வலி சுமக்காத மேனியர்

   

   
வடமாகாணம் கல்வி நிலையில் கடந்த ஐந்து வருடங்களாக  9ஆவது மாகாணமாக இருந்து வருவது என்பது எமது கல்வியின் இருப்பைக் கேள்விக்குரியதாக்கியுள்ளது.   அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர பெறுபேறுகளின் முடிவின்படி வடமாகாணம் 9 ஆவது நிலையிலும் கிழக்கு மாகாணம் 8 ஆவது நிலையிலும் இருப்பதாகப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. அதற்கும் மேலாக,சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற முதல் 25 வலயங்களில் வடமாகாணத்தில் உள்ள எந்த ஒரு வலயமும் இடம் பெறவில்லை என்பது தான் வலியைத் தருகின்றது. 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பு இருந்த காலத்தில் முதல் ஐந்துக்குள் இருந்த வடமாகாணம் இன்று ஏன் இந்த நிலையை அடைந்து காணப்படுகின்றது என்பது பற்றி  கல்வித்துறை சார்ந்த எவருமே சிந்தித்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் எங்களுக்குள் கடந்த 5 வருடங்களாக ஒரு போட்டி நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் போல ஒரு நிலைமை காணப்படுகின்றது. ஒன்பதாவது இடத்தில் வடக்கா கிழக்கா முன்னிலை வகிப்பது என்ற போட்டியில் வடமாகாணம் தொடர்ந்து தனது நிலையைக் காப்பாற்றி வருகின்றது.

வடமாகாணம் கல்வியில் பின்னடைவைச் சந்தித்துள்ளது பற்றிய எமது கவலையை வடமாகாணத்தில் உயர் பதவி வகிக்கும் ஒரு கல்வி அதிகாரியிடம் தெரிவித்த பொழுது அவர் தெரிவித்த கருத்து மிக வேடிக்கையாகவும் நகைப்பாகவும் இருந்தது. அவர் “வடமாகாணம் கல்வியில் கீழ் நோக்கிப் போகவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது பற்றி ஊடகங்களும் சில அரசியல்வாதிகளும் தான் மிகைப்படுத்தி எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். எங்களுடைய பெறுபேறுகள் தொடர்ந்தும் 60 வீதத்திற்கு மேல்தான் இருக்கின்றன.” என்று நெஞ்சை நிமிர்த்தியபடி கூறினார். அப்பொழுது நான் அவரைப் பார்த்து “அதிர்ஸ்டவசமாக இலங்கையில் பத்து மாகாணங்கள் இல்லாமல் போய்விட்டது. அவ்வாறு இருந்திருந்தால் வடமாகாணம் கீழே போய் இருக்குமா அல்லது மேலே போய் இருக்குமா என்று நீங்கள் தான் கூறவேண்டும். வடமாகாணம் கீழே போகவில்லை என்று வைத்துக் கொண்டாலும்  மற்றைய மாகாணங்கள் மேல்நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன,”  என்று நான் கூறிய பொழுது அவருக்குச் சிறிது கோபம் வந்துவிட்டது.

அதேபோன்று யாழ்ப்பாண வலயத்தில் தான் அதிகூடியளவில்  119 மாணவர்கள்  9 ஏ எடுத்ததாகப் பெருமையுடன் கூறிய ஒரு கல்வி அதிகாரியிடம் யாழ் வலயத்தில் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்ற தேசியபாடசாலைகளான வேம்படிமகளிர் கல்லூரியில் 52மாணவர்களும,; யாழ் இந்துக் கல்லூரியில் 36 மாணவர்களும், திருக்குடும்பக் கன்னியர் மடத்தில் 3 மாணவர்களுமாக  91 மாணவர்கள் 9 ஏ சித்தி பெற்றிருக்கின்றார்கள.; அதேவேளை இப்பாடசாலைகளில் கூட 50 வீதத்திற்கும் குறைவானவர்களே 9 ஏ சித்தியடைந்ததனர் என்பது வேறு விடயம். அதுவும் புலமைப் பரிசில் பரீசையில்  வெட்டுப் புள்ளிக்கு மேலாகவே பெற்ற மாணவர்களை இந்த தேசிய பாடசாலைகள் உள்வாங்கித் தமது கற்றல் செயற்பாட்டை மேற்கொள்ளும் பொழுது ஆகக் குறைந்தது 75 வீதத்திற்கும் அதிகமான மாணவர்களை அல்லவா அவர்கள் 9 ஏ சித்தி பெற வைத்திருக்க வேண்டும்.

மேலும் யாழ்ப்பாண வலயத்தில் இந்த மூன்று தேசிய பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி தொடர்பாக யாழ் வலயம்  எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது யாவரும் அறிந்த விடயமே. அவர்களுக்கு எந்த வகையிலேனும்  வழிகாட்டல்கள் மற்றும் பின்னூட்டல்கள் வழங்கப்படாத நிலையில் தேசியப்பாடசாலைகளின் பெறுபெறுகளுக்கு மாகாணக்  கல்வித் திணைக்களம் உரிமை கோரமுடியாது. இந்த நிலையில்  தேசியப் பாடசாலைகளின் பெறுபேறுகள் தவிர்த்து விட்டு நோக்கினால் யாழ்வலயத்தில் 30 மாணவர்களே 9 ஏ சித்தியடைந்தனர் என்ற உண்மையை ஒவ்வொருவரும் எற்றுக் கொண்டு அதற்கான பரிகார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்..

இலங்கையின் மூளை என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் இன்று என்ன நிலையில் இருக்கின்றது என்பதைக் கல்வி அதிகாரிகளும் அதிபர்களும் கல்விச் செயலாளரும் மாகாணக் கல்விப் பணிப்பாளரும் தான்  சிந்திக்க வேண்டும்.  மாகாணரீதியில் பார்க்கப் போனால் முதலாவது இடத்தில் வடமராட்சி வலயமும், இரண்டாவது நிலையில் வவுனியா தெற்கு வலயமும் மூன்றாவது நிலையில் யாழ் வலயமும் இருக்கின்றது என்பதையும் ஏற்றுக் கொள்ளவேண்டும். மேலும் யாழ்ப்பாண மாவட்டம் கல்விப் பெறுபேற்றில 21 ஆவது மாவட்டமாக காணப்படுவது யாழ்ப்பாணத்தில் கல்வியுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் தலைக் குனிவை ஏற்படுத்திய ஒரு விடயமாகவே கருதப்பட வேண்டும்.

அந்த வகையில் 2016 க்குரிய ஒட்டு மொத்த க.பொ.த. சாதாரணதர பெறுபேறுகளை பகுப்பாய்வு செய்து பார்க்கும் பொழுது ஒருவித வலி உணரப்படும். இந்த வலியைச் சுமக்க வேண்டியவர்கள் இன்று மௌனமாக இருப்பது தான் கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் மட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த அட்டவணையின் படி வடமாகாணத்தில் 264 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்திபெற்றுள்ள அதே நேரத்தில் 779 மாணவர்கள் சகல பாடங்களிலும் சித்தி பெறத் தவறியமைக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? கல்வித் துறையின் அதி உச்சநிலையில் இருக்கும் மாகாண முதலமைச்சரா அல்லது கல்வி அமைச்சரா அல்லது கல்விச் செயலாளரா அல்லது மாகாணக் கல்விப் பணிப்பாளரா அல்லது சம்பந்தப்பட்ட வலயங்களின் கல்விப் பணிப்பாளர்களா அல்லது அதிபர்களா அல்லது சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களா அல்லது ஆசிரியர்களா என்பது தெரியவில்லை.  அதேவேளை தங்களுடைய சொந்தப் பிள்ளைகளை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற வைப்பதற்காகவும் க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் அதிகூடிய பெறுபேறுகளைப் பெற வைப்பதற்காகவும் இந்த நபர்கள் எடுத்து வரும் முயற்சிகள் வார்த்தைகளில் வடிக்க முடியாது.  ஆனால் இவ்வளவு பாரிய பொறுப்பைச் சுமந்து நின்று வடமாகாணத்தின் கல்வித் தரத்தை உயர்த்தி வடமாகாணத்தின் கொளரவத்தை நிலை நாட்ட வேண்டியவர்கள் அந்த வலியைச் சுமக்காது வாளாவிருப்பதை எவ்வளவு காலத்திற்குத் தான் வடமாகாண சமூகம் பார்த்துக் கொண்டு இருக்கப் போகின்றது…?

வடக்கு கிழக்கு மாகாணத்தில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலப் பகுதியில் பின்வரும் இடர்ப்பாடுகளை கல்வித்துறை எதிர்கொண்டிருந்தது:
1. பொருளாதாரத் தடை
2. கல்விஉபகரணங்கள்கற்றல் கற்பித்தல் சாதனங்களைஎடுத்துச் செல்வதற்கானதடைகள்
3. ஆசிரியர் பற்றாக்குறை
4.  புதிய கல்வி மறுசீரமைப்பு மற்றும் நவீன கற்றல் கற்பித்தல் முறைகள் தொடர்பான பயிற்சிகள் கொழும்பில் நடத்தப்படும் பொழுது அதில் பங்கு பற்றுவதற்கு யாழ்ப்பாணம் வன்னிப் பிரதேசங்கனளச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு       விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் இராணுவக் கெடுபிடிகளும்
5.  வகுப்பறைக் கட்டிடங்கள் ஆய்வு கூடங்கள் தளபாடங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் இன்மை
6. போக்குவரத்து வசதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள்
7.  இளம் ஆசிரியர்களும் உயர்தர மாணவர்களும் திடீர் சுற்றி வளைப்புக்களின் பொழுது கைது செய்யப்படுதல்

 இத்தகைய பாரதூரமான பாதகமான ஒரு சூழ் நிலையில் அரசியல்வாதிகளின் தலையீடுகள் இன்றி விடுதலைப்புலிகளின் அறிவுறுத்தல்களில் அன்று மிகச் சிறப்பாகச் செயற்பட்ட கல்வி அதிகாரிகள்,  சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் அதிபர்கள் இன்று பாடசாலைகளில் எல்லா வசதிகளும் அதிகரித்திருக்கின்ற நிலையிலும் எமது கல்வித் தரம் கீழ் நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றதையிட்டு ஏன் மௌனம் சாதிக்கின்றனர்?

வடமாகாணத்தினதும் கிழக்கு மாகாணத்தினதும்  கல்வியின் தரத்தை மேலும் உயர்த்த வேண்டும் என்ற துடிப்புடன் செயற்பட ஒவ்வொருவரும் முன்வரவேண்டும். அப்பொழுது தான் எமது குழந்தைகளின் இழந்து போய்க் கொண்டிருக்கும் கல்வியை மீளக் கட்டி எழுப்பமுடியும்.  அந்த வலியை எமது கல்விச் சமுகம் சுமப்பதற்கு முன்வருமா?

திரு.நடராஜா அனந்தராஜா –
(மூத்த கல்வியியலாளர்)
நிமிர்வு வைகாசி 2017 இதழ்


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.