பெரும்பான்மை இனத்தின் அடிமைகளாகிவிடுமா வருங்காலச் சந்ததி?
போராட்ட காலத்தில் நிலையான வதிவிடமின்றி ஒழுங்கான உணவு உடை இன்றி மிகவும் அவதிப்பட்ட மக்களுக்கு இனிமேலாவது நல்ல வாழ்க்கை அமைய உதவவேண்டுமென்பது புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் பலருக்குமுள்ள எண்ணமாகும். ஆனால் போராட்டம் முடிந்த கையோடு தமிழர்களின் பொருளாதாரத்தை சிதைப்பதும் கலாச்சாரத்தை ஒழிப்பதும் கொள்கையாக வகுக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மூலைக்கு மூலை சாராயக் கடைகள் திறக்கப்பட்டன. போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்பட்டது. விபச்சாரம் முடுக்கி விடப்பட்டது. தமிழர் தாயகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் தாம் மெல்ல மெல்ல அழிக்கப்படுகின்றோம் என்பதை உணராமலேயே அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். போராட்ட காலத்தில் தாயக மக்களின் இன்னல்களைப் போக்க நிதியுதவி புரிந்த புலம்பெயர் உறவுகளிடமிருந்து தொடர்ந்தும் நிதி உதவிகளை எதிர்பார்த்து கையேந்துகிறார்கள்.
2013ஆம் ஆண்டு செயற்படத் தொடங்கிய வடமாகாண அரசும் பொருளாதார அபிவிருத்தி சார்ந்த எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் தமக்குள்ளே முரண்பட்டு நிற்கிறார்கள். புலம்பெயர் மக்களின் நிதிப் பங்களிப்பில் உருவாக்கப்பட்ட தொழில் ஸ்தாபனங்களோ அன்றி தனியார் முயற்சியில் உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகளோ எவற்றினதும் தரவுகளின்றி தமது மாகாணத்தில் என்ன நடக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளாமலேயே மாகாண அரசு தனது காலத்தை ஓட்டி வருகின்றது.
படித்த தமிழ் பட்டதாரிகளும் இளைஞர்களும் ஒன்றில் ஏதாவது ஒரு வெளிநாடு போகவேண்டும் என்ற கனவோடு இருக்கிறார்கள் அல்லது அரசாங்க உத்தியோகத்தை எதிர்பார்த்து காலத்தை ஓட்டுகிறார்கள். தமக்கு வேலை வேண்டும் எனப் போராடும் பட்டதாரி இளைஞர்கள் தனியார் ஸ்தாபனங்களில் வேலைக்காக கோரப்படும் விண்ணப்பங்களைத் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. அரசாங்கத்தில் கொடுக்கப்படும் சம்பளத்திலும் பார்க்க இரண்டு மடங்கு தனியார் ஸ்தாபனத்தில் கொடுத்தாலும் வேலையில் சேர பட்டதாரிகள் தயாராக இல்லை. அதற்கு சிலர் கொடுத்த விளக்கம் அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை செய்யாவிட்டாலும் சம்பளம் கிடைக்கும். ஆனால் தனியார் ஸ்தாபனத்தில் கோரப்படும் வேலைகளை அன்றன்றே செய்து முடிக்க வேண்டும். கடுமையான உழைப்பு எதிர்பார்க்கப்படும். ஆனால் அந்த உழைப்புக்குரிய ஊதியம் அங்கு கொடுக்கப்படும் என்பதையும் அவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். அப்படியானால் தமிழர்கள் உழைத்து வாழ பின்னிற்கிறார்களா?
ஆனால் புலம்பெயர்ந்து வந்த தமிழர்கள் கடும் உழைப்பாளிகளாக தெரிகின்றார்களே. அவர்கள் அகதிகளாக வந்த காரணத்தால் தாயகத்தில் அவர்கள் படித்த படிப்பையும் பட்டத்தையும் வைத்து அவர்களால் எந்த உத்தியோகத்தையும் பெறமுடியவில்லை. புலம்பெயர் நாடுகளில் அரசாங்க உத்தியோகமென்றால் அந்நாட்டின் குடிமகனாக இருக்க வேண்டும். தொழில் செய்வதற்கான சான்றிதழ் பெறவேண்டுமானால்கூட வதிவிட உரிமை பெற்றிருக்க வேண்டும். 90 வீதமான தமிழர்கள் தொழிற்சாலைகளிலேயே வேலை செய்து அவ்வேலையை நன்கு படித்து தாமே ஒரு தொழில் ஸ்தாபனத்தை உருவாக்கி உயர்ந்தவர்கள். ஒரு குறுகிய காலத்தில் தனிப்பட்டமுறையில் தொழிலதிபர்களாக உயர்ந்து மில்லியனர்களாகவும் ஏன் பில்லியனர்களாகக்கூட இருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள். அந்த இனம்தானே தாயகத்திலும் இருக்கிறது? அங்கு மட்டும் ஏன் அரசாங்க வேலைதான் வேண்டும் என மக்கள் அடம்பிடிக்கிறார்கள்?
இன்றைய தலைமுறையாக புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் அனைவரும் தாயத்தில் வாழ்ந்து அந்த அனுபவங்களோடு உணர்வுகளோடு இடம் பெயர்ந்தவர்கள். அந்த மண்ணின் பெருமையையும் இன்று அதுபடும் வேதனையையும் உணர்ந்தவர்கள். தமது உறவினரோ நண்பர்களோ இடரில் தவிக்கும்போது, உதவிநாடி கரம் நீட்டும்போது அதை புரிந்துகொண்டு தம்மாலான உதவியை செய்யவேண்டும் என நினைப்பவர்கள். ஆனால் அடுத்த சந்ததியான அவர்களின் பிள்ளைகளுக்கு அந்த உணர்வு இருக்கப் போவதுமில்லை, ஈழத்தில் இருக்கும் அடுத்த சந்ததியை தெரியப்போவதுமில்லை. ஆகவே இன்று இளைஞர்களாக, இளம் பெற்றோர்களாக இருப்போரின் பிள்ளைகளுக்கு புலம்பெயர்ந்த சமூகத்திடமிருந்து எந்த உதவியும் கிடைக்கப் போவதில்லை. அதே நேரத்தில் உழைக்காமல் எந்த முயற்சியும் எடுக்காத பெற்றோரைப் பார்த்து வளரும் பிள்ளைகள் உழைக்கலாம், முன்னேறலாம் என்ற உண்மையை உணராமலே வளர்ந்து மற்றவரிடம் கையேந்தி வாழவேண்டிய நிலை ஏற்படலாம்.
புலம்பெயர் உறவுகளும் உதவாத போது தான் வாழும் நாட்டிலே மற்ற இனங்களிடம் கையேந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். 60களிலே பணம் படைத்த வடகிழக்கு தமிழர்களின் வீடுகளில் வறிய சிங்கள மக்கள் வேலைக்காரர்களாக இருந்தார்கள். 80பதுகளிலே பணம் படைத்த சிங்கள வீடுகளில் வறிய மலையகத் தமிழர் வேலைக்காரர்களாயிருந்தார்கள். இன்னும் 10 அல்லது 15 வருடங்களில் ஈழத்தமிழரும் சிங்கள வீடுகளில் வேலைக்காரர்களாயிருக்கும் வறுமை நிலைக்குத் தள்ளப் படுவார்கள்;. இந்த தூரநோக்கு பார்வை தாயகத்திலிருக்கும் தமிழர்களிடமும் இல்லை தமிழ் தலைவர்களிடமுமில்லை.
தாயக மக்களுக்கு உதவவேண்டும் என புலம்பெயர் மக்கள் துடிக்கிறார்கள் ஆனால் எப்படிச் செய்வதென தெரியவில்லை. அன்றாட வாழ்க்கைக்கு பணம் கொடுப்பது பிச்சை போடுவது போலாகும். அவர்கள் உழைத்து வாழ்வதற்கு தொழில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம் என சிலர் முனைந்தார்கள். ஆனால் உழைப்பதற்கு எவரும் முன்வராததால் தொழிற்சாலைகள் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனவே. இரு உதாரணங்கள்.
கனடாவிலே பிரதான வர்க்கத்தோடு தொழில்புரியும் தொழிலதிபர் வடக்கில் கொங்கிறீற் தட்டுப்பாடுகளை நிவர்த்திசெய்ய ஒரு தானியங்கி இயந்திரத்தை கொள்வனவு செய்து அதற்கு தேவையான இதிரி இயந்திரங்களையும் வாங்கி 56 மில்லியன் ரூபா செலவில் மிஸ்டர் கொங்கிறீற் என்ற நிறுவனத்தை புலோலியில் ஆரம்பித்தார். அதன் உற்பத்திக்கு வடக்குமட்டுமல்ல தெற்கிலிருந்தும் ஓடர்கள் வந்தபோதும் அதில் வேலை செய்ய ஆட்களில்லாமல் திண்டாடியபோது சிலரின் ஆலோசனைப்படி சில சிங்கள இளைஞர்களை வேலைக்கமர்த்தினார். தீர்வு கிடைத்தது. படிப்படியாக மேலதிக சிங்கள இளைஞர்கள் வந்து சேர்ந்து இன்று 100க்கும் அதிகமான சிங்கள இளைஞர்கள் அங்கே தங்கியிருந்து வேலை செய்கிறார்கள். தமக்கு அரசாங்க வேலை வேண்டும் என்று தமிழ் பட்டதாரிகள் போராட்டம் நடத்துகையில் தமிழ் பகுதியொன்றில் உள்ள தொழிற்சாலையொன்றில் சிங்கள இளைஞர்களை தேடிப்பிடித்து வேலைக்கமர்த்த வேண்டிய நிலை.
இன்னொன்று வல்லையிலியங்கும் ஆடைத் தொழிற்சாலை. புலம்பெயர்ந்து வாழும் உடுப்பிட்டி மக்கள் அந்த ஊரைச் சுற்றியிருக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவேண்டும் என 30 இயந்திரங்களைக் கொண்ட ஆடைத்தொழிற்சாலை ஒன்றை உருவாக்கினார்கள். ஆனால் அதை கொண்டு நடத்துவதற்கு படித்த இளைஞர்கள் முன்வராததாலும் தைப்பதற்கு ஆர்வமுள்ளவர்கள் வராததாலும் எமது மக்களின் உழைப்புக்கு ஆதரவு தந்து தைத்த உடுப்புக்களை வாங்கி விற்க ஆடை விற்பனை நிலையங்கள் முன்வராததாலும் அந்த ஆடைத் தொழிற்சாலை ஊசலாடிக்கொண்டிருக்கின்றது. தமிழர் தாயகத்திற்கான ஆடைத்தேவைகள் யாவும் தெற்கிலிருந்தே வருகின்றது. அதை வடக்கில் உற்பத்தி செய்வதானால் வல்லைபோல் 100 தொழிற்சாலை போடலாம். அதை வர்த்தகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்த ஆடைத்தொழிற்சாலையை இலாபகரமாக நடத்துவதானால் தெற்கிலிருந்து தொழிலாளிகளை வருவியுங்கள் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. அப்படியானால் யாருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கு புலம்பெயர் மக்கள் பணத்தை இறைக்கிறார்கள்?
தாயகத்து மக்கள் விழிப்படையாவிட்டால் எமது முன்னோர்கள் உழைத்து முன்னேறியவர்கள் என்பதை புரிந்து கொண்டு கடுமையாக உழைக்கத் தவறினால் அவர்களது வருங்காலச் சந்ததி அந்த நாட்டிலேயே பெரும்பான்மை இனத்தின் அடிமைகளாக வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும். ஏனென்றால் பிள்ளைகளின் முன்மாதிரிகள் பெற்றோர்களே.
வைரமுத்து சொர்ணலிங்கம்-
நிமிர்வு ஆடி 2017 இதழ்
Post a Comment