இலங்கை அரசியலும் சீனாவும்


இலங்கை அரசியலில் சீனாவின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது.  அம்பாந்தோட்டையை 99 வருடக் குத்தகைக்கு சீனாவுக்கு வழங்கிய உடன்படிக்கை அண்மைய பதிவாகும்.  அதனைவிட பொருளாதார வலயங்கள், போக்குவரத்து வீதி அமைப்புக்கள், புனரமைப்புக்கள், சுற்றுலாத்துறை விடுதிகள் என பல உள்கட்டுமான அபிவிருத்திகளுக்கும் சீனா உதவி வருகிறது.  கலாசார, கல்வி, வாய்ப்புக்கள் அதிகரித்து  வருகின்றன.  இராணுவ உறவு, கடன் நன்கொடை, சலுகைக்கடன் வழங்கல் என பல துறைகளில் ஒதுக்கப்பட்ட உறவு சீனாவுடன் வளர்ந்துள்ளது.  இதனாலேயே இலங்கையின் பொருளாதார இருப்பு சாத்தியமாகியுள்ளது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.  ஆனால் இத்தகைய இறுக்கமான உறவால் பறிபோன ஆட்சிகளை நோக்குவதுடன் தென் இலங்கையின் தற்போதைய குழப்பத்திற்கான காரணத்தையும் இக்கட்டுரை முன் வைக்க விரும்புகிறது.

புராதன காலத்திலிருந்து சீன-இலங்கை நட்புறவு நிலவுகிறதென வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.  கி.மு ஆறாம் நூற்றாண்டிலிருந்து நல்லுறவு காணப்பட்டாலும் கி.பி. 14ஆம் நூற்றாண்டில் தான் செங்-ஷீ    எனும் சீனக் கடற்படைத் தளபதியின் தலைமையில் தான் சீன- இலங்கை உறவு இறுக்கமானது.   பெரும் கடற்படையையும், கப்பல்களையும் கொண்டு இந்து சமுத்திர நாடுகளுடனான வர்த்தக உறவை செங்-~P   பேணியதாகவும் கூறப்படுகிறது.  சீனாவுக்கும் இந்து சமுத்திர நாடுகளுக்குமுள்ள உறவில் இலங்கை முதன்மை வகிப்பதாகவும் செங்-ஷீ  கருதியதாகவும் கூறப்படுகிறது.

ஐந்து தடவை செங்-ஷீ  இலங்கைக்கு வருகை தந்ததாகவும் அப்போது கோட்டையை ஆட்சி செய்த தமிழ் மன்னனான அழகேஸ்வராவுடன் போர்புரிந்து அவரை கைது செய்து சீனாவுக்கு கொண்டு சென்றதாகவும் அதன் பின்பே ஆறாம் பராக்கிரமபாகு இலங்கையை முழுமையாக ஆட்சி செய்ததாகவும் ஜானக குணத்திலக எனும் வரலாற்று பேராசிரியர் குறிப்பிட்டிருக்கின்றார்.      செங்-ஷீ யின் வருகைக்கு பின்னால் இலங்கையில் தனது செல்வாக்கை வளர்க்க சீனா முற்பட்டது.  சிற்றரசுகளை நிறுவுவதனுடன், நெருக்கமான பாதுகாப்பு உறவுகளை வளர்க்க திட்டமிட்டது.  இதன் போதே ஐரோப்பியரது குடியேற்ற வாதம் இலங்கையில் பரவியதாக அப்பேராசிரியர் மேலும் தெரிவிக்கிறார்.   அவ்வாறே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியும் சீனாவுடன் எல்லை மீறிய உறவை கொண்டிருந்ததனால் அதிக நெருக்கடியை எதிர்கொண்டதுடன் மூன்றாவது தடவை ஜனாதிபதியாக முடியவில்லை. இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை இரு பாரம்பரியங்களை மறைமுகமாக தன்னகத்தே கொண்டிருந்தது.

முதலாவது, பொருளாதார செழிப்புடைய வல்லரசுகளுடன் உறவைப்  பேணுவது. ஆரம்பத்தில் பிரித்தானியா பின்பு அமெரிக்கா, இறுதியில் சீனா என்ற அடிப்படையில் இந்த பாரம்பரியம் இயங்கி வருகிறது.

இரண்டாவது. இந்திய எதிர்ப்புவாதம்.  ஆரம்பத்தில் பிரித்தானியாவும் அமெரிக்காவும் இந்திய எதிர்ப்பினை கொண்டிருந்ததனால் அவற்றோடு உறவை சரிவர பேணியது.  தற்போது மேற்கு-இந்திய நட்புறவு மலர்ந்துள்ளது. சீன-இந்திய எதிர்ப்பு வலுவடைந்துள்ளது. இவை இலங்கையின் தற்கால வெளிநாட்டு கொள்கையின் அடிப்படை மாறுதலுக்கு காரணமாகியது.

இந்த அடிபடையில் கி.பி. 14ஆம் நூற்றாண்டில் நடந்தது போல, அண்மைக்காலத்தில் ராஜபக்ஸவின் ஆட்சியை வீழ்ச்சியடையச் செய்த அதே சூழல் காரணிகளும் தற்போது மீண்டும் மேலெழுந்துள்ளது.  இக்காரணிகள் மேற்கு-இந்திய கூட்டை மீண்டும் தலையிடத் தூண்டுகின்றன.  தற்போதய இத்தலையீடுகள் ஆட்சியை வீழ்த்துவதற்கானதல்ல.  ஆட்சியில் இருப்பவர்களை  எச்சரிப்பதற்கானது.  99 வருடக்குத்தகையை எப்படி கட்டுப்படுத்தலாம், சீனத் தலையீடுகளை எவ்வாறு சரிசெய்யலாமென மேற்கு இந்தியாவுடன் இணைந்து செயற்பட எடுத்த முயற்சியே ரவிகருணாநாயக்காவின் பதவி விலகலாகும்.  இதனால் பாதிக்கப்படப்போகும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம், அதன் விளைவைச் சந்திக்கப் போகும் த.தே. கூட்டமைப்பின் எதிர்க்கட்சி தலைமை, இனப்பிரச்சினைக்கான தீர்வுகள், எவையுமே இலங்கையின் நலன் சார்ந்ததல்ல.

எனவே தான் தற்போதய ஆட்சியை எச்சரிப்பது அதற்கும் அடங்கவில்லை என்றால் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியை கலைத்து தேர்தலை நடாத்தி இன்னுமொரு தெற்கு பாராளுமன்றத்தை அமைத்து அதிகாரத்ததை கையாளுவதே இத்தலையீடுகளின் நோக்கமாகும்.  இது அடுத்த ஜனாதிபதி வேட்பாளருக்கு பெரும் நெருக்கடியாக அமையலாம்.

எனவே சீன-இலங்கை உறவு அதிகமாக ஆட்சிமாற்றங்களையும் பலியிடல்களையும் ஏற்படுத்தி வருகிறது.  இது இலங்கையின் அமைவிடத்தில் எழுந்த அரசியலாகும்.  இந்தப்புவிசார் அரசியலை புரிந்து கொள்வதென்பது ஆட்சியாளர்களுக்கு கடுமையானதாக இல்லை.  ஆயினும் சீனா மேலும் மேலும் பலமான இந்துசமுத்திர நாடாக மாறுதல் அடைந்து வருவதனால் இப்புவிசார் அரசியல் மேலும் சிக்கலானதாக மாறும். தனது பொருளாதார இருப்புக்கு மேற்குலகிலும் சீனாவிலும் பெருமளவு தங்கியிருக்கும் தெற்கு நாடாளுமன்றம் அதன் விளைவுகளை சந்தித்தே ஆகவேண்டும்.

கலாநிதி கே.ரி கணேசலிங்கம்-
நிமிர்வு ஆவணி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.