகுதியில் காணப்படுகின்ற குகைவடிவிலான அமைப்பு மிக நீண்ட தூரத்திற்கு உட்செல்வதாக உள்ளது. குகையின் வாயில் சுமார் மூன்று அடி அகலங்கொண்டதான குறுகிய வாயில் காணப்படுவதால் உள்ளே இருட்டாக இருக்கிறது. எனவே உட்புறத்தில் உள்ளவற்றை அவதானிப்பது மிகச்சிரமமானது. தற்போது கரடி போன்ற வனவிலங்குகள் உள்ளேயிருக்கலாம் ஆனால் இக்குகையை வெறுமனே நவீன வரலாற்றுக் காலங்களோடு தொடர்பு படுத்திப்பார்க்க முடியாது. இது கற்கால மனிதன் வாழ்ந்த கற்குகையாகத்தான் இருக்கவேண்டும். போதிய பாதுகாப்புடன் குகையின் உட்புறத்தை ஆராய்ந்தால் முக்கிய தடயங்களும், சான்றுகளும் பெறக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. வெளிப்புறத்தில் உள்ள சான்றாதாரங்களை விட உட்புறத்திலுள்ளவை வெளிக் கொணரப்படுமானால் வியப்பான பல புதிய தகவல்களைப் பெறமுடியும்.
3) ஆயிலடி
நைனாமடு கனகராயன்குளம் வீதியில் நைனாமடுவிலிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் மேற்குப் பக்கமாக ஆயிலடி என்கின்ற தொன்மையான கிராமம் இருக்கிறது. கிராமத்து வீதியின் ஆரம்பப் பகுதியில் இருமருங்கிலும் ஏராளமான கறுப்புச் சிவப்பு மட்பாண்டங்களையும், அளவிற் பெரியனவான செங்கற்களையும் காணமுடியும். வீதியின் வலது புறத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியொன்றினுள் வீதியிலிருந்து 50 மீற்றரினுள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் சில கருங்கற்றூண்களையும், நிலத்தினுள் புதைந்து போன செவ்வகக் கற்பாறைத் துண்டுகளையும் காணமுடியும். அத்தோடு அதற்கு அருகாமையில் சில உருளைக் கற்பாறைகள், ஓரிடத்தில் நிலத்தினுள் புதைந்த நிலையில் காணப்படுகின்றன. இப்பாறைக் கற்தொகுதி அன்றைய நாளில் என்னவாக இருந்திருக்குமென்பதை ஊகிக்க முடியாவிட்டாலும் அதன் இன்றைய தோற்றங்களிலிருந்து அனேகமாக அது ஈமைத்தாழிக்குரிய அம்சமாகவே எண்ணத்தோன்றுகின்றது. ஏனெனில் மேற்குறிப்பிட்ட இடம் கரடியான்குளம் என்றழைக்கப்படுகின்ற ஒரு புராதன குளத்தின் அருகாமையில் இருப்பதுடன் திட்டையான ஒரு பகுதியாகவும் அதேநேரத்தில் மறுபக்கத்தில் இதன் தொடர்ச்சி போன்றே ஆயிலடிக் குளக்கட்டு ஆரம்பமாவதும் இரண்டு குளங்களின் கட்டுகளுக்கு நடுவில் வீதி செல்வதும் காரணங்கள் எனலாம். இச்சூழலின் அமைவிடம், மண்ணின் தன்மை, போன்றவற்றை அவதானிக்கின்ற போது அங்கு மிகப்பழைய குடியிருப்பு இருந்திருக்கிறது என்பதையறியலாம். இப்பகுதியில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்வதன் மூலமே மிகச்சரியான வரலாற்றுத் தகவல்களைப் பெற முடியும். பெருங்கற்காலப் பண்பாட்டிற்குரிய தொல்லியற் சான்றுகளை பெறுவதற்கான சாத்தியங்களே இங்கு அதிகம் உள்ளன.
4) நீராவிக்குளம்
புளியங்குளத்திலிருந்து நெடுங்கேணிக்கு வரும் வீதியில் குறிசுட்டகுளம் சந்தியிலிருந்து 1.5 கிலோ மீற்றர் தூரத்தில் வலது புறத்திலிருக்கும் இடமே நீராவிக்குளமாகும். இந்த இடத்தில் ஒரு பிள்ளையார் விக்கிரகமொன்று வைத்து வழிபடப்படுகிறதுடன் இப்பகுதியைச் சுற்றவுள்ள இடங்களில் வன்னிப்பகுதியில் எங்குமில்லாத அளவு கருங்கற் சிதைவுகளும், செங்கற் சிதைவுகளும் காணப்படுகின்றன. இங்கு பல கருங்கற் தூண்களும், செயற்கையாக அமைக்கப்பட்ட மண் திட்டைகளும் காணப்படுகின்றன. மற்றும் பெரியளவிலான ஓர் கேணியும் காணப்படுகின்றது. அக்கேணியானது செங்கற்களால் கட்டப்பட்டதாகும். இக்கேணியானது தற்போது சேதமடைந்திருந்தாலும் நீர் நிற்கின்றது. இப்பகுதியில் பல செதுக்கு வேலைப்பாடுகளைக கொண்ட கருங்கற்களும் ஏராளமாகக் காணப்படுகின்றன. இப்பகுதியில் ஆய்வுகள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை.
5) கனகராயன்குளம்
வவுனியா மாவட்டத்தில் A9 வீதியில் உள்ள கனகராயன்குளம் கிராமத்தின் வீதியிலிருந்து மேற்குப்புறம் 600 மீற்றர் தொலைவில் கனகராயன்குளத்தின் சுருங்கையுடன் ஒட்டியதாக குளக்கட்டின் அருகாமையில் ஐயனார் ஆலயம் ஒன்றுள்ளது. அவ்வாலயத்தின் வளாகத்தில் நிறுத்திய நிலையிலும், சரிந்த நிலையிலும் சில கருங்கற்றூண்கள் காணப்படுகின்றன. இன்னும் பல கற்றூண்கள் மண்ணினுள் புதையுண்ட நிலையில் காணப்படுகின்றன. மற்றும் புராதன கட்டடங்களின் வாயிற்படியில் காணப்படும் தட்டையான கற்பாறையின் அரைவட்ட வடிவ அமைப்பு ஒன்றும் காணப்படுகிறது. மேலும், இவ்விடத்தில் மண்ணினுள் புதையுண்ட நிலையிலே பல கட்டட இடிபாடுகள் காணப்படுகிறன. இக்கட்டட இடிபாட்டினை ஜே.பி.லூயிஸ் (1890) என்கின்ற பிரித்தானிய அரசின் நிர்வாக அதிகாரி பௌத்த மடாலயத்திற்கான சின்னம் போன்றேயிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இதனை அவ்வாறு ஊகிப்பதற்கான வலுவான சான்றுகள் எவையும் இல்லை. அத்தோடு இக்கட்டட இடிபாடுகளிலிருந்து 100 மீற்றர்கள் தூரத்தில் கிழக்குப் புறமாக இருக்கின்ற பற்றைக்காட்டினுள் சோழர்காலக் கலையம்சம் கொண்ட ஒரு சிவலிங்கத்தின் ஆவுடையார் பகுதி இருந்தது. இது நிலமட்டத்திலிந்து கிட்டத்தட்ட மூன்றைரை அடி உயரங்கொண்டதாகவும், சராசரி நான்கு அடி நீள, அகலங் கொண்டதாகவும் இருந்தது. இறுதியாக 2008 வரை அதனைப் பார்க்கக் கூடியதாகயிருந்தது. அதற்கு நேர் எதிரே முன்னுள்ள கமநல சேவைத்திணைக்களக் கட்டத்தில் தற்போது பொலிஸ் நிலையமிருப்பதனால் இவ் ஆவுடையார் பகுதி தற்போது என்னநிலையிலுள்ளதென்பது பற்றிக் கூறமுடியாதுள்ளது.
6) நெடுங்கேணி
நெடுங்கேணி நொச்சியடி ஐயனார் ஆலயம் வவுனியா புளியங்குளத்திலிருந்து நெடுங்கேணி செல்லும் பிரதான வீதியில் நெடுங்கேணிப் பிரிவு ஆரம்பிக்கும் எல்லையிலிருந்து 300 மீற்றர் தொலைவில் உள்ளது. அங்கு பல மலைக் குன்றுகள் காணப்பகின்றன. அதில் ஒரு குன்றின்மீது எழுத்துக்கள் உள்ளன. இது சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றது. அண்மைக்காலத்தில் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் இம்மலையிலிருக்கும் எழுத்துக்களை வாசிப்பது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டிருந்தார். இவ்வாய்வின் முடிவில் இவ்வெழுத்துக்கள் கி.மு 2 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்களெனக் கூறியுள்ளார். அம்மலையில் “வேள் நாகன் மகன் வேள் கண்ணன்” என்று தமிழ்ப்பிராமி எழுத்துக்களில் பொழியப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் நெடுங்கேணி பகுதியில் நாக வம்சத்தை சேர்ந்தவர்கள் அக்காலத்தில் வாழ்ந்தார்கள் என்பது நம்பப்படுகின்றது. மேலும், நொச்சியடி ஐயனார் கோயில் வளாகத்தில் காணப்படும் புரதான கட்டடச் சிதைவுகள், அங்குள்ள நொச்சிமரத்தைச் சூழவுள்ள கேணி மற்றும் கோயிலுக்கு அண்மையிலுள்ள காட்டுப்பகுதியிலுள்ள ஈமச்சின்னங்கள், அங்குள்ள புரதான பாழடைந்த குளம் என்பவற்றைத் தொல்லியல் ஆய்வுக்குட்படுத்துவதன் மூலம் பல புதிய அம்சங்களை வெளிக்கொணர முடியும்.
7) வெடுக்குநாறி மலை
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஒலுமடு பாலமோட்டை கிராமத்திலிருந்து கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் தொலைவில் வெடுக்குநாறிமலை அமைந்துள்ளது. சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இந்த மலை பல வரலாற்று சிறப்புகளைக்கொண்டு காணப்படுகின்றது. 300 மீற்றர் உயரமான வெடுக்குநாறிமலை அடிவராத்தில் கேணி, தமிழ் பிராமிய கல்வெட்டுக்கள் என்பன அதன் வரலாற்றைக் கூறுகின்றது. இம்மலையின் உச்சியில் ஆதிலிங்கேசுவரர் என்ற சிவனுடைய லிங்கம் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட ஐந்து தலைமுறையினருக்கு மேலாக இப்பிரதேச மக்கள் இந்த ஆலயத்தை வழிபட்டு வருகின்றனர். 2018 ஆம் ஆண்டில் இலங்கைத் தொல்லியல் திணைக்களம் மற்றும் வனவளத் திணைக்களத்தினர் இம்மலைக்கு மக்கள் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள தடை விதித்தனர். ஆனாலும், உள்ளூர் மக்களின் எதிர்ப்பினையடுத்து இத்தடையினை தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடன் நெடுங்கேணி காவல்துறையினர் தற்காலிகமாக நீக்கி வழிபாடுகளை மட்டும் மேற்கொள்ள அனுமதித்தனர். ஆனாலும் கோவிலைப் புனரமைக்கவோ அல்லது புதிய கட்டடங்களை அமைக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
வெடுக்குநாறி மலையில் இரண்டு குகைப் படுக்கைகள் உள்ளன. முதலாவது குகைத்தளத்தின் மேலே உள்ள தமிழ் பிராமி கல்வெட்டானது அக்குகைத்தளம் யாரால் யாருக்கு வழங்கப்பட்டது என்ற தகவலைக் கூறுகின்றது. இதில் உள்ள எழுத்துக்களை நான் வாசிப்பதற்கு முற்பட்ட வேளை அவ்வெழுத்துக்கள் சற்று உயரத்தில் இருந்ததனால் படியெடுத்து வாசிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இருப்பினும் தெளிவாக “மகா சமுதஹ” என்ற வரிவடிவம் மட்டும் என்னால் தெளிவாக வாசிக்க முடிந்தது. தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அழகன்குளம் என்னுமிடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் பானை ஓடு ஒன்றில் "சமுத" , "சமுதஹ" என்ற இரண்டு பெயர்கள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் வெடுக்குநாறி மலையில் தூர்வடைந்த நிலையில் உள்ள குகைகள் வெறுமனே 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவையன்று. அக்குகைகளில் கற்கால மனிதன் வாழ்ந்திருக்கக்கூடும்.அக்குகையின் தோற்றம், பழைமை போன்றவற்றினை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது இது தெளிவாகிறது வெடுக்குநாறி மலைப்பகுதியானது நான் அறிந்தவரை எந்த ஒரு தொல்லியல் ஆய்வுகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் உள்ளது.
08) காஞ்சூரமோட்டை
நெடுங்கேணியிலிருந்து செல்லும் வீதியில் மருதோடைச் சந்தியிலிருந்து இடப்பக்கமாகச் செல்லும் பாதையிலிருக்கும் தொன்மையூர்தான் காஞ்சூரமோட்டையாகும். இக்கிராமமானது மருதோடை கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியாகும். இங்கு புராதன இந்துக் கோயில்கள் இரண்டு உள்ளன. இதிலொன்றான பிள்ளையார் கோயிலில் மிகவும் தொன்மையான வரலாற்றுச் சிதைவொன்றை வைத்து வழிபடுவதனைக்காண முடிகிறது. அதற்கு அருகில் பழமையான முருகன் கோயிலும் அமைந்துள்ளது. அதனைச் சூழவுள்ள பகுதியில் புராதன மக்கள் குடியிருப்புக்கான எச்சங்கள் காணப்படுகின்றன. முக்கியமாக செங்கற்கள் இரண்டு நிரையாக அடுக்கி அமைக்கப்பட்ட புராதன கிணறுகள் இரண்டு காணப்படுகின்றன. மேலும், குளக்கட்டின் அருகிலும் பல இடங்களில் தொல்லியல் எச்சங்கள் காணப்படுகின்றன.
9) மகிழமோட்டை
நெடுங்கேணியிலிருந்து ஒட்டுசுட்டான் செல்லும் பிரதான வீதியிலுள்ள தொன்மையான கிராமமே மகிழமோட்டைக்கிராமமாகும். பிரதான வீதியிலிருக்கும் கள் விற்பனை நிலையத்திற்குப் பின்புறமுள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் பல புரதான தொல்லியல் சின்னங்கள் உள்ளன. அந்த காட்டுப்பகுதிக்குள் நான் பலதடவை சென்று வந்துள்ளேன். அங்குள்ள புரதான சின்னங்களை ஒட்டு மொத்தமாக நோக்குகின்ற போது அது ஒரு இராசதானியாக விளங்கியிருக்கக்கூடுமென எண்ணத்தோறுகின்றது. இக்காட்டுப்பகுதிக்குள் மலைக்குன்றுகள் அதிகம் உள்ளதால் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் இப்பகுதியிலுள்ள மலைக்குன்றுகள் கட்டுமானப் பணிகளுக்காக உடைக்கப்பட்ட போது பல வரலாற்றுச் சின்னங்கள் அழிந்து விட்டன. மேலும், இக்காட்டுப் பகுதியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட மண்திட்டைகளுமுள்ளன. அவற்றின் நடுவே செங்கல் இடிபாடுகளும் உள்ளன. அவற்றில் சில புதையல் எடுக்கும் கும்பலால் அகழப்பட்டுள்ளன. இக்காட்டுப்பகுதியிலுள்ள ஆறுகளில் கறுப்புச் சிவப்பு மட்பாண்ட ஓடுகளுமுள்ளன. இப்பகுதியில் செங்குத்தாகக் காணப்படும் மலைக்குன்றொன்றில் மிகவும் அழகிய முறையில் யானையின் உருவம் ஒன்று மரத்தில் சக்கிலியால் காலைக்கட்டியது போல் செதுக்கப்பட்டுள்ளது. அச்செதுக்கல் சோழர் காலத்துக்குரியதாக இருக்கக்கூடும். இப்பகுதியில் இது வரைகாலமும் தொல்லியல் ஆய்வுகள் எதுவும் இடம்பெறவில்லை.
10) வவுனியா பெரிய புளியங்குளம்
வவுனியா பெரிய புளியங்குளத்தில் கி.மு 2 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டொன்று உள்ளது. இலங்கையில் கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் வாணிகம் செய்தவரின் பெயர் இக்கல்வெட்டெழுத்தில் கூறப்படுகிறது. இலங்கையில் வவுனியா மாவட்டத்தில் பெரிய புளியங்குளம் என்னும் இடத்திலுள்ள ஒரு மலைக்குகையில் இந்தப் பிராமி எழுத்துக் கல்வெட்டு “விசாகன்” என்னும் தமிழ் வணிகன் பெயரைக் கூறுகிறது. அதன் வாசகம் கீழ்வருமாறு அமைகின்றது.
"தமெட வயிஜ க(ப)தி
விஸகஹ விணே
தமெட வணிஜ கபதி
விஸகணுஹ ஸேணி மென"
இதன் பொருள்:- தமிழ் வாணிகக் குடும்பிகன் விஸாகனுடைய (செய்வித்த) குகை. தமிழ் வாணிகக் குடும்பிகன் விஸாகன் செய்வித்த படிகள். இப்போது பெரிய புளியங்குளம் என்னும் பெயர் பெற்றுள்ள இடத்திலுள்ள மலைக்குகையில், தமிழ் வாணிகக் குடும்பிகனான விஸாகன் என்பவர் பௌத்த முனிவர்கள் தங்கியிருப்பதற்காக அக்காலத்தில் (கி.மு. 2 ஆம் நூற்றாண்டில்) அமைத்துக்கொடுத்த குகையைப்பற்றி இந்தப் பிராமிக் கல்வெட்டெழுத்துக் கூறுகிறது. மேலும், தமிழகத்தில் கொடுமணல் அகழ்வின் போது கிடைக்கப்பெற்ற மட்பாண்ட ஓட்டில் "விஸாகி" என்ற பெயர் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். பெரிய புளியங்குளம் பகுதியில் மேலும் ஆய்வுகளை நடாத்துவதன் மூலம் தமிழர்களுக்குரித்தான பல புதிய தகவல்களை வெளிக்கொணர முடியுமென நம்பப்படுகின்றது.
11) மாங்குளம் (குஞ்சுக் குளம்)
மாங்குளத்திலிருந்து வவுனியா நோக்கிச் செல்லும் வீதியில் மாங்குளத்திருந்து ஒன்றரை மைல் தூரத்திலுள்ள குஞ்சுக்குளம் சந்தியிலிருந்து மேற்கு நோக்கி ஒரு வண்டிற்பாதை செல்கின்றது. அதன் வழியே சுமார் ஒரு மைல் தூரம் காடுகளுக்கூடே சென்றால் அங்கு மிகவும் உயர்ந்து வளர்ந்த ஆலமரம் ஒன்றைத் துல்லியமாகக் காணமுடியும். அவ்வாலமரச் சுற்றாடலிலும் அதற்கு அண்மையிலும் பரவலாக கட்டட இடிபாடுகள், மட்பாண்டங்கள், கற்றூண்கள், கற்பாறைகளில் புராதன காலத்தில் கற்களைப் பிளப்பதற்காக இடப்பட்ட குழிகள் போன்ற அமைப்புக்களும், சவ அடக்கங்களுக்கான அமைப்பு முறைகளும் காணப்படுகின்றன. அத்தோடு அப்பகுதியில் புதையல் எடுப்பதற்காக தோண்டப்பட்ட குழிகளும் காணப்படுகின்றன.
12) நாகதாழி
யாழ் கண்டிவீதியில் புளியங்குளத்திற்கும், கனகராயன் குளத்திற்குமிடையில் மேற்குப் புறமாக மூன்றரை மைல் தூரத்தில் புதூர் நாகதம்பிரான் கோயில் இருக்கிறது. கோயிலின் தென் மேற்குத் திசையில் சுமார் மூன்று மைல் தூரத்தில் நாகதாழி என்னுமிடமிருக்கிறது. இவ்விடத்திற்கு புதூர் குடியிருப்பிலிருந்து தெற்குத் திசையாக பாலமோட்டை செல்லும் வண்டிற்பாதை தென்மேற்காக வளைந்து செல்கிறது. இப்பாதையினூடே இரண்டு மைல்களுக்கு அப்பால் வீதியினுடைய வலது புறக் காட்டினுள் ஒருமைல் சுற்றுவட்டத்துக்குள் ஒரு தொல்லியல் மையத்தைக் காணலாம். அங்கே ஒரு நீரேரியுள்ளது. அதன் சுற்றுப்புறங்களில் புராதன நகரத்திற்குரிய பண்பாட்டம்சங்கள் பல தென்படுகின்றன. இங்கு ஒரு கோயிலும், அதன் அயற்புறத்தில் கட்டடச் சிதைவுகளுமுள்ளன. இப்பகுதியில் பழமையை உணர்த்தும் பனைமரங்கள் இருந்ததற்கான எச்சங்களைக் காணமுடிந்தது. அத்துடன் புராதன செங்கல்லால கட்டப்பட்ட சிதைவடைந்த கிணறு ஒன்றையும் காணமுடிகிறது. இந்தக் கட்டிட அழிபாடுகளுக்குள் கிடந்த கோவிலிலுள்ள அம்மன் சிலையை எடுத்து வந்து கோயில் குஞ்சுக்குளம் என்ற இடத்திலுள்ள அம்மன் கோவிலில் வைத்து வணங்குகின்றார்கள். இவ்விடம் நாகதாழியென குறிப்பிடப்படுவதிலிருந்து இவ்விடத்தின் தொன்மை நாகநாடு, நாகர்கள், நாகவம்சத்துடன் தொடர்புபட்டதாகவே இருக்கவேண்டும். இப்பகுதியின் ஆய்வுகள் நிச்சயமாக பெருங்கற்கால நாகரிக காலம்வரை நீண்டு செல்லும் என எதிர்பார்க்கலாம். இத் தொல்லியல் மையம் ஆய்வுக்குட்படுமானால் அங்கு பெறப்படுகின்ற தொல்லியற் சான்றுகள் மிகத்துல்லியமான செய்திகளையும், காலக்கணிப்புக்களையும் வரலாற்றுத் தொன்மையையும் வன்னிக் குடியமைவின் வகிபாத்திரத்தினையும் வெளிக்கொணர முடியும். அத்தோடு இம்மையமானது பாலியாற்றங்கரைப் படுக்கையிலேயே அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
13) கல்லிருப்பு
வன்னியின் புராதன காலத்துக் கண்ணகியம்மன் கோயில் ஓர் அடர்த காட்டுப்பகுதியில் பாலியாற்றுக்கு அண்மையிலுள்ளது. மாங்குளத்திலிருந்து மூன்றுமுறிப்புக்குச் செல்லும் வீதியில் பாலியாற்றைக் கடப்பதற்கு முன்னர் இடதுபக்கமாகத் திரும்பும் மண்வீதியொன்று புதுவிளாங்குளம் நோக்கிச் செல்கிறது. இவ்வீதியில் அரை மைல் தூரத்தில் கண்ணகியம்மன் கோயிலும் அதற்கு நேர் முன்புறத்தே சிறு குளமும், குளக்கட்டின் தென் புறத்தில் செங்கபிலக் கற்பாறைக் குன்றுத் தொகுதியொன்றும் உள்ளது. அக்குன்றில் குகையமைப்பு முறைகள் முன்பு இருந்ததாக அறியக் கிடைக்கிறது. அப்பாறைத் தொகுதியின் பெரும்பகுதி உடைத்தெடுக்கப்பட்டு வீதி அபிவிருத்திக்குப் பயன்படுத்தப்பட்டதனால் புராதன கற்குகை அமைப்புக்களை இன்று அங்கே காணமுடியாது. அப்பகுதியிலிருந்த தொல்லியற் தடயங்கள் புதையல் தோண்டும் கும்பல்களினால் தோண்டிச் சிதைத்தழிக்கப்பட்டு விட்டன. இருப்பினும் இப்பாறைக் குன்றின் சுற்றுப் புறங்களில் ஆங்காங்கே காணப்படுகின்ற சிதிலமடைந்த கட்டட இடிபாடுகள், செங்கற்கள், மட்பாண்டங்கள் மிக முக்கியமான தொல்பொருட்களாகக் கணிக்கப்பட வேண்டியவையாகும். மகாவம்சத்தின் 28 வது அத்தியாயத்தில் குறிப்பிடப்படுகின்ற துட்டகைமுனு ஸ்துபங்களைக் கட்டுவதற்கானப் பொருட்களைப் பெறுதல் என்ற அத்தியாயத்தில் “பெலிவாவிக்கு அண்மையில் உள்ள குகையினுள் வேட்டைக்காரன் இரத்தினக்கற்களைக் கண்டான்” எனவும், “அது துட்டகைமுனுவுக்குத் தெரியப்படுத்தபட்டு இரத்தினங்கள் இங்கிருந்து துட்டகைமுனுவினால் கையகப்படுத்தப்பட்டு அதனைக் கொண்டு ஸ்தூபங்களைக் கட்டினான்” எனவும் குறிப்பிடப்படுகிறது. இப்பெலிவாவி எனப்படுவது இன்றைய வவுனிக்குளமாகும். இவ்வவுனிக்குளத்தின் சுற்றுப்புறங்களில் இவ்விடத்தைத் தவிர வேறு எந்தவொரு பகுதியிலும் கற்பாறைத் தொகுதியைக் காணமுடியாது. முன்பு இவ்விடத்தில் குகைவடிவப் பாறை இருந்ததெனவும் இக்குகையே மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் குகையாக இருந்திருக்கலாமெனவும் ஊகிக்கலாம். அத்தோடு இவ்விடத்தில் புதையலிருப்பதாகக் கூறப்படும் பல செவிவழிக் கதைகள் இப்பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் வாழும் மக்களிடம் இன்றும் உலாவுவதும் குறிப்பிடத்தக்கது.
14) கரும்புள்ளியான்
பாண்டியன் குளத்திலிருந்து மல்லாவி செல்லும் வீதியில் கரும்புளியங்குளமென முன்னர் அழைக்கப்பட்ட இடம் இன்று கரும்புள்ளியானெனத் திரிபடைந்து அழைக்கப்படுகிறது. கரும்புள்ளியான் குளக்கட்டு ஆரம்பிக்குமிடத்திற்குச் சுமார் 500 மீற்றர்கள் முன்னுள்ள திட்டையாக அமைந்த பகுதியில் வீதியின் இரு மருங்கிலும் கருங்கற்களும், செங்கற்களும், கொண்டு அமைக்கப்பட்ட கோயிற் கட்டட இடிபாடுகளும், மட்பாண்ட எச்சங்கள் பலவும் நிலத்தின் வெளிப்புறத்தே சிதறிக் கிடக்கின்றன. தற்போது அவ்விடத்தில் சில வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட சிவாலயம் ஒன்றுள்ளது. இச்சிவாலயம் அமைந்துள்ள காணிப்பரப்பினுள் ஏராளமான மட்பாண்டச் சிற்பங்களின் சிதைவுகளும், கருங்கற் பாறையினால் செதுக்கப்பட்ட கற்றூண்களும் மேடைவடிவபப் பாறைகளும் தென்படுகின்றன. ஆலயத்தின் நேர் கிழக்கில் 100 மீற்றர் தூரத்தில் பழைய பாழடைந்துபோன கேணியமைப்பு ஒன்றும் காணப்படுகின்றது. இதன் படிகள் கருங்கற் பாறைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதோடு 15 அடி ஆழத்திற்கு மேற்பட்டதாகவும் காணப்படுகின்றது. 20 வருடங்களுக்கு முன்னர் காணி உரிமையாளர் இக்கோணியைத் தோண்டிப் பார்க்க முற்பட்டபோது அதனுள் இருந்து சில சிற்பங்களும், மட்கலங்களும், சில உலோகப் பாத்திரங்களும் வெளிப்பட்டன. ஆனால் அன்றைய காலத்தில் அச்சம் காரணமாக இக்கேணியை மேலும் தோண்டாமல் விட்டுவிட்டனர். தற்போது தூர்த்தழிக்கப்பட்ட நிலையில் காணப்படும் அவ்விடம் சிறிய நீர்தேங்கும் குட்டை போன்று காட்சியளிக்கிறது. அநேகமாக இக்கேணியினை அகழ்வாராய்ச்சிக்குட்படுத்துவதன் மூலம் மேலும் ஏராளமான தொல்லியற் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அதன் மூலம் இப்பிரதேசத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும் பற்றியதான தகவல்களைத் துல்லியமாக அறியமுடியும்.
நீண்டகாலமாக கவனிப்பாரற்று ஆய்வுக்குட்படுத்தப்படாமலிருந்த இவ்விடம் பற்றி அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தொல்லியலாளர் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அவர் மறுநாளே நேரடியாக அப்பிரதேசத்தைப் பார்வையிட்டதோடு தொல்லியற் சான்றுகளைப் படியெடுத்து ஆய்வுக்குட்படுத்துவதற்கான செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கிறார். இங்கே கண்டெடுக்கப்பட்ட சுடுமண் சிற்பங்கள் இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தாய்த்தெய்வ வழிபாட்டு உருவங்களாகவே கணிக்கப்படுகிறது. இத்தொல்லியற் தடயப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்தின் ஆவுடையார் பகுதி பல்லவர்காலப் (கி.பி 7-9 நூற்றாண்டு) பகுதிக்குரிய கலைவடிவமாகவே தென்படுகிறது. அத்தோடு கருங்கற்களாலான கயலட்சுமி வடிவம் பொறிக்கப்பட்ட எல்லைக்கற்கள் சிலவும் அங்கே கண்டெடுக்கப்பட்டன. கயலட்சுமி வடிவம் பொறிக்கும் முறை கி.பி 12 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியைச் சேர்ந்ததாகவே பொதுவாகக் கணிக்கப்படுகிறது. இவற்றை இப்பிரதேசம் நீண்ட தொடர்ச்சியான மக்கள் வாழ்விடமாக இருந்ததற்கான வலுவான சான்றாதாரங்களாகக் கொள்ளலாம். இலங்கையின் வரலாற்றுக் காலங்களில் நாகவம்ச ஆட்சிக்காலத்தில் உத்தரதேசமென அழைக்கப்பட்ட முக்கியமான ஆட்சிமையங்களின் பகுதியாக இது இருந்திருக்கக்கூடும்.
15) பனங்காமம்
வன்னியின் ஆதிக்குடியிருப்புகளில் ஒன்றான பனங்காமம் கிராமத்தின் சுற்றுப்புறமெங்கும் ஏராளமான தொல்லியற் சான்றுகளைக் காணமுடியும். கருங்கற்றூண்கள், செயற்கையாக உருவாக்கப்பட்ட மண் திடல்கள், வட்டவடிவமாக நிறுவப்பட்ட கற்றூண்கள், கலவோடுகள், கட்டடச் சிதைவுகள், போன்றவற்றைக் காணமுடியும். பறங்கியாற்றின் கிழக்குப்புறத்தில் அமைந்துள்ள பனங்காமமும், அதற்கு அருகிலுள்ள இளமருதங்குளப் பகுதியில் காணப்படுகின்ற கட்டட இடிபாடுகளும் இன்றுவரை முறையான தொல்லியற் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. இவ்வாறே பறங்கியாற்றின் மேற்குப்பகுதியில் நாட்டப்பட்ட நிலையிலிருக்கின்ற கற்றூண்களும், செயற்கையாக உருவாக்கப்பட்ட மண் திட்டுக்களும், அக்காலப்பகுதியின் முக்கிய மனிதர்களின் சவ அடக்கவிடமாகவோ அல்லது நினைவிடங்களாகவோ இருக்கலாமென ஊகிக்கக் கூடியவகையிலான அமைப்பு முறைகளாக காணப்படுகின்றன.
பனங்காமம் சிவன் கோயில் சுற்றுவட்டமும் மிக முக்கியமான தொல்லியற் சான்றுகளைக் கொண்ட பகுதியாகக் காணப்படுகிறது. சிவன் கோயிற் சுற்றாடலில் மண்ணுள் புதையுண்டு காணப்படுகின்ற கட்டட இடிபாடுகள் சோழர்காலக் கட்டடக்கலை வடிவமைப்பைக் கொண்டிருக்கின்றன. கோயிலினுள்ளே இருக்கின்ற சிவலிங்கம் பல்லவர்காலத்தில் அதாவது கி.பி 7 ஆம்- 8 ஆம் நூற்றாண்டுகளில் வடிவமைக்கப்பட்ட சிற்ப வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. சிவலிங்கத்தை உற்று நோக்கினால் அதில் ஒரு வேல் வடிவம் பொறிக்கப்பட்டு தலைப்பகுதியில் ஒரு முக வடிவம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இவ்வகை சிவலிங்கம் பல்லவர் காலத்திற்குரியதெனத் தொல்லியலாளர் பேராசிரியர் புஸ்பரட்ணம் கூறுகிறார். இச்சிவன் கோயிலின் சுற்றுப் புறத்தில் காணப்படுகின்ற மட்பாண்ட ஓடுகளும், மட்பாண்டச் சின்னங்களும் பெருங்கற்காலப்பண்பாட்டு நாகரிக காலத்திற்குரியவையாகயிருப்பதனால் பனங்காமம் பகுதி தொடர்ச்சியாக மிக நீண்ட காலம் தமிழ் மக்கள் வாழ்ந்ததற்கான சான்றாதாரங்களைத் தரக்கூடிய இடமாகவே கொள்ளப்படுகிறது. சோழர் ஆட்சியின் தொடர்சியாக வன்னிக்குறுநில மன்னர்களின் ஆட்சியின் மையமாகப் பனங்காமம் இருந்தமையை நவீன வரலாற்றுப்பதிவுகள் உறுதி செய்வதும் பனங்காமத்தில் மிகச்சிறந்த ஆட்சியாளனாக வன்னியர் திலகம் என்றழைக்கப்பட்ட கைலாயவன்னியனார் அரை நூற்றாண்டுகள் ஒல்லாந்தருக்கு அடிபணியாமல் ஆட்சி செய்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
16) கல்விளான்
துணுக்காய்ப் பகுதியில் துணுக்காயிலிருந்து வெள்ளாங்குளம் செல்லும் வீதியிலுள்ள கல்விளான் என்னுமிடத்திலும் கல்விளான் குளத்திற்கு இடதுபுற வயல்வெளிக்கு அருகாமையிலுள்ள ஏறக்குறைய 20 ஏக்கர் பரப்பளவுப் பகுதி மிக முக்கியமான கட்டட இடிபாடுகளும், கோட்டை அல்லது அரண்மனை இருந்தமைக்கான தடயங்களும், ஆதாரங்களும், மட்பாண்ட ஓடுகளும், குவிந்த நிலையில் பெரிய மண்மேடாகக் காணப்படுகின்றது. அத்துடன் சிற்ப வேலைப்பாடுடைய கற்றூண்கள் மண்ணுள் புதையுண்டும், வெளிக்கிளம்பியும் காணப்படுகின்றன. இப்பகுதி ஒரு புராதன நகருக்குரிய தன்மையுடையதாகவே காணப்படுகிறது. கட்டட இடிபாடுகளுடைய மேட்டிலிருந்து பார்க்கின்ற போது மேற்கும், வடக்குப்பகுதியும் தாழ்வான பகுதியாகவும், அங்கிருந்து எந்த அசைவையும் அவதானிக்கக் கூடியதாகவும் தென்படுவதனால் ஒரு கோட்டையின் மீது நிற்கின்ற மன உணர்வே பொதுவாக யாவருக்கும் ஏற்படும். இவ்விடம் புராதன கால உத்தரதேச குறுநில மன்னர்களின் வாழ்விடமாக இருந்திருக்க வேண்டும்.
கி.பி 10 ஆம்- கி.பி 12 ஆம் நூற்றாண்டுளுக்குரிய சோழர்கால கலைவடிவமைப்பு கொண்ட கற்றூண்கள் அங்கே நிறுவப்பட்டுள்ளன. ஆனால் கல்விளான் பகுதியில் கருங்கற் பாறைகளை எங்கேயும் பெறமுடியாது. மிக நீண்டதூரத்திலிருந்தே இவை இப்பிரதேசத்திற்குக் காவிச் செல்லப்பட்டுக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரும் மனித உழைப்பு அன்றைய காலத்தில் அதற்குத் தேவைப்பட்டிருக்கும். ஆகவே இப்பிரதேசம் சனத்தொகை செறிவான குடியிருப்புப் பகுதியாக நிச்சயமாக இருந்திருக்க வேண்டும். போரின் பின் இப்பிரதேசத்தில் இருந்த பல கற்றூண்கள் இராணுவத்தினரால் எடுத்துச் செல்லப்பட்டு விட்டதாக ஊர்வாசிகள் தெரிவிக்கின்றனர். எனவே இப்பகுதியில் பாரபட்சமற்ற நேர்த்தியான தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
சாரம்
மேற்குறிப்பிட்ட தொல்லியல் மையங்களில் ஈழத்தின் ஆதிக்குடிகள் செறிந்து வாழ்ந்தார்கள் என்பதற்குப் போதுமானளவு தொல்லியற் சான்றுகள்கிடைத்திருப்பினும், அவை மிகச்சரியாகவும், பக்கச்சார்பின்றியும் ஆராயப்பட்டதாஎன்றால் இல்லை என்ற பதிலே கிடைக்கும். வன்னிப் பெருநிலப்பரப்பகுதியெங்கும் பரந்துகிடக்கும் தொல்லியல் மையங்கள் ஆய்வுக்குட்படுத்தப்படாமல் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டதும், அல்லது அழிக்கப்பட்டதுமான நிகழ்வுகளே நடந்தேறியிருக்கின்றன. ஈழத்தின் மூத்தகுடியான இயக்கர்களும், நாகர்களும் வடகிழக்கில் வாழ்ந்ததோடு இவர்களே ஈழத்தமிழர்களின் மூதாதையர்கள் என்பதை ஐயந்திரிபுபட நிரூபிப்பதற்கான வலுவான சான்றாதாரங்கள் வன்னிப்பெருநிலப்பரப்பில் பரந்துகிடக்கின்றன. இவற்றினை விரிவான ஆய்வுக்குட்படத்துவதன் மூலம் ஈழத்தமிழரின் வரலாற்றுத் தொன்மையை உலகிற்கு நிருபிக்க முடியும்.
- நெடுங்கேணி சானுஜன்,
கிழக்குப் பல்கலைக்கழக மாணவன்.
நிமிர்வு
வைகாசி - ஆனி 2020
Post a Comment