ஒரே தமிழினமாக ஒன்றிணைவது ஏன் முடியாது? யார் இந்த முன்னாள் போராளிகள்?


தமிழின வரலாற்றில் தந்தை செல்வா காலமிருந்து எமது அரசியல்வாதிகளின் சொற்பொழிவுகளால் கருவிலிருந்தே அகிம்சைப் போராட்டம் தீர்வு தராது என்ற எண்ணத்தைத் தன்னகத்தே சுமந்தவர்கள்

இணைந்த வடகிழக்கு தமிழர் தாயகம் எனவும், அதற்காக அகிம்சைப் போராட்டம் மாற்றம் பெறும், ஆயுதம் ஏந்துவோம் என்று கர்ச்சித்தவர்களின் உணர்விற்கு வடிவம் கொடுத்தவர்கள் .

“குண்டாந்தடி முருங்கந்தடி” என்ற வாசகத்தை மனதில் கொண்டு பொலிசாரைத் தாக்கியவர்கள்.  அதனால் பொலிசார் ஆயுதம் ஏந்திய பொழுது,  பதிலீடாக எம் இனத்திற்காக ஆயுதம் தாங்கியவர்கள்! அவர்களே  இம்முன்னாள் போராளிகள்.

போராட்ட வலிமையை பயன்படுத்தி அன்று தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியதும் போராளிகளே! ஆனால் இன்று போராட்டம் வேறு அரசியல் வேறு என்று பிரிக்கப்பட்டு, வாழ்விழந்து, உடமையிழந்து, அங்கவீனமாகி, எதிர்காலமின்றி அன்னியப்படுத்ததப்படும் ஓர் குழுவாக, எமது அரசியல்வாதிகளால் புறம் தள்ளப்படும் எம் மண்மீட்க தன்னுயிர்த்தியாகம் செய்த மாவீரர்களின் வரிசையில் நிற்பவர்களே இம்முன்னாள் போராளிகள் என்பதை உணருங்கள். இவர்களின் இன்றைய நிலை என்ன?

இளவயதில் மிகக்கட்டுப்பாடான ஓர் அமைப்பில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள், தலைவரின் ஆணையை மதித்தவர்கள், தன்னினம் விடுதலை பெறவேண்டும் என்ற இலக்கில், குடும்ப உறவுகளை வெறுத்து,  பாசத்திற்கு மூட்டைகட்டி இலட்சிய பாதையில் பயணித்தபோதிலும்,  ஆயுதபோராட்டமானது பல நாடுகளின் சதித்திட்டத்தினால் மௌனிக்கப்படச்செய்ய, உலக யுத்த மரபுகளின் படியும், எமது பாரம்பரிய அரச முறைப்படியும் சரணாகதி அடைந்தார்கள்.

ஆனால் நடந்தது என்ன?  பலர் கொல்லப்பட்டார்கள். பலர் அடிமையாக்கப்பட்டார்கள் . சரணடைந்தோரை உரியமுறையில் வழிநடத்த அரசு தவறியது யாவரும் அறிந்ததே, அது எமக்கு பெரிய விடயமல்ல, எமது கட்சிகள் இந்நிலையில் இவர்களுக்கு என்ன செய்தார்கள்? மாவீரர்களின் குடும்ப நிலை என்ன?

இந்திய பிரதமரை தாக்கிய இலங்கை சிப்பாய் தண்டிக்கப்பட்டாரா?  ஆனால் இந்தியா இலங்கையுடன் நட்புறவாடுகின்றது.

எம் இனத்துக்காக ஓர் இசைக்கல்லூரியை நடாத்த முன்வந்த கண்ணதாசனுக்கு “ஆயுள் தண்டனை” நிர்க்கதியான செயல்கள் இன்னமும் தொடர்கிறன. இது அரச தர்மமா? இல்லை என்றால் இதை தடுப்பது யார்?

எமது அரசியல் பிரதிநிதிகளின் வாய்களை மௌனிக்க வைப்பது என்ன?
   
இதுவே போராளிகளின் இன்றைய அவலநிலை. அண்மையில் கண்ணதாசனின் தீர்ப்பு வெளியானதும். இம் முன்னாள் போராளிகள் தொலைக்காட்சியொன்றிற்கு பேட்டியளித்திருந்தார்கள். தாங்கள் பிடிக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு பொதுமன்னிப்பு என்ற அடிப்படையில் விடுவிக்கப்பட்டதாவும், ஆனால் பிடிக்கப்பட்ட 12000 பேரில் பொதுமக்களும் அடங்கியிருப்பதாகவும், அனைவரும் போராளிகளாக இருந்திருந்தால் தாம் சரணடையும் அவசியம் ஏற்பட்டிருக்கமாட்டாது என்றும் தெரிவித்தனர். எனவே 12000 பேரில் பொதுமக்களும் அடக்கம் என்பது கோடிடப்பட்டவிடயமாகப் புரிகிறது.

மற்றும் 2009 இற்கு முன்னான தங்களின் செயற்பாடுகள் அனைத்திற்கும் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பழைய காரணங்களை முன்வைத்து தீர்ப்பளித்திருப்பது அதர்மச்செயலென சுட்டிக்காட்டப்பட்டது.

அன்று தங்களுக்களித்த பொதுமன்னிப்பு செல்லுபடி அற்றது என்று அறிவிக்கும்படியும் தாங்கள் அரசுக்கு குந்தகம் விளைவித்த, விளைவிக்கின்றவர்கள் என்ற சந்தேகம் இருக்குமாயின் தம்மை ஜனநாயக முறைப்படி நாடுகடத்துங்கள் என்றும் அவர்கள் விடுத்த உருக்கமான வேண்டுதல் எம் மனங்களை நெருக்குகின்றது.

தமிழ் தலைவர்கள் எங்கே? தமிழ் மக்கள் பிரதிநிதிகள் எங்கே? உங்களின் தமிழினம் சார்ந்த கொள்கை நிலைப்பாடு என்ன? சிறைக்கைதிகளை விடுவிப்பதாக தேர்தல் விஞ்ஞாபனம். ஆனால் விடுவிக்கப்பட்ட மக்களையோ, போராளிகளையோ காப்பாற்ற முடியாத அவல நிலை. என்ன முடிவை நிறுத்தப்போகிறது தமிழினம்

தாய்மார்களே!  தந்தையரே!  சகோதர சகோதரிகளே! விடுதலை என்ற புனித மார்க்கத்தில் பயணித்த எமது போராளிகள் இன்று நிர்க்கதியாக்கப்பட்டுள்ளார்கள். போராட்டத்தை முறியடித்ததன் மூலம் அரசுகள் (இலங்கை, இந்தியா.,........,,) தங்களின் மேலாதிக்கத்தை வடகிழக்கில் திணித்து மிக சாதுரியமாக எம்மை பிரித்தாளும் தந்துரோபாயங்களில் தங்களுக்கான பலனை அறுபடை செய்து வருகின்றனர் .

ஒருவரை ஒருவர் சந்தேகிக்கும் அவலம், கட்சிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இடைவெளி,  ஏனோ தானோ என்று வாழும் தமிழினம், இவை அனைத்தும் திட்டமிட்ட இன அழிப்பின் வடிவங்கள் என்பதை தமிழினம் உணருமா?

பிரிந்து பிரிந்து தங்களை வலுப்படுத்த இனவாத அரசையே கட்சிகள் நம்புகின்றன. தமிழ் மக்களை அரச பொறிமுறைக்குள் இருந்து காப்பாற்ற வேண்டிய கட்சிகளே அரச பொறிமுறைக்குள் சிக்கி மக்களை தங்களின் சுயநலனுக்காக பயன்படுத்தும் துர்ப்பாக்கிய நிலை.

மாற்றம் ஒன்று தேவை. ஆனால் மேலும் பல கட்சிகளை உருவாக்குவதோ, உள்ள கட்சிகளை  உடைப்பதோ இன்றுமக்களிற்குத் தேவையற்றது. ஆக்கபூர்வமானதும் அல்ல. மாறாக நாம் அனைவரும் தமிழினத்திற்கெதிரான தீயசக்திகளின் தந்திரோபாயங்களுக்குள் இருந்து விடுபட வெண்டும்.
“இந்திய அரசு சுயநலனுக்காய் இலங்கை அரசுடன் கைகோர்க்கிறது” என்றால் (இலங்கையில் பிரதமர் ராஜிவ்காந்தியை கொலை செய்ய முயற்சித்ததை மறந்துவிட்டது) “நாம் எமது மக்களின் நலனுக்காக” யாவற்றையும் மறந்து ஒரே தமிழினமாக ஒன்றிணைவது ஏன் முடியாது?

திட்டத்தூய்மன், காரையூர்-
நிமிர்வு ஆவணி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.