மீண்டும் உயர் நிலையை அடையுமா?


“கல்வி அபிவிருத்தியில்  மீண்டும் நாங்கள்  உயர் நிலையை அடைய முடியுமா? ” என்ற இந்த கேள்வி சிலவேளைகளில் சிலருக்கு எரிச்சலை ஊட்டலாம்…..! நம்பிக்கையுடன் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து வாசித்து அதற்கேற்ப செயற்படுமாறு எனது உறவுகளை வேண்டிக் கொள்கின்றேன்.

வடமாகாணத்தின் கல்வித் தரமானது எல்லா மட்டங்களிலும் குறைவான நிலையில் இருக்கின்றது என்று மீண்டும் மீண்டும் பிரச்சாரப்படுத்தி எம்மை நாமே தாழ்த்திக் கொள்வதை விட்டு நாளை நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு தீர்க்கமான குறுங்காலச் செயல் திட்டம் ஒன்றை வகுத்துச் செயற்பட்டால் க.பொ.த. சாதாரணதரப் பொதுத் தேர்வுக்கு இன்னும் இருக்கின்ற 100 நாட்களில் நிச்சயமாக ஒரு மாற்றத்தைக் கொண்டுவரமுடியும்.

இந்தப் பயணத்தில் வடமாகாணக் கல்வி அமைச்சின்   கல்விச் செயலாளர், வட மாகாணக் கல்விப் பணிப்பாளர், மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், சேவைக் கால ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் செயற்படத் தொடங்குவோமாயின் இந்தச் சவாலை எங்களால் எதிர்கொள்ள முடியும். அதிபர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களை நியமனம் செய்வதில் காணப்படும் போட்டித் தன்மைகள், பாரபட்சமான நடவடிக்கைகள் என்று கூறப்படும் விடயங்கள், மாணவர்களின் வளங்களின் விரயம்,   என்பவற்றையெல்லாம் ஒருபுறம் வைத்து விட்டு  இதனை எங்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட இலட்சியமாகக் கவனத்தில்  எடுத்துச் செயற்படுவோம்.  இந்த நடப்பாண்டிலேயே 9 ஆவது நிலையில் இருந்து ஆகக் குறைந்தது ஆறாவது நிலைக்காவது வரவேண்டும் என்கிற உறுதியை எடுத்துச் செயல்படுவோம்...

இந்த இலக்கை அடைய வேண்டுமானால் உடனடியாக அதிபர்கள் பின்வரும் விடயங்களில் கவனம் எடுத்தல் வேண்டும். ஏனெனில் ஒரு வினைத்திறன் மிக்க அதிபரின் கையிலேயே எல்லாம் தங்கியிருக்கின்றது.

1. பாடசாலைகளின் மாணவர்களின் வரவை 100 வீதமாக இருப்பதை   அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலையின் நலன் விரும்பிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் எவ்வளவு தான் பிள்ளைகள் தனியார் கல்வி நிலையங்களுக்குச் சென்று தமது பணத்தையும், நேரத்தையும், ஒழுக்கவிழுமியங்களையும் விரயம் செய்தாலும், பாடசாலையில் வழங்கப்படுகின்ற கல்வி நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடு சார்ந்த கல்வி, இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் பங்கேற்கும் தன்மை என்பவற்றால் மாணவர்களின் உள, உடல் நலம் விருத்தி அடைவதுடன் ஆளுமை விருத்தியும் ஏற்படுகின்றது. மேலும் கவலை தரும் விடயமாக இருப்பது யாழ்ப்பாணத்தில் பிரபலமான பாடசாலைகள் என்று அழைக்கப்படுகின்றவை, க.பொ.த. உயர்தர வகுப்புக் கற்கும் மாணவர்களை அந்த வருட ஆரம்பத்திலேயே படிப்பு லீவு என்ற பெயரில் வீட்டிற்கு அனுப்பிவிட்டுத் தங்கள் பொறுப்பும் முடிந்து விட்டது என்று ஏனோ  தானோ என்று இருந்து விடுவார்கள். இங்கு 80 வீதம் வரவு பார்ப்பது என்பது எங்கே போய்விட்டது…? ஆனால் பரீட்சைப் பெறுபேறுகள் வந்ததும் சிறந்த சித்தி பெற்ற மாணவர் விடயத்தில் உரிமை கோருவது தான் விந்தையாகவும், கேலிக்கிடமாகவும் இருக்கும். ஒரு மாணவனுக்குரிய கல்வியை முழுமையாகப் பாடசாலைகளே வழங்க வேண்டும். இன்னுமொரு நிறுவனத்திடம் கற்கவிடுவது என்பது, அந்தப் பாடசாலை அதிபரின் பலவீனத்தையே எடுத்துக்  காட்டும் என்பதை அதிபர்கள் புரிந்து கொள்ளவேண்டும். அவ்வாறான மாணவர்களை ஆகக் குறைந்தது ஜூலை மாதம 15 ஆம் திகதி வரை பாடசாலையில் வைத்துக் கற்பிக்கவேண்டும்.

2. பாடசாலைகளின் கற்றல் கவிநிலையை  கவர்ச்சிகரமாகவும், பயனுடையதாகவும் மாற்றி அமைக்க வேண்டும். கற்றல் கவிநிலை என்பது முகப்பில் பல இலட்ச ஷரூபாக்களைச் செலவழித்து அலங்கார வளைவுகளைக் கட்டி அழகு பார்ப்பது அல்ல.  ஒரு சிறந்த கண்காட்சிக் கூடமாகவும், கற்றல் சூழலை ஏற்படுத்தும் ரம்மியமான இடமாகவும் வைத்திருப்பதே வகுப்பறைக் கவிநிலையாகும். இவை உள்ளக அல்லது வெளிப்புற மேற்பார்வைகளின் ஊடாக அவதானித்து, சரியான முறையில் வழிகாட்டப்பட வேண்டும். ஒவ்வொரு மேற்பார்வையின் பொழுதும் வகுப்பறைக் கவிநிலையில் ஏற்படும் மாற்றங்கள் கட்புலனாகும் வகையில் இருக்க வேண்டும்..

3. மாணவர்களின் கற்கும் நேரத்தை முழுமையாக அவர்கள் விரும்பும் வகையிலும் பாடவிதானத்தை நிறைவு செய்யும் வகையிலும் திட்டமிட்டுச் செயற்படுத்தவேண்டும்.

4. ஆசிரியர்கள் பாடசாலை நேரங்களில் தமது கைத்தொலைபேசியினூடாக முகநூல்களில் பதிவேற்றம் செய்வதிலும், பகிர்தலிலும் நேரத்தைச் செலவிடுவதை விட்டு பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டில் கவனம் செலுத்தவேண்டும். ஒரு தாய் தனது பிள்ளையை அருகில் இருந்து கவனித்துவருவது போல், ஒவ்வொரு ஆசிரியரும், தனது மாணவர்களை அருகில் இருந்து கவனித்து அவர்களது வளர்ச்சியின் போக்கை மதிப்பீடு செய்து வழிகாட்டி வரவேண்டும். முகநூல்களை வீட்டில் போய் இருந்து பார்த்துக் கொள்ளலாமே….!

5. ஆசிரியர்களில் 76 வீதமானவர்கள்  கற்றல் சாதனங்களைப் பயன்படுத்துவதில்லை என்று  ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த விடயத்தில் பாடசாலைகளின் முகாமைத்துவக் குழு உரிய நடவடிக்கைகளை எடுத்து  கற்றல் துணைச் சாதனங்களை ஆசிரியர்கள் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதேவேளை பொருத்தமான கற்றல் சாதனங்களை கிடைக்கக்கூடிய உள்ளுர் வளங்களில் இருந்து ஆக்கிக் கொள்வதற்கும், அவற்றை வகுப்பறைகளில் உரிய நேரத்தில் பயன்படுத்துவதிலும் பயிற்சிகளை அளித்தல் வேண்டும். இது தொடர்பாக ஆசிரியர்களுக்கு ஏற்படும் இடர்ப்பாடுகளை நீக்குவதற்காக அவர்களிடையே தன்னம்பிக்கை வளர்க்கும் வகையில் அதிபர்கள் சிறந்த முகாமையாளராகவும் செயற்பட வேண்டும்.  இதற்காகப் பாடசாலைகளின் மாணவர் தொகைக்கு ஏற்ப வழங்கப்படும்  தர உள்ளீட்டு நிதியின் கீழ் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்தல் வேண்டும்.

6. உள்ளக மேற்பார்வைகள் மற்றும் வலய, மாகாண ரீதியான வெளிநிலை  மேற்பார்வைகள் வினைத்திறனுடையதாக இருக்கவேண்டும். இது பற்றிக் கடந்த நிமிர்வு இதழிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் ஒரு பாடசாலையின் வினைத்திறன் மிக்க செயற்பாட்டில் “மேற்பார்வை நுட்பங்கள்” மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் அதுபற்றிய மேலும் விரிவான குறிப்புக்கள் இந்த இதழிலும் இடம் பெறுகின்றன.

பொதுவாக மேற்பார்வைகள் என்பன  கல்வித் திணைக்களங்களின் அதிகாரிகளைத் திருப்திப்படுத்துவதற்காகவும், ஆவணங்களை இறுதி செய்வதற்காகவுமே  மேற்கொள்ளப்படுவதையே அவதானிக்க முடிகின்றது. வலய ரீதியான மேற்பார்வைகள் தொடர்பான அறிக்கைகள் போன்றவை எண்ணிக்கைகளை சரிபார்க்கும் ஒரு கோவையாகவே காணப்படுகின்றன. பாடசாலைகளில் மேற்பார்வைகள் நடைபெற்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களைத் தொடர்ந்தும், அவை தொடர்பான தொடர்ச்சியான பின்னூட்டல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். இதுதொடர்பான அறிக்கைகளில் மேற்பார்வையில் அவதானிக்கப்பட்ட விடயங்கள் அதில் உள்ள நிறைவுகள் குறைபாடுகள், அவற்றிற்கான  பின்னூட்டல்கள், பரிகார நடவடிக்கைகள் மற்றும் ஆசிரியர்களின் ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்குகள் என்பன தொடர்பான விடயங்கள் குறிப்பிடப்பட வேண்டும். ஏனெனில் ஒருவரால் எழுதப்பட்ட  மேற்பார்வை அறிக்கையை அவர் இல்லாத சந்தர்ப்பங்களிலும் வேறொருவர் அதனைப் பார்வையிட்டு நடைமுறைகளை எளிதில் விளங்கிக் கொள்ளக் கூடியதாக அமைதல் வேண்டும். ஒரு பாடசாலையின் கல்வி  அபிவிருத்திச் செயற்பாடுகள் வினைத்திறன் மிக்க மேற்பார்வை நுட்பங்களிலேயே தங்கியுள்ளன. ஏனெனில் முறைசார்ந்ததாகவும் வினைத்திறன் கொண்டதாகவும், சிநேக பூர்வமானதாகவும்  மேற்பார்வைகள் இடம்பெற்றிருந்தால் இன்று வலயங்கள் கல்வி அபிவிருத்தியில் மிக மோசமான பின்னடைவைச் சந்தித்திருக்க முடியாது.

7. பாடசாலை மாணவர்கள் மீது எவ்வாறான  ஒழுக்கம் இருக்கவேண்டுமென்று  எதிர்பார்க்கப்படுகின்றதோ அதேபோன்று ஆசிரியர்களின் சுய ஒழுக்கமும் கண்காணிக்கப்பட வேண்டும். உதாரணமாக ஆசிரியர்களினதும், ஆசிரியைகளினதும் ஆடைகள், தலை முடி வெட்டுக்கள், முகச் சவரம் செய்யாத முகங்கள் என்பனவற்றில் அதிபர் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் மாணவர்கள் தமது ஆசிரியர்களையும், ஆசிரியைகளையும் பார்த்தே அவர்களை ஒரு முன் மாதிரியாகப் (Role Model) பார்த்துப் பின்பற்றுபவர்களாதலால் ஆசிரியர்கள் தம்மை ஒரு முன்மாதிரியானவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள், அதிபர்களின் முன்மாதிரிகள், மாணவர்களைப் பாடசாலைகளுக்கு விரும்பி வரத் தூண்டுவனவாக இருக்கவேண்டும்.

8. சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் நேரடியாகப் பாடசாலைத் தரிசனங்களின் ஊடாகக் கல்வியின் வளர்ச்சியை மதிப்பீடு செய்பவர்கள். ஆனால் அவர்கள் தம்மை ஒரு மேற்பார்வையாளராகக் கருதிக் கொள்ளாது, ஆசிரியர் மாணவர்களின் கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகள் தொடர்பாகக் கவனம் செலுத்துவதிலும், ஆசிரியர்களுக்கு மாதிரி வகுப்புகளை நடத்திக்காட்டி  உரிய முறையில் வழிகாட்டுவதும், பிள்ளைகளுடன் கலந்துரையாடி அவர்களின் கற்றல் இடர்களைப் போக்குவதிலும் தான் கவனம் செலுத்தவேண்டும். அவர்களுக்கு வகுப்பறைகளையோ அல்லது பாடசாலை முகாமைத்துவத்தையோ மேற்பார்வை செய்யும் அதிகாரம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தமக்கு ஒதுக்கப்பட்ட பாடரீதியாக ஏற்படும் பின்னடைவுகளுக்கு சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களே வகைகூறவும், பொறுப்பேற்கவும் (Accountability and Responsibility) வேண்டும். இவ்வாறான குறைபாடுகளை நீக்குவதற்காக ஒரு சேவைக்கால ஆசிரிய ஆலோசகருக்கு இருக்கின்ற எண்ணிக்கையைப் பொறுத்துப் பாடசாலைகளைப் பகிர்ந்து கொடுக்கவேண்டும். உதாரணமாக பத்துப் பாடசாலைகளை ஒருவர் பொறுப்பேற்றால் அந்தப் பத்துப் பாடசாலைகளுக்கும் அவரே பொறுப்பாக இருக்கவேண்டும். அதேவேளை ஒரு சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் பாடசாலையில் முழுமையாகத் தனது கடமையை மேற்கொள்ளக் கூடிய வகைகளில் அதிபர்கள் அவரது பாடத்துறை சார்ந்த ஆசிரியர்களின் நேர சூசியை ஆரம்பத்திலேயே வழங்குதல் வேண்டும். பாடசாலை ஆரம்பித்த பின்னர் வருகை தருவதற்கோ, அல்லது பாடசாலை முடிவடையும் நேரத்திற்கு முன்னரோ அவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறுவதற்கு அதிபர்கள் அனுமதிக்கக் கூடாது. இது உரிய முறையில் வலயக் கல்விப் பணிப்பாளர்களினால் மதிப்பீடு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

9. ஆசிரியர்கள், அதிபர்கள், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள், உதவி கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருடைய வேலை ஆற்றலை வினைத்திறனுடையதாக்குவதற்காகவும் கல்வி மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளை மேம்படுத்துவதுவதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சிறந்த நடைமுறையே “தரங்கணிப்பு” (Performance Appraisal). ஆனால் இதுவரை எவராலுமே அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதை “தரங்கணிப்பு” அறிக்கைகள் எடுத்துக் காட்டியுள்ளன. இது ஒரு சாதாரண எழுத்து மூலமான ஒரு சம்பிரதாயமான பதிவேடாகவும், சம்பந்தப்பட்ட அலுவலர்களின் வருடாந்த சம்பள ஏற்றங்களை வழங்குவதற்கான ஒரு ஆவணமாகவுமே பேணப்படுகின்றது. வருட ஆரம்பத்தில் ஒரு குறித்த அலுவலர் தமக்கு மேலுள்ள உயர் நிலை அலுவலருடன் தனது வினைஆற்றுகை தொடர்பாக ஒரு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு உறுதிப்படுத்துகின்றனர். இதன்படி குறித்த ஆசிரியர் ஒருவர் தான் கற்பிக்கும் பாடத்தில் 75 வீதமான பெறுபேற்று உயர்ச்சியை குறித்த ஆண்டினுள் காட்டுவதாக ஒப்பந்தம் செய்தால், அது தொடர்பாக காலாண்டிற்கு ஒரு தடவையாவது மீளாய்வு செய்யப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டவருக்கும், அவரது மேலதிகாரிக்கும்  இடையில் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல்களினூடாக அவரது  வினைத்திறனை தொடர்ச்சியாக அதிகரிக்கச் செய்ய வேண்டும். ஆனால் அத்தகைய ஆவணங்கள் வருட முடிவிலேயே மீளாய்வு செய்து எல்லாம் சரியென அங்கீகரிக்கப்படுகின்றது. “ஆசிரியர் தரங்கணிப்பு”  தொடர்பாக எவருமே அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை என்ற அந்தக் கசப்பான உண்மையை ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்ளவேண்டும். அதனால் தான் எமது மாகாணம் கல்வித் தரத்தில் பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இதில் எவருக்குமே பாரபட்சமற்ற வகையில் உரிய நடவடிக்கைகளை செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், பாட உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், சேவைக் கால ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள் மேற்கொண்டு கல்வி அபிவிருத்தியை ஒன்றிணைந்த ஒரு செயற்பாடாகவே முன்னெடுக்க வேண்டும்.  தரங்கணிப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி  அடைவுமட்டத்தைக் காட்டாத ஒரு அலுவலரின் சம்பள ஏற்றங்கள் இடைநிறுத்தி வைக்கப்பட முடியும் என்ற ஏற்பாடு இருப்பதையும் கவனத்தில் எடுக்கவேண்டும்.

10. தொண்டர் ஆசிரியர் பிரச்சினைகள், கடமை நிறைவேற்றும் அதிபர் பிரச்சினைகள், தேவையற்ற  வகையிலான அரசியல் தலையீடுகள் போன்றவற்றினால் பாடசாலைகள் மற்றும் கல்வித் திணைக்களங்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகிகன்றன. இவை போன்ற பிரச்சினைகளினாலேயே  கல்வி  அபிவிருத்திப் பணியை முன்னெடுப்பதில் தாமதங்கள் ஏற்படுகின்றன. எதிர்காலத்தில் தொண்டர் ஆசிரியர்கள், கடமை நிறைவேற்றும் அதிபர்கள் என்ற வரம்புக்குட்படாத நியமனங்கள் செய்வதை விடுத்து வெற்றிடங்களுக்கு ஏற்ப காலத்திற்குக் காலம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் நியமனங்களைக் கல்வி அமைச்சு மேற்கொள்ள வேண்டும்.

11. கல்வி அமைச்சு மற்றும் மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகளும், வலயக் கல்வித் திணைக்கள அதிகாரிகளும், தமது அலுவலகப் பணிகளிலேயே மூழ்கி இருக்காது இடையிடையே பாடசாலைகளுக்கு நேரடியாகச் சென்று அதிபர் ஆசிரியர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளையும், பாடசாலையில்  உள்ள கற்றல் கற்பித்தல் பிரச்சினைகளையும்  அறிந்து  தீர்த்து வைத்து அவர்களை ஒரு நிம்மதியான  ஆரோக்கியமான ஒரு சூழலில் செயற்பட விடவேண்டும். இவ்வாறான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளும் பொழுது, அவர்களுக்கும் மனத்திருப்தியும் புத்துணர்ச்சியும் ஏற்படுவதுடன், மகிழ்ச்சியாகவும் இருக்கும். இதன் மூலம் பாடசாலைகள் மேலும் மேலும் தூண்டப்படுவதால் அவற்றின் வினைத்திறனும் அதிகரிக்கும்.

12. பெற்றோர்களும், பழைய மாணவர்களும் தமது பாடசாலைகளின்  விடயங்களில் விழிப்பாக இருந்து பாடசாலையுடன் ஒத்துழைத்து நடக்க வேண்டும். பாடசாலையில் காணப்படும்  குறைகளை அதிபர்களுடன் கலந்துரையாடி சுமுகமான ஒரு உறவினூடாகப் பாடசாலையைக் கட்டி வளர்ப்பதில் பாடசாலைச் சமூகத்தின் வகிபாகம் மிகவும் முக்கியமானது. இதனை விட்டுப் பாடசாலையின் அதிபரையும், ஆசிரியர்களையும் பாடசாலைக்கு வெளியில் சென்று குறைகளைக் கூறுவதாலோ அல்லது அவர்களை விமர்சிப்பதாலோ மேலும் அந்தப் பாடசாலையைப்பற்றிய ஒரு தவறான பார்வையே ஏற்படும் என்பதைப் பாடசாலைச் சமூகம் புரிந்து சரியானதைச் சரியான நேரத்தில் சரியாகச் செய்து வரவேண்டும்.

     எனவே வடமாகாணத்தின் ஆரோக்கியமான இந்தக் கல்விக்கான பயணத்தில்  எதிர்நோக்கும் தடைகளையும், சவால்களையும் வெற்றி கொண்டு நேரிய பாதையில் நாம் ஒவ்வொருவரும்  செயற்படுவோமாக இருந்தால்  எங்களுடைய  கல்விக்கான பயணம் வெற்றி பெற்று  வட மாகாணம் கல்வி அபிவிருத்தியில்  மீண்டும்  உயர் நிலையை அடையும்  என்ற நம்பிக்கை எங்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஊற்றெடுக்க வேண்டும்……!

வல்வை.ந.அனந்தராஜ்-
நிமிர்வு ஆவணி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.