அரைகுறைத் தீர்வைத் திணிக்க அரசு முயற்சி


தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டம் இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், வைத்திய நிபுணர் பூ.லக்ஸ்மன், த.வசந்தராஜா ஆகியோரின் தலைமையில் யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் 30.07.2017 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

அங்கு வைத்திய நிபுணர் பூ.லக்ஸ்மன் பேசிய முக்கிய விடயங்கள் வருமாறு,
     
  2009 இன் பின்னர் எமது நீதிக்கான வேட்கையும் பயணமும் வன்முறை மூலம் அடக்கப்பட்டதாக சிறிலங்கா அரசு எண்ணியிருந்தது. ஆனாலும் எதுவித இழப்புகள் வரினும், எம்மக்களின் உரிமை விட்டுக் கொடுக்கப்பட முடியாதது எனும் செய்தியை தமக்கு கிடைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் மிகத்தெளிவாக சிறிலங்கா அரசிற்கும் உலகிற்கும் எமது மக்கள் எடுத்துக் கூறி வந்திருக்கின்றனர்.

எமது இனத்தின் அழிவுகளுக்கு காரணமும் பின்னணியுமாக இருப்பவை: பௌத்த சிங்களத்தை முன்னிலைப்படுத்தும் பேரினவாத சிந்தனை எமது தாயகத்தை, வடக்கு மற்றும் கிழக்கு என பிளந்து, ஒரு தேசிய இனமான எம்மை தொடர்ச்சியான ஒரு நிலப்பரப்பு அற்ற, வெறும் ஒரு சிறுபான்மை இனமாக மாற்றும் நீண்ட காலதிட்டம்; அதன்மூலம் சுயநிர்ணய உரிமைக்கான எமது கோரிக்கையின் நியாயத்தை நீர்த்துப் போகச் செய்வது.

இந்த அழிவுகள் தந்த பாடங்கள் தான், எமக்கு, மதச்சார்பற்ற நாடும் பிரிக்கப்படாத வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய, பூரண சமஷ்டியும் எமது இனத்தின் இருப்பிற்கும் பாதுகாப்பிற்கும் அவசியமானது என்பதை எமக்கு மீளமீள வலியுறுத்தி நிற்கின்றன. இதனையே அழுத்த திருத்தமாக எமது மக்கள் பல தடவைகள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

எமது மக்களின் இந்த அடிப்படை அரசியல் அபிலாசைகள் அழிக்கப்பட முடியாதது என்பதை இந்த அரசாங்கம் புரிந்து கொண்டுள்ளது. தன் கபடமான அணுகுமுறைமூலம், எம் மக்களின் அடிப்படை அபிலாசைகளை எதுவிதத்திலும் பூர்த்தி செய்யாத ஒரு அரசியலமைப்பை, போலி முலாம்களைப் பூசி இனப்பிரச்சினைக்கான தீர்வு எனும் பெயரில் அறிமுகப்படுத்த முனைகிறது. அதற்கு எம் மக்களின் சம்மத்தினை பெற எத்தனிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, எம்  இனத்தின் வழமையான வரலாற்று துயரமாக, எம்மிற் சிலரும் இதற்கு உடந்தையாக உள்ளனர்.

இந்த அரசாங்கம் ஆரம்பம் முதலே அமையப்போகும் புதிய அரசியலமைப்பானது, எந்த விதத்திலும் ஒற்றையாட்சியை விட்டுக்கொடுக்காத ,அதாவது சமஷ்டி அற்ற, வடக்கு கிழக்கு இணைப்பு அற்ற, குறித்த ஒரு தனியான மதத்திற்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கின்ற அம்சங்களைக் கொண்டிருக்கும் என மிகத்தெளிவாக வலியுறுத்தி வந்திருக்கின்றது.

தவிர புதிய அரசியலமைப்பினை வரையும் முக்கியமான பலரும் இந்த கருத்தை மீள உறுதி செய்திருக்கிறார்கள். இவற்றிற்கெல்லாம் மேலாக நிறைவேற்றதிகார ஜனாதிபதியும், நாட்டின் பிரதமரும், பௌத்தமத பீடாதிபதிகளிடம் பகிரங்கமாகவே மேற்சொன்ன நிலைப்பாடுகளை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

எமது அரசியல் கோரிக்கைகள், வெறுமனே சட்ட அரசியல் புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்ட வரைவிலக்கணங்களின் திரட்டு அல்ல. இது ஒரு கட்டடத்துக்குள் நடத்தப்பட்ட ஒரு அரசியல் விஞ்ஞான ஆராய்ச்சியின் முடிவும் அல்ல. இது வரலாறு எமக்கு தந்த படிப்பினை. எமது அழிவுகள் எமக்கு சொல்லித்தந்த தற்காப்பு கோரிக்கை. இரத்தமும் சதையுமாக கடந்த எழுபது ஆண்டுகள் எமது மக்கள் பட்ட துன்பத்தின் பட்டறிவினால் கண்டறிந்த முடிவுகள். மனசாட்சியுடைய மனிதர்கள் எவரும் இதை நிராகரிக்க முடியாது. இதை மீறி எம்மீது எதையும் திணிக்கவும் முடியாது.

நவீன ஜனநாயக உலகின் நடைமுறைகளுக்கமையவே நாம் எமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். சுகல மதங்களும் சமனாக இருக்க வேண்டும்;  வரலாற்று ரீதியான தொடர்ச்சியான நிலப்பரப்பும் தனியான மொழி, கலாச்சாரம் பண்பாடும் உடைய ஒரு தேசிய இனமானது, சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையது.  இன்னொருவரின் முடிவை பிறர் மீது திணிக்காத சுயாதீன ஆட்சிமுறையான சமஷ்டி, இவை நியாயமற்றவை என எவராலும் கூறமுடியாதவை. நவீன உலகின் நடைமுறை ஆட்சி அதிகாரங்கள் மேற்சொன்ன வழிகளிலேயே ஒழுகுகின்றன. அதிலும் ஒரு இனப்படுகொலையை எதிர்கொண்ட ஓர் இனம் தன் இனத்தின் இருப்பின் பாதுகாப்பிற்கு இந்த கோரிக்கைகளை முன்வைப்பது அவசியமானதும் கூட.

ஆனால் “நடைமுறை யதார்த்தம்” எனும் பெயரில் நாகரிகமடையாத நடைமுறைகளாகிய, குறித்த ஒரு மதத்தை மட்டும் பிரதானப்படுத்துகின்ற, மத்தியின் அதிகாரங்களை ஏனையவர்களிடம் திணிக்கின்ற, ஒரு தேசிய இனம் தம் வாழ்வியலை நிர்ணயிக்கும் எந்தவித உரிமையையும் மறுதலிக்கின்ற எமது வரலாற்றுத் தாயகத்தை இரண்டாக பிளக்கின்ற ஒரு யோசனையை எம்மவர்கள்மீது  விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர். எமது அபிலாசைகளை எது விதத்திலும் அணுகாத இந்த போலிப் ”பொதியை” தீர்வு எனும் பெயரில் ஏற்றுக் கொண்டால், எமது நீதிக்கான பயணத்தை முன்னே கொண்டு செல்ல முடியாத படி நாமே முற்றுப்புள்ளி வைத்தவர்களாகிவிடுவோம்.

ஒற்றையாட்சிக்குட்பட்ட அரசியலமைப்பொன்றை தீர்வு எனும் பெயரில் ஏற்றுக்கொண்ட பின்னர் அந்த ஒற்றையாட்சிக்குட்பட்டே எதையும் அணுக வேண்டிவரும் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்ட பின்னர் படிப்படியாக சமஷ்டியை நோக்கி நகரலாம் என்பது எம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் செயற்பாடாகும்.

ஏற்கனவே எமது மக்களின் பொருட்டு எதுவுமே நடைபெறாத அரசியலமைப்பு பணிகளானது, தீர்வைநோக்கி முன்னேற்றகரமாக நகர்வதாக எம்மவர்களையே கூறவைத்து, இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலில் இருந்து ஏறத்தாழ தப்பித்துக்கொண்டுள்ள அரசாங்கம், இப்போது, எமது அடிப்படைக்கோரிக்கைகள் அனைத்தையும் நிராகரிக்கின்ற இந்த “தீர்வு” பொதியையும் எம்மைக்கொண்டே ஆமோதிக்கப்பண்ணி, இனப்பிரச்சனைக்கு நீதியான தீர்வையும் முடக்கி விட முயற்சி செய்கிறது.

 இந்த சந்தர்ப்பத்தில்தான், எமது மக்களின் அரசியல் தெளிவு முக்கியத்துவம் பெறுகிறது. வெறும் மேடை, உணர்ச்சி பேச்சுக்களைதாண்டி, ஊடகங்களின் பரபரப்பான தலைப்பு செய்திகளை தாண்டி, அனைத்தின் உள்ளடக்கங்களையும் நாம் விழிப்புடன் ஆராய்ந்து அணுக வேண்டும். உண்மையில் என்ன நடக்கின்றது என்பதை அறிந்து கொள்ளவேண்டும். தொடர்ச்சியான இழப்புகளாலும் நம்பிக்கையீனத்தாலும் தோல்வி மனப்பான்மையாலும் சலித்து போயிருக்கும் எங்களை குழப்பி, தமது அரைகுறை “பொதியை” தீர்வு எனும் பெயரில் திணிப்பதற்கு முயலும் திட்டங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டிய காலகட்டம் இது. உத்தேச அரசியலமைப்பு குறித்த முக்கியமான விடயங்கள் வெளிப்படையாகவே பொறுப்பு வாய்ந்தவர்களால் சொல்லப்பட்டிருக்கும் நிலையில், அரசியலமைப்பு பூரணமாக வெளிவரும் வரை மக்களுக்கு ஒன்றும் சொல்லாது காத்திருப்போம் என சொல்வது எம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயற்பாடே ஆகும்.

இந்த அரசாங்கமானது இந்த போலி தீர்வு யோசனையை எம்முள் திணிப்பதற்கு, செயற்கையான நடைமுறை அழுத்தங்களையும் சந்தர்ப்பங்களையும் உருவாக்கி அதன்மூலம் தன் திட்டங்களை நடைமுறைப்படுத்த எத்தனிக்கும்.

உணர்ச்சி அரசியலுக்குப் பலியாகாது, மக்களை அரசியல் விஞ்ஞான ரீதியாக தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை எமது மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள சக்திகள் அனைத்தும் ஒற்றுமையுடன் செய்ய வேண்டும். எமது அரசியல் கொள்கையின்பாற்பட்ட ஒற்றுமை இங்கு தான் தேவைப்படுகிறது. எமது மக்களின் அடிப்படை விருப்புகளை, அரசியல் விஞ்ஞான வார்த்தை ஜாலங்கள் மூலம் ஏமாற்றும் முயற்சிகளில் இருந்து பாதுகாக்க, அரசியல் அறிஞர்கள், சட்டத்துறைசார்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் என அனைவரும் ஒன்று திரண்டு செயற்பட வேண்டும். இந்த விழிப்பூட்டல் நடவடிக்கைகள் எமது மக்களின் ஜனநாயக கோரிக்கைகளிற்கானதே தவிர எவருக்கும் எதிரானது அல்ல. தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் விருப்புகளையும் நவீன உலகின் நடைமுறை அரசியல் முறைமைகளையும் கருத்திற்கொண்டு, எம் மண்ணின் அரசியலாளர்களினதும் மக்களினதும் பங்களிப்புடன் தமிழ் மக்கள் பேரவை கடந்த ஆண்டு உத்தேச தீர்வுத் திட்டம் ஒன்றை முன் வைத்திருந்தது. அந்த அடிப்படைகளை முன்வைத்து, எமது தாயகத்தின் அனைத்து மக்களையும் அணுகக்கூடிய விதத்தில் ஒரு விழிப்புணர்வுப் பொறிமுறையை முன்னெடுக்க வேண்டி உள்ளது.

அரசியலமைப்பு வெளிவரும்வரை அதற்காக காத்திருப்போம் என கூறுவது மக்கள் அதை ஆராய்வதற்காக கால அவகாசத்தை இல்லாததாக்கி, அவசர அவசரமாக அதை திணிக்க முயலும் அரசின் சதிமுயற்சிக்கு துணையாகவே அமையும். எனவே அரசியலமைப்பு குறித்த விஞ்ஞான ரீதியிலான தெளிவுபடுத்தல்களை நாம் காலதாமதமின்றி பரவலாக முன்னெடுக்க வேண்டும். இந்தவிழிப்பூட்டல் நடவடிக்கைகளுக்குநாம் எவரையும் சார்ந்திருக்கவேண்டியதில்லை. இது நம் அனைவருக்குமான பொறுப்பு என்பதை நாம் உணர்ந்து கொண்டு செயற்படுவதே இன்றைய தேவையாகும்.

ஒர் “அரசு”, தனது திட்டத்தை நிறைவேற்ற பல்வேறு முனைகளை திறக்கும். அதன் ஆளணி, பணபலம், படைபலம், சர்வதேசஉதவி, முகவரமைப்பு வேலைகள் என பல படி நிலைகளில் இது நடைபெறும். ‘அரசு’ களுக்கு அது இலகுவான காரியம். ஆனால், அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அரசற்ற ஒரு தேசிய இனமாகிய நாம் இவற்றையெல்லாம் எதிர்கொள்ள எமக்கு இருப்பது எமது மக்களின் கொள்கை உறுதிமட்டுமே. எனவே, எம் மக்களின் இழப்புக்களின் மேலும், எம் மக்களுக்காக பாரம் சுமந்தவர்களின் அர்ப்பணிப்புக்களின் பேரிலும், எமது கட்சிசார், தேர்தல் நலன்சார், சுயலாப அரசியல் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு, நாம் மனச்சாட்சியுடன் கொள்கையின் பாற்பட்டு ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே எம் இனத்தின் மீதான இந்த சதி முயற்சியை வெற்றி கொள்ள முடியும்.

நிமிர்வு ஆவணி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.