ஐநா: றொகிஞ்ஞா முஸ்லிம்கள் ஈழத்தமிழர்


2017 தை 29 ஆம் திகதி மியான்மார் நாட்டின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு தலைவரான கொ நி (Ko Ni)  இந்தோனேசியாவில் தலைமைத்துவ பயிற்சிக் கருத்தரங்கை முடித்துவிட்டு மியான்மார் யாங்கொன் (Yangon)   சர்வதேச விமானநிலையத்தில் வந்திறங்கினார்.  மனித உரிமைகளுக்குப் போராடும் ஒரு பிரபலமான வழக்கறிஞரான இவர்  1982 ஆம் ஆண்டு அங்கிருந்த இராணுவ அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டு றொகிஞ்ஞா முஸ்லிம்களின் குடியுரிமையைப் பறித்த சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தவர்.  விமானநிலையத்தை விட்டு வெளியே வந்த கொ நி அங்கே மறைந்திருந்து வெளிப்பட்ட ஒரு கொலையாளியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  கொலையைச் செய்தவன் ஒரு பௌத்த தீவிரவாதி என அடையாளம் காணப்பட்டான்.  ஆனால் அவனின் பின்னால் தற்போதைய உள்துறை அமைச்சர் கியா சுவே (Kyaw Swe)    இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

ஏறத்தாள பத்தாண்டுகளுக்கு முன் 2006 கார்த்திகை 10ஆம் திகதி கொழும்பில் அலுவலகத்திற்கு தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ் வழியில் காத்திருந்த ஒரு கொலையாளியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  ரவிராஜ் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஒரு தலைவரும் பிரபலமான வழக்கறிஞருமாவார். இலங்கையில் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை வன்மையாகக் கண்டித்தவர்.  இக்கொலைக்குப் பின்னால் அப்போதிருந்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இலங்கையின் வடக்கு கிழக்கில் தமிழர்கள் செறிவாக வாழ்வதைப் போல மியான்மாரின் மேற்குப் பகுதியிலுள்ள ராகின் மாகாணத்தில் ஏறத்தாழ ஒரு மில்லியன் றொகிஞ்ஞா முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.  1982 ஆம் ஆண்டு மியான்மாரின் இராணுவ அரசாங்கம் அவர்களின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது. 2012ஆம் ஆண்டு பௌத்த பெரும்பான்மை மக்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரங்களால் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.  ஒரு இலட்சம் பேர் இருப்பிடங்களை இழந்து இன்னும் எந்தவிதமான அடிப்படைவசதிகளுமின்றி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.   அவர்களது சுதந்திரமான நடமாட்டமும் செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன.  மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் அண்டை நாடான பங்களாதேசில் தஞ்சமடைந்துள்ளனர்.2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் முன்னர் இருந்த இராணுவ அரசுக்குப் பதிலாக புதிய தலைவராக ஆங்சான் சூகி (Aungsan Suu Kyi)    தெரிவு செய்யப்பட்டார்.  பெருமளவு அதிகாரங்கள் இன்னமும் இராணுவத்திடம் இருந்தாலும் அதற்கான மாற்று ஜனநாயக  அரசின் தலைவராக இவர் பதவியேற்றார். மியான்மாரில் ஜனநாயகத்தை நிலைநாட்ட எடுத்த முயற்சிகளுக்காக சமாதானத்திற்கான நோபல் பரிசினை வென்ற இவர் இதுவரை றொகிஞ்ஞா மக்களின் குறைகளைத் தீர்க்க எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

இப்படி இருக்கையில் பௌத்தர்களின் கட்டுப்பாட்டிலுள்ள இராணுவம் றொகிஞ்ஞா முஸ்லிம் மக்கள் மீது கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செயல்களை கட்டவிழ்த்து விட்டுள்ளது.  இவற்றுக்கான ஆதாரங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிக்கிடக்கின்றன.  சர்வதேசப் பத்திரிகையாளர் இப்பிரதேசங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அழுத்தங்களினால் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட உள்ளக விசாரணைக்குழு  இனப்படுகொலை நடந்ததற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லை என அறிக்கையளித்தது.  ஐநா சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிக அமைப்பு றொகிஞ்ஞா மக்களுக்கு நடந்த மனித உரிமைமீறலை விசாரிக்க ஒரு சர்வதேச விசாரணைக்குழு அமைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியது.  இதற்குப்பதிலளித்த மியான்மாரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தாங் ருன் (Thaung Tun)    மியான்மாரில் எடுக்கப்படும் உள்ளக நடவடிக்கைகளே போதுமானவை எனவும் தமது நாட்டில் நடக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க ஆக்கபூர்வமான உதவிகளே தேவை, அழுத்தங்கள் அல்ல எனவும் தெரிவித்தார்.

2017 சித்திரை மாதம் லண்டன் பிபிசி க்கு அளித்த பேட்டியில் ராகின் மாகாணத்தில் இனச்சுத்திகரிப்பு நடக்கவில்லை என ஆங்சான் சூகி தெரிவித்தார்.  எமது நாட்டில் உள்நாட்டுப் பிரச்சனை உள்ளது. அதனைத் தீர்த்து வைக்க நாம் முயல்கிறோம்.  சர்வதேச ஊடகங்களின் அழுத்தங்களுக்குப் பணிந்து மியான்மாரில் வாழும் ஒரு (பெரும்பான்மை) சமூகத்தினரை தான் கண்டிக்க முடியாது எனக் கூறினார். வெளியுலகப் பத்திரிகைகள் சொல்வது போல் இராணுவத்தினர் இனவழிப்பில் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்தார்.

2015இல் இலங்கையிலும் ஒரு தேர்தல் நடந்தது.  சர்வதிகார மகிந்தவின் ஆட்சியை அகற்றி இங்கு வாழும் எல்லா இனத்தவர்களுக்கும் நல்லாட்சி வழங்குவதாகக் கூறிக்கொண்டு மைத்திரி பதவிக்கு வந்தார்.  அல்லது வரவைக்கப்பட்டார்.  இவர் பதவியேற்றபோது உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் நோபல் பரிசு வழங்காத குறையாக புகழாரங்கள் சூட்டப்பட்டன.  இவர் ஐநா மனித உரிமைக் குழுவினருடன் ஒத்துழைத்து தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளுக்குப் பொறுப்புக் கூறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.2016 தை மாதம் பிபிசிக்கு அளித்த பேட்டியில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரிக்க சர்வதேச நிபுணர்கள் தேவையில்லையென மைத்திரி தெரிவித்தார்.  உள்நாட்டு அரச விவகாரங்கள் பற்றி வெளிநாட்டவர் கவலைப்படத்தேவையில்லை எனவும் எந்தவொரு அழுத்தங்களுக்கும் பணிந்து தனது இராணுவத்தை சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த முடியாதெனவும் தெரிவித்தார்.

ஐநாவில் ஆதிக்கம் செலுத்தும் மேற்குலகநாடுகள் மியான்மாரில் நடந்த தேர்தலை வரவேற்றன.  ஆங்சான் சூகியின் வெற்றியைக் கொண்டாடின.  அவை இலங்கையிலும் நடந்த ஆட்சி மாற்றத்தை வரவேற்றன. மைத்திரியின் வெற்றியைக் கொண்டாடின.  மியான்மாரில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக ஆங்சான் சூகியின் அரசாங்கம் பாதுகாக்கப்பட வேண்டுமென எண்ணுகின்றன.  இல்லாவிடில் இராணுவம் மீண்டும் வந்துவிடும் என அஞ்சுகின்றன.  இராணுவத்தை நியாயப்படுத்தும் ஆங்சான் சூகி மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தயங்குகின்றன.  ஐநா மனிதஉரிமைக்குழுவில் இராணுவ அத்துமீறல்களுக்கு எதிரான கண்டனத்தீர்மானங்களுடன் நின்று விடுகின்றன. அதே போலவே இலங்கையிலுள்ள மைத்திரி அரசாங்கமும் பாதுகாக்கப்பட வேண்டுமென அவை விரும்புகின்றன.  இல்லாவிட்டால் சீனா சார்பான மகிந்தா மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவாரென அஞ்சுகின்றன.  இதற்காக மைத்திரி மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தயங்குகின்றன.  ஐநா மனித உரிமைக்குழுவில் கால அவகாசத்துக்கு மேல் காலஅவகாசம் வழங்குவதுடன் நின்று விடுகின்றன.

மொத்தத்தில் றொகிஞ்ஞா மக்களுக்கு நடப்பவை அப்படியே ஈழத்தமிழ் மக்களுக்கு நடந்தவை மீள நடப்பது போல தோன்றுகின்றன. மேற்குலகத்தைப் பொறுத்தவரை இவ்விரு இனங்களின் நலன்களை முன்னெடுப்பது தமது தேசிய நலன்களுக்கு எவ்வகையிலும் உதவப்போவதில்லை. ஐநா மனிதஉரிமைகள் அணியும் தன்னுடைய எஜமானர்களான அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஈழத்தமிழர், றொகிஞ்ஞா முஸ்லிம்கள் என இன்னும் பல ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைத் தொடர்ந்தும் பலியிட்டுக் கொண்டிருக்கிறது.  இவ்வணியின் இந்த இழிநிலை மாறி தனக்குரிய வரலாற்றுக் கடமையை இந்த அணி செய்யவேண்டும்.  இவ்வாறு நடக்காவிடின் இவ்வணியின் மீதான நம்பிக்கையை சிறுபான்மை மக்கள் இழந்துவிடுவர்.  பெரும்பான்மை அரசுகளின் அடக்குமுறைக்கும்  சிறுபான்மை மக்களுக்குமிடையே  இருக்கும் ஒரே ஒரு பாதுகாப்பு அரண் இது போன்ற ஐ.நா அணிகள் மட்டுமே.  இவ்வணிகள் தமது கடமையைச் செய்யாவிட்டால் சிறுபான்மை மக்கள் மேலும் மேலும் மூலைக்குள் தள்ளப்படுவர்.  இவ்வாறான நிலைமையில் றொகிஞ்ஞா மக்கள் இஸ்லாமிய அரசு (isis) போன்ற தீவிரவாத அமைப்புகளை நோக்கித் தள்ளப் படுவதைத் தவிர்க்க முடியாது.

லிங்கம்-
நிமிர்வு வைகாசி 2017 இதழ்No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.