20 ஆவது திருத்தச் சட்ட வரைபு நிறைவேறுமா?


கடந்த 23.08.2017 அன்று அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைபு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  இதேவேளை, “மாகாண சபைகளில் இச்சட்ட வரைபு தோற்கடிக்கப்பட்டாலும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றினால் போதுமானது. மாகாண சபைகள் யாவும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றில்லை”    என நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்த சட்ட வரைபு நாட்டின் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என உச்ச நீதிமன்றம் கருத்து வெளியிட்டிருப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்திருந்தார்.

இந்த உத்வேகத்தில் எதிர்கட்சிகள், கூட்டு அரசாங்கத்தில் உள்ள கட்சிகளின் கருத்துக்களை கூட கருத்தில் கொள்ளாமல்   சட்ட வரைபை அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளது.

மாகாண சபைகளை கலைத்து தேர்தல் நடாத்தும் அதிகாரத்தை நாடாளுமன்றத்திடம் பாரப்படுத்தும் நோக்கிலும், சகல மாகாண சபை தேர்தல்களையும் ஒரே நாளில் நடாத்துவதற்கு வழிவகை செய்யும் வகையிலுமே அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக அறிய வருகிறது.

20 ஆவது திருத்தச் சட்ட வரைபை வடமாகாண சபை ஏற்றுக்கொள்ளாது என முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூறியிருக்கிறார். வடமத்திய மாகாண சபையில் இதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு விட்டது. ஊவா மாகாண சபையில் தோற்கடிக்கப்பட்டு விட்டது. முஸ்லீம் காங்கிரஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் கிழக்கு மாகாண சபையில் இதனை நிறைவேற்றுவது கடினமாகும்.

“இதனை கொண்டு வந்திருப்பதன் நோக்கத்தை அரசு தெளிவுபடுத்த வேண்டும்” என சுமந்திரனும், “கூட்டமைப்பின் நிலைப்பாடு தீர்மானிக்கப்படவில்லை. அது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” என இரா. சம்பந்தனும் கூறியிருக்கின்றனர்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஊடாக மாகாண சபைகள் உருவாக்கப்படுவதற்காக அதிகம் பாடுபட்டவர்களும்,  அதிகாரப்பகிர்வு தேவை எனப் போராடியவர்களும் தமிழர்கள் மட்டுமே.  இவ்வாறிருக்க நாடாளுமன்றம் ஊடாக அரசாங்கம் தாங்கள் நினைத்த நேரத்தில் மாகாண சபைகளை கலைத்து விட்டு நினைத்த மாத்திரத்தில் தேர்தலை நடத்துவதன் ஊடாக ஏற்கனவே சொற்ப அதிகாரங்கள் கொண்ட மாகாண சபை செயற்பாடுகளிலும் தலையிட முயற்சிக்கின்றனர் என  ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் க.சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைபினுள் தமிழரசுக் கட்சி தனது பங்காளிக் கட்சிகளை விட்டு விட்டு தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாக இந்த விவகாரத்திலும்  குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்றது. இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள கட்சிகள், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து செயற்படும் கட்சிகள், நாடாளுமன்ற பிரதிநித்துவத்தை பெற்றிருக்காத சில கட்சிகள், தமிழரசுக் கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் என்பன கலந்து கொண்டிருந்தன.    அனைத்துக் கட்சிக் கூட்டமாக 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கட்சிகளின் கருத்துக்களைப் பெறும் முகமாக இக் கூட்டம் நடைபெற்றிருந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற ரெலோ,  புளொட், ஈபி.ஆர்.எல்.எப் ஆகியன பதிவு செய்யப்பட்ட கட்சிகளாக இருப்பினும் அவற்றுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கெனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பாக சந்திப்புக்களை செய்யும் போது பங்காளிக் கட்சித் தலைவர்களையும் அழைக்க வேண்டும் என கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் கூட்டமைப்பின் தலைவர் கூட பங்காளிக் கட்சிகளை அழைக்காது அவரும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கலந்து கொண்டுள்ளனர்.

ஆனால், 20 ஆவது திருத்தச்சட்ட வரைபை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதற்கு, 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு முக்கியமானது.
     
என்ன செய்யப் போகிறது கூட்டமைப்பு?

நிமிர்வு ஆவணி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.