உலக வல்லரசுகளின் மும்முனைப் போட்டியில் தமிழர் பின்பற்ற வேண்டிய தந்திரங்கள்




2009 இற்குப் பின்பு ஈழத்தமிழரது மிதவாத அரசியல் தலைமைகளின் போக்கினை இலங்கை அரசாங்கம் உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் கையாண்டு வருகிறது.  யுத்தத்தில் விடுதலைப் புலிகள் தோற்றமையுடன் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை முடிவுக்கு வந்து விட்டதாக கணக்குப் போட்டுக் கொண்டு இலங்கையிலிருந்தும் புலம்பெயர் தளத்திலிருந்தும் சில எழுத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.  அதனைத் தமிழ் அரசியல் தலைமைகளில் சில தரப்பினரும் வெளிப்படுத்தி வருகின்றனர்.  இக்கட்டுரை ஈழத்தமிழர்களுக்குரிய முறியடிக்கப்படும் வாய்ப்புக்களை மீட்டெடுக்க பின்பற்ற வேண்டிய தந்திரங்களை வெளிக்கொண்டு வர முயலுகிறது. 

போர் முடிந்ததும் தமிழர்களின் அரசியல் அபிலாசை ஒன்றும் முடிவுக்கு வரவில்லை.  தமிழர்களின் அரசியல் பயணத்தில் தந்தை செல்வா ஒரு சகாப்தமெனின் இன்னோர் சகாப்தம் பிரபாகரன். அவர்கள் தமது  பணியை உரியகாலத்தில் தமக்குரிய பாணியில் நடாத்திவிட்டு சென்றுள்ளனர்.  இரண்டு தலைமைகளின் காலத்திலும் நடந்தவற்றை மதிப்பீடு செய்தால் இருவரிடமும் அவர்களுக்கே தெரியாத தவறுகள், சறுக்கல்கள், தோல்விகள், வெற்றிகள், சாதனைகள், எழுச்சிகள் நிகழ்ந்திருக்கும்.  அவற்றைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் ஈழத்தமிழரை ஒரு தேசிய இனமாக தக்க வைக்க இருவரும் முயன்று அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.  இரண்டுமே முடிவல்ல. ஒன்று இன்னொன்றின் ஆரம்பம் என்பது போல் அந்த இன்னொன்று மீண்டும் ஒன்றுக்கான ஆரம்பமாகும்.

அத்தகைய ஆரம்பமே தற்போதைய தலைமையிடமும், புலம்பெயர்ந்த சமூகத்திடமும், சிவில் அமைப்புக்களிடமும், ஒட்டுமொத்த ஈழத்தமிழ் சமூகத்திடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  புதிய உலக ஒழுங்கில் முதல் ஒரு தசாப்தத்தில் அமெரிக்காதான் நம்பர் ஒன்று.  செப்ரம்பர் 11 2001 தாக்குதலுக்கு பின்பு உலக ஒழுங்கில் பயங்கரவாதம் சில மாற்றங்களை ஏற்படுத்த அதனால் பொருளாதார வளர்ச்சியில் சீனா அமெரிக்காவைக் கடந்து போனது. அதன் பிரதிபலிப்பு 2008 செப்ரம்பரில் அமெரிக்க நிதி நெருக்கடிக்கும் பல்துருவ அரசியல் ஒழுங்குக்கும் வழிவிட்டது.  பல்துரவ அரசியல் ஒழுங்கின் முதல் நிகழ்வு ஈழத்தமிழர் மீது நிகழ்ந்தது.  அதுவே முள்ளிவாய்க்கால் தாக்குதலானது.  இன்று அது சிரியாவில் தொடர்கிறது.  எனவே இப்போது அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், இந்தியா, எதிர் சீனா, ரஷ்யா, ஈரான் என்ற ஒழுங்கொன்று வளர்ந்துள்ளது.  இந்த ஒழுங்கில் உள்ள இரண்டு தரப்பும் ஒன்றையொன்று விரோதிக்கும் அளவுக்கு வலுவடையவில்லை.  ஆனால் ஒன்றின் செல்வாக்கை தகர்க்க படைப் பிரயோகத்தை விட மென்அதிகாரத்தை (Soft Power)  பிரயோகித்து வெற்றி காண்பதில் போட்டி முனைப்பாக நிகழ்கிறது.


அதில் இலங்கை அரசு இலாவகமாக, சூழலை கணக்குப்போட்டு அரசியல் அரங்கை சரியாகக் கையாளுகிறது.  இலங்கை மேற்குறித்த இரண்டு அணிகளையும் திருப்திப்படுத்திக் கொண்டிருப்பதை கடந்து இரண்டு முகாங்களிலும் அங்கம் வகித்து வருகிறது.  இது மிக ஆச்சரியமான, அதிசயமான சாகஜம்.  அதாவது ஒரே சந்தர்ப்பத்தில் சீனா பக்கமும் அமெரிக்கா பக்கமும் நகர்கின்ற திறனை கொண்டிருக்கின்றது.  இதனையே ஜெனீவாவில் இலங்கை தரப்பு வெளிப்படுத்தியது.

இத்தகைய விடயம் தமிழர்தரப்புக்கு நல்ல அனுபவமாக அமைய வேண்டும்.  இலங்கையின் அமைவிடம் மிக முக்கிய மூன்று சக்திகளை தொடர்ச்சியாகக் கவனம் செலுத்த வைத்துள்ளது. அமெரிக்கா இலங்கையை முழுமையாக கையாளவிரும்புகிறது.  இலங்கை அமைதியாக இருப்பதுடன் ஐக்கியத்துடன் காணப்பட வேண்டுமென விரும்புகிறது.  குறைந்தபட்சம் அரசியல் தலைமைகளாவது ஒன்றாகப் பயணிக்க வேண்டுமெனக் கருதுகிறது.  ஆதனால் தனது செல்வாக்கும் ஆளுகையும் உத்தரவாதப்படும் என நம்புகிறது.  அதன் மூலம் இந்து சமுத்திரத்தை தனது செல்வாக்கிலும் கட்டுப்பாட்டிலும் வைத்திருக்கலாமெனக் கருதுகிறது.  மேலும், இலங்கையில் அமெரிக்காவைத் தவிர வேறு சக்திகள் காலூன்றிவிடக் கூடாது எனவும் அமெரிக்கா கருதுகிறது.  இந்தியா கூட இலங்கை மீது எல்லையற்ற ஆக்கிரமிப்பை நிகழ்த்தி விடக்கூடாது என எண்ணி செயல்படுகிறது.

சீனாவின் நிலைவேறு. அது அமெரிக்காவுக்கு எதிரானது.  அது இந்தியாவுக்கு எதிரானது. சீனாவின் உத்தி தனித்துவமானது.  இலங்கையை இழந்தால் தான் பாதுகாக்க நினைக்கும் முத்துமாலை தகர்ந்து விடும் (String of pearls) என எண்ணுகிறது.  மேலும் புதிய பட்டுப்பாதையின் முக்கியத்துவமும்குறைந்துவிடும் என நினைக்கிறது.  முத்துமாலை நாடுகளும் அவற்றை இணைக்கும் பட்டுப்பாதையும்சீனாவின்பொருளாதாரத்தின் அடித்தளங்கள். அதனால் சீனாஇலங்கையைவிட்டுக்கொடுப்பற்றதேசமாகசொந்தங்கொண்டாடமுனைகிறது.  குறிப்பாகஅமெரிக்காவுக்கோ, இந்தியாவுக்கோ விட்டுக் கொடுக்காத இலங்கையாக அமைதல் வேண்டுமென விரும்புகிறது.

   இதில் இந்தியா மேற்குறித்த இரண்டு அரசுகளின் எண்ணங்களை தகர்ப்பது போலுள்ளது.  காரணம் இலங்கை அயல் நாடு.  பாதுகாப்பு எல்லையிலுள்ள நாடு.  கலாசாரத்தாலும், இன, மத தொடர்பினாலும் மிக நெருக்கமான உறவுள்ள நாடு. ஆகவே இலங்கை இந்தியாவிற்கே மட்டுமுரியது என கருதுகிறது.  அமெரிக்க-இந்திய உறவு பலமானதாக அமைந்தாலும் இலங்கை விடயத்தில் எத்தகைய பேரம்பேசலுக்கு உட்படுத்த முடியாதெனக் கருதுகிறது.

எனவே மூன்று வல்லரசுகளுக்கும் இலங்கை அவசியமானது.  இதனை விளங்கிக் கொள்ள அமெரிக்காவுக்கான தெற்காசிய நாடுகளுக்கான உதவி இராஜாங்க செயலாளராக பணிபுரிந்த நிஷா பிஷ்வாலின் கருத்து கவனிக்கதக்கது.  அவர் கொழும்பில் கடந்த ஆண்டு (2016,யூலை) ஆற்றிய உரையின் சாரம்.

• கடந்த இருபது மாதங்களில் ஆறாவது தடவையாக இலங்கை வந்துள்ளேன். (25 மாதத்தில் 7 தடவை) இதற்கான பிரதான காரணங்கள் அரசியல் ரீதியான ஒருங்கிணைவை ஏற்படுத்தவும், கட்சிகளை ஒன்றிணைத்து செயல்படுத்தவும், உண்மையான அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான நகர்வுகளை மேற்கொள்வதுமாகும்.

• நான் கொழும்புத் துறைமுகத்தை நேரில் பார்த்தேன்.  ஆசியாவில் மிகவும் செயல்திறன் மிக்க துறைமுகமாக இது உள்ளது.  கொழும்புத் துறைமுகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கை அதிகாரிகளுக்கு அமெரிக்கா தகுந்த பயிற்சியை வழங்கும்.  தெற்காசியாவின் முக்கிய கடல்சார் சேவை மையமாக இலங்கை மாற்றமடையும்.
       

இலங்கை சீனா உறவு தொடர்பில் வேறோர் தருணத்தில் இலங்கைக்கான சீனத் தூதுவர் யீ ஷயாங்லியாங் (Yi Xianliang) பின்வருமாறு குறிப்பிட்டார்

• இலங்கை சீனா உறவு நூற்றாண்டுக் கணக்கானது.  இராஜதந்திர உறவு65 ஆண்டுகளை கடந்துவிட்டது.  சூஎன்லாயும், சிறிமாவோ பண்டாரநாயக்காவும் இந்த உறவின் ஆரம்பகர்த்தாக்கள்.  அந்த உறவின் மிக உயரிய அம்சமாக 2014 செப்ரம்பரில் சீனா ஜனாதிபதி இலங்கைக்கு வந்தமை வரலாற்று உறவின் வெளிப்பாடாகும்.

• இரு நாட்டுக்குமான பொருளாதார வர்த்தக உட்கட்டமைப்பு உறவு தனித்துவமானது.  இதுவரை காலப்பகுதியில் இலங்கைக்கு 800 பில்லியன் ரூபா கடனையும் 200 பில்லியன் ரூபா அன்பளிப்பையும் சீனா வழங்கியுள்ளது.


• 21ஆம் நூற்றாண்டின் பட்டுப்பாதை திட்டத்தில் இணைவதன் மூலம் பிரகாசமான எதிர்காலத்தை இலங்கை மக்கள் அடையவுள்ளனர். கடல் மார்க்க பட்டுப்பாதையில் இணைவதன் மூலம் இரு நாடுகளது அபிவிருத்தி மூலோபாயங்களை உச்சளவில் பயன்படுத்திக் கொள்ள முடியுமென சீனத்தரப்பு கருதுகிறது.
 
இருவரது கருத்துகளிலிருந்தும் கடல்சார் முக்கியத்துவம் இலங்கைத் தீவுக்குரியது என்பது தெளிவாகிறது.

இதில் இந்திய தரப்பின் அணுகு முறைகள் சற்றுமட்டுப்பாடானவை தான். இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அடங்கிய குழுவை சந்தித்த போது தெரிவித்த விடயங்களை பார்ப்போம்.

 • 1987 உடன்படிக்கைக்கு பின்னர் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன.  ராஜீவ்காந்தி கொலை உட்பட பல்வேறு விடயங்கள் நடந்து முடிந்துள்ளன. அதனால் தற்போது நடைமுறைச்சாத்தியமாக எது முடியுமோ அதை செய்ய வேண்டும். அதற்கு ஏற்றவாறு மாற்று யோசனைகளை பரிசீலிப்பது புத்திசாலித்தனமாக இருக்கும்.

• இலங்கையில் நிகழ்பவற்றை வெறுமையாக இந்தியா பார்த்துக்கொண்டிருக்கமாட்டாது

இவை தமிழ்தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்த போது தெரிவித்த விடயங்கள்.  எனவே மூன்று சக்திகளையும் அவற்றின் நலன் சார்ந்த செயல்பாடுகளையும் இனங்காண முடிகிறது.

இம் மூன்று சக்திகளையும் இலங்கை அரசின் ஆட்சியாளர்கள் சளைக்காமல் எதிர்கொண்டு வருகின்றனர்.  அதற்கு பிரதான பங்காளிகளாக தமிழ் அரசியல் தலைமைகளும் காணப்படுகின்றன.  தமிழ் தலைமைகள் சரியான இடத்தில் சரியான விடயங்களுக்காக மக்களை முன்னிறுத்தி நகர்ந்தால் அனைத்து நாடுகளும் தீர்வை நோக்கி இலங்கை அரசை நகர்த்தும்.  இலங்கை ஆட்சியாளர்கள் வெளிநாட்டின் நிர்ப்பந்தம் இன்றி ஒருபோதும் தீர்வு பற்றி சிந்திக்க மாட்டார்கள்.  இலங்கையில் இனப்பிரச்சனைக்காக நின்று நிலைக்கும் ஒரு தீர்வு விடயம் 13 ஆவது திருத்தம் மட்டுமே. அதனை இந்தியாவே செயல்படுத்தியது. அந்நிர்ப்பந்தமின்றி இலங்கை அரசு செயற்படாது.

இன்னோர் தளத்தில் தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக போராடும் துணிவுடையவர்களாக மாறியுள்ளனர்.  அவர்கள் வீதியில் இறங்கியுள்ளனர்.  தமது பிரச்சனைக்கு தீர்வை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தரமாட்டார்கள் என்ற நிலையை மக்கள் உணர்ந்துள்ள போக்கையே இது காட்டுகிறது. எவ்வாறு ஜெனீவாவில் தமிழர் பிரச்சனையின் முக்கியத்துவம் உணர்ந்த அரசாங்கமும் சர்வதேசமும் ஒன்றிணைந்து செயல்படுகின்றனவோ அவ்வாறு தமிழ் மக்களுடன் ஒன்றிணைந்து அரசியல்வாதிகள் மட்டுமன்றி அனைத்து தரப்பும் உழைக்க வேண்டும்.  வடக்கு கிழக்கிலுள்ள துறைமுகங்கள், தந்திரோபாய நிலங்கள், வரலாற்று சின்னங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புக்குள் அகப்பட்டுள்ளன.  அதனை அனைத்துத் தரப்பும் மக்களுடன் இணைந்து மீட்க வேண்டும்.  காணி மீட்பு, காணாமல் போனோரின் விபரம், கைதிகள் விடயம் தொடர்பான தொடர்ச்சியான போராட்டங்கள் சர்வதேசத்தின் கவனத்துடன் நிச்சயம் வெற்றி தரும்.

இலங்கைத்தீவு புவிசார் அரசியலில் முக்கியமானது.  அம்முக்கியத்துவம் தென் இலங்கைக்கு மட்டும் உரியதல்ல.  வடக்கு கிழக்குப் பகுதிக்கும் உரியது.  ஆதனை சோரம் போவதன் மூலம் பலியிடுவதை தவிர்த்துக் கொள்வது தமிழருக்குரிய தந்திரோபாயமாகும். எப்போதும் இலங்கை அரசாங்கத் தரப்பை எச்சரிக்கையுடனும், தந்திரமாகவும் கையாளக் கற்றுக் கொள்ளுவது அவசியம்.  விட்டுக் கொடுப்பற்ற நடவடிக்கை என்பதனை விட விட்டுக் கொடுப்புடனான இலாபங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.  ஜெனீவாவில் இரண்டு வருடம் கால நீடிப்புக்கு உடன்பட்டால் நான்கு வருடம் முன்னோக்கிச் செல்ல உழைப்பது அவசியம்.

ஜெனீவாவுக்கு பின்னரும் வெளிநாட்டு தூதுவர்களுடன் அடிக்கடி கலந்துரையாட வேண்டும். அவர்களிடம் தமிழர்களின் நிலையை எடுத்துக் கூற வேண்டும்.  சீனத்தூதுவர் உட்பட வெளிநாட்டு இராஜதந்திரிகளை அடிக்கடி சந்தித்து, தமிழ் மக்கள் கேட்கும் தீர்வுக்கு சாதகமாக அவர்களை இணங்க வைக்கும் முகமான உரையாடலை நடத்த வேண்டும். பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் கட்சித் தலைமைகள், புலம்பெயர் பங்காளர்கள் சிவில் அமைப்புக்கள் அத்தகைய வாய்ப்புக்களை ஏற்படுத்தி அவற்றைப் பயன்படுத்த வேண்டும். உலகவல்லரசுகளும் சிறிய தேசங்களும் அவ்வாறு உரையாடித் தான் வெற்றியை ஈட்டி வருகின்றன.

தமிழ் மக்கள் தமது தலைவர்கள் தமது பிரச்சனைக்கான தீர்வுகளை நோக்கி நகர வேண்டுமெனவே அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.  அவ்வாறு இல்லையெனின் தேசியக்கட்சிகளை தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்து இருப்பார்கள்.  அவர்களின் பின்னால் அவர்களுக்கு வாக்களித்த தமிழ் இனம் அவர்களுக்குப் பலமாகவும் அதேவேளை எதிர்பார்ப்புகளுடனும் உள்ளனர். இதனை உணருவது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் தலைவரினதும் கடமை.

சர்வதேசத்தைக் கையாளத் தவறினால் தமிழர் தேசிய அடையாளத்தை சிங்கள அரசு அழித்து விடும்.  மீளக்கட்டி எழுப்புவது கடினம்.  இப்படியே உரிமையும், சுதந்திரத்தையும் இழந்து அதிக காலம் வடக்கு கிழக்கு பூர்வீக நிலத்தை பாதுகாக்க முடியாது. அதனால் அரசியல் தலைமைகள் மட்டுமன்றி மக்கள் சிவில் அமைப்புக்கள் தனிப்பட்ட இலாபத்துக்காக உழைப்பதை விடுத்து அரசியலில் தமிழரின் அபிலாசைகளுக்காக போராடுங்கள்.  அகிம்சை ரீதியில் போராடுங்கள்.  ஒரே சம தளத்தில் பல உத்திகளை பிரயோகிக்க முயலுங்கள்.

கலாநிதி கே.ரி கணேசலிங்கம்
 நிமிர்வு பங்குனி 2017 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.