தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டுக்கு தண்டனை வழங்குவதே அரசின் நோக்கம்
பயங்கரவாத தடைச்சட்டத்தால் பலிக்கடாவாக்கப்பட்டு இலங்கையின் சிறைகளில் பல ஆண்டுகளாக பெரும் இன்னல்களுக்கு மத்தியிலும், உளவியல் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நடைப்பிணமாக வாழ்ந்து வரும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை இன்று பெரும் சிக்கலான நிலையில் உள்ளது. சிங்கள பேரினவாத அரசோ இவர்களின் விடுதலை தொடர்பில் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. தங்கள் விடுதலைக்காக பல தடவைகள் சாத்வீக ரீதியில் உண்ணாவிரதப் போராட்டங்களை தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்தனர். நாட்டின் தேசிய இனப்பிரச்சினை, அரசியல் தீர்வு என்பவற்றோடு நெருங்கிய தொடர்புபட்ட இந்த அரசியல் கைதிகள் விவகாரத்தை அரசாங்கமோ வடக்கு மக்களின் பிரச்சினையாகவும், பயங்கரவாதத்தோடு தொடர்புபட்ட பிரச்சினையாகவும் மட்டுமே பார்க்கின்றது.
சிறைகளில் வாடும் பலரும் விளங்காத மொழியில் எழுதப்பட்ட விடயங்களை ஒப்புக்கொண்டு கையெழுத்திடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். தாம் இன்ன காரணத்துக்காக தான் சிறைகளில் வாடுகிறோம் என்கிற விடயமே தெரியாத பலர் சிறைகளில் வாடுகின்றனர். இவர்களின் விடுதலைக்காக கூட்டாக தமிழ் சமூகம் குரல் கொடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது. 150 வரையிலான அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கும் கட்டமைக்கப்பட்டு எந்த உதவிகளையும் எங்களின் அரசியல் தலைமைகள் செய்யவில்லை என்பது அவமானமானது.
தமிழ் அரசியல் கைதிகளின் தற்போதைய நிலைதொடர்பில் "அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கம்’’எனும் அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் அவர்களுடனான உரையாடலின் போது அவர் தெரிவித்த முக்கிய விடயங்கள் குறித்த தொகுப்பு கீழே வருமாறு,
தேசிய பிரச்சினைக்கு உளத்தூய்மையுடன் தீர்வைமுன்வைக்க விரும்பும் அரசாங்கம் முதலில் அரசியல் கைதிகள் அத்தனை பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே எங்களின் முதல் நிலைப்பாடு.
இலங்கையில் அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள் என்பதனை அரசாங்கம் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தான் இருக்கின்றார்கள். நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஊடாக தான் இவர்களுக்கு தண்டனை கொடுத்து விடுதலை செய்யலாம் என்பது அரசின் நிலைப்பாடாக உள்ளது. ஒரு மாதமோ, ஒருவருடமோ, அல்லது 10 வருடங்களோ தண்டனை கொடுப்பதனையே இனவாத நோக்கில் கட்டமைக்கப்பட்டுள்ள அரச இயந்திரம் விரும்புகிறது.
இவர்களுக்கு தண்டனை வழங்குவதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டுக்கு தண்டனை வழங்குவது தான் இவர்களின் நோக்கம். தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டுக்கு தண்டனை வழங்குவதென்ற இந்த நிலையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்கிறதா? இல்லையென்றால் இவர்களின் விடுதலைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால் தற்போதைய நிலைப்பாடுகளை வைத்துப் பார்க்கும் போது அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எவ்விதமான ஆக்கபூர்வமான நிலைப்பாடுகளையும் கூட்டமைப்பு எடுக்கவில்லை. இந்தியாவுக்கோ சர்வதேசத்துக்கோ அரசியல்கைதிகள் விடுதலையை விரும்பாத போக்கே உள்ளது. அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் நடத்திய நேரம் அரசின் சார்பில் கூட்டமைப்பினர் வாக்குறுதியளித்தனர். ஆனால், அந்த வாக்குறுதிகள் அரசினால் நிறைவேற்றப்படாத போது அதற்கு எதிராக கூட்டமைப்பினர் எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை.
நல்லிணக்கம் பற்றி இந்த நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற அரசாங்கம் கதைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நல்லிணக்கத்தின் அடையாளமாக முதலாவது செய்யவேண்டியது என்னவென்றால் தமிழ் மக்களின் அரசியலோடு நேரடியாக தொடர்புபட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்வதே. சர்வதேச வெசாக் தினத்தை கொண்டாடும் அரசாங்கம் ஒரு அரசியல் தீர்மானத்தை அரசியல் கைதிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் நலன் சார்ந்து எடுக்க வேண்டும். ஆனால் அப்படியொரு அரசியல் தீர்மானத்தை அதிரடியாக எடுக்கும் நிலைப்பாட்டில் மைத்திரியின் நல்லாட்சி அரசும் இல்லை.
அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் சரியான தீர்மானம் எடுக்காத நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் என்ன முடிவு எடுத்தார்கள்? இவர்கள் கூட எங்களின் தற்போதைய தமிழ் அரசியல் தலைமைகளுக்கு அழுத்தத்தை கொடுக்கக் கூடிய நடவடிக்கைகளை இன்னும் எடுக்கவில்லை. இன்று வடக்கில் காணிக்காக வீதியில் உட்க்காந்திருக்கிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டோருக்காக வீதியில் உட்க்காந்திருக்கிறார்கள். ஆனால், அரசியல் கைதிகளின் விடயமாக வீதியில் உட்கார முடியாமல் உள்ளது. அரசியல் கைதிகள் எனப்படுபவர்கள் 150 க்கும் குறைவாகவே உள்ளனர். அதேவேளை காணாமல் ஆக்கப்பட்டோர் ஒரே கிராமத்தில் 50 பேர் வரை இருப்பார்கள். இதனால் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டத்திற்கு ஆதரவு ஒப்பீட்டளவில் இலகுவாக கிடைக்கிறது. ஆனால் இந்த அரசியல் கைதிகளின் விடுதலைகாகப் போராட்ட ஆதரவை நாங்கள் தேடிப் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. சில கிராமங்களில் அரசியல் கைதிகளுடன் தொடர்புடைய எவரும் இல்லை. அரசியல் கைதிகள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நடாத்தபட்ட எல்லாக் கலந்துரையாடல்களும் தோல்வியில் தான் முடிவடைந்துள்ளன. சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்த 150 தமிழ் அரசியல் கைதிகளும் தமிழ் மக்களின் ஒட்டு மொத்த அரசியலோடு தொடர்புடையவர்கள். ஆனால், ஒட்டுமொத்த தமிழ் மக்களும் இவர்களின் விடுதலைக்காக என்ன செய்தார்கள் என்று கேட்டால் அதுமிகக் குறைந்தளவாகவே உள்ளது என்பது வருந்தப்படக்கூடியது. இப்படியான நிலையில் அவர்களின் விடுதலைக்கு அரசை எவ்வாறு வலியுறுத்துவது? அரசுக்கு எவ்வாறு அழுத்தங்களை கொடுப்பது? வடக்கு கிழக்கில் பெரும் மக்கள் போராட்டம் சாத்தியமானால் தான் இவர்களின் விடுதலை சாத்தியமாகும்.
இன்று எங்களுக்கு தனித் தனி தலைமைத்துவங்கள் தேவையில்லை. கூட்டுத் தலைமைத்துவங்களே தேவை. சிவில் சமூகங்களின் தலைமைத்துவம் அரசியல் தலைமைத்துவங்களுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய நிலைக்கு வர வேண்டும். அரசியலில் அடிமட்ட தலைமைத்துவம் வெளியில் வர வேண்டும். உதாரணமாக இயக்கங்கள் உருவாகிற காலத்தில் அவர்கள் ஒரு அமைப்புக்குள் வந்தவுடன், அரசியல் தலைமைத்துவங்கள் எல்லாம் பின்னால் போகிற நிலை இருந்தது. கீழே இருக்கிறவர்கள் மேலே வரும் போது மேலே இருக்கிறவர்கள் வெளியே தள்ளப்படுகிறார்கள். அப்படியானதொரு அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குகின்ற நிலைக்கு நாங்கள் தற்போது தள்ளப்பட்டுள்ளோம். இப்போது இருக்கிற தலைமைத்துவங்களை நம்பிக் கொண்டு போனால் எங்களுக்கு எதிர்காலம் கிடையாது.
அரசியல் கைதிகளின் குடும்பங்களின் நிலை படுமோசமான நிலையில் உள்ளது. அரசியல் கைதிகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் இந்த தமிழ்ச் சமூகம் அரசியல் ரீத்தியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதுகாப்புக் கொடுக்க முடியாது போனால் தமிழினத்தின் அடுத்த நகர்வுக்கு இளம் சந்ததியின் பங்களிப்பை எதிர்பார்க்க முடியாது. எங்களுக்காக போராடிய அரசியல் கைதிகளையும் அவர்களின் குடும்பங்களையும் அங்கீகரிக்கவில்லை என்று சொன்னால் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லை என்று சொன்னால் வரும் இளம் சந்ததி தமிழ் மக்களுக்காக அரசியலுக்கு இறங்க நிறைய யோசிப்பார்கள். இறுதியில் அது நடக்காமலே போய்விடும்.
ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் விடுதலைக்காகவே அரசியல் கைதிகள் செயற்பட்டனர். ஆனால் அவர்களின் குடும்பங்கள் இன்று தனித்திருக்கிறார்கள். இந்தக் குடும்கங்களுக்கிடையே ஒரு தொடர்புகளும் இல்லை. இந்த குடும்பங்களுக்கும் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலோ சிவில் சமூகங்களுக்கு இடையிலோ கூட தொடர்பு இல்லாதுள்ளது. இது எமது எதிர்கால அரசியல் நகர்வுகளை பெரும் பாதிப்புக்குள் தள்ளப் போகின்றது. ஒரு பாதாளத்துக்குள் தள்ளப் போகின்றது. அரசியல் கைதிகளின் குடும்பங்களை ஒரு தொடர்பாடல் வலைப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும். இந்தவலைப்பாட்டில் அரசியல் தலைமைகளும் சிவில் சமூக அமைப்புகளும் முக்கிய பங்காற்ற வேண்டும்.
வடமாகாண சபையில் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், கண்டி, மாத்தளை, கொழும்பை சேர்ந்த அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற நோக்கம் அந்தத் தீர்மானத்தில் இல்லை. இதனால் வடமாகாண சபையினால் நடைமுறைப்படுத்த வேண்டிய இத்திட்டம் தோல்வியடைந்தது. அரசியல்கைதிகள் என்பவர்கள் வடக்கையும் கிழக்கையும் சேர்ந்தவர்கள் தானென வடமாகாண சபை கருதியது. இதன்மூலம் அரசியல் கைதிகளுக்கு இடையில் பிளவை ஏற்படுத்த முயன்றார்கள். வடக்கு கிழக்குக்கு வெளியே இருந்து வந்து தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த அரசியல் கைதிகள் தாங்கள் புறம்பானவர்கள் என பேதம் பார்க்கவில்லை. வடக்கு, மலையகம் என பிரித்துப் பார்க்கவில்லை. தங்களையும் இந்த அரசியலோடு இணைத்துக் கொண்டார்கள். வடமாகாண சபை ஊடாக உதவி செய்ய முடியாவிட்டாலும் கூட ஏதோ ஒரு வகையில் இவர்களுக்கான உதவியை செய்து கொடுத்திருக்க வேண்டும். அதனை செய்யவில்லை. மாத்தளை போன்ற இடங்களில் வாழும் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் அன்றாடம் சாப்பிட்டுக்கே கையேந்தும் நிலையில் உள்ளனர். வடக்கு கிழக்குக்கு வெளியே 25 வரையிலான குடும்பங்கள் உள்ளன. அங்கே உள்ள குடும்பங்களின் பெற்றோர் எங்களின் பிள்ளைகள் ஏன் இந்த நிலைக்குச் சென்றனர் என்று கவலைப்படுகிறார்கள். அந்தக் குடும்பங்கள் அந்த நிலைக்கு செல்லக் கூடாது. இவர்களை கைவிட்டால் எங்களின் அடுத்த கட்ட அரசியலுக்கு ஒரு சமூகமே இல்லாமல் போய்விடும்.
தமிழ் சட்டத்தரணிகளிலும் ஒரு சிலரை தவிர பெரும்பாலானோர் இவர்களின் வழக்குகளை பொறுப்பேற்று நடாத்த தாயாரில்லாத நிலையே உள்ளது. இந்த அரசாங்கமோ அல்லது வரப்போகிற அரசாங்கமோ இவர்களுக்கு விடுதலை கொடுக்கப் போவதில்லை. தமிழ் மக்களின் கைகளிலேயே இவர்களின் விடுதலை உள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எத்தனையோ வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு உள்ளன. நிறைவேற்றப்படாமல் உள்ள வாக்குறுதிகள் ஏன் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்பது தொடர்பில் நாங்கள் யாரும் கேள்வி கேட்கவுமில்லை. தொடர்ச்சியாக காத்திருப்பும், ஏமாற்றப்படும் சூழலும் அவர்களை குற்றத்தை ஒப்புக்கொள்ளும் நிலைக்கு தள்ளியுள்ளது. உள்ளே இருந்தது போதும், தண்டனை அனுபவித்தது போதும், இனியும் நாங்கள் நீதிமன்றத்துக்கு போய் வருவதென்பது முடியாத காரியம். நாங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டால் சிலகாலம் சிறைத்தண்டனை தான் கிடைக்கும். அதனை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த நிலைக்கு அவர்களை தமிழ் சமூகமே தள்ளியுள்ளது. அவர்கள் குற்றம் செய்தோமென்று சொன்னால் தமிழ் மக்களின் அரசியல் குற்றமாகிவிடும். இந்த வரலாற்றுத் தவறிலிருந்து விடுபட நாங்கள் என்ன செய்யப் போகிறோம்?
செ.ரவிசாந்-
நிமிர்வு வைகாசி 2017 இதழ்-
Post a Comment