மக்கள் முதலில் அரசியலில் தலையிட வேண்டும்


எம்மினத்தின் இளைஞர்கள் யுவதிகளிடம் எப்படி இருக்கிறது நாட்டின் நிலைமை என்று அரசியல் ரீதியாக நகைச்சுவையாகவேனும் ஒரு கேள்வியை கேட்டால், கேள்வியை கேட்பவருக்கு இளம் வட்டத்தினரால் பைத்தியக்காரர் பட்டம் சூட்டப்படவும் கூடும். இவர் கிடக்கிறார் பைத்தியக்கார் நாடு எக்கேடு கெட்டால் எனக்கென்ன? அரசியல் எனக்குத் தேவையில்லை என்று பதில் உதிர்த்து விட்டு அவர்கள் முகப்புத்தகத்தில் மூழ்கிவிடுவர். இப்படியானதொரு அரசியல் விழிப்பில்லாத இளைஞர் கூட்டத்தை தான் வடகிழக்கு மண் இன்று சுமந்து கொண்டு இருக்கின்றது. எம்மினத்தின் போராட்டத்தை பலர் எப்பொழுதுமே தூர வைத்தே பார்த்து வந்திக்கிறார்கள்.

தமிழர்களது சமூக இயங்கியலில் அரசியல் பேசுவது, பத்திரிகை வாசிப்பது, அரசியலை விவாதிப்பது என்பது முதியோர்களிற்கு உரிய ஒன்றாக கூட்டு உளவியல் கட்டியமைக்கப்பட்டிருக்கின்றது. அரசியலை புலமைசார் தளத்தில் புரிந்து கொண்ட சமூகமாக எம ;மக்கள் வளர்ச்சியடையவில்லை. அரசியலை தமிழ் மக்கள் கொல்லைப்புறத்தில் வைத்து தரிசித்து வந்துள்ளதை எம்மால் அவதானிக்க முடியும். தமிழ் மக்கள் அரசியலை உணர்வுசார் தளத்தில் இருந்து தான் அணுகி இருக்கிறார்கள். தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றக் கதிரைகளில் இருப்பவர்களின் தேர்தல் பேச்சுக்களை கால காலமாக கிரகித்து வந்தவர்களிற்கு இவ்வுண்மை இலகுவில் புலப்படும்.

2009 மே யின் பின்னர் விடுதலைப்புலிகள் களத்தில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் தலைமைப் பதவியை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எடுத்துக் கொண்டது. தமிழ் மக்களும் இன்று வரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் தான் அரசியல் தஞ்சம் புகும் இடமாக கண்டு வந்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தற்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தமிழர்களது அரசியல் அரங்கில் எதிர்க்கடை அரசியல் எப்பொழுதுமே பலமாகக் கட்டியெழுப்பப் பட்டிருக்கவில்லை. தமிழ் மக்கள் எப்பொழுதுமே ‘நீர் ஓடும் திசையில் பொம்மைக் கப்பல் விடுபவர்களாகவே’ இருந்து வந்திருக்கிறார்கள்.  மாகாண சபையிலும் சரி, உள்ளுராட்சி சபையிலும் சரி பலமான எதிர்க் கட்சியொன்று களமாடியிருக்கவில்லை. எதிர்க்கட்சியாக தமிழ் மக்கள் எதிர்த்தளத்தில் வைத்து பார்த்து வரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியே தொழிற்பட்டு வந்திருக்கின்றது. அக் கட்சி பெரும்பாலான மக்களின் ஆதரவைப் பெறாத நிலையில்; பொருளாதார உதவிகளை மட்டும் மக்களிற்கு செய்து களமாடியிருக்கின்றதே தவிர அக்கட்சி ஆட்சியில் இருக்கும் இலங்கை அரசின் ஏக பிரதிநிதிகளாக இருந்து அவைகளின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றியிருக்கின்றதே தவிர மக்கள் பக்கம் இருந்து தொழிற்பட்டதற்கான வரலாறு இல்லை.

அதே போல் 2009 இற்கு பின்னரான பாராளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பில் இருந்து விலகி எதிர்த்தளத்தில் பயணிக்க முனைந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கூட்டமைப்புக்கு மாற்றாக களமிறங்கியது. பலமானஅடியொன்றைவாங்கிக் கொண்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட புத்திஜீவிசார் தளத்தை அதிகளவில் கொண்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தோற்றுப் போனமைக்கு காரணம்  மக்களுடன் மக்களாக அவர்களின் அருகாமையில் முன்னணி இல்லாமல் போனது தான். முன்னணி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கும் போது மக்களுடன் இருக்கும். அதன் பின்னர் வெளிநாடுகளிற்குபறந்துவிடும்.

பெரும்பான்மை இனமொன்றினால் ஒடுக்கப்படும் சிறுபான்மை இனமாகிய எம்மிடத்தே அரசியல் ரீதியான பலத்த அறிவு தேவை. இலங்கைத்தீவில் தமிழர்களின் நிலைமை ‘பூனையிடம் இருந்து உயிர் தப்பிப்பிழைத்து பின்னர் பூனையின் வீட்டிலேயே தங்கி வாழும் எலியின் நிலைக்கு ஒப்பானது’ ஆக இவ்வாறான களமாடுதலிற்கு பலமான சுழியோடக் கூடிய புத்திஜீவித்தளத்தில் இருந்து செயற்படக்கூடிய இராஜதந்திரிகளே தேவை. ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தராதரத்தை பார்த்தால் அவர்கள் மக்களிற்கு கொஞ்சமும் கிட்ட இல்லாதவர்கள். மக்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் ‘அரசியல் அமைப்பு’ வரையும் வேளையில் அது குறித்த பதற்றமோ, களமாடுதலோ அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. வீடு கட்டுவதில் இருந்து தத்தம் பணிகளை கவனிப்பதில் காட்டும் சிரத்தை மக்களின் நிலைமையில் காட்டுவதாகக் காணோம்.

அரசியல் என்பது பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டு செய்யும் பகுதி நேர வேலை போன்று அல்லாதது. அது முழுநேர அளவில் மக்களிற்காய் தத்தம் வாழ்க்கையினை அர்ப்பணித்ததற்கு சமனானது. எங்கள் அரசியல்வாதிகள் படித்த பட்டதாரிகளையும், புத்திஜீவிகளையும் தமக்கு பக்கத்தில் வைத்துக் கொண்டு சில களமாடுதல்களை நிகழ்த்துகின்றனரே தவிர தமது சொந்தப்புத்தியின் பாற்பட்டு அரசியல் நகர்வுகளை செய்யவில்லை.

‘சோற்றுக்கு வழியில்லாத குடும்பத்தில் இருந்து பசியின் வலியை உணர்ந்த எவ்விளைஞனும் அரசியலிற்கு புறப்பட்டு வரவில்லை. மாறாக பண முதலைகள் தான் அரசியலிற்கு வரலாம்’ என்ற முறைமை தமிழர்களது அரசியலில் ஏற்பட்டமை தான் இங்கு அபத்தமானது. அரசியல்வாதிகள் தான் ஒரு இனத்தின் மீட்பராக இருக்க வேண்டியவர்கள். செயற்திறனற்ற, பசியில்லாத பணமுதலைகள் அரசியலிற்கு வந்தமை தான் மக்கள் அரசியல்வாதிகளை கொஞ்சமும் மதிக்காமல் விட்டதற்கான காரணமாகும். தேர்தலிற்கு மக்களை சந்தித்த பிறகு மக்களை நோக்கி வந்து அவர்களோடு நின்று களப்பணியாற்றிய அரசியல்வாதிகள் எம்மிடையே இல்லாமல் போனதும் ஒரு காரணமாகும். மக்களுக்கு அரசியல் தெளிவையூட்டி அவர்களை ஒன்றிணைத்து அவர்களுடைய போராட்டங்களுக்கு ஆத்மார்த்தமான அதேசமயம் புத்திஜீவித்தளத்திலான தலைமையை இவர்கள் வழங்கியிருந்தால் இந்நிலைமை வந்திருக்காது.

எமது மக்கள் முழுமையாக அரசியல் மயப்படுத்தப்படவில்லை. அரசியலை தீண்டத்தகாத ஒன்றாக அல்லது தமது சக்திக்கு அப்பால்ப்பட்ட ஒன்றாக, அல்லது தமக்கு சம்பந்தப்படாத ஒன்றாகத்தான் எமது மக்கள் நோக்கி வந்திருக்கிறார்கள்.  அரசியல் என்பது மக்கள் ஒதுங்கியிருந்து பார்ப்பது இல்லை. மக்கள் என்றுவரை அரசியலில் ஒதுங்கியிருக்க முற்படுகிறார்களோ அன்றுவரை மக்களை வைத்து விற்றுப் பிழைக்கும் வியாபாரிகள் இருக்கத்தான் செய்வார்கள். தங்கள் முட்டாள் தன்மையினை மறைக்க உயிர்ப்புள்ள, புலமையுள்ள இளைஞர்களை பணத்தினை வைத்து முட்டாள்களாக்கிக் கொண்டு தான் இருப்பார்கள். மக்கள் அரசியலை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இந்தியா ஏன் இங்கு முகாமிட்டு கலாசார நிலையத்தை கட்டுகிறது, இலவசமான உதவித்திட்டங்களை ஏன் வழங்குகிறது இதற்கு திறைமறைவில் இருக்கக்கூடிய நுண்ணரசியல் எத்தகையது, என்பவற்றை மக்கள் ஆராய்ந்து தெளியும் அறிவைப் பெறவேண்டும்.  தமக்குப் பிடித்தமான அரசியல் கட்சி திறமையில்லாத வேட்பாளரை தெரிவு செய்யும் போது எதிர்த்து குரல் கொடுக்க தயாராக எம்மக்கள் இருக்கவில்லை. அந்நடவடிக்கைக்கு எதிராக திறந்த வெளியில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்ததாகத் தெரியவில்லை. இங்கு தமிழர் மத்தியில் ஜனநாயகம் தூய்மையான மக்கள் பங்கேற்பு ஜனநாயகமாக கட்டியெழுப்பப்படவில்லை. அதற்கான வெளி இன்று வரை தமிழர்களது அரசியலில் வெளி இன்று வரை திறபடவுமில்லை.


எமது மக்கள் அரசியலில் பார்வையாளராக இருந்து பல கதைகள் சொல்பவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறான ஓரு சமூகத்தின் அறுவடை தான் இன்றைய இளைய ‘பேஸ்புக் போராளிகள்’.   இவர்கள் மேலோட்டமாக அரசியலை தெரிந்து தங்களது அடையாளங்களை மிகைப்படுத்தும் எழுதுநர்களாக இருக்கின்றார்களே தவிர அரசியல்வாதிகளை கேள்வி கேட்கக் கூடிய ஓர்மம் உள்ள இளைஞர்களாக இல்லை. அரசியலை சமூக மாற்றத்திற்கான கருவியாக விளங்கிக் கொண்டு எம்மக்கள் என்று தூய்மையான ஜனநாயக வெளிக்குள் பயணப்பட ஆரம்பிக்கின்றார்களோ அன்று தான் எமது இன விடிவிற்கான வெளிகள் திறக்கும்.

நாம் இந்தப்பாதையில் பயணப்பட ஆரம்பிக்க வேண்டும்.  அதற்கு முதற்கட்டமாக பல்கலைக்கழக மாணவர்கள் தமது சுயநலனை தவிர்த்து மக்கள் மீட்பிற்கான அரசியல் கட்சி அல்லது செயற்பாட்டு இயக்கமாக இருக்கக்கூடிய அமைப்பொன்றுடன் இணைந்து பயணிக்க தயாராக இருக்க வேண்டும். அதற்கு முன்னதாக மாணவர்களிடையே சிந்திப்பதற்கான வெளிகள் திறக்க வேண்டும். அதற்கு பரந்துபட்ட வாசிப்பும் சிந்திப்பதற்கான வெளிகளை திறக்கக்கூடிய புலமையுள்ள ஆசான்கள் தேவை. பாடப்புத்தகங்களை தாண்டி மாணவர்கள் வெளியில் வரவேண்டும் அதற்கு பெற்றோரிடையே அதற்கான வெளிகள் திறக்க வேண்டும்.

‘அரசியலில் நீங்கள் தலையிடவில்லை என்றால், அது உங்களின் வாழ்க்கையில் தலையிடும்’ என்ற லெனின் சிந்தனைக்கு தமிழ் மக்களின் இன்றைய கையறுந்த நிலை ஓர் எடுத்துக்காட்டு.  எமது வாழ்வியலில் புகுந்து விளையாடும் அரசியலிற்கும், அரசியல்வாதிகளிற்கும் எதிராக மக்கள் களமாட வேண்டுமானால் மக்கள் முதலில் அரசியலில் தலையிட வேண்டும.;

“வாருங்கள் தோழர்களே
  களமாடத் துணிவோம்!”

சரவணபவஆனந்தம் திருச்செந்தூரன்-
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்-

நிமிர்வு ஆவணி 2017 இதழ்- 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.