தமிழ் சிவில் சமூகம் – பொறுப்புக்களும் போதாமைகளும்


சிவில் சமூகம் என்பது பொதுமக்களின் கருத்துக்களை வெளிப்படுத்தும் அரசு சாராத பொது அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களின் தொகுப்பாகும்.

அரசாங்கத்துறை வணிகத்துறை என்பவற்றுக்கு புறம்பாக இவை இயங்குகின்றன. அறிவார்ந்த சமுகத்தின் அமைப்புக்கள், செயற்பாட்டுக்குழுக்கள், உதவிகள் செய்யும் தொண்டு நிறுவனங்கள், கழகங்கள், சனசமூக நிலையங்கள், நுகர்வோர் அமைப்புக்கள், கூட்டுறவுச்சங்கங்கள், நிதியங்கள், அரசு சார்பற்ற நிறுவனங்கள், தொழிலாண்மை அமைப்புக்கள், மத நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் போன்றவை சிவில் சமூக அமைப்புக்களுக்கு உதாரணங்களாகும்.

இவை தனித்தும் இணைந்தும் இயங்கும் போது அவற்றின் செயற்பாடுகளை நாம் சிவில் சமூக செயற்பாடுகள் என வரையறுக்கலாம். மக்களாட்சியின் மூன்றாவது சக்தி எனக்குறிப்பிடப்படும் சிவில் சமூகமானது ஒரு மக்களினத்தின் நல்லிருப்பிலே கணிசமான பங்கை ஆற்ற வல்லது. இத்தகைய சிவில் சமூகங்கள் சிறப்பாக இயங்குவதற்கு சுதந்திரமான செயற்பாட்டு வெளி ஒன்று சமூகத்தில் அவசியமானது. இவ்வெளி சுருங்கி அல்லது மூடி உள்ள சூழ்நிலையில் மிகச்சில அமைப்புக்களே மிகுந்த அழுத்தங்களுக்கு மத்தியில் இயங்க முயல்வதை அவதானிக்க முடியும்.

அந்த வகையில் தமிழ் சிவில் சமூகமும் கடந்த ஆட்சிக்காலத்தில் மிகப் பலவீனமானதாகவே இயங்கி வந்தது. ஆயினும் ஆட்சி மாற்றத்தின் பின்பு விரிவடைந்த சமூக வெளியைப் பயன்படுத்தி பல சிவில் அமைப்புக்கள் செயற்பாட்டு தளத்துக்கு முன்னேற முயலுவதை அவதானிக்க முடிகிறது. அவற்றுள் பெரும்பாலானவை நிதியங்களாக, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களாக, கழகங்களாகவே அமைவதையும் தமிழ் மக்களின் சமகால அரசியல் தேவைகள் பற்றிய புரிந்துணர்வு குன்றியவையாகவே காணப்படுவதையும் நாம் கருத்தில் எடுக்க வேண்டும்.

அரசற்ற ஒரு தேசமாகிய தமிழ்மக்களைப் பொறுத்தவரையில் அவர்களது உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய அரசியலை முன்னெடுக்க வேண்டிய தேவையிருக்கிறது. இதனை முதன்மையாக முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் அரசியல் தலைமைகளுக்கே உரியதாயினும் ஆட்சி மாற்றத்தின் பின்பு அவர்களுடைய அணுகுமுறை ஆட்சியாளர்களுடன் இணங்கிச்சென்று பெற்றுக் கொள்ளக்கூடியதை பெற்றுக்கொள்வோம் அல்லது பெற்றுக்கொள்ள வேண்டியதை பெற்றுக்கொள்லலாம் என்பதாகக் காணப்படுவதால் உரிமைகளை வலியுறுத்தி அழுத்தங்களைப் பிரயோகிக்கும் பெரும் பொறுப்பு ஒன்று தமிழ் சிவில் சமூகத்தின் தலையில் பொறிந்துள்ளது.

இந்தத் தேவையை நிறைவு செய்யக்கூடியவையாக தோன்றிய சிவில் அமைப்புக்களில் இரு அமைப்புக்களை நாம் முன்னிறுத்தி பேசலாம். முதலாவது தமிழ் சிவில் சமூக அமையம். இரண்டாவது தமிழ் மக்கள் பேரவை.


தமிழ் சிவில் சமூக அமையம்-
    2009ம் ஆண்டின் இறுதி பகுதியில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது. மிகக் கடினமான அழுத்தங்கள் நிறைந்த சூழலில் தனது பயணத்தை ஆரம்பித்த இவ்வமைப்பு இன்றுவரை தொடர்ந்து இயங்கி வருகிறது.

 தமிழ் மக்கள் பேரவை-
    ஆட்சி மாற்றத்தின் பின்னான அரசியல் சூழ்நிலையை தமிழ் மக்களின் நோக்கு நிலையிலிருந்து கையாளும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டது. சிறிது காலமாயினும் தாக்க வலுமிக்க சில செயற்பாடுகளை இது முன்னெடுத்துள்ளது.

ஆயினும் இவ்விரு அமைப்புக்களுக்கும் சில பொதுவான பலங்களும் பலவீனங்களும் உள்ளன. முக்கியமான பின்னடைவு இவற்றில் ஈடுபடும் அனைவருமே பெரும்பாலும் பகுதி நேர செயற்பாட்டாளர்களாகவே உள்ளனர். அதனால் அவற்றிடம் எதிர்பார்க்கப்படும் அளவுக்கு இயங்குவலு அற்றவைகளாகவே காணப்படுகின்றன. மேலும் தமிழ் மக்கள் பேரவையை பொறுத்தவரையில் போதிய அளவு பரவலாக்கப் படாததாக காணப்படுவதும் அவதானிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட தரப்புக்களின் பிரதிநிதித்துவம் இல்லாமை, சில பிரதேசங்களின் பிரதிநிதித்துவம் இல்லாமை என்பன அவதானிக்கப்படுகிறன. இந்நிலை தமிழ் மக்களுக்கான ஒரு பரந்துபட்ட தேசிய இயக்கத்தை கட்டியெழுப்புவது என்பதை தொடர்ந்தும் ஒரு எட்டாக்கனியாகவே வைத்திருக்கின்றது.

தற்போதுள்ள சூழ்நிலையில் நல்லாட்சியின் சாயம் முழுமையாக வெளுக்கும் வரை தமிழ் சிவில் அமைப்புக்கள் இயலுமானவரை ஒன்றிணைந்து சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அனைத்தின் மீதும் அழுத்தங்களை பிரயோகிக்க முயலுவதே சாத்தியமான ஒன்றாகத் தெரிகிறது. தமது போதாமைகளுக்கு அப்பால் இந்த வரலாற்றுப் பொறுப்பை நிறைவேற்ற தமிழ் சிவில் சமூக அமைப்புக்களால் முடியுமா என்பதே இன்றுள்ள வினாவாகும்.

அருட்தந்தை ரவிச்சந்திரன்- 
நிமிர்வு ஆவணி 2017 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.