யாப்பு: உரிமைகள் காணி, பொலிஸ், சட்டவாக்கம்
மத்திய அரசாங்கம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் என்பவற்றுக்கிடையேயான உறவுகள் தொடர்பாக புதிய யாப்பில் இடம்பெற வேண்டியவற்றைப் பரிந்துரை செய்ய பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் தலைமையில் உருவாக்கப்பட்ட குழுவின் அறிக்கையிலுள்ள விடயங்களை கடந்த மூன்று இதழ்களிலும் தொடர்கட்டுரைகளாக பார்த்தோம். தற்போதுள்ள மாகாண சபைகளின் அதிகாரங்ளை மத்திய அரசு எவ்வாறு மறுதலிக்கிறது என்பதை இவ்வறிக்கை தெளிவாகச் சொல்கிறது. இவ்வறிக்கையின் அநுபந்தத்தில் காணி, பொலிஸ் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பாக இக்குழு அளித்துள்ள பரிந்துரைகளை இத்தொடர்கட்டுரைகளின் இறுதி அங்கமாக இவ்விதழில் பார்ப்போம். அடுத்த இதழ்களில் இவ்வறிக்கையில் உள்ளடங்கிய விடயங்கள் தொடர்பான வாதப்பிரதிவாதங்களை வெளியிடுவோம். - ஆசிரியர்
உரிமைப் பட்டியல்கள்
13ஆம் திருத்தச் சட்டமூலம் மாகாணசபைகளுக்குரிய உரிமைகள், மத்தியஅரசுக்குரியஉரிமைகள், அவை இரண்டுக்கும் பொதுவான உரிமைகள் என்று 3 பட்டியல்களை உள்ளடக்குகிறது. இவற்றுள் பொதுவுரிமைப் பட்டியலில் உள்ள விடயங்கள் மத்திய அரசும் மாகாண அரசும் கலந்துரையாடித் தீர்மானிக்கப்பட வேண்டியவை. இப்பட்டியலில் உள்ள ஓரிரு விடயங்களைத் தவிர்த்து ஏனையவற்றில் மத்திய அரசு மாகாண அரசுகளுடன் கலந்துரையாடலை நடத்தவேயில்லை. இது இருபது ஆண்டுகளின் பின்னரும் அதிகாரப்பரவலாக்கல் என்பதை அர்த்தமில்லாததாக்கிவிடுகிறது.
மேலும் இப்பட்டியலிலுள்ள பெரும்பாலான விடயங்கள் மாகாணசபைக்கே உரித்துடையவை. ஊதாரணமாக புனர்வாழ்வு, சமூகசேவை, சமூகஅபிவிருத்தி, மகளிர் மற்றும் இளையோர் அபிவிருத்தி, அழிவுநிவாரணம், மற்றும் விவசாயம் போன்றவை மாகாண அமைச்சின் அதிகாரப்பட்டியலிலேயே இருக்க வேண்டியவை. இவ்வாறான விடயங்களில் தேசிய அளவில் கொள்கை வகுப்பதென்பது அர்த்தமற்றது. இத்தேவைகள் மாகாணத்திற்கு மாகாணம் வேறுபடும். எனவே ஒரு மாகாணத்தின் தனித்துவமான தேவைகளைப் பூர்த்தி செய்பவை என்ற வகையில் இவை மாகாண சபை அதிகாரப் பட்டியலிலேயே இருக்க வேண்டியவை.
மாகாண சபை பட்டியல், பொது உரிமைப் பட்டியல் என்பவற்றில் இல்லாத விடயங்கள் எல்லாமே மத்திய அரசின் உரிமைப் பட்டியலில் உள்ளடக்கப்படும் என்ற கூற்று மத்திய அரசுக்கு நியாயமற்ற அனுகூலத்தை வழங்கிவிடுகிறது. இதனை நிவர்த்தி செய்வதற்கு பொது உரிமைப் பட்டடியலை இல்லாது ஒழித்து, மாகாண உரிமைப் பட்டியல் மத்திய அரசு உரிமைப் பட்டியல் என்ற இரு தெளிவாக வரையறுக்கப்பட்ட பட்டியல்களே இருக்கவேண்டும் என இக்குழு பரிந்துரைக்கிறது.
சட்டம் ஒழுங்குபொலிஸ் அதிகாரம்
மாகாண சபைகளுக்கு சட்டம் ஒழுங்கு பொலிஸ் அதிகாரம் ஆகியவற்றுக்கான பொறுப்புக்கள் வழங்கப்படாமல் விட்ட குறைபாடு குழுவின் அங்கத்தவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. சட்டம் ஒழுங்கு என்பவை மாகாணசபையின் அதிகாரத்துக்கு உட்படவேண்டும் எனவும் பொலிஸ் அதிகாரம் மாகாணசபையின் சுயாதீன ஆணைக்குழுவால் நிர்வகிக்கப்பட வேண்டுமெனவும் இக்குழு பரிந்துரை செய்கிறது. மாகாண பொலிஸ் படைமத்திய பொலிஸ் படையுடன் இணைந்து செயற்பட வேண்டும். மாகாணசபைக்கென ஒரு தலைமை வழக்குத் தொடுநர் இருக்க வேண்டுமெனவும் இக்குழு பரிந்துரைக்கிறது.
காணி
மாகாண மக்களின் காணி தொடர்பான கரிசனையையும் விருப்புக்களையும் மாகாண சபையே தெளிவாகப் புரிந்துகொள்ளக் கூடியது. என்ற வகையில் அரசகாணிகளுக்குரிய அதிகாரங்கள் மாகாணசபைக்கே உரித்தாக்கப்பட வேண்டும். மாகாண உரிமைப் பட்டியலின் 18ஆம் விடயம் காணி அதிகாரத்தை மாகாணசபைக்கே வழங்குகிறது. ஆனால் சட்டமூலத்தின் இரண்டாம் அனுபந்தம் அவ்வதிகாரத்தை மட்டுப்படுத்தி மத்திய அரசுக்கு அனுகூலத்தை வழங்குகிறது.
இதனால் அரச காணிகள் மாகாண சபைகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் படவேண்டும் என இக்குழு பரிந்துரைக்கிறது. மத்திய அரசு தனது நியாயமான தேவைகளுக்கு காணிகளை மாகாண அரசாங்கத்திடமிருந்து கோரமுடியும். மேலும் மாகாண சபை அரச காணிகளைப் பயன்படுத்தும் போது காணி அதிகார சபையின் பரிந்துரைகளுக்கு அமைய செயற்பட வேண்டும். இக்காணி அதிகாரசபை மாகாண அரசுகளினதும் மத்திய அரசினதும் உறுப்பினர்களால் உருவாக்கப்பட வேண்டும். எந்தவொரு மாகாண சபையின் அனுமதியின்றி அந்த மாகாணத்தின் காணிப் பயன்பாட்டை இக்காணி அதிகார சபை நடைமுறைப்படுத்த முடியாதவாறு சாசனங்கள் எழுதப்பட வேண்டும்.
அரசியலமைப்புநீதிமன்றம்
ஆளுனரின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று இக்குழு ஏற்கனவே பரிந்துரைத்துள்ளது. மாகாண சபை சட்டவாக்கத்தில் ஆளுனரின் தலையீடு இருக்கக்கூடாது என பரிந்துரைக்கப்பட்டது. மாற்றாக ஒரு அரசியலமைப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என இக்குழு பரிந்துரைக்கிறது. இந்நீதிமன்றம் மாகாண சபைகளால் இயற்றப்படும் சட்டங்களை அவை அறிமுகப்படுத்தப்பட முன்னரும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னரும் ஆராய்வுக்குட்படுத்தும். இச்சட்டங்கள் தொடர்பாக மாகாணசபைகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஏற்படக்கூடிய பிணக்குகளை தீர்த்து வைக்கும். இந்த அரசியலமைப்பு நீதிமன்றம் நாட்டில் வாழும் எல்லா இனத்தவரையும் சமமாக பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்.
நிமிர்வு ஆவணி 2017 இதழ்-
Post a Comment