யாப்பு; மத்தியஅரசுக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கும் இடையேயான உறவுகள்

     


 சர்வதேச அழுத்தங்களால் ஒரு புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கு மைத்திரி அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்தது. இதற்காக உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சபையின்  வழிப்படுத்தல்க் குழு பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தலைமையில் ஓர் உபகுழுவை நியமித்தது. 

 மத்திய அரசாங்கம், மாகாணசபைகள், மற்றும்  உள்ளுராட்சி சபைகள் என்பவற்றிற்கிடையிலான உறவுகள் தொடர்பாக புதிய அரசியல் யாப்பில் இடம்பெறவேண்டிய விடயங்கள் தொடர்பாக பரிந்துரைகளை மேற்கொள்வதே இந்த உபகுழுவின் பணியாகும். 

இக்குழுவுக்கு பல்வேறு குழுக்களும் கட்சிகளும் நிபுணர்களும் அளித்த விளக்கங்களைக் கருத்திற் கொண்டு இலங்கையின் புதிய யாப்பில் இடம்பெற வேண்டிய விடயங்கள் குறித்து பரிந்துரைகள் கொண்ட அறிக்கையொன்றை 2016ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் வெளியிடப்பட்டது. 

இந்த அறிக்கையை வாசிக்கும் எவரும் மாகாணசபை உட்பட இதுவரை காலமும் நடந்த அதிகாரப் பரவலாக்கல் நடவடிக்கைகள் எந்தளவுக்கு வலுவற்றவை என்பதை இலகுவாகவே புரிந்து கொள்வர்.  

இவ்வறிவு இலங்கைவாழ் சாதாரண மக்கள் மத்தியில் மிகக் குறைந்தளவே உள்ளதெனலாம். அவர்கள் அரசியல்வாதிகளின் பேச்சுக்களினூடாகவே தமது அபிப்பிராயங்களை உருவாக்கிக் கொண்டுள்ளனர். இவ்வறிக்கையில் உள்ள விடயங்களைப் பரந்துபட்ட மக்கள் மத்தியில் கொண்டு செல்வதன் மூலமே மாகாண சபை, உள்ளூராட்சி சபைகள் தொடர்பாக அவர்களிடமுள்ள மாயைகளை உடைத்தெறிய முடியும். நிமிர்வு இதழ்களில் பல பாகங்களாக வெளிவரவிருக்கும் இப்பதிவு இவ்வறிக்கையின் சாராம்சத்தைத் தொகுத்து வழங்குவதன் மூலம் அதனை சிறிதளவாவது செய்ய முயற்சிக்கிறது. இனி, இவ்வறிக்கையின் சாராம்சத்தைப் பார்ப்போம்.
                                     -ஆசிரியர்-    

 மத்திக்கும் சுற்றயல் அதிகார அலகுகளுக்கும் இடையேயான உறவுகள் பற்றி ஆராய இக்குழு பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சிர்த்தார்த்தனை தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்டது.  குழுவில் பாராளுமன்ற உறுப்பனர்களான டிலான் பெரேரா, எச்.எம்.எம்.ஹரீஸ், டளஸ் அழகப்பெருமாள் (இவர் உபகுழுவில் இருந்து இராஜீனாமாச் செய்தார்) பிமல் ரத்நாயக்க, விதுர விக்கிரநாயக்க, மயில்வாகனம் திலகராஜா, சனத் நிசாந்த பேரேரா,  எஸ்.எம்.மரிக்கார், திருமதி ரோஹினி குமாரி விஜேரத்னா, விஜேபால ஹெட்டியாராட்சி என 11பேர் அங்கம் வகித்தனர்.


இவ் உபகுழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்கென ஒரு நிபுணர் குழுவும் அரசியலமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழுவால் உருவாக்கப்பட்டது.  பேராசிரியர் நவரட்ன பண்டார, திரு. என்.செல்வகுமாரன், திரு.எஸ்.தவராஜா, திரு.பாலித அபேவர்த்தன, திரு. அசோககுணவர்த்தன, திரு.வின்ஸ்டன் பதிராஜா, திரு.லால் விஜேநாயக்க, செல்வி சமிந்திரி சபரமாது, திரு.சுரேன் பர்னாந்து ஆகியோர் இக்குழுவில் அங்கம் வகித்தனர்.

உபகுழுவின் கூட்டங்கள் நடைபெற்ற போது அழைப்பாளர்களாக பின்வருவோர் கூட்டங்களில் பங்கேற்றனர்.  கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன, கல்வி ராஜாங்க அமைச்சர் வீ.எஸ்.ராதாக்கிருஸ்ணன்,  அவுஸ்ரேலிய சட்டமனு சீரமைப்பு ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் சுரி ரத்னபாலா, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பர்ணந்து, ஊவா சபை ஆளுநர் எம்.பி.ஜயசிங்க, மேல்மாகாண ஆளுநர் லோகேஸ்வரன் வடமத்திய மாகாண முதலமைச்சர் பெசல ஜெயரத்ன, மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, வடமாகாண கல்வி அமைச்சர் ரி. குருகுலராஜா, மத்திய மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் திருமதி ரேணுகா ஹெரத், ஊவாமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.எம். ரத்நாயக்க, வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராஜா, வடமேற்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் பிரசன்ன செனரத், மக்கள் ஐக்கிய முன்னணி உபதலைவர் சோமவீரசந்திரசிறி, மக்கள் ஐக்கிய முன்னணி செயலாளர் திஸ்ஸ ஜெயவர்த்தன, ஜனநாயக இடது முன்னணி உபசெயலாளர் ஜி.வி.டி.திலகசிறி, ஜனநாயக இடது முன்னணி உதவிச் செயலாளர் சரத் ரணசிங்க
குழு அறிக்கை அறிமுகம்

தற்போதைய அரசியல் யாப்பின்படி இலங்கையில் மூன்று ஆளுகை மட்டங்கள் உள்ளன.  மத்திய அரசாங்கம், மாகாணசபைகள், உள்ளுராட்சி சபைகள் (மாநகரசபைகள்,நகரசபைகள்) என்பவையே அவையாகும்.  ஒவ்வொரு மட்டத்திலும் வாக்காளர் தொகுதியின் தன்மையும் அவற்றிற்கிடையிலான உறவும் அவற்றிற்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையிலான உறவும் முக்கியமான அம்சங்களாகும்.

 மாகாணசபையின் வினைத்திறனான செயற்பாட்டுக்கு ஆளுனரின் அதிகாரம், நிதி மீது மத்திய அரசின் கட்டுப்பாடு, அரசியலமைப்பின் ஒற்றையாட்சித் தன்மை ஆகியவை குறுக்கே நிற்கின்றன என அழைப்பாளர்களால் சுட்டிக் காட்டப்பட்டது.

 தற்போதைய அரசியல் யாப்பு மத்திய அரசுக்கும் பிரதேச அரசாங்கங்களுக்கும் இடையேயான உறவாடல்களில் மத்திய அரசுக்கு முறையற்ற அனுகூலத்தை வழங்குகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டது.  மேலும் ஒவ்வொரு ஆளுகை மட்டங்களுக்கும் அவற்றுக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு மட்டமும் அடுத்த உயர்மட்டத்தின் அதிகாரங்களுக்கு கீழ்ப்பட்டது.

 இது இவ்வதிகார மட்டங்களிடையே ஒரு சமமான இடைத்தொடர்பை ஏற்படுத்துவதை விடுத்து ஒரு கூம்பக அதிகாரப்படிநிலையை ஏற்படுத்துகிறது.  ஆகக்குறைந்த மட்டத்தில் மேற்கொள்ளக்கூடிய எந்தவொரு நிர்வாகவும் அந்த அலகின் பொறுப்புக்கே விட்டுவிடப்படவேண்டும்.  அதற்கு மீதமுள்ளதே அடுத்த மேல் மட்டத்துக்கு கையளிக்கப்பட வேண்டும் எனவும் யோசனை தெரிவிக்கப்பட்டது.  இக்குழுவினர் முன்பாகத் தெரிவிக்கப் பட்ட பல்வேறுபட்ட கருத்துக்களிலிருந்து திரட்டிய தகவல்களிலிருந்து மத்திய அரசுக்கும் சுற்றயல் அதிகார அலகுகளுக்குமிடையேயான உறவுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்னபதற்கான பரிந்துரைகள் பின்வரும் பகுதிகளில் வழங்கப்படுகின்றன.

உள்ளுராட்சிஅதிகாரசபைகள்.
மக்கள் உள்ளுராட்சி சபைகளிடமிருந்து தற்போது வழங்கப்படுவதைவிட அதிகமாக எதிர்பார்க்கின்றனர்.  தற்போது அரசாங்க அதிபர் போன்ற பிரதேச செயலாளர்களுக்கும்  மத்திய அமைச்சினருக்குமிடையே பேணப்படும் நேரடி உறவு மாகாண அமைச்சின் செல்வாக்குக்கு அப்பாற்பட்டது.  இது உள்ளுராட்சி சபைகளின் நியாயத்தன்மையைப் பாதிப்பது மட்டுமன்றி மாகாண சபையின் பாத்திரம் மற்றும் தொழிற்பாட்டைப் பாதிக்கிறது. இன்றுள்ள நிதியமைப்பில் உள்ள வேறுபாடுகள் காரணமாக உள்ளுராட்சி மன்றங்களுக்கான நிதி ஏற்பாடுகள் தேவையற்ற சிக்கலுக்கு உள்ளாகின்றன.  உள்ளுராட்சி சபைகளின் மீதான மாகாண மேற்பார்வையை சட்டம் தெளிவாக வரையறை செய்கிறது.  ஆனால் மத்தியின் உள்ளுராட்சி சபை மீதான நிதிக்கட்டுப்பாடு மாகாணசபையின் பாத்திரத்தைப் பாதிக்கிறது. உள்ளுராட்சி சபை  ஆட்சியின் மூன்றாம் கட்டமொன்றை அமைக்கின்றதாயின் தனது செலவை சமாளிப்பதற்காக வரிகள் சேகரிப்பதற்கான அதிகாரத்தை அது கொண்;டிருக்க வேண்டும்.  இவ்வாறாக நிதிதிரட்டுவதற்கான ஒழுங்குகள் இல்லாமையால் திணைக்கள ரீதியான நிதி ஒதுக்கீடு பாராளுமன்ற மற்றும் மாகாணசபை நிதி ஒதுக்கீடுகளில் உள்ளுராட்சி சபைகள் தங்கியிருக்கின்றன.
     பிரதேச செயலகங்கள் (கச்சேரி) அதிகளவு நிதிமற்றம் மனித வளங்களைக் கொண்டுள்ளன.  இதனால் அவை உள்ளுராட்சி சபைகளை ஓரம்கட்டி சேவை வழங்கல், மற்றும் சமூக ஆதரவுக் கொடுப்பனவுகளைச் செய்கின்றன. இதனால் இவ்வதிகாரங்களைக் கொண்டிருக்க வேண்டிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளுராட்சி சபைகள் மக்களின் பார்வையில் தாழ்வாகக் கருதப்படுகின்றன. 

உள்ளுராட்சி சபைகளின் ஒரு அங்கமாக கிராம இராட்சிய எண்ணக்கரு உருவாக்கப்படலாம்.  இது தமது நலன்கள் தொடர்பில் முடிவெடுக்க மக்களின் நேரடிப் பங்களிப்பை ஊக்குவிக்கும.; ஊழல் அற்ற வினைத்திறன்மிக்க ஒரு நிர்வாகத்திற்கு இது வழிவகுக்கும்.  கிராமத்து மக்களின் கலந்தாலோசனை இல்லாமல் மத்திய மாகாண மாவட்ட அரசுகளால் எடுக்கப்படும் திட்டமிடல்களைத் தவிர்க்க கிராம இராச்சியம் உதவும்.

விதப்புரைகள்.
மேற்படி அவதானிப்புக்களை ஆராய்ந்ததில் இருந்து பின்வரும் முக்கிய விதிப்புரைகளை இக்குழு முன்வைக்கிறது.

1. உள்ளுராட்சி சபைகளுக்கு மேலும் அதிகாரங்கள் வழங்கப்படல்;, மிகத்தாழ்ந்த மட்டத்தில் கையாளப்படக்கூடிய எந்த அரச செயற்பாடுகளும் அந்த அலகுக்கே உரித்தாக்கப்பட வேண்டும். 
2. மத்திய அரசினதும் மாகாண சபையினதும் சட்டங்களையும் திட்டங்களையும் அமுல்படுத்துவதற்கான முகவர்களாக உள்ளுராட்சி சபைகள் செயற்படும் வகையில் அவற்றுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். 
3. தமது செலவைச் சமாளிப்பதற்கு வரி சேகரிப்பு முறையொன்று உள்ளுராட்சி சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும். 
4. உள்ளுராட்சி சபைகளின் எல்லைகளையும் கிராமசேவையாளர், பிரதேச செயலாளர் பிரிவுகளின் எல்லைகளையும் நிர்ணயிக்க ஒரு “எல்லை நிர்ணய ஆணைக்குழு’’ பரிந்துரைக்கப்படுகிறது.
5. மலையகத் தோட்டத்துறையின் குடியேற்றம் உள்ளூராட்சி சபையினதும் கிராம முறைமையினதும் பகுதியாகப் பிரகடனப்படுத்தல் வேண்டும்.
6. அபிவிருத்தி மற்றும் ஏனைய நடவடிக்கைககளில் உள்ளுராட்சி சபைகளுக்கு ஆலோசனை வழங்கவும் உதவி வழங்கவும் சுயாதீனமான சமூக மட்டக் குழுவாக கிராம இராச்சியம் தாபிக்கப்பட வேண்டும்.

ஆசிரியர்: இதுவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளுராட்சி சபைகளின் அதிகாரங்கள் எவ்வாறு மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அலுவலகங்களால் மழுங்கடிக்கப்படுகின்றன என்பதையும் இதனை நிவர்த்தி செய்ய எவ்வாறான மாற்றங்கள் இயற்றப்படலாமென இவ்வாலோசனைக்குழு சிபார்சு செய்கிறது எனப் பார்த்தோம்.  மாகாணசபைகள் தொடர்பாக இக்குழுவின் அவதானிப்புக்களையும் விதந்துரைகளையும் அடுத்த இதழில் பார்ப்போம்.  
நிமிர்வு வைகாசி 2017 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.