ஆசிரியர் பார்வை
“நீதித்துறையின் கரங்களை சட்டமா அதிபர் கட்டி வைத்திருக்கிறார். இது ஜனநாயக நீதித்துறையின் அடிப்படைத் தத்துவம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு முற்றிலும் முரணானது. எந்தவொரு பிணை மனுவையும் நிராகரிக்கும் அதிகாரம் பெற்றவராக சட்டமா அதிபர் இருக்கிறார். இந்த நடைமுறை இன்னமும் சிறிலங்காவில் உள்ளது.” என இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்புக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஐந்து நாட்கள் இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து இறுதியில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவுடனான சந்திப்பில் இடைநடுவில் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன்,வெளியேறினார். ஐ.நாவுடன் ஒத்துழைக்கவில்லை என்று பகிரங்கமாக அறிவிப்பேன் என்று அவர் விஜேதாச ராஜபக்சவை எச்சரித்துள்ளமையும் இங்கே சுட்டிக் காட்டத்தக்கது.
இலங்கை அரசாங்கம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் செயற்பாட்டில் எவ்வித முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தாமல் இருக்கிறது. முன்னேற்றமானது தாமதமடைந்துள்ளது. அது கள ரீதியாக நிறுத்தப்பட்டு விட்டது. தற்போதைய நிலையை வைத்து பார்க்கும் போது அரசாங்கம் குறிப்பிட்ட கால வரையறைக்குள் நீதியை நிலைநாட்டும் என எதிர்பார்ப்பது கடினமாக உள்ளது.
இலங்கை அரசாங்கம் குறிப்பிட்ட காலத்துக்குள் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டா விடின் பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெறலாம். ஐரோப்பிய ஒன்றியத்தின் சலுகைகளை இலங்கை இழக்கலாம். ஐநா மனித உரிமைகள் பேரவையில் உள்ள இந்த விவகாரம் ஐ.நா பாதுகாப்புச் சபைக்கும் செல்லலாம் எனவும், சர்வதேசத்தின் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு எனவும் எச்சரித்துள்ளார். உலகிலேயே மிகவும் கீழ்த்தரமான சித்திரவதை முறைமை இலங்கையில் காணப்படுகிறது என குறிப்பிட்ட எமர்சன் குறித்த சித்திரவதைகளையும் பட்டியலிட்டார்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்த பின்பும் தமிழர்கள் மீதான இலங்கை அரசின் பல்வேறு ஏமாற்றுத்திட்டங்களை, இழுத்தடிப்புக்களை நேரில் அம்பலப்படுத்தினார் எமர்சன்.
அரசியல் அமைப்பை திருத்துவதற்கு பொதுமக்களிடம் அபிப்பிராயம் கேட்கப்பட்டு, அரசியலமைப்பை உருவாக்குவதற்கு குழுக்கள் நியமிக்கப்பட்டு இதற்கென பெருந்தொகைப் பணமும் நேரமும் செலவழிக்கப்பட்டு இறுதியில் மகாநாயக்க தேரர்களின் சம்மதமில்லாமல் தம்மால் ஓரடி கூட எடுத்து வைக்க முடியாது எனவும், பௌத்தத்திற்கே முன்னுரிமை, ஒற்றையாட்சி அப்படியே அமுலாகும் என ஜனாதிபதியும், பிரதமரும் கூறியுள்ளனர்.
இலங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்து தமிழ் மக்களையும் சர்வதேசத்திலுள்ள ஜனநாயக சக்திகளையும் ஏமாற்ற மீண்டும் மீண்டும் அரங்கேற்றப்படும் செயற்பாடே இது. இது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான். சிங்கள அரசைப் பொறுத்தவரையில் சர்வதேசத்தின் அழுத்தம் இல்லாமல் அது இனப்பிரச்சனையைத் தீர்க்கப் போவதில்லை. ஒன்றுக்கும் உதவாத மாகாணசபை கூட இந்தியாவின் அழுத்தத்தினாலேயே உருவாக்கப்பட்டது. இவ்வாறான ஏமாற்றுதலுக்குத் துணை போவதிலிருந்தும் ஏமாற்றப்படுவதிலிருந்தும் சர்வதேசம் விடுபடவேண்டும்.
ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனின் கூற்றுக்கள் தமிழரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களாலும் சர்வதேச ஜனநாயக சக்திகளாலும் முக்கியமாகக் கவனிக்கப் படவேண்டியவை. அவற்றைக் கருத்திற் கொண்டு அவர்கள் தமது செயற்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டுமென தமிழ்மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
செ. கிரிசாந்-
நிமிர்வு ஆடி 2017 இதழ்-
Post a Comment