எமது கடல் இறைமையை எவருக்கும் தாரை வார்க்க முடியாது (Video)

 


இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்து வருகின்றமை தொடர்கதையாகி வருகிறது. 

இந்தியாவின் சில அரசியல்வாதிகளும், பெரு முதலாளிகளும் படகு முதலாளிகளாக இருந்து கொண்டு மீன்பிடி தொழிலாளிகளை இலங்கை கடற்கரைக்கு சென்று மீன்பிடித்து வருமாறு விரட்டுவதாகவும் இதனால் எமது மீனவர்களின் பெறுமதி மிக்க வலைகள் அறுக்கப்படுவதுடன், எமது மீன்வளமும், மீன்களின் வாழிடங்களும் அடியோடு அழிக்கப்பட்டு வருகின்றது. இதனால் சிறிய படகுகளில் இன்றும் மீன்பிடித்து வரும் எமது மீனவர்கள் தொடர்ந்தும் வறுமையில் சிக்கி வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றது. 

அத்துமீறிய மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்து விட்டு இந்திய மீனவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்பது தான் எமது மீனவர்களின் நிலைப்பாடாக இருக்கின்றது. 

இரு நாடுகளுக்கும் கடல் எல்லை இருக்கிறது. இந்திய கடலோர காவற்படை இருக்கிறது. இலங்கை கடற்படையும் இருக்கிறது. ஆனால் இவர்களால் எல்லையில் வைத்து மீனவர்களை திருப்பி அனுப்ப முடியவில்லை. 

யுத்த காலப்பகுதியில் கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக  எமது மீனவர்கள் இலங்கை கடற்படையின் பல்வேறு உயிர் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி இருந்தனர். இதனால் மீன்பிடியை அன்று பெரிதாக மேற்கொள்ள முடியாத நிலை இருந்தது. 

போர் முடிவடைந்த பின்னர் தென்னிலங்கை மீனவர்கள் ஒரு புறம் எமது கடல் பகுதிகளை ஆக்கிரமிக்க மறுபுறம் இந்திய மீனவர்கள் எமது கடற்கரையை அண்டி ரோலர் படகுகளில் வந்து மீன்களை அடியோடு அள்ளிச் செல்லும் நிலையால் எமது மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு தரப்பினராலும் எம் தாயக மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

எமது தாயக நிலப் பிரதேசங்களை எவ்வாறு இலங்கையின் தொல்லியல்  துறை ஆக்கிரமித்து வருகிறதோ, அதே போன்று எமது கடல் பிரதேசங்களை ஆக்கிரமித்து தொழில் புரிய தென்னிலங்கை மீனவர்களுக்கு நீரியல் வளத் திணைக்களம் அனுமதிகளை எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி கொடுத்து வருகின்றது. எமது மீனவர்கள் அட்டை பிடிப்பு தொழில் செய்ய அனுமதி மறுக்கப்படுகின்றது.  

இந்நிலைமை இப்படியே தொடர்ந்தால் எம் அடுத்த தலைமுறைக்கு கடலில் எந்த வளங்களும் இருக்காது. எமது பகுதியில் சங்கம், சமாசம் என்று ஏராளம் அமைப்புகள் இருந்தும் அவற்றால் ஒரு பயனும் இல்லை என சொல்கிறார் மூத்த கடலோடி அண்ணாமலை. 

எமது கடல் இறைமையை எவருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்கின்றனர் எம் மீனவர்கள். 


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.