கேள்வி கேட்கும் துணிவுடன் எழுந்த மக்கள்



இன்று தேர்தல் அரசியல் என்பது வெறும் கூத்தாகி வெறும் ஏமாற்றாகி மக்களை சின்னா பின்னப்படுத்துகின்ற ஒன்றாகிப் போய் விட்டது. இந்நிலையிற் தான் நாங்கள் ஒரு விடயத்தை யோசிக்கின்றோம். பண்பாட்டு ரீதியாக இந்த மக்களை ஒரு மீள் எழுச்சிக்கு உட்படுத்த வேண்டும். 

இதற்காகத் தான் கடந்த பல வருடங்களாக யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தை ஆரம்பித்து செயற்படுத்தி வருகின்றோம். அந்த வகையில் கிராமங்கள் தோறும் இத்தகைய நிகழ்ச்சிகளை கொண்டு நிகழ்த்துவது, மக்களை கூட வைப்பது, மக்களுக்கிடையே பகிர்வை, கூட்டை உருவாக்குவது அதன் மூலம் வரும் ஆனந்தத்தை அனுபவிக்க வைப்பது தான் எங்களுடைய ஒரு முக்கியமான நோக்கம். இவற்றை நாங்கள் தொடர்ந்து செய்வோம். 

யாழ்ப்பாணம் பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தின் “ஊர் உயர ஒன்று கூடுவோம்” தெருவெளி அரங்கு வடக்கின் பல கிராமங்களில் இடம்பெற்றது. அந்த வகையில் உரும்பிராய் வடக்கு சரஸ்வதி கிராமத்தில் இடம்பெற்ற தெருவெளி அரங்கிலிருந்து சில பதிவுகள். மூத்த அரங்க நெறியாளரும், நாடகமும் அரங்கியல் துறையின் முதுநிலை விரிவுரையாளரும்,  பண்பாட்டு மலர்ச்சிக் கூட நிறுவனருமான கலாநிதி சிதம்பரநாதன் இந்த ஆற்றுகையை நெறிப்படுத்தினார்.

இந்த ஆற்றுகை நிகழ்வில் கேள்வி கேட்கும் துணிவுடன் எழுந்த மக்களாக கிராமங்கள் தோறும் பேரெழுச்சியுடன் மக்கள் திரண்டனர். “மக்களுக்கு பொய் சொல்லி ஏமாற்றுகிற,  10 வீடு கட்டுற, 10 வாகனம் வாங்குற ஏமாற்று வேடதாரிகளை இன்று மக்கள் மத்தியில் விட்டிருக்கின்றார்கள். தங்களின் குடும்பங்களின், தங்களின் வயிற்றை நிரப்புவதற்காக,  போலி அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்ற வரப் போகிறார்கள். எங்களின் பிள்ளைகளை அழிச்சுப் போட்டு, எங்கட கிராமங்களை அழிச்சுப் போட்டு,  எங்கள் மக்களை அழிச்சுப் போட்டு வரும் இவர்களுக்கு பதில் நீங்கள் சொல்லும் பதில் தான். 

“நாங்கள் உணர்வுகளோடு தான் வாழுகின்றோம்”. இந்தப் போலியான அரசியல்வாதிகளுக்கு இங்கே இடமில்லை என்கிற ஆக்கள் கையை உயர்த்திக் காட்டுங்கோ பார்ப்போம்” என்று கலாநிதி சிதம்பரநாதன் அவர்கள் சொன்னதும் அங்கு திரண்டிருந்த மக்களில் கணிசமானோர் கையை உயர்த்தினார்கள்.

கலாநிதி சிதம்பரநாதன் எம்முடன் கருத்துப் பகிர்கையில், 

மக்கள் மத்தியில் ஒரு சடத்தன்மை.  அதாவது மக்களின் உணர்வுகள் மழுங்கடிக்கப்படுகின்ற ஒரு தன்மையை எல்லா இடங்களிலும் அவதானிக்கின்றோம். கிராமங்களைப் போய்ப் பார்த்தால் கிராமங்களின் தெருக்களில் மக்கள் இல்லை. முந்தி நாங்கள் சிறுவர்களாக இருந்த போது கிராமங்களின் தெருக்களில் நாங்கள் கூடி இருக்கிறானாங்கள். கூத்தடிக்கிறனாங்கள்,   கதைக்கிறனாங்கள், சிரிக்கிறனாங்கள்.

சென்ற முறை கிராமங்களுக்கு போன போது பயமாகவும் இருந்தது. இந்த முறை நாங்கள் இதனை இன்னும் கொண்டாட்டமாக்கி இருக்கின்றோம்.   ஆற்றுகைக்கு முதலே மக்களிடம் செல்வது, கிராமங்கள் தோறும் வீடுகள் வீடுகளாக செல்வது, அவர்களோடு உரையாடுவது, அவர்களோடு ஒரு தொடர்பை ஏற்படுத்துவது, அவர்களும் நாங்களும் சேர்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்துவது, வெறுமனே ஒரு நாடகத்தை ஆற்றுகை செய்வது மட்டுமல்ல. 

இங்கு உணவே ஒரு ஆற்றுகையாக வருகின்றது. எல்லோரும் சேர்ந்து சமைத்து நிகழ்வு முடிந்ததும் எல்லோரும் ஒன்றாக இருந்து சாப்பிடுவார்கள். நாங்கள் ஒன்றைப் பார்த்தோம். எல்லோருக்கும் அடியில அந்த உணர்வு இருக்கு. "நாங்கள் ஒன்றாய் சேர வேண்டும்" என்ற உணர்வு.

இப்போது திருமண வீடுகள் எல்லாமே மண்டபங்களில் நடக்கின்றன. எல்லாரும் கவலைப்படுவார்கள். முந்தி என்றால் அப்படி இல்லை. ஒரு மாதத்துக்கு முன்னரே வீடு களை கட்டிவிடும். எல்லோரும் ஒன்றாய்ச் சேர்ந்து சமைக்கிறது. எல்லோரும் ஒன்றாய்ச் சேர்ந்து பலகாரம் செய்வது. உறவுகள் கூடி மகிழ்வதுகொண்டாட்டமாக இருக்கும் என எல்லோருமே கதைக்கிறார்கள். ஆனால் இன்றோ எல்லோருமே மண்டபங்களிற்தான் திருமண வீட்டை நடத்துகின்றார்கள்.

தெருவெளி அரங்கு என்பது தெருவுக்கு அருகில் இருக்கின்ற மக்கள் கூடக் கூடிய வெளியை தெரிவு செய்து அந்த வெளியிலே மக்களைக் கூடச் செய்து குதூகலிப்பது. இங்கே இந்த ஊர்ப்பிள்ளைகள் வந்து கூடியிருந்து விளையாடுகிறார்கள். கூட்டின் இனிப்பை அவர்கள் அனுபவிப்பார்கள். கூட்டின் பகிர்வில் வருகின்ற சந்தோசத்தை பேரானந்தத்தை அவர்கள் அனுபவிப்பார்கள். அதற்கு இடம் அமைத்துக் கொடுப்பது தான் இந்த அரங்கு.  

இன்று எமது சமூகத்தின் மத்தியில் ஊழல், லஞ்சம் போன்ற பிரச்சினைகள் பெரிதாகத் தலைதூக்கி இருக்கின்றன. இன்று பல்தேசியக்கம்பெனிகள் உலகெங்கும் ஒரு நுகர்வுக்கலாச்சாரத்தை உருவாக்கி வருகின்றன. இவர்களுக்கு பெருத்த இலாபம் பார்க்கும் வியாபாரம் தான் முக்கியம். மக்களுக்கு தேவையில்லாத ஆயிரமாயிரம் பொருட்கள் நாளாந்தம் சந்தைக்கு வருகின்றன. சிறிய கடைகள் இல்லாது போய் பெரிய கடைகள் உருவாகி விட்டன.  மக்கள் எல்லாம் ஆளோடை ஆள் சேரக் கூடாது.  மக்கள் பெரு நிறுவனங்களுக்கு போய் கிடைக்கிற பொருள்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து விட வேண்டும். அவர்கள் தங்களுக்குள் உரையாட சந்தர்ப்பம் கிடைத்தால் இந்தப் பொருள் நல்லதா அல்லது அந்தப் பொருள் நல்லதா என அவர்களுக்குள் கலந்துரையாடி விடுவார்கள். ஆகவே மக்களுக்கிடையே உள்ள கூட்டை உடைப்பது அவர்களின் ஒரு வியாபாரத் தந்திரம்.

தமிழர் பகுதிக்கு தாங்கள் வர முடியாமல் இருந்த போது பெரும் ஆயுத, படை பலத்தை பாவித்து அதனை உடைத்தான். உடைத்து விட்டு வந்தாலும் மக்களின்ஆத்மாவை சீரழிக்க வேண்டும். அதற்கு அவன் என்ன செய்கிறான் என்றால், இலஞ்சம், ஊழலில் திளைத்த அரசியல்வாதிகளைத் தன்னுடைய முகவர்களாக அவன் தேர்ந்தெடுக்கிறான். அவர்களை இன்று கதிரைகளில் ஏற்றி மக்களின் தலைவர்கள் என்று விட்டிருக்கிறான். இந்த அரசியல்வாதிகளால் தான் எங்கள்சமூகம் சீரழிகிறது. 

வழிபாட்டிடங்களில் மக்கள் இல்லை, சனசமூக நிலையங்களில் மக்கள் இல்லை, தெருக்களிலும் மக்கள் இல்லை. ஆனால் மக்கள்நேயம் மிக்கவர்கள் திரும்ப இதனைக் கையில் எடுக்க வேண்டும். ஒருபக்கம் அரசியல்வாதிகளின் தொந்தரவு இருக்கும். இன்னொரு பக்கம் இருக்கும் சோகம் என்னவென்றால் மத்தியதர வர்க்கம் மேற்கத்தேயக் கல்வியில் மூழ்கிப் போய் இருக்கிறது. அவர்களுக்கு இந்த பண்பாட்டு வேலையின் வலிமை தெரியாது. பண்பாட்டு வேலையின் முக்கியத்துவம் தெரியாது. அந்த சவால் எங்களுக்கு உள்ளது.  

ஆனால் நாங்கள் மக்கள் மத்தியில் சென்று மக்களை சந்திக்கின்ற போது அவர்கள் இதில் உற்சாகப்படுகின்றார்கள். அவர்கள் திரும்ப கூடுகின்றார்கள். மக்கள் இதனை விரும்புகிறார்கள். சனத்திடம் மறைந்து கிடக்கின்ற அந்த ஓர்மை, மனிதம், சுதந்திரத்தின் மீதான அவா, இவற்றைக் காண வேண்டும் என்று ஆசைப்படுகின்ற அந்த ஆசையும் எங்களுக்கு ஒரு நம்பிக்கை ஊட்டுகின்ற விடயங்கள்.

நுகர்வுப் பொருளாதாரம் சிறிய இனங்கள் மீது சிறிய நாடுகள் மீது ஒரு பெரும் சுமையாக திணிக்கப்பட்டு வருகிறது. பணத்தேவையின் காரணமாக மக்களை ஏமாற்றுவது மக்களை மதிக்காமல் நடப்பது போன்ற விடயங்கள் உள்ளன. நாங்கள் இந்த அரங்கை நடத்திய போது நேற்று ஒரு பெண் கூறினார், எல்லா இடமும் ஊழலும் லஞ்சமும் பெருகி உள்ளன. இதை நாங்கள் வெளிப்படையாக கதைத்தால் மற்றவர்கள் வந்து எங்கள் கழுத்தை அறுப்பார்கள் என்று கூறினார்.

எல்லா இடங்களிலும் மக்கள் வருந்துகிறார்கள். தங்கள் குரலைக் காட்ட முடியாமல் தவிக்கிறார்கள்.  அந்தக் குரலைக் காட்ட வைப்பதற்காக அவர்களைப் பேசவைப்பதற்காக அவர்களை மற்றவர்களோடு சேர்ந்து கதையாட வைப்பதற்காகத் தான், நாங்கள் இந்த அரங்கை ஊர்கள் தோறும்நடத்தி வருகின்றோம். 

உண்மையிலேயே இன்றைக்கு உள்ள நிலைமை என்னவென்றால், மக்கள் கூடாமல் இருப்பது. அல்லது மக்கள் வீடுகளுக்கு வெளியில் வராமல் இருப்பது. மக்களுக்கு எந்த நிகழ்ச்சியின் மீதும் நம்பிக்கையில்லை. இது ஒரு அலுப்பான விஷயம். எங்களுக்கு ஏதோ புத்தி சொல்வதற்கு வருகிறார்கள். எங்களை அலுப்படிக்க வருகிறார்கள். என்று சொல்லி நிகழ்வுகளுக்கு வருவதில்லை.

மறுபுறம், தொலைக்காட்சியிலும், ஸ்மார்ட் போன்களிலும் மூழ்கி இருக்கின்ற நிலைமை தான் உள்ளது. நாங்கள் இதனை மக்கள் மத்தியில் சேர்ந்து நடத்துகின்ற ஒரு நிகழ்வாக, ஒரு கொண்டாட்டமாகவே நடாத்தி வருகின்றோம்.  

சமையலுக்காக இடத்தை உருவாக்கி பொங்கல் செய்கிறார்கள். இன்னொரு பக்கத்த்தில் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறாக இந்த நிகழ்ச்சி தொடங்க முதலே கொண்டாட்ட சூழ்நிலை மெல்ல மெல்ல ஆரம்பமாகிறது.  இது அவர்கள் மத்தியில் உற்சாகத்தைக் கொடுக்கின்ற போது, அவர்கள் இது பற்றி உரையாட தூண்டப்படுகின்றார்கள். இந்த அரங்கு அவர்களிடம் மறைந்துள்ள கூட்டு வாழ்க்கையை, கூட்டு உணர்வை, கூட்டாக செயல்படுவதை திருப்பிக் கொண்டு வருகிறது. மக்களே ஒன்றாக நின்று அவர்களே அதனை செயற்படுத்துவதாக அமைந்துள்ளது.

தெருவெளி அரங்கிலே ஒரு காட்சிவரும். அதில் போலி அரசியல்வாதிகள் வருவார்கள். அவர்கள் மக்களிடம் வந்து கையை நீட்டு காசு தருகிறோம் என்பார்கள். கையை நீட்டப் பழக்குவார்கள்.  நிகழ்ச்சி முடிந்த பிறகு ஒரு பெண் சொன்னார். அரசியல்வாதி கையை நீட்ட சொல்லி கேட்டபோது தன்னை அறியாமல் தன் கை நீள வந்ததாகவும்,   ஆனால், இன்னொரு கோடியில், நாங்கள் தமிழர்கள், எங்களுடைய தேசத்துக்காக போராடியவர்கள்.  நாங்கள் கை நீட்டமாட்டோம் என்று ஒரு இளைஞன் கூறிய போது நீண்ட கை உள்ளே போய் விட்டது என்று.  

கிராமங்களிலே இன்னும் மானிடத் தன்மை இருக்கிறது. அதனைக் காணுகின்ற போது மக்களுக்கு ஊக்கமாக இருக்கிறது. மக்கள் திரளாக கூடுகின்றதைப் பார்க்கும்போது, அவர்களிடையில் எவ்வளவு தான் அதிகார வர்க்கம், ஆளும் வர்க்கங்கள், பல் தேசிய நிறுவனங்கள் மனிதத்தை சிதைக்க முற்பட்டாலும்,  இந்த இளைஞர்களை சிதைக்க முற்பட்டாலும்,  அவர்கள் எழுந்து வருவார்கள் என்கிற நம்பிக்கையை இந்த நிகழ்ச்சி எங்களுக்கு தருகின்றது.

நிகழ்வு முடிந்ததும் சரஸ்வதி கிராமத்தை சேர்ந்த சரஸ்வதி சனசமூக நிலைய செயலாளரான சித்திரா தர்மலிங்கம் கருத்து தெரிவிக்கையில், 

பாரம்பரிய நாடகங்களோ, கிராமிய நாடகங்களோ இன்று அற்றுப் போன சூழ்நிலையில் கிராமங்கள் பெரும்பாலும் சினிமாவுக்கு அடிமையாகிப்போன நிலைதான் இருக்கிறது. மக்களுக்கு ஏற்கனவே அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் தெளிவு இருந்தாலும், கலைக்கு ஊடாக தெளிவுபடுத்தும் போதுகூடுதலாக மக்களை நோக்கிச் செல்லும். 

அதனை இங்கே நிதர்சனமாக காணக்கூடியதாக இருந்தது. மக்கள் பிரிந்து பிரிந்து நிற்காமல் எல்லோரும் ஒன்றாக நின்று சிறப்பித்து ஊர்கூடி இருந்த விதம் உண்மையிலேயே சந்தோசமாக இருந்தது. சினிமாவைவிட இப்படியான விழிப்புணர்வு நாடகங்களூடாக மக்களின் மனதில் மாற்றங்களை கொண்டுவர முடியும். எங்கள் கிராமம் கலைக்கு ஆதரவான கிராமம். கலைஞர்களை வளர்த்தெடுத்த கிராமம்,  எம் கிராமத்தில் நல்லது, கெட்டது நடந்தால் ஊரே கூடி நிற்கும்.  கடந்த சில நாள்களுக்கு முன்தான் சரஸ்வதி சனசமூகநிலையத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 50 பானைகள் வைத்து பொங்கினோம். ஊரே கூடி நின்றது.

நிகழ்வில் பங்கேற்ற உரும்பிராய் சிக்கன கடன் கூட்டுறவுச் சங்கத் தலைவரான இரத்தினம் அனுஷா கருத்து தெரிவிக்கையில், 

எங்கள் மக்கள் இப்படியான கலை செயற்பாடுகளுக்கு மிகவும் ஒத்துழைப்பு வழங்குவார்கள்.  உண்மையிலேயே எல்லோரிடமும் நல்ல உணர்வு இருக்கிறது. இன்று கோயில் திருவிழா நடந்து கொண்டிருந்தது. அப்படி இருந்தும் நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்வத்தோடு பங்கேற்று இந்த நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மகிழ்ச்சியளிக்கிறது. 

உரும்பிராய் வடக்கு கிராமத்தின் கிராம அபிவிருத்தி அமைப்பின் தலைவரான விஜிதன் கருத்து தெரிவிக்கையில், 

எங்கள் சமூகத்தில் இருக்கிற சில தலைமைகள் எங்களை தங்களுக்கு பகடைக்காயாக பயன்படுத்தும் நிலை தான் இன்று உள்ளது. அந்த சூழலில் இருந்து மக்களை விழிப்படைய செய்வதற்கான நல்லதொரு நிகழ்வை இன்று செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. யாருக்கும் அடி பணியாத நிமிர்வைக்கொடுக்கின்ற மக்களாக நாம் வாழ வேண்டும் என்கிற உணர்வை ஏற்படுத்துகிறது.

“உயர்ந்தவர்கள் நாமெல்லோரும் உலகத்தாய் வயிற்று மைந்தர் நசிந்து இனிக் கிடக்கமாட்டோம் நாமெல்லாம் நிமிர்ந்து நிற்போம். நாமெல்லாம்நிமிர்ந்து நிற்போம்”.

“ஒன்றாய் கூடி ஒன்றாய் பாடி, ஊர் உயர, உலகு உயர… ஊர் ஊராய் நாங்கள் பாடி வாறோம். ஊர் உயர நாங்கள் தேடி வாறோம். மனிதம் மீட்க பாடி வாறோம். மானிடம் நிமிர ஆடி வாறோம்.”

போன்ற வரிகள் நிகழ்வுமுடிந்து பல மணி நேரமாகியும் ஒலித்த வண்ணமிருந்தன. இது தான் ஒரு பண்பாட்டு செயற்பாட்டின் வெற்றி.

தொகுப்பு:  ஆதிரன்-

நிமிர்வு பங்குனி - சித்திரை 2020

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.