விழித்திருக்கும் தேசியம்



அண்மைய பேரெழுச்சிகள் தமிழ் மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள் என்பதனையே காட்டுகின்றது.  முதலமைச்சர் மீதான தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளை  வெறுமனே அண்மைய குறித்த சம்பவங்களோடு மட்டும் தொடர்புபடுத்தி பார்ப்பது ஏற்புடையதன்று.

இது வடக்கு மாகாண சபையை முதலமைச்சர் ஏற்ற தினத்தில் இருந்து தாங்கள் எதிர்பார்த்தது போல ஒரு பொம்மை அரசாக அதனை நடத்திச் செல்ல முடியாது என்ற நிலைமைகளின் தொடர்ச்சியாகவும், தமிழர்களை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு சிறு சிறு குழுக்களாகவும், துண்டுகளாக்கவும் ஆக்கினால் அவற்றை இலகுவாக கையாளலாம் என்கிற இலங்கை, இந்திய அரசு மற்றும் மேற்குலகின் முடிவும் தான் கடந்த வாரங்களில் இறுதி வடிவம் பெற்றன.

தமிழ்த் தேசியத்தைப் பற்றி நின்ற தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்த பின்னர் அவர்களுக்கு  மாற்றாக சிறந்த ஆளுமையும், நேர்மையும், உறுதியும் இல்லாத கைப்பாவைகளையே சிங்கள அரசும், இந்தியாவும், மேற்குலகும் விரும்புகின்றன. தமிழர்களின் இனநலன் சார்ந்து சிந்திக்காமல் எல்லாவற்றுக்கும் "ஆமாம் சாமி" போடுகிற அடிமைகளையே அவர்கள் விரும்புகின்றார்கள்.

2009 க்குப் பின்னரான காலகட்டம் தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமானது. ஒரு இனத்தின் கட்டமைப்பையே சிதறடித்து நடுத்தெருவில் விட்ட பின்னர், சில உதிரிகளை வைத்து தமிழ்மக்களை அடிமைகள் போல நடத்தலாம் என்று பகல் கனவு கண்டது சிங்கள அரசு. கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சிகளினால் அவர்களின் நலன்சார் சக்திகளின் தலையில் விழுந்தது மண் என்று தான் சொல்ல வேண்டும்.

உறுதியான  தலைமை ஊடாக மட்டுமே தமிழினத்தை ஒருங்கிணைக்க முடியும். தமிழினம் சின்னாபின்னமாவதை தடுத்து நிறுத்தவும் முடியும். முதலமைச்சருக்கான ஆதரவுப் போராட்டத்தில் 2009 இலிருந்து இப்போது வரையான தமிழர் அரசியல் நிலை தொடர்பிலான அம்பலப்படுத்தல்களை  மேற்கொள்வது அவசியமானது. இதனூடாக இன்றைய தமிழர் தாயகத்தின் அரசியல், சமூக நிலை தொடர்பில் சிறு கிராமத்தில் வாழும் தமிழ் மக்கள் வரை விழிப்புணர்வை ஊட்டுதல் அவசியமானதாகும்.

சம்பந்தன், ரணில், மைத்திரி, இந்தியா மேற்குலகு என்கிற கூட்டு நிகழ்ச்சி நிரலில் இருந்து வெளியே வந்து தமிழ்த் தேசிய அரசியலை தொடரும் நோக்கோடு தமிழ்மக்களின் நலன்சார் முடிவுகளை எடுத்த விக்கினேஸ்வரனை அரசியல் அரங்கில் இருந்தே அகற்றுவது என கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கியவர்கள்  செய்த வேலை தான் நம்பிக்கையில்லாப் பிரேரணை. அதற்கெதிராக தமிழ் மக்கள் ஒற்றுமையுடனும், தன்னெழுச்சியுடனும் பெரும் எதிர்வினையாற்றியமை தான் வரலாற்றுப் பதிவு. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்று சொல்வார்கள். நாம் தமிழ்த் தேசியத்தில் உறுதியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும் வரை எம்மை யாராலும் கூறு போட முடியாது. அதேவேளை, முதலமைச்சர் உட்பட அரசியல் தலைமைகள் அனைவரிடமிருந்தும் நேர்மையையும் ஜனநாயகத்தையும் வலியுறுத்திய வண்ணம் இருக்க வேண்டும்.

விழிப்பாய் இருப்பது ஒன்று தான்                            
விடுதலைக்கு முதல்படி.

செ.கிரிசாந்
நிமிர்வு ஆனி 2017 இதழ் 


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.