ஜெய்சங்கரின் அண்மைய இலங்கை விஜயத்தின் நோக்கம் என்ன?



இந்திய வெளியுறவுச் செயலாளர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்து திரும்பியிருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி என்பனவற்றினையும் அரசதரப்பையும் சந்தித்துப் பேசியிருக்கின்றார். அவர் வந்து சென்ற காலம் மிகவும் முக்கியமானது.

ஜெனிவா விவகாரம் ஒரு பக்கத்தில் சூடு பிடிக்கத் தொடங்கியிருந்தது. அரசாங்கம் கேட்கும் கால அவகாசம் தொடர்பாக பலத்த வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வந்தன. தமிழ் மக்கள் காணிப்பறிப்பு, காணாமல் போனோர் விவகாரம் என்பவற்றிற்காக ஆங்காங்கே போராட்டங்களை நடாத்திக் கொண்டிருந்தனர். பிலக் குடியிருப்பு மக்களின் போராட்டம் வெற்றியடைந்திருந்தது.   கேப்பாப்பிலவு போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தென்இலங்கையில் மகிந்தர் மீண்டும் பலம் பெற்று எழுச்சியடைந்து வருகின்றார்.

எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கைத் தீவினை மையமாக வைத்த வல்லரசுகளின் பனிப்போரும் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. தென்னிலங்கையில் சீனாவில் அதிகரித்த பிரசன்னத்தை இந்தியாவோ அமெரிக்காவோ விரும்பவில்லை.  இந்தியா அதனை அறவே விரும்பவில்லை. ஆனாலும் தாங்களும் இலங்கையில் செயற்படக்கூடியதாக இருக்கின்றது என்பதனாலும், தாங்களே உருவாக்கிய அரசாங்கம் என்பதினாலும் இந்தியாவும் அமெரிக்காவும் சகித்துக் கொண்டிருக்கின்றன.

இந்தியா வடகிழக்கிலாவது தன்னுடைய செல்வாக்கைப் பலப்படுத்தலாம் என நினைக்கின்றது. திருகோணமலையை மையமாக வைத்து வடகிழக்கு அபிவிருத்திக்கென திட்டங்களைச் செயற்படுத்த முனைகின்றது. இந்தச் சூழலில் தான் ஜெய்சங்கரின் பயணம் இடம்பெற்றுள்ளது. அவருடைய நோக்கம் மிகத் தெளிவானது. வடகிழக்கை முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதன் மூலம் இலங்கை மீது செல்வாக்குச் செலுத்துவது, தான் மேற்கொள்ள இருக்கும் வடகிழக்குச் சார்ந்த திட்டங்களுக்குத் தமிழ்த் தரப்பின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வது, தமிழ்த்தரப்பு அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்காமல் பார்த்துக் கொள்வது, அரசியல் தீர்வு என்ற பெயரில் ஏதாவது ஒன்றை நிறைவேற்றுவதற்கு அழுத்தம் கொடுப்பது என்பவையே அவையாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் போது அவர் இரண்டு விடயங்களை அழுத்தமாக குறிப்பிட்டார். ஒன்று கள நிலைமைக்கு வாய்ப்பான விடயங்களையே கோரிக்கையாக வைக்க வேண்டும். அவற்றினையும் எல்லாவற்றையும் ஒரேயடியாகக் கேட்காமல் முன்னுரிமைப்படி கேட்க வேண்டும் என்பதாகும். இதன்மூலம் சமஸ்டி, வடகிழக்கு இணைப்பு என்கின்ற கோரிக்கைகள் கள நிலைமைக்கு வாய்ப்பற்றவைகள் எனக் கூறி அவற்றை நிராகரித்தார். முன்னுரிமைக் கோரிக்கையாக அரசியல் தீர்வு பற்றிய இடைக்கால அறிக்கையை சுமந்திரன் கூறியதனால் அதனை ஏற்றுக் கொண்டு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகக் கூறினார்.

இதன் அர்த்தம் 13 தான். இடைக்கால அறிக்கை சமஸ்டியோ, வடகிழக்கு இணைப்போ அல்லாமல் ஆளுநர்களின் அதிகாரங்களைக் குறைத்து மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் கொடுப்பது பற்றியே குறிப்பிடுகின்றது.
உண்மையில் இந்தத் தீர்வுதான் இந்தியா- அமெரிக்கக் கூட்டு தமிழ்மக்களுக்கு சிபார்சு செய்துள்ள அரசியல் தீர்வு. துரதிஸ்டம் என்னவென்றால் சம்பந்தன் தலைமையும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளது என்பதே. இந்த அரைகுறைத் தீர்வைக் கூட அறிமுகப்படுத்துவதற்கு மகிந்தர் அணி தடையாக இருக்கின்றது என்பது தான் இந்தியாவினதும் அமெரிக்காவினதும் கவலைகள்.

இரண்டாவது தமிழ்த்தரப்பு தீவிர நிலைப்பாட்டை எடுத்தால் மகிந்தர் வந்து விடுவார். நீங்கள் விடயங்களை அவருடன் தான் கையாள வேண்டி வரும் என அச்சுறுத்தியமையாகும். இதனை இவர் மட்டுமல்ல இலங்கைக்கு வருகின்ற இராஜதந்திரிகள் மட்டுமல்ல. தென்னிலங்கையிலிருந்து வருகின்ற முற்போக்கு ஜனநாயக சக்திகள் எனத் தங்களைக் கூறிக் கொள்பவர்களும் கூறுகின்றனர்.  சிறு பிள்ளைகளை தாய்மார் பேய்வரும் என பயமுறுத்துவது போலத் தான் இது உள்ளது. மகிந்தர் வந்தால் உங்களால் எதையாவது பெற முடியுமா என்றும் ஜெய்சங்கர் கேட்டிருக்கின்றனர்.

இதனைக் கூறும் போது சம்பூர் அனல் நிலையத்திற்கு தமிழ்த்தரப்பு ஒத்துழைப்புத் தரவில்லை. எதிராக நின்றது என்பதையும் அவர்கூறத் தவறவில்லை. இது விடயத்தில் சம்பந்தன் தலைமையின் இரட்டை நிலைப்பாட்டிற்கும் ஒரு அடி கொடுத்தார். ஆனால் அபிவிருத்தித் திட்டங்களில்தமிழ்தரப்பையும் பங்காளியாக்குவது பற்றி அவர் எதையும் பேசவில்லை. இந்தியாவின் திட்டங்களை எந்தவித கேள்வியுமில்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அதிகாரத்தொனியே மேலோங்கியிருந்தது.

இங்கு இரண்டு விடயங்கள் முக்கியமானவை, ஒன்று அபிவிருத்தித் திட்டங்களில் தமிழ்த் தரப்பையும் பங்காளியாக்குவது. இரண்டாவது தமிழ்த் தேசத்திற்கு பாதிப்பு ஏற்படாத நிலையில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வது.

இலங்கையின் கள யதார்த்தம் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் சீனாவின் ஆதிக்கத்தை அகற்ற முடியாது என்பதே. சீனாவை அகற்றினால் இலங்கையின் பொருளாதாரமே வீழ்ச்சியடைந்து விடும் என்ற நிலையே உள்ளது. பொருளாதாரக் காரணிகளுக்கு அப்பால் மகிந்தரின் எதிர்ப்புக்களை சமாளிக்கவும் நாம் அமெரிக்க- இந்தியாப்பக்கம் முழுமையாகச் சாயவில்லை என்பதைக் காட்டவும்; சீனாவுடன் நல்லுறவைப் பேண வேண்டிய கட்டாய நிலை மைத்திரி ரணில் அரசாங்கத்திற்கு உள்ளது.

அதேவேளை இந்திய- அமெரிக்கக் கூட்டுடனான உறவிற்கும் முக்கியத்துவம் கொடுக்க விரும்புகின்றது. சுருக்கமாகக் கூறினால் இந்திய அமெரிக்கக் கூட்டிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு சமநிலையைப் பேண மைத்திரி- ரணில் அரசாங்கம் விரும்புகின்றது எனலாம். இதன் அர்த்தம் இந்திய- அமெரிக்க கூட்டின் பொம்மையாக வரத்தயாரில்லை என்பதே. இதன் நிமித்தம் வடகிழக்கில் குறிப்பாகத் திருகோணமலையில் இந்தியாவின் செயற்திட்டத்திற்கு மைத்திரி- ரணில் அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்தியா வடகிழக்கினை முழுமையாக தன் செல்வாக்கின் கீழ் வைத்திருக்க விரும்புகின்றது. வடகிழக்கின் செல்வாக்கினை பேண வேண்டும் என்றால் தமிழ்த்தரப்பின் ஒத்துழைப்புத் தேவை. ஜெய்சங்கர் அதனைக் கோரி நின்றார். இங்கே எழும் கேள்வி இந்த ஒத்துழைப்பு என்பது வெற்றுக் காசோலையில் கையொப்பமிடுவதாக இருக்க வேண்டுமா என்பதே.  இங்கே தான் முன்னரே குறிப்பிட்டது போல இந்தியாவின் திட்டங்களில் தமிழ் மக்களையும் பங்காளியாக்குவது, தமிழ்த் தேசத்தைப் பாதிக்காத திட்டங்களை மேற்கொள்வது என்பன முக்கியமானவையாகும.;
முதலாவது விடயம் தமிழ் மக்களின் சுயமரியாதையுடன் தொடர்புடையது. இந்திய அரசாங்கமும் சிறிலங்கா அரசாங்கமும் மட்டும் இணைந்து செயற்படும் திட்டங்களை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. இரண்டாவது தமிழத் தேசத்தை பாதிக்கின்ற திட்டங்களை தமிழ் மக்களினால் ஏற்றுக் கொள்ள முடியாது.
சம்பூர் அனல் மின்நிலையம் தொடர்பாக தமிழ் மக்களுடன் எந்த கலந்தாலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்திய அரசும் சிங்கள அரசும் தங்களுக்குள் மட்டும் பேசி உருவாக்கிய திட்டம் அது. தமிழ் மக்களுக்கு
எந்தப்பங்கும் இருக்கவில்லை. அது தவிர தமிழ்ப்பிரதேசத்தை சூழலியல் ரீதியாகப் பாதிக்கும் திட்டம். தமிழ்ப்பிரதேசத்தை அழிக்கும் திட்டத்தை தமிழ் மக்களினால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

வடகிழக்கு இணைப்பு விவகாரம் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. இந்தியா இப்பொறுப்பிலிருந்து கழர முயற்சிப்பது பெரிய நாட்டிற்கு நல்லதல்ல. இலங்கை- இந்திய ஒப்பந்தம் தற்போதும் அமுலில் இருப்பதாகத் தான் இந்தியா கூறுகின்றது. இலங்கை அரசாங்கத்திற்கும் அது தொடர்பான அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றது. ஆனால் அதிலுள்ள முக்கியமான விடயத்திற்கு அழுத்தம் கொடுக்கப் பின்நிற்கின்றது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை வட- கிழக்கு இணைப்பு என்பது தமிழ் மக்களின் கூட்டிருப்பையும் கூட்டுரிமையையும் கூட்டடையாளத்தையும் பேணுவதற்கு தவிர்க்க முடியாத ஒன்று. இணைந்த வடகிழக்கில் முஸ்ஸீம்களின் பங்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பாக அவர்களுடன் பேசுவதற்குத் தமிழ் மக்கள் தயாராக இருக்கின்றனர்.  அவர்கள் சம்மதிக்காவிட்டால் வடகிழக்கிலுள்ள தமிழ்ப்பிரதேசங்களை நிலத்தொடர்பற்ற வகையிலாவது இணைத்து தாயக ஒருமைப்பாட்டை பேணுவது அவசியமானது. சம்பந்தன் தலைமை இதனை இந்தியத்தரப்பிடம் தெளிவாக முன்வைத்திருக்க வேண்டும்.

வடக்கு- கிழக்கு இணைப்பு விவகாரம் இந்திய நிலையிலிருந்து பார்க்கும் போது கூட இந்தியாவிற்கு சாதகமானது. தென்னிலங்கையில் இந்தியாவிற்கு இடமில்லை. வடகிழக்கில் மட்டும் தான் இடமிருக்கின்றது. இணைந்த வடகிழக்கு இருக்கும் போது மட்டுமே இந்தியாவினால் அங்கு தனது செல்வாக்கினை உயர்த்திக் கொள்ள முடியும்.  இந்தப்பலத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு தெற்கு நோக்கியும் நகரமுடியும்.

தெற்கில் மலையக மக்களையும் அரசியல் ரீதியாகப் பலப்படுத்தினால் அங்கும் தனது செல்வாக்கினை உயர்த்திக் கொள்ள முடியும். தமிழ் மக்களையும், மலையக மக்களையும் பலவீனமாக வைத்துக் கொண்டு இந்தியா ஒரு போதும் இலங்கையில் ஆதிக்கம் செலுத்த முடியாது. சிங்களத்தரப்பு இந்தியாவை ஒரு மரபு ரீதியான எதிரியாகவே பார்க்கின்றது.  இதனால் ஒரு போதும் அங்கிருந்து இந்தியாவிற்கு ஆதரவு கிடைக்கப் போவதில்லை. இந்த உண்மை இந்தியக் கொள்கை வகுப்பாளர்களுக்கு தெரியாதென்றும் கூறிவிடமுடியாது. அவர்கள் தெரிந்து கொண்டுதான் எல்லாவற்றையும் செய்கின்றனர். இதில் கவலைக்குரிய விடயம் என்னவெனில் இவர்களின்; தோல்விகளால் உயிர் உடைமை இழப்புக்களை அடைவது எம்நாட்டில் வாழும் பல்லின மக்களே.

அரசியல் தீர்வு பற்றிய உபகுழுக்களின் அறிக்கைகளை வைத்துக் கொண்டு அரசியலமைப்புப் பேரவை ஒரு இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. அந்த அறிக்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக சித்தார்தன் தலைமையிலான உபகுழுவின் அறிக்கையே முன்வைக்கப் போகின்றது. வட- கிழக்கு இணைப்பு இல்லாமல் சமஸ்டியும் இல்லாமல் மகாணசபைகளுக்கு காணி பொலிஸ் அதிகாரம் கொடுப்பது போல ஒரு தோற்றம் தெரிகின்ற தீர்வே அரசியல் தீர்வாக முன்வைக்கப்படப்போகின்றது.

இதில் இரண்டு விடயங்கள் முக்கியமானது. ஒன்று ஒற்றையாட்சிக்கட்டமைப்பை மாற்றாதாவரை மத்திய அரசு சிங்கள பௌத்த அரசாகவே இருக்கப்போகின்றது. மத்திய அரசு சிங்கள பௌத்த அரசாக இருக்கும் வரை எந்த அதிகாரப்பகிர்வை வழங்கினாலும் அது ஒரு போதும் நடைமுறைக்கு வரப்போவதில்லை.

இரண்டாவது விடயம் வடக்கு-கிழக்கு பிரிக்கப்பட்ட நிலையில் மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் கிழக்குத் தமிழ் மக்களுக்கு அது பாதகமானதாகவே அமையும். அங்கு தமிழ்த்தரப்பு அதிகாரமற்ற தரப்பு. தனித்து தமிழ் மக்கள் கிழக்கு மாகாணசபையின் அதிகாரத்தைப் பெறும் நிலையும் அங்கு இல்லை. அதிகாரமற்ற நிலையில் அதிகாரங்களைப் பெறும் சிங்கள, முஸ்ஸீம் தரப்புகள் தமிழ் மக்களைப் புறக்கணிக்கவே முயற்சிக்கும். இது கிழக்கு தமிழ் மக்களின் நிலையை இன்றுள்ளதைவிட மிகவும் மோசமானதாகவே மாற்றும்.

புதிய தீர்வு யோசனை தமிழ் மக்களை முன்னரை விட மோசமான நிலைக்குத் தள்ளப்போகின்றது. இங்கு எழும் முக்கிய கேள்வி தமிழ்த்தரப்பு என்ன செய்யலாம் என்பதே. இந்திய அணுகுமுறை தவறானது. அது தமிழ் மக்களின் அபிலாசைகளை ஒரு போதும் தீர்க்கப் போவதில்லை என்பதை இந்திய அரசிற்கு மிக அழுத்தமாகச் சொல்ல வேண்டிய பொறுப்பு தமிழ்த்தரப்பிற்கு உண்டு. தேசம், இறைமை, சுயநிர்ணயம், சமஸ்டி என்ற அடிப்படையிலேயே தீர்வு அமைய வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டும்.

இந்தியா தன்னை மாற்றிக் கொள்ளவில்லையென்றால் தமிழ் மக்களின் ஒத்துழைப்பு இந்தியாவிற்குக் கிடைக்காது என்பதையும் கூற வேண்டும். இதன் முதற்கட்டமாக பரந்துபட்ட தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப் படக்கூடிய தீர்வுத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு யோசனைகள் இதற்கான தொடக்கப் புள்ளியை வழங்கியுள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் அதனைப் பேசுபொருளாக்கி அது பற்றிப் பொதுக்கருத்தினை உருவாக்க வேண்டும். அந்தப் பொதுக்கருத்தினை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்.

இந்திய மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கவல்ல சக்தியாக இருப்பது தமிழகம் தான். எனவே தமிழக மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு யோசனையை பேசுபொருளாக்க வேண்டும். இது விடயத்தில் நிலம், புலம், தமிழகம் என்பவற்றிற்கிடையே ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் தேவை. தமிழ் மக்களுக்கு இது கஸ்டமான காலம் தான். எனினும் அதனைக் கடந்து தான் ஆக வேண்டும்

சி.அ.யோதிலிங்கம்-
நிமிர்வு பங்குனி 2017 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.