யாப்பு: மாகாணசபைகள், மாவட்டச் செயலகங்கள் மற்றும் வருமான சேகரிப்பு
மைத்திரி அரசினால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சபையின் வழிப்படுத்தல் குழு பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் தலைமையில் உபகுழுவை நியமித்தது. அது இலங்கையின் புதிய அரசியல் யாப்பில் இடம்பெற வேண்டிய விடயங்கள் தொடர்பில் விதப்புரைகள் கொண்ட அறிக்கையொன்றை 2016 இறுதியில் வெளியிடப்பட்டது. அதில் முதலிரு பகுதிகளும் கடந்த இரு இதழ்களில் வெளியிடப்பட்டன. மூன்றாவது பகுதி இவ்விதழில் வெளியாகிறது.
மாவட்ட செயலகங்கள் எவ்வாறு மாகாண சபைகளுடாக நடைபெறவேண்டிய அதிகாரப் பரவலாக்கலை கீழறுக்கின்றன என்பதனையும் மாகாணசபைகளின் வருமான சேகரிப்பு பொறிமுறையிலுள்ள குறைபாடுகள் தொடர்பாக மத்திய அரசாங்கம் மாகாணசபைகள் உள்@ராட்சி சபைகளுக்குடையேயான உறவுகள் தொடர்பில் புதிய யாப்பில் இடம்பெற வேண்டிய விடயங்களை ஆராய்ந்த உபகுழுவின் அறிக்கையில் சொல்லப்பட்டவற்றை இவ்விதழில் பார்ப்போம். - - ஆசிரியர்.
ஒரு புறத்தில் மத்திய அரசாங்கத்தின் கீழ் மாவட்ட செயலகங்களும் பிரதேச செயலகங்களும் உள்ளன. மறுபுறத்தில் மாகாண சபைகளின் கீழ் உள்@ராட்சி சபைகள் உள்ளன. மத்திய அரசாங்கத்திடம் நேரடியாக அதிகாரத்தைப் பெறும் மாவட்டச் செயலாளர்களும் பிரதேச செயலாளர்களும் மிகவும் சக்திவாய்ந்தவர்களாக இருக்கின்றார்கள். 13ஆம் திருத்தத்தில் குறிக்கப்பட்டபடி உள்@ராட்சி சபைகளுக்கு பரவலாக்கப்பட வேண்டிய அதிகாரங்கள் மாவட்டச்செயலாளரூடாக இன்றும் மத்திய அரசாங்கத்திடமே உள்ளன.
யதார்த்தத்தில் மாகாணப் பணியாளர்களில் பெரும்பான்மையினர் பிரதேசசெயலகத்தில் கடமையாற்றுவதுடன் நிர்வாக ரீதியாக பிரதேச செயலாளர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளனர். மேற்குறித்த சிக்கல் தன்மை காரணமாக மாவட்டச் செயலாளர்களும் பிரதேச செயலாளர்களும் மாகாண நிர்வாகத்தின் கீழ்கொண்டு வரப்பட வேண்டும் என குழு உறுப்பினர்கள் ஆலோசனை முன்வைத்தனர். பின்வரும் விதப்புரைகள் இக்குழுவால் முன்வைக்கப்படுகின்றன.
1. மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகமானது மாகாண நிர்வாகத்தின் அங்கமாகும் வகையில் மீள்கட்டமைக்கப்படல் வேண்டும்.
2. மத்திய அரசாங்கத்தின் ஆளுகைக்குள் வரும் செயற்பாடுகளை நிறைவேற்ற மாகாண அமைச்சின் கீழ் உள்ள மாவட்டச் செயலாளர்களையும் பிரதேசசெயலாளர்களையும் இயலச் செய்ய வேண்டும்.
வருமான சேகரிப்பு:
மேல்மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்கள் மிகவும் வரையறுக்கப்பட்ட நிதி வளங்களையே கொண்டுள்ளன. இந்த மாகாணங்கள் செலவுகளைச் சமாளிப்பதற்கு அரசாங்க மானியங்களிலேயே தங்கியுள்ளன. நிதி ஒதுக்கீட்டுக்கான பரவலாக்கமின்றி அரசிறைப் பரவலாக்கம் அர்த்தமற்றதாகும்.
மாகாணங்களுக்கு வழங்கப்படும் மூலதனச் செலவிற்கான ஒதுக்கீடு எந்த மாவட்டத்துக்கு எவ்வளவு தொகை என்ற குறிப்புரையுடனேயே வழங்கப்படுகிறது. ஆளுனரின் விதப்புரையின்றி மாகாணநிதியிலிருந்தான செலவுகளுடன் தொடர்புடைய எத்தகைய சட்டங்களையும் மாகாணசபை நிறைவேற்ற முடியாது. மாகாணசபைகள் நிதி தொடர்பில் ஆளுனருக்கு உள்ள தடையற்ற அதிகாரத்தினால் அதிகாரப்பரவலாக்கம் என்ற எண்ணக்கரு இல்லாதொழிக்கப்படுகிறது.
13ஆம் திருத்தத்தின் பிரகாரம் வியாபாரப் புரள்வு வரியை சேகரிப்பதற்கான தகுதி மாகாண சபைகளுக்கு உள்ளது. ஆனால் மத்திய அரசாங்கம் பெறுமதிசேர்வரியை அறிமுகப்படுத்தியதன் காரணமாக மாகாண சபைகள் தமது வியாபாரப் புரள்வு வரி வருமானத்தை இழந்தன.
மாகாணசபைகள் வருமானம் ஈட்டுவதற்காக வரி சேகரிப்பு, கடன்களைப் பெற்றுக்கொள்ளல், முதலீடுகள், வெளிநாட்டு உதவிகளை நாடல் என்பவற்றில் ஈடுபடுதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உள்@ராட்சி அதிகார சபைகளை மேற்பார்வை செய்யும் அதிகாரம் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால்உள்@ராட்சி சபைகளுக்கான நிதி ஒதுக்கீடு மத்திய அரசாங்கத்திடமே உள்ளது. இவ்வாறான குறைபாடுகளைக் கொண்ட நிதி ஒழுங்கமைப்பானது ஜனநாயகரீதியில் தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழக்க காரணமாகிறது.
செலவிடுவதற்கு உண்மையில் பொறுப்புள்ள மக்கள் வருமானத்தை ஈட்டக்கூடிய மக்களாகவும் இருத்தல் வேண்டும். அவ்வாறு இல்லாத சந்தர்ப்பங்கள் பிரிவுகளுக்கு வழிவகுக்கும். ஜனநாயக விழுமியங்களை குறைமதிப்பீடு செய்யும். அதிகாரப்பரவலாக்கலின் முழுமையான நன்மைகளை அடைவதற்கும் சமத்துவ பிராந்திய அபிவிருத்திப் பயணத்திற்கான பங்களிப்பைச் செய்வதற்கும் 13ஆம் திருத்தத்தின் கீழான வடிவமைப்பு நிதி ரீதியான ஏற்பாடுகள்அனுமதிக்கவில்லை.
நிதி ஒதுக்கீடு தொடர்பாக இக்குழு பின்வரும் முக்கிய பரிந்துரைகளை முன்வைக்கின்றது.
1.மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீட்டுக்காக நிதி ஆணைக்குழுக்களால் உருவாக்கப்பட வேண்டிய கட்டாய நெறிமுறைகளை அரசியல் யாப்பு கொண்டிருக்க வேண்டும். உதாரணமாக அரசாங்கத்தின் வருமான சேகரிப்பில் 40வீதமாவது மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என அரசியல் யாப்பு பரிந்துரைக்க வேண்டும்.
2.மாகாண சபையின் பிரதிநிதித்துவத்துடன் நிதி ஆவணக்குழு மீள் உருவாக்கப்படல் வேண்டும்.
3.மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீடு தேசிய வரவு செலவுத் திட்டத்துடன் சேர்த்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதனால் ஒப்புதல் அளிக்கப்படவேண்டும்.
4.அரசாங்கத்தின் மூன்று அடுக்குகள் (மத்தி,மாகாணம்,உள்@ராட்சி) தொடர்பிலான வருமானம் சார் அதிகாரங்கள் தெளிவாக அரசியல் அமைப்பில் வரையறுக்கப்பட வேண்டும். நிதி சேகரித்தல் பொறிமுறை மாகாணங்களின் பங்குகளாக நிகழுகின்ற போது அவை நேரடியாக சம்பந்தப்பட்ட மாகாணத்தில் வரவு வைக்கப்பட வேண்டும்.
5.தேசிய கொள்கை உருவாக்கத்தின் போது மாகாண பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் கூடிய கலந்தாராய்வு பொறிமுறையை உறுதிப்படுத்தக் கூடிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
13ஆம் திருத்தச்சட்டமூலத்தில் மத்திய அரசாங்கத்தாலும் மாகாணசபைகளாலும் கலந்தாலோசிக்கப்பட்டு நடைமுறைப்படுத்த படவேண்டிய விடயங்களைக் கொண்ட பட்டியல் ஒன்று உள்ளது. இப்பட்டியலுள்ள விடயங்கள் தொடர்பாகவும், சட்டம் ஒழுங்கு, காணி, அரசியல் அரசியலமைப்பு நீதிமன்றம் என்பவை தொடர்பாகவும் இக்குழுவின் அறிக்கையின் அநுபந்தத்தில் உள்ளவற்றை அடுத்த இதழில் பார்ப்போம்.
– ஆசிரியர்
நிமிர்வு ஆடி 2017 இதழ்-
Post a Comment