தரமான கல்வி அபிவிருத்தியை நோக்கிய பயணம்


கடந்த நிமிர்வு இதழ்களில் வடமாகாணத்தின் கல்வி அபிவிருத்தியின் தேக்க நிலை தொடர்பாக எங்கள் ஒவ்வொருவரினதும் இதயத்தைப் பாதிக்கும் வலிகளைப் பார்த்தோம். இவ்வாறான வலிகளை நீக்குவதற்கான முன்னோடிச் செயல் திட்டம் ஒன்றைத் தற்போது புதிதாகப் பதவி ஏற்றிருக்கும் வடமாகாணசபை கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்கள் ஏற்றிருப்பதை அவரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் புலப்படுத்துகின்றன.
அவற்றுள்,

1. பாடசாலைகளுக்கான கள விஜயம்
2. வலய ரீதியாக அதிபர்களைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிதல்
3. பாடசாலை மாணவர்களுடனான கருத்துப் பரிமாற்றங்கள்
4. பெற்றோர்களின் கருத்தை அறிதல்
5. கல்வி அமைச்சு மற்றும் மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அலுவலர்களுடனான   சந்திப்பும் பின்னூட்டலும்,
 
என்ற அடிப்படையில் மன்னார், கிளிநொச்சி வலயங்களின் பின்தங்கிய பிரதேச மாணவர்களினதும், ஆசிரியர்கள், அதிபர்களினதும்  கருத்துக்களைக் கேட்ட பின்னர் தான் வடமாகாணம் தற்போது எங்கே எந்த நிலையில் இருக்கின்றது என்பதை அறிய முடிந்ததாகக் கல்வி அமைச்சர் கவலையுடன் தெரிவித்தார்.

அந்த வகையில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட சில பிரதேசங்களுக்கான கள ஆய்வைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட கல்வி அமைச்சர் பின்வரும் விடயங்களை அவதானித்துள்ளார். எனவே கல்வித் துறை சார்ந்த ஒரு விரிவுரையாளராகவும், கலாநிதியாகவும் அவர் இருப்பதால் மிக அவசரமாகப் பின்வருவன வற்றில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்பதை அமைச்சருக்கு அறியத் தருவது எங்கள் ஒவ்வொருவரினதும், தார்மீகக் கடமையாகும்.

1) பின்தங்கியுள்ள பிரதேசங்களில் நிலவும்ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குதல் அல்லது சமநிலைப்படுத்துதல். இதில் முக்கியமான விடயம் சில பாடசாலைகளில் தேவையான ஆளணியிலும் பார்க்க கூடிய அளவில்ஆசிரியர்கள் தேங்கிக்காணப்படுதல். ஏ-9 வீதியில் தெருவோரமாக உள்ள பாடசாலைகளில் அதிகளவிலான ஆசிரியர்கள் காணப்படும் வேளையில் கிராமப்புறங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.

2) யாழ்ப்பாணத்தில் இருந்து செல்கின்ற ஆசிரியர்கள் காலையில் தமது வீடுகளில் இருந்து பேருந்துகளில் புறப்பட்டு பிற்பகல் பாடசாலை முடிவடைந்ததும், முடியாததுமாக அடுத்த பேருந்து வண்டியில் தமது வீடுகளுக்குத் திரும்புவதால் அவர்களின் கற்பித்தல் செயற்பாடுகளும், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளும் பாதிப்படைவதுடன் மட்டுமல்லாது, ஆசிரியர்களும் களைப்படைந்து விடுகின்றனர். இந்த நிலையில் வினைத்திறன் மிக்க கற்றல் கற்பித்தல் என்பது இடம்பெறாது. அதேவேளை பாடசாலைகளின் இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் முற்றாகவே முடக்கப்பட்டு விடுகின்றன.

இதற்கான தீர்வாக பின்தங்கிய பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகள் அமைக்கப்பட்டோ அல்லது இருக்கின்ற விடுதிகளைப் பயன்படுத்துவதற்கேற்ற ஒழுங்குகளோ மேற்கொள்ளப்படவேண்டும். அதனை விட்டு தூர உள்ள பின்தங்கிய  பாடசாலைகளில் சென்று கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்று எந்த ஒரு ஆசிரியராவது தெரிவித்து, அனுமதிக்கப்பட்ட பாடசாலைக்குப் போக மறுக்கின்றாரோ, அவரது நியமனத்தை இரத்துச் செய்து உடனடியாக அவரது இடத்திற்குப் புதிய ஆசிரியர்களை நியமித்து பாடசாலைகளைச் சுமுகமாக இயங்கச் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். நகரப் புறங்களில் வசதியான பாடசாலைகளின்  மாணவர்களுக்கு எவ்வாறு கற்பதற்கான உரிமை இருக்கின்றதோ அதே அளவுக்குக் கிராமப்புற மாணவர்களுக்கும், கற்பதற்கான உரிமையும் உண்டு. இதனை மாகாணக் கல்விப் பணிப்பாளர், செயலாளர் இருவரும் கவனத்தில் எடுத்து உடனடியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த விடயத்தில் எந்த ஒரு அரசியல் தலையீடும் இருக்காதவாறு கல்வி அமைச்சர் பார்த்துக் கொள்ள வேண்டும்.

3) பாடசாலைகளின் இயல்பான கற்கும் சூழல் தனியார் கல்வி நிலையங்களின் செயற்பாடுகளினால் பாதிக்கப்படுவதாகப் பல பெற்றோர்களும், அதிபர்களும், ஆசிரியர்களும் குறைப்படுகின்றனர். பொதுவாக க.பொ.த. உயர்தர வகுப்பை எடுத்துக் கொண்டால், தனியார் கல்வி நிலையங்களில் ஒரு வகுப்பில் குறைந்தது 150 தொடக்கம் 300 வரை மாணவர்களை மிகக் குறைந்த இருக்கையுள்ள வாங்கில் இருக்க வைத்துக் கற்பிக்கப்படுகின்றதுடன் குறித்த நேரக் கட்டுப்பாடுகள் எதுவும் இருப்பதில்லை.

இத்தகைய தனியார் கல்வி நிறுவனங்களில் பின்வரும் குறைபாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளன:

• குடிநீர் வசதிகள், மலசலகூட வசதிகள்இன்மை
• போதிய காற்றோட்டமோ சூரிய ஒளியோ இன்மை.
• மிகச் சிறிய மரப்பலகையினால் அடிக்கப்பட்ட இருக்கைகளில் மாணவர்களை நீண்ட நேரம் இருக்க வைத்துக் கற்பிக்கப்படுகின்றமை
• கட்டணங்களை வசூலிப்பதில் ஆளுக்கு ஆள் அல்லது ரியூற்றரிக்கு ரியூற்றரி வேறுபாடுகள் காணப்படுகின்றமை
• பாடசாலைக் கலைத்திட்டத்திற்கும் ரியூற்றரிகளின் கலைத் திட்டத்திற்கும் இடையில் ஒருங்கிசைவு இல்லாமை
• சுற்றுப் புறச் சூழல் முறையாகப் பேணப்படாமை
• பாடசாலைகளில் கற்பிக்கின்ற அதே ஆசிரியரே ரியூற்றரியிலும் கற்பிப்பதால், பாடசாலைகளில் அவர்களின் செயற்பாடுகள் மிகவும் மந்தமாகவே இருக்கின்றமை
 
இவைபோன்ற மேலும் பல காரணங்களினால் பொதுவாக மாணவர்களின் மனோ நிலையும்,உடற் சுகமும் பாதிக்கப்படுவதாகப் பலரும் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக க.பொ.த. உயர்தர வகுப்பில் கற்றுக் கொண்டிருக்கின்ற மாணவர்களில் 10 பேர் பல்கலைக்கழகம் செல்வதற்காக ஏனைய 290 மாணவர்களும், தமது நேரத்தையும், பணத்தையும் செலவழிக்கின்றனர் என்ற உண்மையை இதுவரை எந்தப் பெற்றோரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. இதுதான் எங்களுடைய ரியுற்றரிக் கல்வியின் இன்றைய நிலை!

இவற்றால் ஏற்படும் பாதிப்பின் தாக்கத்தைக் குறைப்பதற்காகப் பின்வரும் நடவடிக்கைகள் உடனடியாகவும், பாரபட்சமின்றியும்  மேற்கொள்ளப்பட வேண்டும்.

a. ரியுற்றரிகள் நடத்துவதற்கான நேரக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். பாடசாலை நாட்களில் காலை நேர வகுப்புகளைத் தடுத்தல், பிற்பகல் 3.00 மணியின் பின்னர் ஆரம்பித்து பி.ப.6.00 மணியுடன் நிறைவடைதல்.
b. பாடசாலை நேரங்களில் எந்த வகுப்பகளுக்காவது ரியூசன் நடைபெறுவதைத் தடை செய்தல்
c. வெள்ளிக்கிழமைகளில் சகல வகுப்பக்களுக்குமான மாலை நேர வகுப்புகளையும்,  ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 6.00 மணி தொடக்கம் நண்பகல் ஒரு மணிவரையும் வகுப்புக்களை நிறுத்துதல். இந்த நடைமுறை வடமராட்சியில் மாவட்ட நீதிபதியாக இருந்த நீதிபதி அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமையப் பின்பற்றப்பட்டது.
d. ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களின் தொகை 50 க்கு மேற்படாது இருக்கும் வகையில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டும்.
e. கட்டணம் அறவிடுவதில் சகல நிறுவனங்களுக்கும் பொதுவானதும், நியாயமானதுமான  ஒரு கட்டணத்தைத் தீர்மானித்தல் வேண்டும்.
f. தனியார் கல்வி நிலையங்களின் நிர்வாகிகள் தமக்கு அருகில் இயங்கும் பாடசாலைகளின் பாடவிதானத்துடன் ஒத்துப்போகும் வகையில் இருவரும் கலந்து பேசித் தமது வகுப்புக ளைக் கொண்டு நடத்தவேண்டும். இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் நன்மை அடைவதுடன் இரண்டிற்கும் இடையேயான முரண்பாடுகளையும்  தவிர்த்துக் கொள்ளமுடியும்.    

வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் தனியார் கல்வி அமைப்புக் காணப் படுகின்றது. ஆனால், பாடசாலைகளில் பாடத்திட்டத்தை முடிக்க முடியாத பகுதிகளில் சிலவற்றைக் கற்பிப்பதற்குத்  தனியார் கல்வி  நிலையங்கள் பொறுப்பெடுப்பதால் மாணவர்கள் ஒரே விடயத்தை இரண்டு இடங்களில் கற்கின்ற சுமை நீங்கும்.


4). வடமாகாணத்தின் பாடசாலைகள் பலவற்றில் அரசியல் வாதிகளின் தொடர்ச்சியான தலையீடுகளினால் சுதந்திரமான நிர்வாகச் செயற்பாடுகளோ அல்லது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளோ இடம் பெறுவதில்லை என அதிபர்கள் சுட்டிக் காட்டியுள்ளதுடன், வாசகர்களின் கருத்துக் கணிப்பும் எடுத்துக் காட்டியுள்ளது. “ஆமை புகுந்த வீடு உருப்படாது” என்ற ஒரு பழமொழி போல் எங்கெல்லாம் அரசியல் வாதிகளின் தலையீடுகள் அதிகமாகக் காணப்படுகின்றதோ, அங்கெல்லாம் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதுடன், முரண்பாடுகளும் அதிகரிக்கின்றன.
 
உதாரணமாக அண்மையில் ஊடகங்களில் பரபரப்பாக வெளிவந்த செய்தியில், ஒரு பாடசாலையில் சுமார் 150 வருடங்கள் பழமை வாய்ந்த 15க்கும் மேற்பட்ட பாரிய விருட்சங்களை அரசியல்வாதி ஒருவர் தனக்கிருக்கும் ஆதிக்கத்தைப் பயன்படுத்தி பாடசாலை அபிவிருத்திக் குழு, பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரின் எதிர்ப்பையும் மீறி அவற்றைத் தறித்து வீழ்த்தியதால், ஆசிரியர்கள் இடையே அதிருப்தி ஏற்பட்டது. இதன் விளைவாக அந்த அரசியல்வாதியின் துணையுடன் அதிபர் அவர்களில் இரு ஆசிரியர்களை இடமாற்றி விட்டார். இன்று அந்தக் கல்லூரி பெற்றோர், பழைய மாணவர்களின் வெறுப்புக்கு ஆளாகி பல்வேறு பின்னடைவுகளைச் சந்தித்து வருகின்றது. இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆசிரியர்களிடம் இருந்தும், பாடசாலைச் சமூகத்திடம் இருந்தும், புலம் பெயர்ந்த பாடசாலை நலன் விரும்பிகளிடம் இருந்தும் கோரிக்கைகள் எழுந்த போதும், அரசியல்வாதியின் அழுத்தம் காரணமாக அவை கல்வி அதிகாரிகளினால்  கவனத்தில் எடுக்கப்படவில்லை.  

அதேபோன்று ஆசிரியர் இடமாற்றங்கள், அதிபர் நியமனங்கள்,  கல்விப் பணிப்பாளர்களின் நியமனங்கள் போன்றவற்றில் அரசியல் தலையீடுகள் இருப்பதால் தரமான கல்விச் செயற்பாட்டை மேற்கொள்ள   முடியாதிருப்பதாக அதிபர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இவ்வாறான நிலைமைகளில் கல்வி அமைச்சின் சட்ட திட்டங்கள், இடமாற்ற நிபந்தனைகள் மற்றும் சேவைப் பிரமாணக் குறிப்புக்கள், பாடசாலைச் சமூகம் ஆகியவற்றின் விருப்பங்களைப் பரிசீலித்து அவை தொடர்பான நியாயமான தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் கல்விப் புலத்தில் உள்ள அதிகாரிகளுக்கு வழங்குதல் வேண்டும். அதே வேளை மக்களுக்கான  சேவையை வழங்குவதற்காக பன்முகப்படுத்திய நிதியில் இருந்தோ அல்லது மாகாண சபை நிதியில் இருந்தோ ஒதுக்கப்படுகின்ற  நிதியைத் தனது சொந்த நிதியாகப் பிரசாரப்படுத்திப்  பெயரளவில்  ஒரு சில இலட்சம் ரூபாக்களைப் பாடசாலைகளுக்குக் கொடுத்து விட்டுத் தங்களைத் தான் விழாக்களுக்குப் பிரதம விருந்தினராக அழைக்கவேண்டும் என்று அதிபர்களுக்கு அழுத்தம் கொடுக்கின்ற சில அரசியல்வாதிகளின் போக்கினால் பாடசாலைச் சமூகம் கடும் அதிருப்தியில் இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. பாடசாலைகளின் விழாக்களில் முதன்மை அதிதியாக அழைக்கப்படும் ஒருவர் சமூகத்தில் முன்மாதிரியானவராக இருப்பவராகவும், கல்வியினால் உயர்ந்தவராகவும், நல்லொழுக்கம் நிறைந்தவராகவும் இருக்க வேண்டும். அப்பொழுது தான் அவரைப் பின்பற்றும் பிள்ளைகளும் நற்பண்புகள் உள்ளவர்களாகவும், முன்மாதிரியானவர்களாகவும் சமுகத்தில் வாழ்வார்கள் என்பதையும் அதிபர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

5). பாடசாலைகளின் பழைய மாணவர்கள் சங்கத்தின் செயற்பாடுகள் 27/1964 ஆம் இலக்க 02.11.1964 ஆம் திகதிய  இலக்கச் சுற்றறிக்கை அமைய இருக்க வேண்டும்.  மற்றும்   மே.செய.(போ.க.) நானாவிதம்  என்ற இலக்க 21.06.1995 ஆம் திகதியிட்ட சுற்றறிக்கைக்கு அமைவாக பழைய மாணவர் சங்கங்களின் தலைவர் களாக அதிபர்களே  இருக்கவேண்டும் என்ற ஏற்பாட்டை  நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பழைய மாணவர் சங்கங்களினால் பாடசாலைகளின் பெயரில் சேகரிக்கப்படும் அனைத்து நிதி மற்றும் அன்பளிப் புகள், செலவினங்கள் தொடர்பாக அதிபர்களே வகைகூற வேண்டும். சில பாடசாலைகளில் தகுதியானவர்கள் சமுகத்தில் நல்ல மதிப்பைப் பெற்றவர்கள் தலைவர்களாக இருக்கின்ற போதிலும் பல பாடசாலைகளில் அரசியல்வாதிகளும், வியாபாரிகளும், சமுகத்தின் பொது நிதிகளைக் கொள்ளை அடித்து வாழ்பவர்களும் தலைவர்களாக இருந்து பாடசாலையின் வகைகூறலுக்குப் பொறுப்பாக இருக்கும் அதிபர் ஆசிரியர்களைக் கட்டுப்படுத்தும் நிலைமை காணப்படுவதை கல்வி அமைச்சர் அனுமதிக்கக் கூடாது. இந்த நிலையில் நான் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய போது  பழைய மாணவர் சங்கம் தொடர்பாகக் கல்வி அமைச்சில் இருந்து கிடைத்த மே.செய.(போ.க.) நானாவிதம் இலக்கமிட்ட 21.06.1995 ஆம் திகதியிட்ட சுற்றறிக்கையின்படி பழைய மாணவர் சங்கங்களின்  தலைவர்களாக அதிபர்களே பதவி வழியாகத் தலைவர்களாக இருத்தல் வேண்டும் என்ற நிபந்தனை இருப்பதனை, அப்போதைய கல்விப் பணிப்பாளருக்கு, நான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததை அவரும் ஏற்றுக் கொண்டார். அப்போது எமது பழைய  மாணவர் சங்கத்தின் தலைவராக மிகச் சிறந்த கல்வியாளரும்,  யாழ் பல்கலைக் கழகத்தின் முன்னாள்  துணை வேந்தருமாகப் பெயர்பெற்றிருந்த பேராசிரியர் அழகையா துரைராஜா அவர்கள் இருந்தமையைச் சுட்டிக் காட்டி இவர்களைப் போன்றவர்கள் தலைவர்களாக இருப்பது எமது கல்லூரிக்குப் பெருமை என்பதால், அவர் தொடர்ந்தும் தலைவராக இருப்பதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்ற எனது கோரிக்கை எற்றுக் கொள்ளப் பட்டதால், அவர் அமரத்துவம் அடையும் வரை அவரே தலைவராக இருந்தார். ஆனால் சமூகத்தில் செல்வாக்கு அற்றவர்களையும் அரசியல் வாதிகளையும், கடை வியாபாரிகளையும்  தலைவர்களாகக் கொண்டிருக்கின்ற ஒரு பாடசாலையில் நல்ல விழுமியங்களை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
  எனவே இவை போன்ற சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்கும், கல்லூரியின் பெயரில் இடம் பெறும் நிதித் துஸ்பிரயோகங்கள் மற்றும் மோசடி களைத் தவிர்ப்பதற்கும் அனைத்துப் பாடசாலைகளிலும் சுற்றறிக்கைக்கு அமைவாக “பழைய மாணவர் சங்கங்களின் தலைவர்களாக அதிபர்களே கடமையாற்ற வேண்டும்” என்ற சரத்தை முழுமையாக கல்விஅமைச்சு நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறு சுற்றறிக் கைக்கு முரணாகச் செயற்படும் பழைய மாணவர் சங்கங்களுக்கான அங்கீகாரத்தை கல்வி அமைச்சோ அல்லது மாகாணக் கல்வித் திணைக்களமோ அல்லது வலயக் கல்வித் திணைக்களங்களோ அல்லது கல்வி அமைச்சரோ வழங்குவதைத் தவிர்த்தல் வேண்டும்.

6). பாடசாலைகளுக்கு மேற்பார்வை, வழிகாட்டல்கள், பின்னூட்டல்கள் என்பன முறையாக  வழங்கப்படுவதில்லை என்ற குறைபாடுகள் அதிபர்களினாலும், பெற்றோரினாலும் முன்வைக்கப்படுகின்றன. கல்வி அமைச்சு, மாகாணக்கல்வித் திணைக்களம், வலயக் கல்வித்திணைக்களங்களில் இதற்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் கொடுக்கப்படவேண்டும். இதுவரை காலமும் இடம் பெற்று வந்த பெயரளவிலான மேற்பார்வையை கல்வி அதிகாரிகளால்  கைவிடப்பட்டு உண்மையாகவே  பாடசாலைகளின் கள நிலைமையைக் கண்டறிந்து  அவற்றின் அடிப்படையில் தொடர்ச்சியான பின்னூட்டல்களும், பரிகாரக் கல்விச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப் படவேண்டும். ஆனால் முக்கியத்துவம் கொடுக்கப் படவேண்டிய இத்தகைய மேற்பார்வை நுட்பங்களில்  உள்ள வினைத் திறன் அற்ற செயற்பாடுகளே இன்று எமது மாகாணத்தின் கல்வித் தரவீழ்ச்சிக்கான காரணமாகும்….!

(தரமான கல்வி அபிவிருத்தியை நோக்கிய பயணம் மேலும் தொடரும்)

நிமிர்வு ஆடி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.